Tuesday, May 3, 2011

Run Lola Run


வாழ்க்கையில் ஒவ்வொரு நொடிக்குமான செயல்கள் ஏற்கனவே தீர்மானிக்கப் பட்டவையா? அல்லது நாங்கள் தீர்மானிக்கிறோமா?

செயல்களுக்கான விளைவுகள் நிர்ணயிக்கப்பட்டவையா? அதைச்செய்யும் நேரம் ஒரு நொடி முந்தியோ, அல்லது பிந்தும் போதோ அது தொடர்பில், ஏதோ ஒரு சம்பவம் நிகழ்கிறது, அல்லது நிகழ்வதில்லை! 

- ஆக, நேரம்தான் செயல்களுக்கான விளைவுகளைத் தீரமானிக்கிறதா?

நாம் அன்றாட வாழ்வில் அடிக்கடி நினைக்கிறோமே இது மட்டும் இப்பிடி நடந்திருந்தால்...? கொஞ்சம் முன்னாலேயே இதைச் செய்திருந்தால்...?

அப்படி ஒரு நிகழ்வைச் சொல்லும் படம் இது!


மானி  தன்  காதலியான  லோலாவுக்கு  போன்  செய்கிறான். 'ஏன் நீ நேரத்துக்கு வரவில்லை?' என, லோலா காலையில் தனது பைக் திருடு போய்விட்டதாகக் கூறுகிறாள். 

ஒரு கடத்தல்கார குழுவிடம் வேலை செய்யும் மானி, 100000 German marks பணத்தை  தனது  குழுவிடம்  சேர்ப்பதற்காக ரயிலில்  வர, அந்த  நேரம் அங்கு போலீஸ் வருகிறது. பதட்டமாகும் மானி இறங்கி நடக்க...திடீரென்று பணப்பையை எடுக்க மறந்தது நினைவு வர, ரயில் புறப்பட்டு விடுகிறது. அவனுக்கு அருகிலிருந்த தாடிக்காரன் பணப்பையை எடுத்துச் சென்று விடுகிறான்! 

பன்னிரண்டு மணிக்கு பணம் கொடுக்கவில்லை என்றால் தன்னைக் கொன்று விடுவார்கள் என்றும் உடனடியாக பணத்துக்கு ஏற்பாடு செய்யுமாறும் கூறி அழுகிறான் மானி. லோலா சம்மதிக்க, 12 மணிக்குள் நீ வரவில்லை என்றால், அருகிலுள்ள கடையில் பணம் கொள்ளையடிக்கப்போவதாகக் கூறுகிறான் மானி. லோலா வேண்டாம் தான் ஏற்பாடு செய்வேன் எனக் கூறுகிறாள்.


பிறகு என்னவாகிறது? பணம் கிடைத்ததா? மானி பிழைத்தானா? 

சிறிய நேர வித்தியாசங்களால், மாறுபடுகின்ற மூன்று விதமான முடிவுகள் படத்தில்!

லோலா வழியில் சந்திக்கும், படிக்கட்டில் நாயுடன் வரும் மனிதன், கன்னியாஸ்திரிகள் கூட்டம், ஒரு லார்ப்பிணிப் பெண், சைக்கிளில் வரும் ஒருவன், ஒரு ஆம்புலன்ஸ் இவையெல்லாவற்றிலும் தொடர்புடைய சம்பவங்கள் ஒவ்வொன்றும் இறுதி முடிவில் எப்படி தாக்கத்தை ஏற்படுத்துகின்றன...என்பது எளிமையாக விறுவிறுப்பாக படத்தில்!

மானியுடன் தொலைபேசிவிட்டு.....

1
லோலா ரிசீவரை வைக்கிறாள்.
நேரம் பன்னிரண்டு மணிக்கு 20 நிமிடங்கள்.

யாரிடம் கேட்பது? ஒவ்வொருவராக யோசித்து, தந்தையிடம் கேட்க முடிவு செய்கிறாள். ஓடத் தொடங்குகிறாள்.

படிக்கட்டில் நாயுடன் நிற்பவனைக் கடந்து, வழியில் குழந்தையுடன் வரும் தாயுடன் மோதி, கன்னியாஸ்திரிகள் கூட்டமொன்றைக் கடந்து ஓடுகிறாள். சைக்கிளில் வரும் ஒருவன் சைக்கிள் விற்பனைக்கு, வேணுமா? என, மறுத்து....தந்தை தனது காதலியுடன் பேசிக்கொண்டிருக்க அந்த நேரத்தில் லோலா வந்து பணம் கேட்க, அவர் கோபமாக வெளியே தள்ளிவிட, வழியில் ஒரு ஆம்புலன்சைக் கடந்து, மானியிடம் ஓடி வருகிறாள்.

மானியுடன் இணைந்து, அவன் குறிப்பிட்ட கடையினைக் கொள்ளையடித்து,  இருவரும் வெளியே ஓடி வர, போலீஸ் சுற்றி வளைக்கிறது. தவறுதலாக ஒரு போலீசின் துப்பாக்கி வெடிக்க, லோலா விழுகிறாள்.


இறக்கும் தறுவாயில்...'நான் உன்னை விட்டு விலகிச்செல்ல  விரும்பவில்லை' எனக்கூற....

மீண்டும் ஆரம்பத்திலிருந்து, காட்சி தொடங்குகிறது!

2
லோலா ரிசீவரை வைக்கிறாள்.
நேரம் பன்னிரண்டு மணிக்கு 20 நிமிடங்கள்.

உடனே தந்தையிடம் கேட்க முடிவு செய்து ஓடத் தொடங்குகிறாள்.
படிக்கட்டில் நாயுடன் நிற்பவன் அவளை விழச் செய்கிறான். எழுந்து நொண்டியபடி ஓடி, வழியில் குழந்தையுடன் வரும் தாயுடன் மோதி, கன்னியாஸ்திரிகள் கூட்டத்தைக் கடந்து ஓடுகிறாள். அதே சைக்கிளில் வருபவனைக் கடந்து, ....தந்தை தனது காதலியுடன் பேசிக்கொண்டிருக்க அந்த நேரத்தில் லோலா வந்து பணம் கேட்க, அவர் கோபமாக மறுக்க, துப்பாக்கி முனையில் தந்தையை மிரட்டி பணம் பறித்துக்கொண்டு ஓடி வருகிறாள்.

நேரம் பன்னிரண்டு மணியாக, மானி கடையை நோக்கிச்செல்ல, லோலா அவனை அழைக்கிறாள் கையில் பணப் பையுடன். மகிழ்ச்சியுடன் திரும்பி வரும் மானி பின்னால் வேகமாக வந்த (அதற்கும் லோலாவே காரணம் படம் பார்த்தால் புரியும்!) ஆம்புலன்சைக் கவனிக்காமல்...அடிபடுகிறான்!


மானி இறக்கும் தறுவாயில்...நான் உன்னை விட்டு விலக விரும்பவில்லை எனக்கூற....

மீண்டும் ஆரம்பத்திலிருந்து காட்சி தொடங்குகிறது!

3
லோலா ரிசீவரை வைக்கிறாள்.
நேரம் பன்னிரண்டு மணிக்கு 20 நிமிடங்கள்.

உடனே தந்தையிடம் கேட்க முடிவு செய்து ஓடத் தொடங்குகிறாள்.
படிக்கட்டில் நாய்க்கு மேலால் பாய்ந்து, நிற்பவனைக் கடந்து, இம்முறை  வழியில் குழந்தையுடன் வரும் தாயுடன் மோதாமல், கன்னியாஸ்திரிகள் கூட்டத்தைக் கடந்து ஓடுகிறாள். அதே சைக்கிளில் வருபவனைக் கடந்து, தந்தையின் அலுவலகத்தை சென்றடைய...தந்தை தனது நண்பருடன் காரில் செல்வதைப் பார்க்கிறாள்.
இதற்குள் சைக்கிளில் சென்றவன், பணத்தை எடுத்துச்சென்ற தாடிக்காரனிடம் சைக்கிளை விற்று விடுகிறான்.

லோலா திரும்ப ஓடுகிறாள். ஒரு சூதாட்ட விடுதிக்கு சென்று விளையாடி பணம் சேர்த்துக் கொண்டு மானியைத் தேடி, வழியில் வரும் ஆம்புலன்சில் ஏறி, வருகிறாள்.

மானி தாடிக்காரன் சைக்கிளில் செல்வதைக் கண்டு, அவனைத் துரத்திப் பிடித்து, பணத்தை மீட்டுக் கொள்கிறான். குழுவினரிடம் பணத்தை ஒப்படைத்து விடுகிறான்.


மானி சொன்ன இடத்தில் மாணியைக் காணாமல் திகைக்கிறாள் லோலா. தனது குழுவினரின் காரிலிருந்து இறங்கி வரும் மானி அவளைப் பார்த்து, 'அங்கிருந்து ஓடியே வருகிறாயா? , எல்லாப் பிரச்சினையும் தீர்ந்தது' எனக் கூற, இருவரும் இணைந்து நடக்கிறார்கள். லோலாவின் கையிலுள்ள பையைப் பார்த்து, 'அதில் என்ன?' எனக் கேட்க, அவள் புன்னகைக்க, படம் நிறைவடைகிறது!


மிகவும் விறுவிறுப்பான படம். அழுத்தமான காட்சிகள். உலக சினிமா என்றால் மிகவும் மெதுவாகத்தான் கதை நகரும் என்றதொரு பழைய நம்பிக்கையைக் கொண்டிருப்பவர்கள் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும்.

தமிழில் 12B திரைப்படம் வந்தபோது இந்தப் படம் பற்றி பேசப்பட்டது. அபோழுதுதான் நானும் கேள்விப்பட்டேன். 1998 இல் வெளியானது. BAFTA உள்ளிட்ட 41 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு, 26 விருதுகளை வென்றது.

இயக்கம் - Tom Tykwer
மொழி - German

9 comments:

  1. ஆய், திரிலிங் படம்..

    அருமையான அலசல், படம் பார்த்த பின் தான் மேலதிக விடயங்களை பகிர முடியும் சகோ.

    ReplyDelete
  2. விளக்கமும் , விமர்சனமும் சிறப்பு
    படத்தை பார்க்க தூண்டுகிறது ..

    ReplyDelete
  3. மாப்ள உம்ம விமர்சனம் நச்!

    ReplyDelete
  4. படத்தை பற்றி கேள்விப் பட்டு இருந்தாலும் இன்னும் பார்க்க முடியவில்லை. நல்ல விமர்சனம்.

    ReplyDelete
  5. இந்தப் படத்தை மிக மோசமாக 12பி-ல் மறுஆக்கம் செய்திருப்பார்கள்..தொடர்ந்து நல்ல படங்களை அறிமுகப்படுத்துவதற்கு நன்றி ஜீ!

    ReplyDelete
  6. நல்லா இருக்கு ஆனா ஒட்டு தான் போடமுடியல

    ReplyDelete
  7. AnonymousMay 04, 2011

    பகிர்ந்தமைக்கு நன்றி. சோர்ஸ் கோட் எனும் படத்தை சமீபத்தில் பார்த்தேன். அசத்தல். மீண்டும் பார்க்க தூண்டும் படம்.

    ReplyDelete
  8. /////நாம் அன்றாட வாழ்வில் அடிக்கடி நினைக்கிறோமே இது மட்டும் இப்பிடி நடந்திருந்தால்...? கொஞ்சம் முன்னாலேயே இதைச் செய்திருந்தால்...?///// இந்த வரியே நல்ல ஒரு எதிர்பார்ப்பை அள்ளித் தருகிறது ஜீ....

    ReplyDelete
  9. Sliding Doors , Smoking/No Smoking லாம் ஏற்க்கனவே பாத்து இருந்தாலும் இது மனசுக்கு ரொமப பக்கத்துல வந்துச்சு..,

    ReplyDelete