Wednesday, January 11, 2017

காதலும், நம் சமூகமும் மற்றும் இயக்குனர் விக்கிரமன் படங்களும்!



Horror sentiment Family Drama
பாணியிலான திரைப்படங்கள் முன்னொரு காலத்திலே தமிழில் சரமாரியாக வெளிவந்து கொண்டிருந்தன. எனக்குத் தெரிந்தவரையில் தொண்ணூறு ஆறு தொடக்கம் இரண்டாயிரம் வரையிலான காலப்பகுதி அவ்வகைத் திரைப்படங்களின் பின்னைய பொற்காலம் எனலாம்.

ஆரம்பகாலத்தில் தமிழ் சினிமா கேட்சி ஊடகமாக இருந்தது. பின்னர்தான் காட்சி ஊடகமாக மாறியது என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். பார்க்காமலேயே கேட்டுணரும் பாணியிலானவை அவை. ஊரின் சிறுவயது ஞாபகம் உங்களுக்கும் இப்போதும் இருக்கக் கூடும். "இஷைத்தமிழ் நீ ஷெய்த அரும் ஷாதனை.." பாடல் முடிந்ததும் "டிர்ர்ர்ர்ர்ர்..றி...ய்ங்.." என்கிற இசையில் திருவிளையாடல் படத்தின் காட்சி மாறிவிட்டதை நாம் கோவில் திருவிழா குழாய் ஸ்பீக்கரில் கேட்டே அறிந்துகொண்டோமல்லவா?

பின்னைய காலத்தில் தமிழ்சினிமாவும் காட்சி ஊடகமானாலும் மறுபடியும் அவ்வப்போது யாராவது வந்து பழையபடி கையைப் பிடித்து இழுத்துச் செல்வதுண்டு. ஹொரர்  செண்டிமெண்ட் ஃபாமிலி டிராமா அநேகமாக அந்தப் பணியைச் செய்தவை.

யாழ்ப்பாணத்தின், வன்னியின் மின்சாரமில்லா காலங்கள், வவுனியாவின் 96,97 களின் இடம்பெயர் இடநெருக்கடிக் காலங்கள், யாழ்ப்பாணத்தின் 97 களுக்குப் பின்னைய 2000 வரையான மின்சாரப் பற்றாக்குறை காலகட்டங்களில் படம் பார்ப்பது என்பது ஒரு சடங்கு. அது போலவே படம் கேட்பது என்பது அதனோடு இணைந்த ஒரு சம்பிரதாயம். ஒருவீட்டில் படம் ஓட்டுவித்தால் சுற்றுச் சூழலில் ஆறேழு வீடுகளுக்கு படம் கேட்கும். அந்தப் படங்களில்  படங்கள் இப்படங்கள் முக்கியமானவை. இப்போது இந்தப் படங்களின் இசை குறித்த முக்கியத்துவம் புரிந்திருக்கும்

.தமிழின் ஹொரர் செண்டிமெண்ட் ஃபாமிலி டிராமா பாணியிலான திரைப்படம் உங்கள் அயல் வீடுகளில் ஒளிபரப்பிய காலத்தைச் சற்று நினைவு கூருங்கள். ஓரிரு குரல்கள் தொடர்ச்சியாக இடைவிடாமல் பேசுகின்றன. வெவ்வேறு மாடுலேஷனில், ஏற்ற இறக்கங்களோடு, மூக்கை உறிஞ்சிக் கொண்டு, அழுதுகொண்டு, அரற்றிக் கொண்டு ..மொத்தத்தில் பேசிக்கொண்டே...யிருப்பார்கள். சிறிது இடைவெளி கிடைக்கும்போது இசையமைப்பாளர் 'லாலா லாலால லாலா லாலால' இசைக்கோர்வையை ஒலிக்க விடுவார். இப்போது நாம் புரிந்துகொண்டிருப்போம், அவை இயக்குனரின் விக்கிரமனின் படங்கள் என்பதை!

பின்னர் மீண்டும் பேச்சு. சில இடங்களில் பேச்சு சற்றுக் குறைவாக இசை அவ்வப்போது "டுடுடிய்ங்.." சற்று நேரம் கழித்து இன்னொரு "டுடுடிய்ங்.." - இது நகைச்சுவைக் காட்சி என்பதை நாம் நாலு வீடு தள்ளியிருந்தே புரிந்து கொள்ளலாம். இந்த இரண்டு வகை இசைக்கோர்வைகள் இந்தப் படங்களின் இசையின் அடிநாதம். எஸ். ஏ. ராஜ்குமார் என்பவர் இதில் சிறந்து விளங்கினார். இரண்டு இசைக் கோர்வைகள், ஐந்து பாடல்கள் மட்டுமே வைத்துக் கொண்டு பத்து வருடங்களுக்கு மேலாக, பலபடங்களுக்கு இசையமைத்த அவர் திறமை அசாத்தியமானது என இப்போதும்கூட பலரும் வெகுவாகச் சிலாகிப்பதை நாம் பார்க்கிறோம்.

விக்கிரமன் சார்  படங்களின் மையக்கருவை 'உழைத்தால் நிச்சயம் உயர்வுண்டாகும்', 'நல்லவனுக்கு நல்லதே நடக்கும் கெட்டவன் அழிந்துபோவான்', 'ஒருவருக்குத் தீங்கு செய்தால் அவனைக் கடவுள் தண்டிப்பார்' என்கிற சிறுவர் நீதிக் கதைகளின் பெரியதிரை வடிவமாகக் கூடக் கொள்ளலாம். பார்ப்பவர்கள் யாரின் மனநிலைக்கும் தீங்கு விளைவிக்காத இவ்வகைத் திரைப்படங்கள் வெளிவந்தபோது டீவி சீரியல்களின் ஆதிக்கம் இப்போது போலில்லை. உண்மையில் பழக்கமில்லாமல் சடுதியாகப் பார்ப்பவர்களை மிக மோசமாக பாதிக்கும் இந்த வகை டீவி சீரியல்களை எப்போதாவது பார்க்க நேரிடுகையில் விக்கிரமன் சாரை  நன்றியுடன் நினைத்துக்கொள்வதுண்டு.

நேர்மறைச் சிந்தனையை வளர்ப்பதில் அவர் படங்கள் பெரும்பங்காற்றியிருக்கின்றன. உதாரணமாக, புளியம்பட்டி டூ பொள்ளாச்சி தினமும் பேரூந்தில் ஏற்றிச் செல்லும் அவ்வளவு பிரயாணிகளுக்கும் மாதமுடிவில் பெரிய சில்வர்குடம் பரிசளிக்க முடியுமா? என்றால் முடியும். அந்தப் பழைய பேரூந்தை வந்தவிலைக்கு விற்றுவிட்டால் முடியும். ஆனால் பேருந்தையும் விற்காமல், சில்வர்குடமும் பரிசளித்து, பணக்காரராகவும் ஆகிவிடுவது எப்படிச் சாத்தியம்? (சூர்ய வம்சம்) இங்கேதான் இயக்குனரின் நேர்மறை அணுகுமுறையை உணர்ந்துகொள்ளலாம். அந்த நம்பிக்கைதான் விக்கிரமன் சார் படங்கள்!

அதனை விட விக்கிரமன் சாரின் படங்கள் நம் சமூகத்தில் தாக்கம் செலுத்தியது நம் அழுகுணிக் குமார்களின் அணுகுமுறையில் என்றால் அது மிகையல்ல!

நம்மிடையே வாழ்ந்துகொண்டிருக்கும் அழுகுணிக் குமார்களை நாமறிவோம். காலத்துக்குகேற்ப அவர்களின் அணுகுமுறைகள் மாறிக்கொன்டே இருந்தாலும் கொள்கையளவில் அவர்கள் எப்போதும் ஒரேமாதிரியானவர்கள்தான். 'இந்தப் பெண்களே இப்படித்தான்' என்பதே அவர்களின் ஏகோபித்த தாரக மந்திரம். 'பெண்கள் ஏமாற்றுப்பேர்வழிகள்' எனும் பொருள்பட ஃபேஸ்புக் உள்ளிடட சமூகவலைத்தளங்களையும் கண்ணீரும் கம்பலையுமாக பதிவிட்டு வரும் அவர்களின் அன்றைய காலத்து ஒரே ஆறுதலாக விக்கிரமன் சார் படங்கள்தான்  விளங்கின என்றே சொல்லலாம்.

அழுகுணிக் குமார்கள் காதலில் விழுந்துவிட்டதாக, அல்லது அப்படி அவர்களே நம்பத் தொடங்கும்போது, அவர்தம் கூட இருக்கும் நண்பர்களுக்கு ஏழரை ஆரம்பமாகிவிடும். சம்பந்தப்பட்ட பெண்ணிடம் தம் நிலையைச் சொல்ல எதுவித முயற்சிகளும் எடுக்காமல் ஒருவகையினர். இவர்கள் இதயம் முரளியாகத் தங்களை பாவித்துக் கொள்பவர்கள். இன்னொருவகை காதலைச் சொல்லி செருப்படி வாங்காத குறையாக அல்லது நண்பர்களாக இருப்போம் என்கிற பதிலைப் பெற்றவர்கள். இது செருப்படியை விட வீரியமானது (அதாவது பிஞ்ச செருப்பை சாணியில் முக்கி அடித்ததுபோல) எனினும் குமார்கள் அதனைப் புரிந்துகொள்ளும் அறிவோடு இருப்பதில்லை. ஒரு கௌரவமாகவே கருதிக் கொள்வர். நண்பர்களும் அப்படியே விட்டு விடுவார்கள்.

அதெப்படி சம்பந்தமேயில்லாமல் ஒருவர் காதலைச் சொன்னவுடன் நண்பனாகி விடுவார்? குமார்களின் (இனி அழுகுணிக் குமார்களைக் குமார்கள் என்றே அழைப்போம்) தொண தொண தொல்லையிலிருந்து தப்பிக்க பெண்கள் கைக்கொண்ட ராஜதந்திர ரீதியான உத்தி அது! சமயங்களில் ஒரு விசுவாசமான வேலைக்காரனாகவும், சிறந்த எடுபிடியாகவும் அவர்களை பயன்படுத்திக் கொள்ளலாம். ஒருவகையில் குமார்களின் நண்பர்களுக்கும் இந்த ஏற்பாடு ஆசுவாசத்தைக் கொடுத்தது என்பதே உண்மை.

இவ்வாறான குமார்களைப் புத்துணர்ச்சி கொள்ள வைத்தது விக்கிரமன் சாரின் 'பூவே உனக்காக' திரைப்படம். படம் வந்ததிலிருந்து குமார்களின் தோரணையே மாறிவிட்டது. தங்களைத் தியாகிகளாகவே நினைக்கத் தலைப்பட்டார்கள். ஆளாளுக்கு 'காதல்ங்கிறது ஒரு செடியில் பூத்த ரோஜா மாதிரி..அது ஒருமுறைதான்' என்று பேசிக் கலவரத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்கள். எங்கள் குழுவுக்கு அணுக்கமான இன்னொரு நண்பர் குழுவிலிருந்த குமார் ஒருவர், தனது பதினெட்டாவது காதல் முயற்சி தோற்றபோதும் ‘காதல்ங்கிறது ஒருமுறைதான்’ வசனத்தை சீரியசாகப் பேசிக் கொண்டிருந்தார்.

இது ஒருவிதமான புரட்சியையே ஏற்படுத்தியது. குமார்கள் தாங்கள் தியாகம் செய்ததாக நம்பிக் கொண்டதில் அவர்களுக்கு ஒருவித பெருமிதத்தையும், நண்பர்களுக்கு நிம்மதியையும் ஒருங்கே கொடுத்தன என்றால் அது மிகையாகாது.

இன்னும் சில குமார்களை நேரடியாக ‘எடுபிடி’ அப்பாயிண்ட்மென்ட் கொடுத்து வைத்திருப்பார்கள் பெண்கள். இந்தவகைக் குமார்கள் தம்மை ஒரு லட்சியக் காதலானாகவே கருதிக் கொண்டு ரகசியமாகக் காதல் செய்து வருவார்கள். காதலை தெரிவிக்க சந்தர்ப்பம் ஒன்றை எதிர்பார்த்து காத்திருப்பார்கள். தம் காதலியினதும்(?!) தமக்குமான ரசனைகள் ஒத்துப் போவதையும், போகாவிட்டாலும் வலுக் கட்டாயமாகப் போகவைத்தும் அவருக்குப் பிடித்ததெல்லாம் தனக்கும் பிடிப்பதான பிரமையிலும் -  அரிதாக உண்மையாகவும், அடிக்கடி இருவர் விருப்பங்களைச் சோதித்துப் பார்த்து, திருப்திப்பட்டு காதல் வளருவதான பிரமையுடன் - மொத்தத்தில் பிரமை பிடித்து வாழ்ந்து வருவார்கள்.

ஏதோ ஒரு துணிச்சல் பெற்ற, சுபயோக சுபதினத்தில் காதலைச் சொல்லி அசிங்கப்பட்டு வரும் குமார்கள் காட்டும் சோகத்தைவிட நண்பர்கள் காட்டும் அறச்சீற்றம் அளவிடமுடியாதது. அது ஏற்கனவே எங்கேயோ பட்டு உணர்ந்ததன் வெளிப்பாடாக இருக்ககூடும். இந்த வகையான சூழ்நிலைக்கு ஏற்றவாறு ஒரு பாடல் வெளிவந்தது. அது  'யுத்' படத்தின் 'சர்க்கரை நிலவே' என்பதாகும். பாடல் ‘உனக்கும் எனக்கும் எல்லாம் பிடிக்க என்னை ஏன் பிடிக்காதென்றாய்?’ என்கிற அறிவு பூர்வமான, காத்திரமான கேள்வியை முன்வைத்தது. குமார்கள் இந்தவரிகளை உறுதியாகப் பற்றிக் கொண்டார்கள். இதுவரை காலமும் ஆண்வர்க்கத்திற்கு நேர்ந்த அவலநிலையை தட்டிக் கேட்டதாக அப்போது கன்சல்டன்ட்ஸ் ஆகியிருந்த முன்னாள் குமார்களும் உவகையடைந்தார்கள். அந்த வரிகளை எழுதிய பிரகிருதி யாரெனத் தெரியவில்லை. என்னவொரு சிந்தனை பாருங்கள்! சாதாரணமாக இப்படி யோசிக்க முடியுமா? அபத்தமான இந்த வரிகளை மேற்கோள் காட்டியே குமார்கள் ஆக்ரோசமாக கேள்வி எழுப்பினார்கள். அதானே? ஏன்னா நியாம்பா இது? நியாயப்படி பிடிச்சுத்தானே ஆகணும்?

ஆனாலும் சமூக ரீதியில், குறிப்பாகப் பெண்கள் மத்தியில் இந்தப்பாடல் எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என குமார்கள் விசனமடைந்திருந்தார்கள். வழக்கம்போல ‘பெண்களே இப்படித்தான்’ என அதற்கும் நண்பர்களையே வதைத்துக் கொண்டிருந்தார்கள். இவ்வாறான சூழ்நிலையில் விக்கிரமன் சாரின் படங்கள் குமார்களின் காயங்களுக்கு ஒருவித ஒத்தடம் கொடுத்துக் கொண்டிருந்தன என்றால் மிகையல்ல. சமயங்களில் சில பெண்களும் சேர்ந்து குமார்களை ஆதரவளித்து உற்சாகப்படுத்தினர் என்பதுதான் இங்கே உச்சகட்ட நகைச்சுவை!

விக்கிரமன் சார் படங்களின் 'சோப்ளாங்கி' ஹீரோக்களாக (உதாரணமாக உன்னை நினைத்து) தங்களை நினைத்துக் கொண்டனர். தான் காதலிக்கும் பெண் வேறொருவரைக் காதலிப்பதாகத் தெரிந்த பின்னரும் அந்தக் குடும்பத்து உதவுவது போல குமார்கள் தம் காதலிகளுக்கு உற்ற நண்பனாக இருப்பர்கள். ஒருகட்டத்தில் நல்ல மனம்கொண்ட 'சோப்ளாங்கி' ஹீரோவை விட்டு மோசமான நபரைக் காதலித்துவிட்டதை எண்ணி காதலி மனம் வருந்துவார் என்பது குமார்களின் ஆழ்ந்த நம்பிக்கை. அத்தகைய சந்தர்ப்பத்தில் தாம் பெருந்தன்மையாக, ஒரு கனவானாக நடந்துகொள்ளவேண்டும் கூறி நட்பை மெய்ப்பிக்க வேண்டும். இதற்காகவே, நம் குமார்கள் தமது காதலிகளின் காதல் எப்போது ஊற்றிக் கொள்ளும் என உள்ளூர எதிர்பார்ப்புடன் எடுபிடியாகத் தமது பணியினை மேற்கொள்வர்.

ஆனால் நடைமுறை சினிமாவுக்கு சம்பந்தமில்லாதது. குமார்களின் எதிர்பார்ப்பின்படியே காதலிகளின் காதல்கள் ஊற்றிக் கொண்டாலும் அவர்கள் குமார்களைப் பொருட்படுத்துவதில்லை. விவரமாக வேறொரு காதலனோ, வெளிநாட்டு மாப்பிள்ளையோ கிடைத்து அவர்கள் பாட்டுக்குச் சென்றுகொண்டாயிருப்பார்கள். குமார்களும் அதே ஏக்கப் பார்வையுடன் அலைந்துகொண்டிருந்தார்கள். ஆனாலும் உள்ளூர குமார்களுக்கு ஒரு நம்பிக்கை இருக்கும். அதனை விக்கிரமன் சாரின் 'சூர்யவம்சம்' போன்ற படங்கள் கொடுத்திருந்தன.

காதலனைக் கைவிட்டுச் செல்லும் காதலிகள் என்றோ ஒருநாள் அதற்கான தண்டனையைப் பெறுவார்கள். வருந்துவார்கள். அப்போது தாம் பெருந்தன்மையுடன் நடந்துகொள்ளவேண்டும் என அடுத்தகட்டத் தயார்படுத்தலில் இருப்பார்கள். எஞ்சினியரான அவள் புருஷனுக்கு வேலை போனால் உங்களைத் காண வருவாள். அவனுக்கு உங்கள் பஸ் கம்பனியில் டிகக்ட் கிழிக்கும் வேலை வேண்டி! உண்மையில், அவனுக்கு வேலை போனால் அவன் இன்னொரு கம்பெனியில் என்ஜினியராக வேலை தேடிக்கொள்வான். டிக்கட் கிழிக்க வரமாட்டான் என்பதுதான் யதார்த்தமாக இருந்தாலும், காதல்வயப்பட ஆரம்பத்திலிருந்து தமது மூளையை ஒருவித கொழுப்புப் பதார்த்தமாகவே பேணிக் கொள்வதால் குமார்கள் இதனை உணர்ந்துகொள்வதில்லை.

சமயங்களில் பெண்கள் மிகத் தெளிவானவர்கள். உண்மையில் ஒருபெண் பட்டுணர்ந்து தான் காதலிப்பவனை விட்டு விலகும்போதே அவள் வாழ்க்கை நன்றாகச் செல்ல ஆரம்பித்துவிடுகிறது என்பதே நாம் அனுபவத்தில் கண்டது. அதனைக் குமார்கள் அன்றும் இன்றும் என்றும் புரிந்துகொண்டதேயில்லை.

ஏதோ ஒருகட்டத்தில் எல்லாக் குமார்களும் ஒரு புள்ளியில் இணைந்துகொண்டுவிடுவார்கள். உண்மையில் காதலில் இருந்து ஒருகட்டத்தில் காதலிகள் சுதாகரித்து கழற்றிவிடப்படட குமார்கள், எடுபிடிகளாக நியமிக்கப்பட்டு தமக்குள்ள காதலை வளர்த்து கவிதை வரைந்து காவியக் காதலில் ஈடுபட்ட குமார்கள், காதல் விண்ணப்பப் படிவங்களை திரும்பத் திரும்ப அனுப்பிய குமார்கள் எல்லோருமே காதலியால் ஏமாற்றப்பட்ட பட்டியலில் விரும்பி இணைந்துகொள்வார்கள். இதில் இன்னொரு விசித்திர வகைக் குமார்களும் அடக்கம். சம்பந்தப்பட்ட பெண்ணுக்கே தெரியாமல் ஐம்பது மீட்டர் தூரத்தில் சைக்கிளில் துரத்திய குமார்கள்கூடாத் தாங்களும் ஏமாற்றப்பட்டதாக ஏதோ ஒரு புரியாத தர்க்கத்தின் அடிப்படையில் தாங்களும் வஞ்சிக்கப்பட்டதாக அவர்களே நம்பிக்கொண்டிருப்பார்கள். அவர்களும் இந்தப்புள்ளியில் இணைவதுதான் உச்சகட்ட அவலம் எனலாம்.

இவர்களுக்காகவே ஒருபாடல் உருவாக்கி வெளியிட்டார் விக்கிரமன் சார். பட்டி தொட்டியெங்கும் குமார்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது. குமார்கள் புத்துணர்ச்சியுடன், முக மலர்ச்சியுடன் பாடித் திரிந்தார்கள். அது, 'பொம்பிளைங்க காதலைத்தான் நம்பி விடாதே!'. குமார்களின் தேசிய கீதமாகவே ஆகிப்போனது. அப்போதே பெரிய சந்தேகம் ஒன்றிருந்தது. பெண்களை நம்பாமல் வேறு யார் காதலை நம்புவது? ஒரு ஆண் பெண்ணின் காதலைத்தானே நம்ப வேண்டும்? என்ன அபத்தம் இது? கொஞ்சம் ஆழமாக யோசித்தால் வில்லங்கமாக அல்லவா வருகிறது? உண்மையில் அப்படி இருந்தால் குமார்கள்தான் எவ்வளவு பாவப்பட்டவர்கள்? ஆண் ஓரினச் சேர்க்கையாளருக்காக உருவாக்கப்பட்ட பாடலை குமார்கள் தமக்கான தேசிய கீதமாக வரித்துக்கொண்டதுதான் இந்த நூற்றாண்டின் மகத்தான சோகம் எனலாம்.

எது எப்படியோ இன்றைய  காலகட்டத்தில் டீவி சீரியல்கள் வரவேற்பறைகளை ஆக்கிரமிக்க, வன்மமும் குரோதமும் வஞ்சகமும் அதிர்வலைகளாக உருவாகி நிறைந்துள்ளதாகப் பலரும் அஞ்சுகிறார்கள். உண்மையில் நம் சமூகத்தில் அன்பும், நம்பிக்கையும் பாசமும் பெருக்கெடுக்க, ஒன்றாகக் குழுமியிருந்து படம் பார்த்துக் களித்த காலமொன்று உண்டெனில் அது இயக்குனர் விக்கிரமன் படங்கள் வெளிவந்த காலம் எனலாம். அதற்காகவே நாம் என்றென்றும் அவருக்கு நன்றியுடையவர்களாக இருக்கக் கடமைப்பட்டுள்ளோம்

2 comments:


  1. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. சரி கொமாரு ..

    ஹீ ஹீ, சும்மா வேடிக்கைக்காகச் சொன்னேன்..

    குமார் ஆவதற்கே 'துணிச்சல்' இல்லாத இன்னொரு வகையும் உண்டு.!

    ReplyDelete