Thursday, December 15, 2016

அசுரன் - வீழ்த்தப்பட்டவர்களின் வீரகாவியம்!


"
இந்தியாவின் தலைவிதியும், அசுரர் சாம்ராஜ்யத்தின் தலைவிதியும், கோடிக்கணக்கான கறுப்பர்களின் தலைவிதியும் என்றென்றைக்குமாகத் தீர்மானிக்கப்பட்டது. என் அறிவு கூறியதை நான் கேட்டிருந்தால், என் தலைவிதி வேறுவிதமாக அமைந்திருக்கும். ஆனால், நான் எப்போதுமே உணர்ச்சிவசப்பட்ட ஒரு ஜீவனாக இருந்தேன். நான் ராவணனைப் போல வாழ்ந்திருந்தேன், ராவணனைப் போலவே இறப்பேன். கச்சிதமான மனிதனும் கடவுளுமான ராமனாக ஆவது எனது நோக்கமாக இருக்கவில்லை. என் நாட்டில் கடவுள்களுக்கு ஒருபோதும் பஞ்சம் இருக்கவில்லை. மனிதர்களின் எண்ணிக்கைதான் குறைவாக இருந்தது" ராவணன்

'இராமாயணம்' சின்னவயதில் கேட்டபோதும், பிறகு கொஞ்சம் வளர்ந்து வாசித்தபோதும் பெரிதாக என்னை ஈர்த்ததில்லை. 'மகாபாரதம்' மிகப்பிடித்திருந்தது. பிறகு யோசித்துப்பார்த்தால் ராமாயணம் பெரிதாகக் கவராமல் போனதற்கு காரணம், அது தனி ஒருவனைத் துதிபாடும், ஒருவனைக் கடவுளாக்கும். கதாநாயகன் என்பவன் எந்தவித எதிர்மறையான குணங்களும் எல்லாவிதத்திலும் கச்சிதமான ஒருவனாக இருப்பான். அவன் செய்யும் எல்லா செயல்களும் ஏதோ ஒருவிதத்தில் நியாயப்படுத்தப்படும்.

மாறாக, மகாபாரதத்தில் எல்லோரும் சராசரி மனிதர்கள் போன்றவர்கள். கோபம், குரோதம், நயவஞ்சகம், சூழ்ச்சி, பொறாமை கொண்டவர்கள். யாரிடத்திலும் கடவுள்தன்மை இல்லை. அதைவிட முக்கியமானது ஒன்று. சிஸ்டம்! நேரடியாகச் சொல்லாது நாங்களாக யோசித்துப் பார்த்தால், ஒரு சிஸ்டம் எப்படிச் செயல்படும். அது தனக்குத் தேவையானவர்கள் தவிர, மற்றவர்களை எப்படியெல்லாம் பந்தாடும்? சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளை அதன் தாக்கங்களை விரிவாகச் சொல்லும். அப்படியே இன்றைய நிலைக்கும் பொருத்திப் பார்க்கமுடியும். அதேபோல   ராமாயணத்தை யோசித்தால், ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை.

ஆனால், ஆனந்த் நீலகண்டன் எழுதிய 'அசுரன்' சிஸ்டம் பற்றி மிக விரிவாகப் பேசுகிறது. ராவணன் பார்வையிலும், ஓர் அடிநிலை மனிதன் பத்ரனின் பார்வையிலும் பேசப்படும் கதை என்றென்றைக்குமானது. நாம் கண்ட அனுபவங்களில் பொருந்திப் போகக்கூடியது.

கேரளத்தைச் சேர்ந்த மகாபலி என்கிற அசுரகுல மாவீரன் வாமனனால் நயவஞ்சகமாகத் தோற்கடிக்கப்பட்ட பின்னர் அவரது சாம்ராஜ்யம் சிதைகிறது. சமத்துவமான வாழ்க்கைமுறையினைக் கொண்ட அசுரர் குலத்தவர்களின் வாழ்க்கையிலும், ஏற்றத்தாழ்வுகளைக் கொண்ட தேவர்களின் வர்ணாசிரம வேறுபாடுகள் திணிக்கப்பட்டு, கலந்துவிடுகிறது. அதிகாரம், அடக்குமுறை, தீண்டாமை எல்லாமே உருவாகிவிடுகிறது. இலங்கையைச் சேர்ந்த அசுரர்குலத்தமிழன் ராவணன். மீண்டும் மகாபலியின் பொற்காலத்தைக் கொண்டுவரவேண்டும் என்கிற கனவோடு வாழும் சாதாரண ஏழை இளைஞன். அதிகாரமையங்களை எதிர்க்கும் மனநிலையோடு வாழும் ராவணனுக்கு சந்தர்ப்பம் அமைகிறது. வழமை போலவே அதிகார மையங்களை எதிர்த்துப் போராடுபவனே விரும்பியோ, விரும்பாமலோ ஒரு அதிகார மையமாக மாறுகிறான்.

ஏற்றத்தாழ்வுகளற்ற சமுதாயத்தை உருவாக்கவேண்டும் என்கிற லட்சியத்தோடு இருந்தவன் ராவணன். அரசு அதிகாரம் அவனிடம் வரும்போது, அவனே அறியாமல், சமயங்களில் அறிந்தும் வேறு வழியில்லாமல் சிஸ்டத்தில் சிக்கிக் கொள்கிறான். அவனது அடிமனதில் அன்பாலமைந்த சாம்ராஜ்யம் பற்றிய அவன் கனவு அப்படியே இருக்கிறது. நடைமுறையோ அவனின் லட்சிய பாதையிலிருந்து வெகு தொலைவில்! அவ்வப்போது கனவும், நிஜமும் அவனை அலைக்கழிக்கின்றது. அவனால் எதையும் மாற்றவோ, அமைப்பின் பிடியிலிருந்து விடுபடவோ முடிவதில்லை.

எப்போதும் தன்னைக் கேள்வி கேட்டுக் கொள்கிறான். இறுதியில் அவனிடம் கேள்விகளே எஞ்சியிருக்கின்றன. அமைப்பிலிருந்து விலகி, அவன் தன்னிச்சையாக எடுத்த சில முடிவுகளே அவனது வாழ்வில் வரலாற்றுத் தவறுகளாக அவனுக்கு எதிராகத் திரும்பியிருப்பதை உணர்கிறான். எல்லாத்தவறுகளையும் நேர்செய்து கொள்ளும் இனியொரு சந்தர்ப்பம் என்கிற நடக்கமுடியாத ஒன்றை யோசித்துப் பார்க்கிறான். அவன் ஒருபோதும் தான் கடவுளாக மாற நினைத்ததில்லை. ஆனாலும் அவனையறியாமல் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்தானா?

எந்த யுத்ததர்மத்தையும் கடைப்பிடிக்காத காட்டுமிராண்டித்தனமான ராமனின் படை. சூழ்ச்சியாலும், உடனிருந்தவர்களின் துரோகங்களாலும் ராவணனின் படைபலம் சிதைக்கப்படுகிறது. ஒருதொகுதி படை அவனுக்கெதிராகவே திரும்புகிறது. தனது ஒருபடைவீரன் ஆறு எதிரிப்படை வீரர்களை எதிர்கொள்ள வேண்டிய நிலையில், தோல்வி நிச்சயம் எனத்தெரிந்தும், தப்பிச்செல்ல விரும்பாமல் இறுதிவரை தன்னை நம்பிய மக்களுக்காகப் போராடக் களம் புகுகிறான்.

யுத்தம் எப்போதும் அடித்தட்டு ஏழை மக்களையே பாதிக்கிறது. அரசனுக்கு நெருக்கடி என்று வரும்போது ஏழைகள் மட்டுமே கூடவே துணையாக வருகிறார்கள். போரிட்டு மடிகிறார்கள். அரசுக்கு நெருக்கமான உயர்வர்க்கத்தினர், பெரு வியாபாரிகளும் மாயமாகி விடுகிறார்கள். மீண்டும் இன்னொருவன் ஆட்சிக்கு வரும்போது மீண்டும் புதிய அரசுக்கு நெருக்கமாகிவிடுகிறார்கள். மாறாக யுத்தத்தின் வெற்றியையும், தோல்வியையும் என்றும் சுமப்பவர்களாக ஏழைகளும் அடித்தட்டு மக்களுமே இருக்கிறார்கள். வெற்றியை அதிகாரத்தரப்பும், உயர்வர்க்கமும் பகிர்ந்துகொள்ள அதன் இன்னொரு விளைவான உயிர், அவய இழப்புகளையும், அதனால் ஏற்பட்ட ஏழ்மையையும் அவர்களே சுமக்கிறார்கள். வென்றபின் அவர்கள் அதிகாரத் தரப்புக்குத் தேவையில்லாதவர்கள்தான், இன்னோர் யுத்தம்வரை!

வெற்றிபெற்ற யுத்தத்திற்கே அந்தநிலை எனில், தோற்றுப்போனால்? தோற்றுப்போனவர்கள் எல்லோராலும் புறக்கணிக்கப்படுவார்கள். யாருக்காகப் போரிட்ட்டார்களோ அவர்களாலும் கண்டுகொள்ளப்படாமல் வாழ்நாள் முழுதும் வலியோடு வாழ விதிக்கப்பட்டவர்களாகிறார்கள். பத்ரனின் பார்வையினூடு சொல்லப்படும் கதைகள் இன்னும் மனதுக்கு நெருக்கமானவை. தொடர்ந்துகொண்டிருப்பவை!

ராவணன் முதன்முறையாக மண்டோதரியைக் காண்கிறான். மிக அறிவார்ந்தவளாக, சகல துறைகளிலும் தேர்ந்த, நேர்கொண்ட பார்வையும், கம்பீரமாக தோன்றும் மண்டோதரியை எதிர்கொள்ள ராவணன் தயங்குகிறான். தனியாக முதன்முறை சந்திக்கும்போது எப்படியாவது தப்பி ஓடிவிடவேண்டும் என ராவணன் சிந்திப்பதும், அவள்பற்றி ராவணன் யோசிக்கும்போதும் ரகளை! ஏனோ நம் சாருவின் ஞாபகம். ஒருவேளை எழுத்தாளரும் சாருவின் வாசகராக இருப்பாரோ?

ராவணனின் வாழ்க்கையில், சூர்ப்பனகை, விபீஷணன், வருணன், ஜம்புமாலி மட்டுமல்ல. நம் தமிழ் மொழிபெயர்ப்பாளரும் சேர்ந்து விளையாடிவிட்டார் என்பது தெரிகிறது. ரௌடி, வைன், அக்கவுண்ட் பில், ஆரஞ்சு நிறம் என்கிற வார்த்தைகள் அப்போதே புழங்கியிருப்பதாகச் சொல்கிறார். அடுத்தபதிப்பில் திருத்தினால் நலம்.
ஆரம்பத்தில் அப்படி என்னதான் இருக்கப்போகிறது என்கிற மனநிலை. புத்தகத்தைக் கையில் எடுத்ததும் வைக்க மனமில்லை. சிலநாட்கள் மனதை அலைக்கழிப்பதுமாக இருந்தது.. 

சில சமயங்களில் யோசித்துப் பார்த்தால், வரலாறு என்பது திரும்பத் திரும்ப ஒரே மாதிரிதான் நிகழ்கின்றதா எனத் தோன்றுகிறது! 

No comments:

Post a Comment