Thursday, July 11, 2013

எழுத்தும் அபத்தங்களும்!



எட்டாம் வகுப்புப் படிக்கும்போது தமிழில் இரண்டு வசனங்களை இணைக்கும் வினாக்கள் பரீட்சையில் கேட்கப்பட்டிருக்கும். அப்போதெல்லாம் எல்லாவற்றுக்கும் சரியாகவே விடை எழுதியிருப்பேன் (எனக்குக் கட்டுரைதான் வராது)

உதாரணமாக இப்படியிருக்கும்.

1. முற்பகுதிக்குத் தனியான நிறம்
2. முற்பகுதி கிராமப்புற நிகழ்வை சித்தரிக்கிறது - இரண்டையும் இணைத்தால்,

கிராமப்புற நிகழ்வை சித்தரிக்கும் முற்பகுதிக்குத் தனியான நிறம்

அதுபோல,
1.பிற்பகுதி தேயிலை தோட்ட வாழ்வை சித்தரிக்கிறது
2.பிற்பகுதிக்குத் தனிநிறம் 

தேயிலை தோட்ட வாழ்வை சித்தரிக்கும் பிற்பகுதிக்குத் தனி நிறம்

ஆக, கிராமப்புற நிகழ்வை சித்தரிக்கும் முற்பகுதிக்குத் தனியான நிறம், தேயிலை தோட்ட வாழ்வை சித்தரிக்கும் பிற்பகுதிக்குத் தனி நிறம்

இந்த வசனத்தை

/முற்பகுதி கிராமப்புற நிகழ்வை சித்தரிக்கும் தனியான ஒரு நிறம், பிற்பகுதி தேயிலை தோட்ட வாழ்வை சித்தரிக்கும் தனி நிறம் // 

-இப்படி எழுதியிருக்கிறார் எஸ்.ரா.பரதேசி விமர்சனத்தில். அவரது தளத்தில் படிக்கும்போது கண்டுகொள்ளவில்லை. சொல்லவந்த விஷயம் நமக்குப் புரிந்துவிடும்போது வசன அமைப்பையோ, இலக்கணத்தையோ (அது நமக்குத் தெரியாது என்பது வேறு விஷயம்) கண்டுகொள்வதில்லை.ஆக,எழுதும்போதும் நிகழ்ந்து விடுவது மிகச்சாதாரணம்.

இன்று காலை விமலாதித்த மாமல்லனின் தளத்துக்குச் சென்றபோது இதனைப் பார்த்தேன். திருத்தியிருந்தார். ஏற்கனவே ஒருமுறை விநாயக முருகனின் ஃபேஸ்புக் பதிவை அவர் திருத்தியிருந்ததைப் பார்த்தபோதே மிகுந்த ஆயாசமாக இருந்தது - 'அய்யய்யே.. நானெல்லாம் எவ்வளவு அபத்தக் குப்பைகளை எழுதிருப்பேன் என!' 

இந்தத் தளத்தில் ஏராளமான அபத்தக் குப்பைகள் கொட்டியிருக்கிறேன். இரண்டு வருடத்துக்குமுன்னர் எழுதிய பதிவுகளைப் பார்க்கும்போது அப்படித்தோன்றுகின்றது. இன்றைய எழுத்துக்கள் நாளைய அபத்தமாக இருக்கலாம்.

ஏறத்தாள ஒரு வருடத்துக்கு முன்பு வரை எனக்கு 'ஒரு', 'ஓர்' எப்படிப் பயன்படுத்துவதென்று தெரியாது. பள்ளியில் தமிழாசிரியர்கள் யாருமே அதைக் கற்பித்ததில்லை. அப்போதுதான் புரிந்தது, 'டேய் உனக்குத் தமிழே இன்னும் தகராறு!'

எழுத்துப் பிழை! எவ்வளவு கவனமாக இருந்தாலும் தவிர்க்க முடியவில்லை - கவனக்குறைவை. எப்போதேனும் ஒரு பதிவை பார்க்கும்போது தென்படும் எழுத்துப் பிழைகள் என்மீதே மிகுந்த கோபம் கொள்ளச் செய்கின்றன. 

நான் எழுதியதைச் சரி பார்க்காமல் மற்றவர் படிக்க அனுமதிப்பதைப் போன்ற மொள்ளமாரித்தனம் வேறேதுமில்லை என்பது எனக்கான என் தனிப்பட்ட கருத்து. இதற்கு நேரமில்லை,அவசரம் என்றெல்லாம் சப்பைக்கட்டு கட்டுவதில் சம்மதமில்லை. அப்படி அவசரமாக, நேரம் போதாமல், இடைவிடாத பணிகளுக்கிடையில்(?!) அர்ப்பணிப்புடன்(?!) நான் எழுதிக் கிழித்து சேவையாற்ற வேண்டிய  நிலையில் தமிழ்கூறும் நல்லுலகம் இல்லை என்ற உறுதியான நம்பிக்கை எப்போதும் எனக்குண்டு.

எப்போதுமே எனக்கு எழுதுவதில் மிகுந்த சோம்பேறித்தனம். சிந்தனையும் (உள்ளடக்கம் டப்பாவாக இருந்தாலும்), எழுதுவதும் (தட்டச்சுவதும்) ஒரே நேரத்தில் சேர்ந்தியங்கக் கைவரப் பெற்றவர்க்கே சொல்ல வந்ததை மாற்றுக் குறையாமல் அப்படியே சொல்வது  இலகுவாகிறது என நம்புகிறேன். 

நான், எழுத நினைக்கும் வசனங்களை அப்படியே முழுமையாக பத்துப் பதினைந்து நிமிடங்களில் மனதில் ஓட்டிப் பார்த்துவிடுவதால், மேற்கொண்டு தட்டச்ச சலிப்பாகிவிடுகிறது.பாதியிலேயே 'இது தேவையில்லை' என்றும் தோன்றிவிடும். விளைவாக, டிராஃப்ட்டில் குப்பைகள் அதிகமாகின்றன.

என்வரையில் Blogging என்பது, மற்றவர்கள் படிக்க அனுமதிக்கும் 'எனது டிஜிட்டல் டைரி' என்றபோதிலும், இதுவரை எழுதியவற்றில், அபத்தக் குப்பைகளை அகற்றிவிடலாம் என்று தோன்றும். அப்படிச் செய்யும் பட்சத்தில், எதுவுமே எஞ்சாது போகும் அபாயம் இருப்பதால், மொத்தமாக மூடிவிட்டுப் புதிதாக ஆரம்பிக்கலாம் என்ற எனக்கே குபீர் சிரிப்பை வரவழைக்கும் யோசனையும் வருவதுண்டு. 

'மொத்தமாக மூடிவிடலாம்' என்பது முகம் தெரியாமல் எழுதுவதிலுள்ள வசதி என ஆரம்ப காலத்தில் நினைத்திருந்தேன். பின்னர் ஒரிருவருக்குப் பரிச்சயமாகி, ஃபேஸ்புக்கிலும் பலரறிந்த (ஐந்து பேர்) பிரபலமானாலும், ஏதோ ஓர் கணத்தில் 'போதும்' எனத் தோன்றுகையில், மொத்தமாகத் துண்டித்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை இன்னும் ஆறுதலைக் கொடுக்கின்றது. 

13 comments:

  1. /மாற்றுக் குறையாமல்/

    'க்’ வருமா?

    /ஏதோ ஓர் கணத்தில்/

    ஓர் (அ) ஒரு? :-)

    முடிந்த அளவு எழுத்துப்பிழைகள் இல்லாமல் எழுதவேண்டும் என்பது எனது கொள்கையாகவும் உள்ளது. ஆனால் என்ன, நான் எழுதிய எந்தப் பதிவையும் கொஞ்ச நாட்களுக்குப் பின்னர் எடுத்துப் பார்த்தால் பல பிழைகள் சிரித்துக் கொண்டிருக்கும் :(

    அதேபோல், தேராத பதிவுகளை நீக்க வேண்டும் என்று தோன்றும். நீக்கினால் எதுவுமே மிஞ்சாது :))))

    ReplyDelete
    Replies
    1. //'க்’ வருமா?// வராதா? அவ்வ்வ்வ்!

      /ஏதோ ஓர் கணத்தில்/

      //ஓர் (அ) ஒரு? :-)/// ஆமால்ல!

      அதான் சொல்லிட்டமில்லே தமிழ் இன்னும் தகராறுன்னு.. :-)

      Delete
  2. அய்யய்யே.. நானெல்லாம் எவ்வளவு அபத்தக் குப்பைகளை எழுதிருப்பேன் என!'
    >>
    ஐயோ! அப்புறம் நான்லாம் என்ன சொல்லுறது?!

    ReplyDelete
    Replies
    1. விடுங்க பாஸ்! எஸ். ரா.வுக்கே சுழட்டி சுழட்டி அந்த அடி அடிச்சிருக்கார்!

      http://www.maamallan.com/2013/06/film-by.html

      Delete
  3. விடுங்கள்,'சங்கு' சுடச்,சுட வெண்மை தருமாம்!

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்..பழகுவோம்! :-)

      Delete
  4. எனக்கும் எட்டு சொல்லில், ஒரு வசனம் எழுதினால் அதில் பத்து எழுத்து பிழைகள் வருகிறது. தொட்டிலில் பழக்கம் சுடுகாடு வரைக்கும் என்பார்கள். இது என் தொட்டில் பழக்கம். நீண்ட நாட்களாகவே இரட்டை கொம்பு , ஒற்றைக் கொம்பு குழப்பம், சொற்களை இனைப்பதில் ஒற்று குழப்பம் இருக்கிறது. அடிப்படையில் எங்கோ தவறு நிகழ்ந்து விட்டது என நினைக்கிறேன் இந்த அடிப்படை ஜீனில் கூட இருக்கலாம். முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். விரைவில் எட்டு சொல்லில் வாக்கியம் எழுதினால் குறைந்தது எட்டு பிழைகளாவது வருமாறு பார்த்துக் கொள்வதற்குவதற்கு.
    மச்சி சேரின் பதிவுகளை வாசிப்பதால் சில தெழிவுகள் கிடைக்கிறது. அதற்காகவேனும் அவர் நிறைய எழுத வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. நான் எழுதும்போது எப்போதும் எழுத்துப்பிழை விட்டதிலை. தட்டச்சுவதுதான்... ஃபொனெட்டிக் முறையில்!
      //அதற்காகவேனும் அவர் நிறைய எழுத வேண்டும்.// உண்மை!

      Delete
  5. தோட்டம் பற்றி ஒரு கேள்வி...

    நான் படித்த ஆதாம் ஏவாள் பைபிள் ஏதேன் தோட்டம் பற்றி குவியலாக எழுதி வைக்க, செமையா வாங்கிக் கட்டினேன், இப்போ அந்த வாத்தியார் பார்த்தாலும் எலேய் ஏதேன் தோட்டம்னுதான் கூப்பிடுவார், எங்க அம்மா அப்பாவுக்கு விஷயம் தெரிந்த பொது அவர்கள் சிரித்த சிரிப்பு இருக்கே இப்பவும் கண்ணுக்குள்ளே நிக்குது ஹி ஹி...

    நாங்கெல்லாம் அப்பவே அப்பிடி.

    ReplyDelete
  6. என்வரையில் Blogging என்பது, மற்றவர்கள் படிக்க அனுமதிக்கும் 'எனது டிஜிட்டல் டைரி' என்றபோதிலும், இதுவரை எழுதியவற்றில், அபத்தக் குப்பைகளை அகற்றிவிடலாம் என்று தோன்றும். அப்படிச் செய்யும் பட்சத்தில், எதுவுமே எஞ்சாது போகும் அபாயம் இருப்பதால், மொத்தமாக மூடிவிட்டுப் புதிதாக ஆரம்பிக்கலாம் என்ற எனக்கே குபீர் சிரிப்பை வரவழைக்கும் யோசனையும் வருவதுண்டு.

    உண்மைதான்... எனக்கும் அவ்வப்போது தோன்றும்... ஆனால் செயல் படுத்தப் பயம்...

    ReplyDelete
  7. ஜி,

    அப்டின்னா தமிழுக்கு ஒரு கும்பிடு போட்டு, நான் என் பிளாக்க அப்பிடியே டெலீட் பண்ண வேண்டியிருக்கும். இந்தப்பக்கமே நான் தல வச்சுப் படுக்க முடியாது.
    ஆனால் அப்படி செய்தால், பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் வருத்தப்படுவார்கள் என்பதால் தமிழ் அன்னையிடம் மன்னிப்பு கேட்டவாறு நான் என் எழுத்துப்பணியைத் தொடர்கிறேன். ஹிஹிஹி.. :) (இந்த மேட்டர் நமக்குள்ளயே இருக்கட்டும்..வெளில சொல்லிடாதீங்க)

    ReplyDelete
  8. //நான் எழுதியதைச் சரி பார்க்காமல் மற்றவர் படிக்க அனுமதிப்பதைப் போன்ற மொள்ளமாரித்தனம் வேறேதுமில்லை என்பது எனக்கான என் தனிப்பட்ட கருத்து.//

    உண்மைதான், எழுத்துப் பிழைகள், இலக்கணப் பிழைகள் வாசகனை எரிச்சலடையச் செய்வது மேற்கொண்டு வாசிப்பதிலிருந்து வாசகனை வெளியேற்றி விடும் அபாயத்தைத் தந்துவிடுகிறது.

    ReplyDelete