Friday, January 4, 2013

பெண்களின் ஆடையும், வன்முறையும்!



ஒரு பெண் மீதான வன்முறை இடம் பெறும்போதெல்லாம் பெண்களின் ஆடைகள் குறித்து மட்டுமே அதிகமாகப் பேசப்படுகின்றன.

ஒரு பெண் அணிந்திருக்கும் உடை குறித்து மோசமான வசைச் சொற்களால் தாக்கும் சைக்கோக்களிற்கு கலாச்சாரக் காவலர்கள் அந்தஸ்தைக் கொடுக்கும் மனநிலை பிறழ்ந்த சமூகம் நம்மிடையே உண்டு.


கலாச்சாரம், பண்பாடு குறித்து பெருமை பேசிக்கொள்ளும் அதே சமூகத்தின் பிரதிநிதிகளான நானும் என் நண்பனொருவனும் ஒருமுறை கடுமையாக வாதிட்டுக் கொண்டோம் - பத்து வருஷத்துக்கு முதல்! நண்பன் பெண்கள் ஜீன்ஸ் அணிவதை விமர்சித்தான். ஒரு பெண் அணியும் ஆடை குறித்து அவளைத் தவிர யாரும் அக்கறை கொள்ள வேண்டியதில்லையே. அவளது அம்மாவிற்கு இருக்கும் அக்கறையைவிட நமக்கு என்ன அதிக அக்கறை வேண்டியிருக்கு?

அங்கே அது ஒரு குற்றம் மாதிரியே பார்க்கப்பட்டது. ஜீன்ஸ் அணிந்த ஒரு பெண்ணைப்பார்த்து நீங்கள் என்ன வேண்டுமானாலும் பகிரங்கமாகப் பேசலாம். அது அங்கே தவறில்லை. அதுவும் தவிர மேலதிகமாக உங்களுக்கு கலாச்சாரக் காவலர் என்ற அங்கீகாரமும் கிடைக்கும். இன்றுவரை அதுதான் நிலைமை என நம்புகிறேன். அதனால்தான் எப்போதுமே அங்கிருந்து வரும் பெரும்பாலான பெண்களின் முதல் காரியம், ஒரு ஜீன்ஸ் வாங்கி அணிவதாகவே இருக்கிறது.

பெண்கள் மீதான மோசமான பார்வைகள், வக்கிரமான பேச்சுகள். ஒரு முறையாவது தனியாக ஒரு கும்பலைக் கடக்க நேரும்போது, மிகுந்த மன உளைச்சல் அடையாத பெண்கள் யாராவது இருப்பார்களா? இந்த மாதிரியான சமூகத்தில் ஒரு தங்கையையோ, அக்காவையோ சினிமாவுக்குக் கூட்டிச் செல்ல முடிந்ததில்லை. சனநடமாட்டம் மிகுந்த எந்த இடத்திற்குமே போக முடிந்ததில்லை.  இரவு ஏழுமணிக்கு மேல், வீதியால் செல்லும் ஒரு கும்பல், வீட்டின் பூட்டிய வாயிற்கதவுக்கப்பால் நிற்கும் பெண்ணைப் பார்த்து தகாத வார்த்தைகளால் பேசிச் சென்றதை ஒருமுறையேனும் எதிர்கொள்ளாத பெண் இருக்க முடியுமா? இதெல்லாம்  ஏழெட்டு வருஷங்கள் முன்புவரை இருந்தது. இப்போது எப்படியோ தெரியவில்லை.

பெண்களை ஆண்கள் கிண்டல் செய்வதும், ஆண்களைப் பெண்கள் கிண்டல் செய்வதும் இயல்பானதுதான். அது நண்பர்களுக்கிடையே மட்டும் இருக்கும்வரையில். அந்தப் பெண்ணின் காதுகளுக்குப் போகும்போது, வார்த்தைகளின் தன்மை குறித்து அப்பெண்ணிற்கு மன உளைச்சலைக் கொடுக்குமானால் அது தவறே! அதுவும் மோசமாக வசைபாடும் போது உடனிருக்கும் பெருசுகள் அதைக் கண்டிக்காதது மட்டுமன்றி, சம்பந்தப்பட்ட சைக்கோக்களிற்கு கலாச்சாரக் காவலர்கள் அங்கீகாரத்தை வழங்கும் கேடுகெட்ட சமூகத்தை என்னெவென்று சொல்வது?

“இவையள் இப்பிடித்திரிஞ்சா அவங்கள் சொல்லுவாங்கள் தானே!” - ஒரே வார்த்தையில் எவ்வளவு இலகுவாக ஒரு சைக்கோ சமூகத்தை வளர்த்தெடுக்கிறார்கள். இப்படி வளர்ந்தவர்கள் எங்கு சென்றாலும் இதே மனநிலையோடுதானே இருப்பார்கள்?

இங்கே கொழும்பில்கூட தமிழ்ப்படங்கள் திரையிடும் சினிமா ஒன்றில் குடும்பத்துடனோ, சகோதரிகளுடனோ, ஒரு நண்பியுடனோ செல்ல முடியுமா? நாகரிகமாக படம் பார்க்க முடியுமா? கதாநாயகி திரையில் தோன்றும்போது கொடுக்கும் வரவேற்புக் குரல்கள் அப்படியிருக்கும். இதுவே, எம். சி. திரையரங்கில் பிரச்சினையின்றி பார்க்கலாம். அதைவிட சவோய் திரையரங்கில் இன்னும் தயக்கமின்றிப் போய்ப் பார்க்கலாம். காரணம் தமிழ்சினிமா திரையிடுவதில்லை (சவோயில் மிக அரிதாக). ஒழுக்கம், பண்பாடு, கலாச்சாரம் என்றெல்லாம் பெருமை பேசிக் கொள்ளும் தமிழ்ச் சமூகத்திலிருந்து இங்கே வருபவர்கள் ஒப்பீட்டளவில் மிகக்குறைவு. வருபவர்களும் அடக்க ஒடுக்கமாக இருக்கிறார்கள்.

"ஊசி இடங்கொடுக்காமல் நூல் நுழைய முடியுமா?" என்றொரு சமூக விஞ்ஞானி நீதிமன்றத்தில் கேட்டாராம். பலாத்கார வழக்கொன்றில் தன் கட்சிக்காரரைக் காப்பாற்ற அவர் பயன்படுத்திய வார்த்தைப் பிரயோகம் அது. இதனை ஒரு அரிய கண்டுபிடிப்பாகக் கொண்டாடும், பெருமைப் பட்டுக்கொள்ளும் அறிவுஜீவிகள் நிறைந்த சமூகத்தில், இன்றளவும் இதைச் சொல்லிச் சொல்லியே வாழ்ந்து, அடுத்த தலைமுறைக்கும் இந்த அபத்தமான வரலாற்றைச் சிலாகித்துப் பேசிக்கொண்டிருக்கும் மொள்ளமாரித்தனமான  ஒரு சமூகத்திடமிருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?

தனி ஒரு ஆணால், மன உறுதியும் உடல்வலுவும் கொண்ட ஒரு பெண்ணை பலவந்தப்படுத்துவது கடினம் என்பது எவ்வளவு உண்மையோ அதேயளவு உண்மை, ஒரு ஆண் அத்துமீறும்போது உடலியல் ரீதியாக ஓரளவிற்குமேல் சாதாரண பெண்ணால் எதிர்க்க முடியாது என்பதும்! இதுபற்றியெல்லாம்  கருத்தில் கொள்ளாது போகிற போக்கில் அடித்துவிடப்பட்ட அரைகுறையான ஒரு மசாலா சினிமாத்தனமான 'பஞ்ச் டயலாக்' போன்ற ஒன்றை காலங்காலமாகக் கொண்டாடும் வரையில், ஒரு சமூகம் தனிமனித ஒழுக்கம் என்பதைப் பற்றிக் கவலை கொள்ளுமா?

பலாத்காரம் செய்வது ஆணின் ஏகபோக உரிமை, அதற்கு இடம் கொடுக்காமல் இருப்பதுதான் பெண்களின் கடமை எனும் மன(நோய்)நிலை இன்றுவரை மாறவில்லை. தனிமனித ஒழுக்கம் என்பது பற்றி யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

நான் மனதளவில் விரும்பாத ஒரு பெண்ணின் பக்கம் என்பார்வை திரும்பாது எனும்போது, நான் என் கட்டுப்பாட்டிலேயே எப்போதும் இருப்பேன் எனும்போது  ஒரு பெண் அரைகுறை ஆடை அணிந்திருந்தாலென்ன? ஆடையே அணியாமல் இருந்தாலென்ன?

என்னதான் தனிமனித ஒழுக்கம் பற்றி பேசினாலும், ஓரிரு தடவை தாங்க முடியாத மன உளைச்சலில், பொறுமையிழந்து எனது தனிமனித ஒழுக்கத்தை நானே சுயபரிசோதனை செய்துகொள்ளும் அளவிற்குப் பேசியிருக்கிறேன். ஏதோ ஒரு சமயத்தில் ஓர் ஆணாதிக்கவாதிபோல மூர்க்கமாகவும் நடந்துகொண்டிருக்கிறேன். 

காரணம், எல்லை தாண்டி அத்துமீறுபவர்கள், மன நிலை பிறழ்ந்தவர்கள், மோசமான சைக்கோக்கள் ஆண்களில் மட்டுமல்ல, பெண்களிலும் இருக்கிறார்கள்.

9 comments:

  1. என்னதான் தனிமனித ஒழுக்கம் பற்றி பேசினாலும், ஓரிரு தடவை தாங்க முடியாத மன உளைச்சலில், பொறுமையிழந்து எனது தனிமனித ஒழுக்கத்தை நானே சுயபரிசோதனை செய்துகொள்ளும் அளவிற்குப் பேசியிருக்கிறேன். ஏதோ ஒரு சமயத்தில் ஓர் ஆணாதிக்கவாதிபோல மூர்க்கமாகவும் நடந்துகொண்டிருக்கிறேன்.//ஓரிரு தடவை அல்ல பலதடவை நான் அப்படி நடந்திருக்கின்றேன்...

    வெளிப்படையான ஆணாதிக்கமாக தெரிகின்றது

    காதலை ஆண் சென்று பெண்ணிடம் சொன்னால் ஓகே..அதுவே பெண் சென்று ஆணிடம் சொன்னால்..அவளை வேறு எதுவாகவோ பார்ப்பது

    ReplyDelete
  2. வணக்கம்,ஜீ!!!!!///ஊசி இடம் கொடுக்காமல்....................!அருமை.அது இப்போது "பொன்மொழி" ரேஞ்சுக்குப் போய்விட்டதே?////சிந்திப்பார்களா?

    ReplyDelete
  3. அவ்வளவு நியாயமான பதிவாக தெரியவில்லை. வன்முறை என்பது தவறுதான். வன்முறையில் ஈடுபடும் சமுகம் மனநோய் சமுகம் தான். ஆனால் சினிமா பார்க்கமுடியாமல் போனதற்க்கும், எம் சி மற்றும் சவோயில் பார்க்கக்கூடியதாய் உள்ளதற்கும் நிறைய காரணங்கள். எம் சியிலும் ச்வோயிலும் பெண்களுடன் சினிமா பார்க்கவரும் சகோதரர்களில் 90% பேர் என்ன செய்கின்றனர் என உங்களுக்கு தெரியாதது உங்கள் மன நிலையை தெளிவாக காட்டுகிறது. அந்த 90%ன் ஒரு பிரதிநிதியாகவே நீங்கள் அக்காவுடன் தமிழ்ப்படம் பார்க்க செல்லும் போதும் பார்பார்கள் என்பதில் சமுகத்தவறேதுமில்லை. ஆனாலும் நான் அறிய அப்படி அக்கா அம்மாவுடன் சேர்ந்து தமிழ்ப்படங்களை சினிமாவில் பார்த்தோரை நான் பல தடவைகள் அவதானித்திருக்கிறேன்.
    ஜீன்ஸ் போடுற ப்பொம்பிளபிள்ளையை கேவலமாய் பேசின சமுதாயம் நிச்சயமாய் இப்போது இல்லை. அப்போது இருந்தது. அதற்கு ஒரு காரணமும் இருந்தது. பெண்களின் ஆடைத்தெரிவு எவருக்கும் தவறானதாக தெரிந்திருக்கவில்லை. குறித்த ஆடைத்தெரிவீன் பின்னால் அவர்கள் வைத்திருக்கும் காரணங்கள் தான் எப்போதுமே விமர்சிக்கப்பட்டது. அந்த விமர்சனங்களை கேட்ட அறிவிலிகள் ஜீன்ஸ் போட்ட பிள்ளையை தப்பாக நினைத்தது ஏதோ உன்மைதான். ஆனால் பிரச்சனை பெண்களின் ஆடைத்தெரிவும் அதற்கான காரணங்களும் தான். ஆண்களின் ஆடைத்தெரிவில் எவருமே விமர்சனம் செய்வதில்லை என்ப்பதற்கு காரணம் ஆண் ஆதிக்கவாதி என்பதல்ல. என் ஆடைத்தெரிவைப்பற்றி என் மீது ஆதிக்கமுள்ள என் அப்பா மற்றும் ஆசிரியர்க்கள் நிச்சயம் குறை கூறலாம். ஆனால் கூறுவதில்லை. ஏன்? ஆண்களின் ஆடைத்தெரிவிற்கு பின்னால் இருக்கும் காரணம். ஆண்கள் அதை உடலை மறைத்தல், அழகாய் உடுத்துதுதல், பாவனைக்கு சுகமாக இருத்தல் என இயல்பான காரணங்களை முன்வைப்பர். ஆனால் பெண்களின் ஆடைத்தெரிவில், உடலை ஓரளவு மறைத்தல், கஷ்டமாக இருந்தாலும் அணிதல், அழகாய் இல்லையென்றாலும் ஆபாசமாய் இருத்தல் என பல காரணங்கள் இடக்குமுடக்காகவே இருக்கின்றன. ஆனாலும் இந்த காரணங்களை காட்டி ஆடை அணியும் பெண்கள் தவறானவர்கள் இல்லை. அந்த காரணங்கள் மாத்திரமே தவறானது என்னும் அந்த இடவெளியை புரிந்துகொள்வதில் தான் பல ஆண்கள் தவறி விடுகின்றனர். அந்த தவறிய நிலை, பெரும்பாலான ஆண்களை ஆணாதிக்கவாதியாக காட்டி விடுகின்றன. ஆக பொதுமைப்படுத்தப்பட்ட உங்கள் பதிவை 100% ஆமோதிக்க முடியாது. நண்றி.

    ReplyDelete
  4. நல்லதொரு பதிவு ஜீ..பெரும்பாலும் தமிழகத்தில் குடிபோதையாலேயே இத்தகைய அக்கிரமங்கள் நடக்கின்றன. ஆடை தான் காரணம் என்பது ஒத்துக்கொள்ளவே முடியாத விஷயம்.

    ReplyDelete
  5. மிக அருமையான பதிவு .. உங்களின் கருத்தோடு உடன்படுகின்றேன் . இவ்வாறான நல்ல பதிவுகள் எல்லாம் தமிழ்மணத்தில் மறைந்து விடுவதும், பிற்போக்கர்களின் பதிவுகள் முன்னிலையில் வந்துவிடுவதும் தீப்பயனானது ... !!

    ReplyDelete
  6. உங்களுடைய இந்தப் பதிவில் உங்களுடைய கண்ணோட்டம் இவ்வாறிருக்கிறது. உங்களுடைய பதிவுடன் என்னால் முழுமையாக ஒத்துப்போக முடிகிறது. ஆனால் பெண்களுடைய ஆடை தொடர்பான விமர்சனங்களை ஆணாதிக்க சமூகம் மட்டுமா மேற்கொள்கின்றது? பெண்களின் உடை பற்றி மற்றைய பெண்களும் விமர்சனம் செய்கிறார்களே?

    ReplyDelete
  7. உடை, கடப்பாடு, கண்ணியம், கட்டுக்கோப்பு, ஆணாதிக்கம் எல்லாவற்றையும் தாண்டி இன்னும் சில விஷயங்கள் இதில் இருகின்றது என எனக்குத் தோன்றுகின்றது.

    ReplyDelete
  8. அருமையான அதே சமயம் சுய பரிசோதனையுடனான பதிவு .ஆணாதிக்க சமூகத்தின் குரலாக அதை பதிவு செய்வதை விட சைக்கோக்களிற்கு பாடம் கற்பிப்பதுவும் சமூகத்தின் இதற்கான காரணிகளை ஆராய்வதுவுமே நல்லது

    ReplyDelete
  9. ஆமாம்...ஆமாம்..நீங்க சொல்லுறது சரிதான் எவ எப்பிடி டிரஸ் பண்ணிகிட்டு போனா நமக்கென்ன..நாங்க கண்ண மூடிகிட்டு போக வேண்டியதுதானே...அறிவுகெட்டதனமான பதிவு...பெண் என்பதால் அவள் செய்யும் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளவேண்டுமா......இன்னும் கெட்டுப்போவதற்கு உதவும் பதிவு......ஆண்களுக்கும் சில சங்கடங்கள் உண்டு.......

    ReplyDelete