ராஜேஷின் 'திரைக்கதை எழுதலாம் வாங்க' புத்தகம் கடந்தமாதத்தின் காலைப்பொழுதொன்றில் கைகளில் கிடைத்ததில், அது இந்த ஆண்டின் மிக மகிழ்ச்சியான நாளானது. இதில் மிகைப்படுத்தப்பட்ட வார்த்தைகள் எதுவுமில்லை. சமீப காலத்தில் இல்லை என் வாழ்க்கையிலேயே ஒரு புத்தகத்திற்காக நீண்டநாட்களாய் இவ்வளவு எதிர்பார்ப்புடன் காத்திருந்தது கிடையாது. ஆச்சரியமாக இருந்தது.
அதற்காக நான் திரைக்கதை எழுதப்போகிறேன் என்று யாரும் பயந்துவிடாதீர்கள். சினிமா பற்றித் தெரிந்துகொள்ளும் ஆர்வம் இருக்கிறது. ஆனால் துரதிருஷ்டவசமாக நான் சிறுவயதில் அவ்வளவாக சினிமா பார்த்ததோ, தற்போதும் நிறைய சினிமா பார்ப்பதோ கிடையாது. கருந்தேள் தனது வலைத்தளத்தில் எழுதத் தொடங்கியபோதே எதிர்பார்த்திருந்தேன். உண்மையில் பத்துவருடமாகக் காத்திருந்தேன் என்றுகூடச் சொல்லலாம். டெக்னிக்கலாகத் தமிழில் சினிமா பற்றி எழுதியதைப் படிக்கவேண்டும் என்கிற ஆவலில் சுஜாதாவின் 'திரைக்கதை எழுதுவது எப்படி' புத்தகத்தை 2005 இல் யாழ்ப்பாணத்தில் தேடி, பின்னர் கொழும்புவந்து தேடியும் கிடைக்கவில்லை. ராஜேஷ் எழுதிய இந்தப்புத்தகம் சுஜாதா எழுதியதைவிடவும் விரிவாக, தெளிவாக இருக்கும் என நம்பினேன்.
ஏனெனில் சுஜாதா சினிமா டெக்னிக் பற்றிப் பேசும்போதெல்லாம் ஷங்கர், மணிரத்னம், ராஜீவ்மேனன் படங்களில் இருந்துதான் உதாரணம் காட்டுவார். அவற்றில் ஷங்கர் படம் தவிர, மற்றதெல்லாம் படுமொக்கையான உதாரணமாகத்தான் இருக்கும். தமிழின் ஏனைய சிறந்த திரைக்கதையமைப்புள்ள படங்கள் பற்றியெல்லாம் பேசியதாகத் தெரியவில்லை. ஒவ்வொரு அத்தியாயத்திலும் தமிழ்சினிமா உதாரணங்களுடன் விளக்கப்பட்டிருக்கும் இந்தப்புத்தகம் நிச்சயம் புதிதாகவே இருக்கும். சுஜாதா இருந்திருந்தால், இந்தப்புத்தகம் குறித்து மிகுந்த மகிழ்ச்சியடைந்திருப்பார்.
இந்தப்புத்தகத்தைப் பெற்றுக்கொடுத்த தோழிகளுக்கு நன்றி. தேர்தல், நாட்டுநிலைமை தபால்துறையின் தாமதங்களால் ஒருமாதம் காத்திருந்து, பார்சலைப் பிரித்துப் புத்தகத்தைப் பார்த்தபோது முதலில் ஏமாற்றமாக இருந்தது, 'என்னடா புத்தகம் சின்னதா இருக்கே?' என்று தோன்றியது. ஆனால் வாசிக்கத் தொடங்கியதும் அப்படித் தோன்றவில்லை.
சினிமாவிற்கான கதை என்பது சினிமாத்துறை சார்ந்தவர்களிடமிருந்து மட்டும் வரவேண்டியதில்லை. அது சாதாரணமாக என்னிடமிருந்தோ, உங்களிடமிருந்தோ, யாரிடமிருந்தும் வரலாம். நாம் எதிர்கொள்ளும் அனுபவங்கள், சாதாரணமாக நாம் பார்க்கும் சம்பவங்களிருந்தோ ஒரு சிறந்த கதை உருவாகலாம். நம்மைச்சுற்றி ஏராளம் கதைகள் இருக்கின்றன. அவற்றை நல்ல திரைக்கதையாக மாற்ற முடிந்தால் நாங்களும் திரைக்கதை ஆசிரியர்களே. அப்படித்தான் 'சூது கவ்வும்' பட இயக்குனர் நலன் குமாராசாமி எழுதியிருக்கும் சிறப்புரையும் சொல்கிறது. 'ஒரு கோடி ரூபாய் சம்பளம் கேளுங்கள்' என்ற தலைப்பில் திரைக்கதை எழுதுவதிலுள்ள சிக்கல்களையும், ஒரு திரைக்கதையாசிரியருக்கு இருக்கவேண்டிய பொறுப்புணர்வு பற்றியும் சொல்கிறார்.
சிட் ஃபீல்டிடம் முறையாக அனுமதி பெற்று, அவரது ‘Screenplay: The Foundations of Screenwriting’ என்ற புத்தகத்தை மையக்கருத்துக்களை எடுத்துக்கொண்டு, புத்தகத்திலுள்ள 55 அத்தியாயங்களும் ஸிட் ஃபீல்டின் திரைக்கதை கோட்பாட்டை விளக்கியும், அவற்றை அடிப்படையாகக் கொண்ட தமிழ் சினிமா காட்சியமைப்பை விவரிக்கிறார். தவிர்க்கமுடியாத, தெளிவான காட்சியமைப்புகளுக்காக மட்டும் ஹொலிவூட். 312 பக்கங்களில் கருப்பு வெள்ளைப் புகைப்படங்களுடன் (வண்ணப் படங்களெனில் இன்னும் நன்றாக இருந்திருக்கும்) அட்டகாசமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. வாசிக்கக்கூடிய வகையில் தெளிவாக அச்சிடப்பட்டிருந்தாலும் சில பக்கங்கள் அநியாயத்துக்கு நெருக்கமாக இருப்பதாக எண்ணவைக்கிறது. பொருளடக்கம் இல்லாதது சிறுகுறையே, அடுத்தபதிப்பில் சரிசெய்யப்படலாம்.
புத்தகம் சிட் ஃபீல்டின் 3 Act Structure முறையிலமைந்த திரைக்கதையமைப்பை அடிப்படையாகக் கொண்டது. முதல் அத்தியாயத்தில் Setup, Confrontation, Resolution பற்றியும் திரைக்கதையை ஒரு பகுதியிலிருந்து அடுத்த பகுதிக்கு நகர்த்தும் இரண்டு Plot point கள் பற்றியும் சுருக்கமாக கூறிவிட்டு, 'ஆரண்ய காண்டம்' படத்தின் காட்சிகளூடாக விவரிக்கப்படுகிறது. ஷொட், ஸீன், சீக்வென்ஸ், சப்ஜெக்ட், சப்ஜெக்டின் இரண்டு அம்சங்களான கதாபாத்திரங்கள், நிகழ்வுகள் போன்ற அடிப்படை விஷயங்களைப்பேசி - பின்னர் கதாபாத்திரந்தின் இயல்புகளைக் கட்டமைத்தல், பிரதான கதாபாத்திரத்தின் குறிக்கோளை இனங்காணுதல், குறிக்கோளை அடைவதற்கான இடையூறுகளை உருவாக்குதல் பற்றி விரிவாக உதாரணங்களுடன் விவரித்துவிட்டு, ஆசிரியர் நம்மிடம் கேட்டுக்கொள்வது - திரைக்கதை ஆர்வமுள்ளவர்கள் படம் பார்க்கும்போது இந்த அடிப்படை விதிகள் எப்படிப் பயன்படுத்தப்படிருக்கின்றன, அவற்றை இனங்கண்டு கொள்ளுங்கள், கவனியுங்கள் என்கிறார்.
திரைப்படமொன்றைப் பார்க்கும்போதே, அதன் திரைக்கதை கட்டமைக்கப்பட்டிருக்கும் முறையையும் அப்படியே உள்வாங்கிக் கொள்ளும் நண்பர்கள் எனக்கும் இருக்கிறார்கள். என்னால் அப்படி முடிந்ததில்லை. படம் பார்க்க ஆரம்பிக்கும்போது ‘தெளிவாக’ இருந்தாலும் ஓரிரு காட்சிகளில் அப்படியே ஒன்றிப்போய் விடுவேன். உண்மையில் ஒரு நல்ல படம் அப்படித்தான் இருக்கவேண்டும். பார்வையாளனைத் தன்னுள் ஈர்த்துக் கொள்வதாக! திரைக்கதை அமைப்பு பற்றிப்படித்து தெரிந்து கொள்வதைவிட, நிறையப்படங்கள் பார்த்து அதன்மூலம் கட்டமைப்பைப் புரிந்துகொண்டு அதன்பின்னர் கோட்பாடுகள் பற்றி ஆராய்வது நல்லது. ஆசிரியர் ராஜேஷ் அப்படித்தான்.
அண்ணன் செங்கோவியும் அப்படியே! அவர் எழுதிக்கொண்டிருக்கும் திரைக்கதை சூத்திரங்கள் தொடரில் சொல்கிறார். "ஒரு படத்தை முதல் இரண்டுமுறை பார்க்கும்போது, கதையில் இன்வால்வ் ஆகிவிடுவோம். அதன்பிறகு பார்க்கும்போதே, அதில் உள்ள விஷயங்கள் பிடிபடத்துவங்கும்" இந்தத் தொடரும் புத்தகமாக வெளிவந்தால் மகிழ்ச்சி. தமிழில் சினிமா தொடர்பான புத்தகங்களின் தேவை இருக்கிறது.
ஆனால் அதற்கு முயற்சிக்காத, அல்லது வாய்ப்புகள் அமையாத என்போன்றவர்களுக்கு ஒரு படத்தை அதன் கட்டமைப்பு தொடர்பில் எப்படி அணுக வேண்டும் எனச்சொல்கிறது இந்தப்புத்தகம்.
எல்லாவற்றையும் விவரித்துவிட்டு இறுதியில், திரைக்கதை எழுதும்போது உண்டாகும் சோர்வு மன உளைச்சல் பற்றிச் சொல்கிறார். ஒருகட்டத்தில் சிக்கி, முற்றிலும் தடைபட்டுப்போய் நமக்கு இதெல்லாம் சரிப்படாது என்கிற நிலை வரும் - அது இயல்பாக எல்லோருக்கும் நேர்வதுதான், அதையெல்லாம் கடந்து வாருங்கள் என்கிறார்.
என்வரையில், இது வழமையாக நாம் சொல்லிக் கொள்வதுபோல ஒரே மூச்சில் வாசிப்பதுபோன்ற புத்தகமல்ல. சில பக்கங்கள் கடந்து போவது அவ்வளவு கடினமானது. ஆசிரியர் உதாரணங்காட்டும்தமிழ்சினிமாக் காட்சிகளை, கட்டமைப்புகளை நாமும் யோசித்துப் பார்க்கபோய் அப்படியே ஒரு சுற்று போய்வர.... சவாலாகவே இருந்தது. திரைக்கதை எழுத, கட்டமைப்பைப் புரிந்துகொள்ள ஆர்வமுள்ளோருக்கு நல்லதோர் தோழனாக இருக்கும்.
Go Write your Screenplay எனக்கூறி முடிக்கும் ராஜேஷ், திரைக்கதை எழுத விரும்பும் ஒருவருக்கேனும் இந்தப்புத்தகம் உபயோகப்பட்டால எழுதப்பட்ட லட்சியம் ஈடேறிவிட்டது என்கிறார். இப்படியொரு புத்தகத்தை எழுதியதற்காக மகிழ்ச்சியுடன் நாமும் அவர் பாணியில் சொல்லிக் கொள்ளலாம்..... Cheers!
அற்புதமாக அனுபவித்து பதிவு செய்து இருக்கிறீர்கள் .படிக்க தூண்டவதாகக் கூட இல்லை நான் அனுபவித்து இருக்கிறேன் முடிந்தால் நீங்களும்...என பதிவில் ஸ்கோர் பண்ணிவிட்டீர்கள் .
ReplyDeleteஇப்படி அருமையான புஸ்தகங்களை எல்லாம் எப்ப நம்ம நாட்டுல சுடச்சுட விற்கப் போறாங்க? தமிழ்நாட்டுக்குச் சொல்லி பாசல் எடுக்கும் சம்பிரதாயம் ஓயவே ஓயாதுபோல..
ReplyDeleteஅருமையா எழுதியிருக்கீங்க..
ReplyDeleteவாழ்த்துக்கள் அண்ணா...
நன்று... விரிவாகவே எழுதியிருக்கிறீர்கள்...
ReplyDeleteமேலும், நமக்குள் ஒரு ஒற்றுமை பார்த்தீர்களா... என் பதிவிலும் கடைசி வாக்கியம் "ராஜேஷ் சொல்வது போல் – Cheers…" :) :) :)