சென்னை வளசரவாக்கத்தில் தங்கியிருக்கும் நண்பன் ஒருவன் இருக்கிறான். சினிமா, டீவி சீரியல் நடிகர்கள், கலைஞர்கள் அதிகமாக நிறைந்திருக்கும் பகுதி. அவனிடம் எப்போதும் ஏராளமான கதைகள் இருக்கும். சில ஆச்சரியகரமானவை, சில அதிர்ச்சியானவை. ஆனால் பேசுவதற்கு சந்தர்ப்பம்தான் வாய்ப்பதில்லை. ஒருமுறை கொழும்புவந்தபோது பேசிக்கொண்டிருக்கையில் சொன்னான். பக்கத்து வீட்டிலிருந்த நண்பர்கள் ஒருமுறை அவனை அழைத்திருந்தார்கள். ‘இப்போது நீயொரு தயாரிப்பாளர். வெளிநாட்டிலிருந்து வந்திருக்கிறாய். உன் தமிழில் பேசு’. இதெல்லாம் எதற்காக என்றால், நடிகையாக ஆசைப்படும் ஒரு பெண்ணை அழைத்து வருகிறார்கள். நண்பன் பழிபாவங்களுக்கு அஞ்சுபவன் என்பதால் உடனடியாக அங்கிருந்து கிளம்பிவிட்டான். அதனால் என்ன, இன்னொரு தயாரிப்பாளர் அங்கே வந்திருப்பார், அவ்வளவுதான்!
இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற அதிசயம். சிறுவர், பெரியோர், ஏழை, பணக்காரன், வர்க்க, மத பேதமின்றி எல்லோரையும் சென்றடைந்த, கவர்ந்த, ரசிக்கப்படுகின்ற விஞ்ஞானக் கண்டுபிடிப்பு - சினிமா! அதற்கிருக்கும் கவர்ச்சி, அது ஏற்படுத்தும் தாக்கம் பற்றிச் சொல்லவேண்டியதில்லை. சினிமாவில் நடிக்க வேண்டும், புகழ் பெறவேண்டும் என்ற ஆசையில் எல்லாவற்றையும் உதறிவிட்டு வந்தோர், வருவோர் எத்தனையாயிரம் பேர். 'ஹீரோ' ‘ஹீரோயின்'களாக தமது பெயரை டைட்டிலில் பார்க்க ஆசைப்பட்டு 'மற்றும் பலர்' இல் இடம் பிடித்தவர்களே இங்கு ஏராளம். அப்படியிருந்தும் அதற்கான கவர்ச்சி எப்போதும் குறைந்ததில்லை.
அப்படி வருபவர்களின் ஆசையையே மூலதனமாக்கி அவர்களிடமிருந்து எல்லாவற்றையும் சுரண்டுவதற்காக காத்திருக்கும் 'உப்புமா' கம்பனிகளையும், போலி ஆசாமிகளையும்பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அப்படிப்பட்ட ஒரு போலி ஆசாமியைப் பற்றிய படம் தான் The star maker.
ஜோ மொரெல்லி அவன் பெயர். சிறிய ட்ரக் வண்டியொன்றில் அந்தக் கிராமத்துக்கு வருகிறான். வீதிகளில் வண்டியைச் செலுத்திக்கொண்டே ஒலிபெருக்கியில் பேசுகிறான். குழந்தைகள், பெண்கள், ஆண்கள், வயோதிபர் அனைவருக்கும் வேறுபாடின்றிய அழைப்பு அது. அவர்களின் எதிர்காலத்தை வளமானதாக்கும் அருமையான வாய்ப்பு என்கிறான். ரோமிலிருக்கும் universal studios என்கிற சினிமா கம்பனி ஊடாக வருவதாகக்கூறி, அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறான். சினிமாவில் புதுமுக நடிகர்களுக்கான தேர்வு அது!
கிராமத்தில் கூடாரமடித்துத் தங்கிக் கொள்கிறான். காமெரா உள்ளிட்ட ஒளிப்பதிவு சாதனங்களுடன் ஊர் ஊராகச் சென்று தான் சினிமாவில் நடிப்பதற்கு புது முகங்களை தேர்வு செய்வது அவன் வேலை என்றும், இன்று யாரென்றே தெரியாமலிருக்கும் நீங்கள், தேர்வு செய்யப்படும் உங்களிலொருவர் நாளை உலகம் முழுவதும் அறிந்த புகழ்பெற்ற நடிகர்களாகி விடலாம் என அறிவிக்கிறான். மக்கள் கூடி நின்று வேடிக்கை பார்க்கிறார்கள்.
ஆர்வமுடையவர்கள் அதற்கான கட்டணம் 1500 lire செலுத்தி தேர்வில் கலந்து கொள்ளலாம் எனக்கூறுகிறான். தவிர, தான் சந்திக்கும் ஒவ்வொருவரையும் உற்றுப்பார்த்து, 'அருமையான முகம் உங்களுக்கு வாய்த்திருக்கிறது' என சபலத்தை உண்டுபண்ணிவிடுகிறான். அன்று அந்தக் கிராமம் முழுவதும் எல்லா வீடுகளிலும் இதுபற்றிய பேச்சாகவேயிருக்கிறது.
மறுநாள் அவன் தங்கியிருக்குமிடத்தில் குழுமி நிற்கும் மக்களில் ஒவ்வொருவராக அழைத்து வசனம் பேச வைத்து, சற்றே மேக்கப் சரிசெய்து கூடாரத்தினுள் அழைத்துப் பேசவைத்து ஒளிப்பதிவு செய்கிறான். என்ன வசனம் பேசுவது என்கிற குழப்பத்தைத் தவிர்க்க ஆண்களுக்கு நீலநிறத்திலும், பெண்களுக்கு ரோஸ் நிறத்திலும் வசனம் அச்சிட்ட சிறு தாள்களைக் கொடுக்கிறான். கிராமம் முழுவதும் அந்த தாள்களைக் கையில் வைத்துக்கொண்டு வசனத்தை மனப்பாடம் செய்து, ஏற்ற இறக்கங்களுடன் பேசிக்கொண்டே அலைகிறார்கள்.
ஒளிப்பதிவு முடிந்ததும் பணத்தைப் பெற்றுக் கொண்டு, 'நான் எந்த நம்பிக்கையும் கொடுக்க முடியாது. எனது வேலை ஸ்க்ரீன் டெஸ்ட் எடுத்து, தயாரிப்பர்களிடம் கொடுப்பது மட்டுமே. இந்தப்பணம் படப்பிடிப்பு செலவுக்கானது. நீங்கள் தெரிவு செய்யப்பட்டால் ரோமில் இருந்து உங்களுக்கு சினிமாவில் நடிப்பதற்கான அழைப்பு வரும்' என்கிறான். முடிந்தளவு ஊரிலுள்ள எல்லாரையும் பங்கெடுக்க வைத்து, பணம் சம்பாதித்தபின் அங்கிருந்து வெளியேறி, இன்னொரு ஊர், புதிய ' புதுமுகங்கள்'.
பெயாதாவுக்கு பெற்றோர், உறவினர்கள் என்று யாருமில்லை. யார் வீட்டிலாவது சிறு வேலைகள் செய்து சம்பாதித்து வாழ்கிறாள். ஊரிலுள்ள கன்னியாஸ்திரி மடத்தில் தங்கியிருக்கிறாள். அவள் கிராமத்தில் சினிமா நடிகர்களுக்கான தேர்வு பற்றிய அறிவிப்புக் கேட்கிறது. எப்படியாவது கலந்துகொண்டு நடிகையாகிவிட்டால் அவள் துன்பமெல்லாம் நீங்கிவிடும். தேர்வுக்கு வருகிறாள். அவளிடமிருப்பாது 300 lire க்கள் மட்டுமே. ஜோ அவளைத் துரத்திவிடுகிறான். குழுமி நிற்கும் ஊரவர்கள் வழக்கம்போல அவளைக் கிண்டல் செய்கிறார்கள்.
பணம் புரட்டவேண்டும் என யோசிக்கும் பெயாதா தான் வழமையாக வேலை செய்யும் ஒரு கனவான் வீட்டுக்குச் செல்கிறாள். தனது பணத்தேவையைச் சொல்கிறாள். அதற்கென ஒரு யோசனையைத் தெரிவிக்கிறார் அந்தக் கனவான். அவளது நிர்வாண உடலைப் பார்க்க அனுமதிக்கும் பட்சத்தில் அவள் கேட்கும் பணம் கிடைக்கும் என்பதுதான் அது. முதலில் மறுத்துத் திருப்பிச் செல்ல முனைகிறாள் பெயாதா. தூரத்தில் நாளைதான் கடைசிநாள் என்பதாக ஒலிபெருக்கி அறிவிப்புக் கேட்கிறது. உடனடியாகப் பணத்தைப் பெற்றுக்கொண்டு திரும்புகிறாள்.
மீண்டும் ஜோவிடம் வருகிறாள் பெயாதா. கமெரா முன் அமர்ந்திருக்கும் அவளிடம் பேச்சுக் கொடுக்கிறான் ஜோ. அவளைப் பற்றிக் கேட்கிறான். அப்பாவித்தனமும், நேரிடையான பேச்சும், மன உறுதியுடனும் பேசுகிறாள் அவள். எங்கிருந்து பணம் கிடைத்தது என்பதையும் சர்வசாதாரணமாக விவரிக்கிறாள். அவள் வேலை செய்யுமிடங்களில் பணம் கொடுக்கும்போது, அவள் மார்பையும், கால்களையும் சமயங்களில் முழு உடலையும் பார்ப்பதற்கு அனுமதி கேட்பது சாதாரணமாக நிகழ்வது, அவர்களைக் கை தொடமட்டும் அனுமதிப்பதில்லை எனக்கூறுகிறாள்.
ஜோ இதுவரை சந்தித்த மனிதர்களிடமிருந்து அவளைப் பார்க்கும் பார்வை சற்றே மாறுகிறது. இறுக வாரிக்கட்டிய மிக அடர்த்தியான அவள் கூந்தலை அவிழ்த்துவிடுகிறான். புருவங்களைத் திருத்துகிறான். மீண்டும் கமெராவில் பார்க்கும்போது மிக மிக அழகானவளாகத் தெரிகிறாள் அவள். 'நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன்' எனத் தனக்குள் கேட்டுக் கொள்கிறான் ஜோ. அவள் பணம் கொடுக்கும்போது தேவையில்லை என்கிறான். 'நான் பொருத்தமாக இல்லையா' எனக்கேட்கிறாள் அவள். அருமையாக இருப்பதாகக் கூறுகிறான். மீண்டும் அவள் பணம் கொடுக்க முயல, கோபத்துடன் மறுக்கிறான். கூடாரத்தைவிட்டு வெளியேறும் பெயாதாவை எல்லோரும் அதிசயமாகப் பார்க்கிறார்கள். அவள் மிக அழகாக இருப்பதாகச் சொல்கிறார்கள். அவள் மிகவும் அழகானவள் என்று ஊராரும் ஏன், அவளுமே உணர்ந்து கொள்கிறார்கள்.
அந்த ஊரில் தான் வந்த வேலையை முடித்துக்கொண்டு கிளம்புகிறான் ஜோ. வழியில் டிரக்கினுள்ளே சத்தம்வர இறங்கிப்பார்க்கிறான். உள்ளே பெயாதா திருட்டுத்தனமாகத் தன்னுடன் வருவது தெரிகிறது. அவனுடனேயே தங்கி, அவனுக்குப் பணிவிடைகள் செய்வதாகவும் தன்னை அனுமதிக்குமாறு கோருகிறாள். அதற்காக எதையும் செய்கிறேன் என்கிறாள். ரோமிலிருந்து உனக்கு அழைப்பு வரும்வரையில் காத்திருக்கச் சொல்லி அவளை மீண்டும் கிராமத்துக்குக் கொண்டுவிடுகிறான் ஜோ.
வரும் வழியில் ஜோவின் டிரக் பழுதாகி நின்றுவிடுகிறது. மிடுக்காக உடையணிந்த பெண்ணொருத்தி அவனுக்கு உதவுவதாகச் சொல்லி அழைத்துச் செல்கிறாள். அது சனநடமாட்டமற்ற பாழடைந்த நகரம். அங்கே தனியாக அமர்ந்திருக்கும் ஒருவர் இந்த நகரத்தின் இளவரசர் என்றும் அந்தப்பெண் ராணி என்றும் அறிந்துகொள்கிறான் ஜோ. அவர்களுடன் இரவு உணவு விருந்தில் கலந்துகொள்கிறான். காலையில் கண்விழிக்கும்போது அங்கே யாரும் இல்லை. ஜோவின் டிரக், அவனது பணம் உட்பட எதுவுமில்லை. முதன்முறையாக ஜோவிடமே கைவரிசையைக் காட்டிவிட்டார்கள் இருவர். சத்தமாகப் புலம்பிக்கொண்டே ஓட்டமும் நடையுமாக வருகிறான்.
போலீஸ் மீட்டு வைத்திருக்கும் ஜோவின் காரை அவனிடம் கொடுக்கும்போது, 'அவர்களிருவரும் தேர்ந்த திருடர்கள்! உங்கள் பொருட்கள் பத்திரமாக மீட்கப்பட்டன, உங்கள் காதலியின் உதவியினால்' என்கிறது. ஜோ புரியாமல் திகைத்து நிற்கும்போது அங்கே வருகிறாள் ‘காதலி’ பெயாதா. சினிமாக்காரனுடன் சென்ற அவளை கன்னியாஸ்திரிகள் தம்மிடத்தில் தங்க அனுமதிக்காததால் ஜோவைத் தேடி வந்ததைச் சொல்கிறாள். முதலில் அவளிடத்தில் கடுமையாக நடந்துகொள்ளும் ஜோவுக்கும் இப்போது அவளிடம் காதல் வர, உறவு கொள்கிறான். இருவரும் சேர்ந்து புதிய இடத்தில் நடிகர் தேர்வுக்குத் தயார் செய்கிறார்கள்.
அங்கே திடீரென வரும் போலீஸ் அதிகாரி, ஜோ செய்த குற்றங்களைச் சத்தமாக வாசித்துக்காட்டி, அவனைக் கைது செய்து அழைத்துச் செல்கிறார். அதிர்ச்சியாகி நிற்கிறாள் பெயாதா. அவளைப்பொறுத்தவரை ஜோ நல்லவன். அவனையே முழுமையாக நம்புகிறாள். போலீஸ் எடுத்துச் செல்லும் ஜோவின் டிரக்கில் தானும் மறைந்து தொற்றிக்கொண்டு செல்கிறாள். அந்தப் போலீஸ் அதிகாரியும் ஜோவிடம் வாய்ப்புக்கேட்டு நடித்தவர்தான் என்பது அவன் நிலைமையை மேலும் சிக்கலாக்குகிறது. சிறைச்சாலை செல்லும் வழியில் வேறொரு குழுவிடம் ஜோவை ஒப்படைக்கிறார். அவர்கள் சரமாரியாகத் தாக்கத்தைத் தொடங்குகிறார்கள். பெயாதா அழுதுகொண்டே ஓடிவந்து தடுக்க முயல்கிறாள். செய்வதறியாது மண்ணில் புரண்டு கதறுகிறாள். குற்றுயிராக சிறைச்சாலைக்குக் கொண்டுவரப்படுகிறான் ஜோ.
இரண்டு வருடத்தண்டனை முடிந்து, ஜோ சிறையிலிருந்து வெளிவருகிறான். அவனது டிரக் பின்புறம் திறந்து பார்ப்பவன் யாரோ பயன்படுத்தியது தெரிந்து காவலாளிகளிடம் வினவுகிறான். ஒரு பெண் தங்கியிருந்ததைச் சொல்கிறார்கள். பெயாதாவின் கிராமத்துக்கு வருகிறான். அவள் முன்பு தங்கியிருந்த கன்னியாஸ்திரிகள் மடம் இப்போது வாகனங்கள் திருத்துமிடமாகிவிட்டது. அநேகமாக எல்லோரும் ஜோவை அடையாளம் கண்டுகொள்கிறார்கள். பெயாதா பற்றி யாரும் அவனிடம் எதுவும் கூற மறுக்கிறார்கள். ஒரு பெண் ரகசியமாக ஜோ அருகில் வந்து, பெயாதா மனநோய்க் காப்பகத்தில் இருப்பதாகச் சொல்கிறாள்.
மனநோயாளர் காப்பகத்தில் பெயாதா ஓட்ட வெட்டப்பட்ட தலைமுடியுடன் வெறித்த பார்வையுடன் அமர்ந்திருக்கிறாள். ஜோவை அவளால் அடையாளம் காண முடியவில்லை. ஜோ இறந்துவிட்டதாகச் சொல்கிறாள்.
'அது உண்மையில்லை. நான்தான் ஜோ உன்னை ரோமிற்கு அழைத்துச் செல்ல வந்திருக்கிறேன்'.
'நான் ரோமில் இருந்திருக்கிறேன். ஸ்விம்மிங் பூல், அமெரிக்கன் கார் என்று நான் பணக்காரியாக இருந்த பொழுது, ஜோவுடன் உலகம் முழுதும் சுற்றியிருக்கிறேன். அவர்கள் எங்களிருவரையும் பிரித்தபோது ஜோ இறந்துவிட்டான்' என்கிறாள் பெயாதா.
'ஆம் ஜோ இறந்துவிட்டான், நான் அவனது நண்பன். அவன் இறக்கும்போது உன்னை நன்றாகக் கவனித்துக் கொள்ளச்சொன்னான். உனக்கு ஒன்று தெரியுமா? ஜோ இந்த உலகத்திலேயே உண்மையாகக் காதலித்த ஒரே பெண் நீ மட்டும்தான். நீங்கள் இருவரும் ஒன்றாக இருந்தபோது அதை அவன் உணரவில்லை. அவன் தாமதாகவே புரிந்துகொண்டான், துரதிருஷ்டசாலி'
‘நான் வேலை தேடிச்செல்கிறேன். கொஞ்சம் பணம் சம்பாதித்தபின் உன்னை வந்து அழைத்துச் செல்கிறேன். இருவரும் ஒன்றாகவே இனி இருப்போம். உன்னைக் கவனமாகப் பார்த்துக் கொள்வேன்’ எனக்கூறி அவளிடம் விடைபெறுகிறான் ஜோ. கனத்த மனதுடன் புதிய மனிதனாகத் திரும்பும் ஜோ தனது ஒலிப்பதிவுக் கருவியை இயங்கச் செய்கிறான். அவன் சந்தித்த மனிதர்கள் படப்பிடிப்பின்போது பேசிய வார்த்தைகள் ஒலிக்க, அந்தக் காட்சிகள் அவன் மனத்திரையில் விரிகின்றன. இறுதியாக பெயாதாவின் காட்சிகளுடன் படம் நிறைவடைகிறது.
ஆரம்பத்தில் பெயாதாவிடம் பேசும்போதே ஜோவுக்கு அவளிடம் ஓர் ஈர்ப்பு ஏற்படுகிறது. அவள் அவனிடம் காதல் கொள்ளும்போதும் ஜோ தன்னிலையுணர்ந்து விலகிச் செல்கிறான். அவளை மட்டும் அவன் ஏமாற்ற விரும்பவில்லை. பணம் வாங்கவில்லை. இது அவன் இயல்புக்கு முற்றிலும் மாறானது. வேறு யாராக இருந்தாலும் தனது 'தொழில்தர்ம'த்தைக் கடுமையாகக் கடைப்பிடிக்கும் ஜோ அவளிடம் மட்டுமே மனச்சாட்சிப்படி நடந்துகொள்கிறான். வழக்கமாக 'தொழில்' நிமித்தமாக தங்குமிடங்களில் வலிய வரும் பெண்களை உபயோகித்துக் கொள்ளும் அவன், பெயாதா தயாராக இருந்தும் கண்ணியமாக இருக்கிறான்.
இறுதி சில காட்சிகளைத் தவிர படம் முழுவதும் மிகவும் நகைச்சுவை இழையோடியபடியே நகர்கிறது. ஏதோ பரீட்சைக்குத் தயார் செய்வது போல் கிராமத்தின் சின்னஞ்சிறிசுகள் முதல் இன்றோ, நாளையோ எனக்காத்திருக்கும் பெரியவர்கள், அரசாங்க உத்தியோகத்தர்கள் என எல்லோருமே வசனங்களை மிகுந்த சிரத்தையுடன் மனனம் செய்து, குழுவாகத் தமது நண்பர்களுடன் அமர்ந்து ஒத்திகை பார்க்கிறார்கள். கொலைகாரக் கொள்ளையர்களிடம் மாட்டிக்கொள்ளும்போது அவர்களுக்கும் சினிமா ஆசைகாட்டி, அவர்களிடமே 'கைவரிசை' காட்டுதல். ஓர் இறுதிச் சடங்கைப் படமெடுக்கும் காட்சி எனச் சுவாரசியங்கள் ஏராளம்.
சிறுவன் ஒருவனை அவன் தாத்தா ஜோவிடம் அழைத்து வருவார். தன் காதலியை நினைத்து சுய இன்பத்திலீடுபட்டவாறே பேசுவதுபோல நடிக்கவேண்டும். சிறுவன் தயங்க, தாத்தா கையை அசைத்துக்காட்டி, அவனுக்கு உற்சாகமூட்டுகிறார். அவன் நடிக்கும்பொது அவன் திறமைகண்டு, உணர்ச்சி வசப்பட்டு ஆனந்தக் கண்ணீர் விட்டு அழுகிறார் தாத்தா.
சினிமா ஒரு போதைபோல, சிறிது சபலத்தை ஏற்படுத்தியதுமே எல்லோரையும் முழுவதும் ஆட்கொண்டுவிடுகிறது. மகளை நடிகையாக்க விரும்பும் தாய் தன்னிடம் பணம் இல்லையென்பதால் தன்னை ஜோவிடம் கொடுக்கிறாள். சிறுவயதில் தான் நடிக்க ஆசைப்பட்டதையும், தன்னை என்ன வேண்டுமானலும் செய்துகொள் மகளை நடிகையக்கிவிடு என்று புணரும்போது இடைவிடாமல் பேசிக்கொண்டேயிருக்கிறாள்.
கமெரா முன்னால் பேசுவது பலரையும் வழக்கம்போலப் பதற்றமாக்குகிறது. அதேபோலப் பலரை முதன்முறையாக மனம்விட்டுப் பேசவைக்கிறது. மனதில் பொத்திவைத்த யாரிடமும் பகிர்ந்திராத ரகசியங்களை, மனக்குமுறல்களைக் கொட்ட வைக்கிறது. ஊரிலிருந்து ஒதுங்கி காட்டில் திரியும் ஆட்டிடையன் வானம், நட்சத்திரங்கள் பற்றிக் கவிதைத்தனமாகப் பேசுவது, ஊராரினால் ஒதுக்கப்பட்ட பெண் தனது கதையைச் சொல்வது, நீண்ட காலமாக வாய் பேசாதிருக்கும் இராணுவத்திலிருந்த பெரியவர் பேச ஆரம்பிப்பது என்பன நெகிழ்வான காட்சிகள் ஏராளம். எனக்கு மிகப்பிடித்த படமான 'சினிமா பரடைசோ', மற்றும் 'மெலினா' படங்களின் இயக்குனரான Giuseppe Tornatore இயக்கத்தில் 1995 இல் வெளியான இந்த இத்தாலியப்படம் இது!
(பிரான்சிலிருந்து வெளிவரும் 'ஆக்காட்டி' இதழுக்காக எழுதியது)
No comments:
Post a Comment