Wednesday, September 7, 2011

The Grand Voyage


பிரான்சில் வாழும் இஸ்லாமியனான ரெடா, மத நம்பிக்கைகள் எதுவுமில்லாதவன். அப்பாவின் முன்னால் எதுவும் எதிர்த்துப்பேச முடியாமல் தலையாட்டிவிட்டு பின்னர் அம்மாவிடம் வந்து குமுறும் சராசரி டீன் ஏஜ் பையன்.

அப்பா மெக்காவுக்கு புனித யாத்திரை செல்ல தயாராகிறார். அதுவும் ஒரு பழைய காரில்! ரெடாவின் அண்ணன், அப்பாவுக்காக காரோட்டிச்செல்வதாக இருந்த திட்டத்தில், அண்ணன் மதுபோதையில் காரோட்டி போலீசில் சிக்க, ரெடா அப்பாவுடன் போகவேண்டிய சூழ்நிலை!

எனக்கு வயதாகிவிட்டதால் நீண்டதூரம் காரோட்ட முடியாது. அதனால் நீ என்னுடன் வருகிறாய் - ரெடா மெக்கா செல்வது ஒரு சேதியாகவே அவனுக்குச் சொல்லப்படுகிறது. அவனுடையா அபிப்பிராயம் கேட்கப்படவில்லை. ரெடா ஏதோ சொல்ல முயலும்போது புறப்பட இன்னும் நான்கு நாட்கள் இருக்கின்றன அது போதும் நீ தயாராவதற்கு எனக்கூறி முற்றுப்புள்ளி வைக்கிறார் தந்தை!


அப்பாவிடம் எதுவும் பேசாத ரெடா அம்மாவிடம் வந்து, ஏன் எல்லாரையும்போல விமானத்தில் செல்ல முடியாதா? எனக்குப் பரீட்சைவேறு இருக்கிறது. ஏற்கனவே ஒருமுறை தவறியதால் இதுதான் கடைசி சான்ஸ் என்று மெதுவாக அம்மாவிடம் கோபமாகச் சொல்கிறான்! ஆனாலும் வேறு வழி இல்லை.

தான் சொல்வதை கேட்டு தனது விருப்படியே குடும்பத்தினர் நடந்து கொள்ளவேண்டும் என நினைக்கும் பிடிவாத குணமுள்ள பழமைவாதியான, கடவுள் பக்திமிக்க தந்தையும், எதற்கும் அலட்டிக் கொள்ளாத, வேறுவழியின்றித் தந்தை பேச்சுக்குக் கீழ்ப்படியும் ரெடாவும் ஒன்றாகப் பயணிக்கிறார்கள்!

ஏறத்தாழ மூவாயிரம் மைல்கள் கொண்ட நெடிய பிரயாணத்தில், இருவருக்கிடையிலான முரண்பாடுகளால் ஏற்படும் தர்க்கங்கள், கோபங்கள், கோபம்தணிந்த பொழுதுகளில் அமைதியான அருமையான உரையாடல்கள், மெல்ல மெல்ல ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, பயணத்தின்போது ஏற்படும் அனுபவங்கள், சந்திக்கும் வித்தியாசமான அனுபவங்கள் பற்றிச் சொல்கிறது படம்!


படம் நெடுக வரும் உரையாடல்கள் மிக அருமையானவை!

ஒரு சந்தர்ப்பத்தில் ரெடாவிடம் தந்தை அவசரப்படுபவன் சாவை விரைவில் சந்திக்கிறான் - என்கிறார். இதையே இன்னொரு சந்தர்ப்பத்தில் தந்தை அவசரப்படும்போது திருப்பி கிண்டலாக ரெடா சொல்வதும், தந்தை எதுவும் சொல்லமுடியாமல் திகைப்பதும் நிச்சயமாக நம் எல்லாருக்கும் வாய்த்த அனுபவம்!

தந்தை ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டு காரில் செல்ல வேண்டும் எனக் கேட்கிறான் ரெடா. அதற்கு தந்தை சொல்லும் பதில்,

"ஏன் நீங்கள் மெக்காவுக்கு விமானத்தில் செல்ல முயலவில்லை.. அது இலகுவானதே?"

"சமுத்திரத்தின் துளிகள் சொர்க்கத்திற்குச் செல்லும்போது தம் உவர்ப்புத்தன்மையை நீங்கி மீண்டும் தூய்மையாகி விடுகின்றன"

"புரியவில்லை!"

"சமுத்திரத்தின் நீர் ஆவியாகி முகில்களைச் சேர்கின்றன. "ஆவியாதலின் மூலம் அவை தூய்மையாகிவிடுகின்றன. அதுபோலவேதான் இறைவனிடம் செல்லும்போதும்! நடந்து செல்வது குதிரையில் செல்வதைவிட உசிதமானது. ஒரு குதிரையில் செல்வது படகில் செல்வதைவிடவும், படகில் செல்வது ஒரு விமானத்தில் செல்வதை விடவும் சிறந்த வழி!"



உனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கா என்ற தந்தையின் கேள்விக்கு ரெடாவின் ரியாக்சன், கோபத்தில் காரில் ஏறாமல் மன்னிப்பு கேட்டும் நடந்து செல்லும் தந்தையிடம் பொறுமையிழந்து ரெடா கத்துகிறான் 'மன்னிப்பதைப் பற்றி உங்கள் மதத்தில் சொல்லவில்லையா?' - அடுத்த காட்சியில் தந்தை காரில்!

ரெடா மறைத்து வைத்திருக்கும் ஒரு இளம் பெண்ணின் படத்தை எடுத்து வைத்துக் கொள்ளும் தந்தை, பின்னர் அவள் முஸ்லிம் அல்லாத ரெடாவின் காதலி லிசா என்று தெரிந்துகொள்கிறார். அதிகாலையில் கண்விழிக்கும் ரெடாவின் முன்னால் லிசாவின் படம்!

மிக அருமையான இந்தக் காட்சி மகனைப் புரிந்துகொண்டு, அவனின் உணர்வுகளை மதித்து தனது, பிடிவாதம் தளர்த்தி, மதம், சம்பிரதாயங்களை விட்டுக்கொடுக்கும் ஒரு தந்தையின் பாசத்தைச் சொல்லும்!


பாலைவனத்தில் புதைமணலில் ரெடா சிக்க, தந்தை கவனிக்காமல் ஆட்டுமந்தையொன்றை மேயத்துச் செல்வதுபோல் ரெடா காணும் கனவு ஒரு குறியீடாக எதையோ உணர்த்துகிறது. அதற்கான விடையும் இறுதியில்! 

நீங்கள் எதையுமே புரிந்துகொள்வதில்லை என்ற ரெடா கூறுவதும், உனக்கு எழுதவும், வாசிக்கவும் மட்டுமே தெரிந்திருக்கிறது எனத் தந்தை கூறுவதும், அரபி பேசத்தெரியாத ரெடா தந்தை மற்றவர்களிடம் பேசும்போது 'உங்களுக்கு ஆங்கிலம் தெரியுமா? எனக்கேட்பதும், தொடர்கிறது!

ரெடாவின் செல்போனைத்தூக்கி தந்தை குப்பைத்தொட்டியில் போடும்போது அவனுடனே சேர்ந்து கோபப்படும் நாம், ரெடா தந்தையைக் கிண்டல் செய்யும்போது மகிழ்ந்து, அவன் அவரைப் புரிந்துகொள்ளும்போது நாமும் புரிந்து, அன்புகொள்ளும்போது நமக்கும்! இறுதிக்காட்சிகளில் அவனது பதைப்பு நமக்கும் தொற்றிக்கொள்ளும்!

மெக்கா காட்சிகள், பிரதான நடிகர்களோடு புனித யாத்திரையின்போது ஒரிஜினலாக அங்கேயே எடுக்கப்பட்டவையாம்!


2004 இல் வெளிவந்த இந்த பிரெஞ்சுப்படம் பார்க்கும்போது கதாபாத்திரங்களோடு இணைந்து நாமும் செல்வது போல மிக அருமையான ஒரு பயண அனுபவத்தைக் கொடுக்கும்!

எந்தவிதமான சென்டிமென்ட் காட்சிகளும் இல்லாமல் மிக மிக இயல்பாக செல்லும் இந்தப் படம் ஏற்படுத்தும் பாதிப்பு மிக அதிகம்! இறுதிக்காட்சிகளில் வரும் பின்னணி இசையும், மொழிபுரியாத அந்தப்பாடலும் அருமை!

நாம் எந்த அளவுக்கு நம் அப்பாவை நேசிக்கிறோம்? அப்பா நம்மைப் புரிந்து கொள்வதில்லை என குறைபட்டுக் கொள்ளும் நம்மில் எத்தனை பேர் அப்பாவின் விருப்பு வெறுப்புகள் பற்றி அறிந்துள்ளோம்? - என்பதுபோல பல எண்ணங்கள் வரும்!

நிச்சயம் படம் பார்க்கும் எல்லோருக்கும் அப்பாவின் ஞாபகம் வரும்! அவர்மேல் மரியாதை, பாசம் அதிகரிக்கும்! எனக்கு படம் பார்த்தவுடன் ஏனோ அப்பாவுடன் பேசவேண்டும் போலிருந்தது. தொலைபேசினேன்!

படம் பார்த்ததால் ஒரு வாரமாக ஏற்பட்ட உணர்வலைகள் காரணமாக எழுதிய பதிவு அப்பா! ஆனாலும் சொல்ல நினைத்த எதுவுமே சரியாக சொல்லப்படாதது போல உணர்கிறேன்!

இயக்கம் : Ismael Ferroukhi 
மொழி : French, Moroccan Arabic
நாடு : France

25 comments:

  1. இதோ நீண்ட நாளைக்கு அப்புறம் வந்திருக்கேன் ஜீ...

    ReplyDelete
  2. அடடா ஜீ அந்த ஊரிலயும் இதே சூழ்நிலை தானா? ஆனா அப்பாகிட்ட சொல்ல முடியாததையும் அம்மாகிட்டத் தானே சொல்லலாம்.

    ReplyDelete
  3. உங்க விமரிசனமே படம் பார்த்த அனுபவத்தைக்கொடுத்தது. நன்றி.

    ReplyDelete
  4. //நாம் எந்த அளவுக்கு நம் அப்பாவை நேசிக்கிறோம்? அப்பா நம்மைப் புரிந்து கொள்வதில்லை என குறைபட்டுக் கொள்ளும் நம்மில் எத்தனை பேர் அப்பாவின் விருப்பு வெறுப்புகள் பற்றி அறிந்துள்ளோம்? - என்பதுபோல பல எண்ணங்கள் வரும்!

    நிச்சயம் படம் பார்க்கும் எல்லோருக்கும் அப்பாவின் ஞாபகம் வரும்! அவர்மேல் மரியாதை, பாசம் அதிகரிக்கும்! எனக்கு படம் பார்த்தவுடன் ஏனோ அப்பாவுடன் பேசவேண்டும் போலிருந்தது. தொலைபேசினேன்!//

    மிகவும் அழகான விமர்சனம்.
    நன்றி.

    ReplyDelete
  5. விமர்சனம் சூப்பரா இருக்கு மக்கா வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. உணர்வுகளோடு எழுதிய திரைவிமர்சனம்
    அருமையான தொகுப்பு

    ReplyDelete
  7. super ஆன விமர்சனம் எழுதிப் படத்தை பார்க்கவேண்டும் என்ற ஆவலைத்தூண்டிவிட்டிட்டியளே

    ReplyDelete
  8. வணக்கம் சார், கும்புடுறேனுங்க!

    உங்க தளத்துல 274 வது ஃபாலோயரா சேர்ந்திருக்கேன்! இருங்க படிச்சுட்டு வர்ரேன்

    ReplyDelete
  9. அடடா படம் அருமையாக இருக்கும் போல! பார்க்கத்தான் வேண்டும்!

    லு குறோ வொயாஸ்!

    தலைப்பும் நன்றாகத்தான் இருக்கிறது!

    ReplyDelete
  10. நேரம் கிடைக்கும் போது கட்டாயம் பார்கிறேன்.......

    எல்லா அப்பாக்களும் ஒரே மாதிரி தானா

    ReplyDelete
  11. படத்தின் சிறப்பை விரிவாகக் காட்டும் விமரிசனம்

    ReplyDelete
  12. முதல்ல நீங்க வேற மொழி படம் பாக்கிறதை நிப்பாட்டணும். நிறைய தமிழ் இயக்குனர்களுக்கு உங்களால் பிரச்சனை

    ReplyDelete
  13. வெயிட் படிச்சுட்டு வர்றேன்

    ReplyDelete
  14. பாஸ் அருமையான விமர்சனம், இந்த படத்தை நான் ஏற்க்கனவே பார்த்துவிட்டேன்,
    பாஸ் நிஜமாகவே உங்கள் கடந்த அப்பா பதிவை பார்த்ததும் இந்த படம்தான் என் கண் முன்னால் வந்தது.
    ஆனால் அந்த படம்தான் உங்களை பதிவெழுத துண்டியது என்று இப்போது சொல்வதைக்கேட்கும்
    போது ஆச்சரியமாய் இருக்கு பாஸ்,

    ReplyDelete
  15. உங்கள் விமர்சனம் மீண்டும் ஒருமுறை படத்தை பார்க்கும் ஆவலை கொடுத்து விட்டது... :)

    ReplyDelete
  16. விமர்சனம் நல்லாய் இருக்கு பாஸ் )

    ReplyDelete
  17. வணக்கம் பாஸ்,
    வாழ்க்கையின் தேடலை நீண்ட நேரப் பயணத்தின் பின் உரைக்கும் அருமையான படத்தினைத் தந்திருக்கிறீங்க.
    கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம் பாஸ்,.

    விமர்சனப் பகிர்விற்கு நன்றி

    ReplyDelete
  18. விமர்சனம் சூப்பரா இருக்கு... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  19. வணக்கம் பாஸ்
    அருமையான விமர்சனம்
    படம் பார்க்கவேண்டும்..

    ReplyDelete
  20. மிக முக்கியமான படங்களுள் ஒன்றாக இருக்கும்போல் இருக்கிறதே..பார்க்க வேண்டிய படங்கள் லிஸ்ட்டை கூட்டிக்கொண்டே போறீங்களே..

    ReplyDelete
  21. நேத்தே வந்தேன் ஆஃபீஸில் இருந்து....சரி, அப்புறம் வருவோம்னு போனேன், மறந்துட்டேன்.

    ReplyDelete
  22. ஜீ....படிச்சுட்டேன்...ம்ம்ம்ம்...போன பதிவில் அப்பா பத்தி சின்ன முன்னோட்டம் கொடுத்துட்டு...அப்படியே இந்த படம் review படிக்கும்போது...ரொம்ப டச்சிங் ஆ இருந்தது....உன் review படிக்கும்போதே பீலிங்கா இருந்ததுனால்...பார்த்த உனக்கு ஏற்பட்ட பீலிங்கும்...அப்பாக்கு உடனே போன் பண்ண உணர்வும் புரியுது how much u got emotion ன்னு...எனக்கு அந்த வசனங்கள் கூட ரொம்ப பிடிச்சது...அப்பா சொல்ற அந்த வசனம் (regardg y he avoided the airway..) ரொம்ப புதுசு ல நமக்கு....வழக்கம்போலே சுபெர்ப் போஸ்ட் ஜீ...வாழ்த்துக்கள்...:-)))

    ReplyDelete
  23. எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று.........

    B - Grade செண்டிமென்ட் காட்சிகள் நெறைய இடங்களில் திணிக்கப்பட வாய்ப்பிருந்தும்.......ரொம்பவே யதார்த்தமாக போகும்......என்னவொரு கேமெரா வோர்க்.....கூடவே நாமும் சேர்ந்து எல்லா இடங்களையும் பார்த்தது போன்ற உணர்வு நிச்சயம் அனைவருக்கும் இருக்கும்.....

    வீணாக ஒரு ஆள் மீது பழி போட்டதற்காக தந்தை வருந்தும் காட்சியும்....நீங்கள் குறிப்பிட்டுள்ள பல காட்சிகளும் ரொம்பவே எனக்கு பிடித்தமானவைகள்.......

    நீங்கள் சொல்லியிருந்தது போல...இதற்காக பிரத்தியேகமாக அனுமதி வாங்கித்தான் மெக்காவில் படப்பிடிப்பு நடத்தினர்....

    ReplyDelete
  24. ஒரு சிறந்த படத்திற்கு உதாரணம்..ஏற்கனவே பார்த்துவிட்டேன்...நல்ல பதிவு..மிக்க நன்றி...

    ReplyDelete