Friday, September 2, 2011

அப்பா!


'அந்தாளோட தொல்லை தாங்கலடா' - அப்பா குறித்து அன்பாக நண்பர்களிடம் அடிக்கடி கூறியதுண்டு! இப்படிச் சொல்லாத பையன்கள் இருக்கிறார்களா?

அப்பரின் தொல்லை தாங்கமுடியவில்லை என்ற மகன்களின் புலம்பலும், என் பேச்சை மதிக்கிறானில்லை என்ற அப்பாக்களின் ஆதங்கங்களும் கலந்த புகார்கள் அம்மாக்களின் பார்வைக்கு வருவதை பல வீடுகளில் பார்க்கலாம்!

சின்னவயதில் அப்பாவின் நெஞ்சில் தூங்கி, அப்பா தூக்கிக்கொண்டு நடந்து செல்கையில் தோளில் முகம்புதைத்து வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்த நாட்கள் நினைவுகளின் இடுக்குகளில் எங்கோ ஒளிந்திருந்து எப்போதாவது எட்டிப்பார்க்கும்!


அப்பாக்களின் அட்வைஸ்களை சிறுவயது முதல் கேட்டுக் கொண்டிருந்ததாலோ என்னவோ அப்பா எதையும் சரியாகப் புரிந்துகொள்வதில்லை, எனக்கே அதிகம் தெரியும் எனக்காட்டிக்கொள்ள சந்தர்ப்பத்தை எதிர்பார்க்கிறோமா? சிறுவயதில் எதிர்த்துப் பேச முடியாததால்தான் பின்னர் அப்பா எது சொன்னாலும் எதிர்க்கவேண்டும், கேட்கக் கூடாது என்ற மனோபாவம் வந்து விடுகிறதா?

அப்பாக்களுக்கும் பையன்களுக்குமான இடைவெளி எப்போது ஆரம்பமாகிறது?

சின்னவயதில் அப்பாவின் அட்வைஸ்களை உண்மையாகவே கேட்டு நடந்து...கொஞ்சம் வளர்ந்தபின் விரும்பாமலே வேறு வழியின்றி அப்பா சொன்னதற்கெல்லாம் தலையாட்டி......அதன்பின் அம்மாவிடம் முணுமுணுத்து சிறு எதிர்ப்பைக்காட்டி........பின்னர் அப்பா எதிரில் பேசும்போதே மனதுக்குள் திட்டி.............பின்னர் வெளிப்படையாக நண்பர்களிடம் சொல்லித் திட்டி................கொஞ்சம் கொஞ்சமாக இடைவெளியை அதிகமாக்கி கொள்கிறோமா?


ஒருகட்டத்தில் நேரடியாகவே எதிர்ப்பைக் காட்டும்போது புரிந்துணர்வுள்ள புத்திசாலி அப்பாக்கள் அமைதியாகி விடுகிறார்கள்! பிடிவாத குணமுள்ள அசட்டு அப்பாக்கள் இந்த திடீர் மாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் அம்மாவிடம் தமது ஆற்றாமையைக் கொட்டுகிறார்கள்!

அப்படி அப்பாக்கள் அமைதியாக ஒதுங்கியிருந்தாலும் விடாது, கிடைக்கும் சந்தர்ப்பங்களில் கிண்டல் செய்து அதுவும் கடந்துபோக, பேச்சுவார்த்தை கூட தேவைகளின் அடிப்படையில் என்றாகி, மௌனம் என்ற சுவர் இருவரையும் பிரித்துவிடுகிறது!

பொதுவாக நான் வீட்டில் பேசுவதேயில்லை. புத்தகங்களிலும், பின்னர் கணணியிலும் கலந்து, மனம் விட்டுப் பேசுவதென்பது நண்பர்களுடன் மட்டுமே என்றானபின், என்றாவது ஆரம்பிக்கும் எங்கள் இருவருக்கிடையான உரையாடலின் ஐந்தாவது வாக்கியத்தில் நான் பொறுமையை இழந்துவிடுகிறேன் என்பதை வெட்கத்தைவிட்டு ஒப்புக் கொள்கிறேன். இருந்தாலும் ஏன் இப்படி என்று தெரியவில்லை. அதென்னவோ அப்படியாகி விடுகிறது!

அநேகமாக சின்ன சின்ன விஷயங்களுக்கும் சொல்லும் அறிவுரைகள், எச்சரிக்கைகள், பக்குவங்கள் எரிச்சலைக் கிளப்புவதை அவர்களே உணர்ந்தாலும், 'எனக்குத் தெரியும்'என்ற ஒருசொல்லில் தடுத்து நிறுத்தினாலும் இதையே தொடர்கிறார்கள். அவர்கள் பார்வையில் பிள்ளைகள் என்றும் குழந்தைகள்தானோ!


'இந்தவயதில் ஏன் இப்பிடி கோபம், டென்ஷன் உனக்கு?' - டீன் ஏஜின் இறுதிகளில் எதற்கும் டென்ஷனாகாத, கோபப்பட்டு கத்தாத அப்பா அடிக்கடி கேட்கும் கேள்வி இது - இப்போதும் அடிக்கடி நினைவில் தோன்றும்!அவரைப்போல எதையும் கூலாக, டேக் இட் ஈஸியாக எடுக்க முடிவதில்லை! சில சமயங்களில் அப்பாவின் வாழ்க்கையில் மிகப்பெரிய டேக் இட் ஈஸி நான்தானோ என்றுகூடத் தோன்றும்!

நம்மில் எத்தனைபேர் அப்பாவுக்கு பிடித்தவை, அப்பாவின் ரசனைகள் பற்றி தெரிந்திருக்கிறோம்? வாசிப்புப் பழக்கத்தைக் கற்றுக்கொடுத்தார். அவருக்கும் கமல்தான் பிடிக்குமென்று சிறுவயதில் கேட்டஞாபகம்! ஓரிரவு வெகுநேரம் விழித்திருந்து டீ.வி யில் ரஹ்மானின் இசைநிகழ்ச்சி பார்த்தபோது கூடவே அப்பாவும்! அப்பாவுக்கும் ரஹ்மான் இசை அவ்வளவு பிடிக்குமா? - இதுவரை அவரிடம் கேட்டதில்லை!

எதிர்த்துப் பேசாத வயதில் என்சார்பில், எனக்கு நன்மை செய்யும் என்று நினைத்து அவர் எடுத்த முடிவுகள், மறுக்கப்பட்ட என் விருப்பங்கள், ஆசைகள் காரணமான கோபங்கள், ஆறாத வடுக்கள் அவ்வப்போது பேச்சாகவோ, உதாசீனமாகவோ வெளிப்படுகிறதா?

அப்பாக்களைப் புரிந்துகொள்ள, அவர்களிடம் கற்றுக் கொள்ள ஏராளம் இருக்கிறது! அது எப்படி வாழவேண்டும் என்று மட்டும் இருக்க வேண்டிய அவசியமில்லை! சில சமயங்களில் எப்படி வாழக்கூடாது என்பதாகக் கூட இருக்கலாம்!

கவுதம் மேனனின் 'வாரணம் ஆயிரம்' ஐடியல் அப்பாக்கள் நிஜ வாழ்வில் மிக அரிது! எந்த குறைபாடுகளும் இல்லாத, முழுக்க பாசிட்டிவ் குணங்கள் கொண்ட தமிழ்சினிமாவின் 'ஹீரோ' அப்பா சினிமாவில் மட்டுமே சாத்தியம்! நிஜத்தில் பிடிவாதம், முன்கோபம், அப்பாவித்தனம், அசட்டுத்தனம் கொண்ட சாதாரண மனிதர்களே! ஆனால் அவர்களுக்குள்ளும் ஏதோ ஒரு விஷயத்தில், குணத்தில் ஒரு ஹீரோ இருப்பார்!

இப்போதும் எனக்கு அப்பாவைப் பிடிக்கும் என்பது அப்பாவுக்கு தெரிந்திருக்குமா?  


டிஸ்கி: சமீபத்தில் பார்த்த ஒரு படத்தின் பாதிப்பில் அப்பா பற்றி மனதில் தோன்றியதை எழுதினேன்! படம் விரைவில்! 

43 comments:

  1. படம் பார்த்த பாதிப்பை இருக்கலாம்..ஆனால் உண்மையான்ம விடயம் பாஸ்!!நான் நேரில் பாத்து கண்ட உண்மை!

    ReplyDelete
  2. வடை எனக்கா???

    ReplyDelete
  3. வர்ர்ட்டா...ஒட்டு போட்டாச்சு,,ஆப்டர் லாங் டிம்,,.,மத்தவங்க பதிவுகளுக்கும் போகணும்..

    ReplyDelete
  4. அப்பா ரொம்ப காலம் வரை அவரே ரோல் மாடல்....அது அவர் நடந்து கொள்வதை பொறுத்ததே....இது என் தாழ்மையான கருத்து மாப்ள!

    ReplyDelete
  5. அப்பா என்ற உறவைப் பற்றி நீங்கள் எழுதியவற்றை ஆர்வத்துடன் படித்தேன்.காரணம் நான் என் ஐந்து வயதில் தந்தையை இழந்தவன்.

    ReplyDelete
  6. //நம்மில் எத்தனைபேர் அப்பாவுக்கு பிடித்தவை, அப்பாவின் ரசனைகள் பற்றி தெரிந்திருக்கிறோம்//

    இந்தக் கேள்வியை வாசிக்கும்போது சுருக்கென்றது! அபாரமான இடுகை நண்பரே! பாராட்டுகள்!

    ReplyDelete
  7. உண்மைதான்

    அப்பா அருகில் இருக்கும்போது வார்த்தைகள் கசக்கின்றன. ஆனால் பிரிந்து போன பின்னர்தான் அந்த இடைவெளி தெரிகிறது. சமீப காலமாக அந்த வேதனையை அனுபவித்து சொல்கிறேன்

    ReplyDelete
  8. சமீபத்தில் பார்த்த ஒரு படத்தின் பாதிப்பில் மனதில் தோன்றியதை எழுதினேன்! படம் பற்றி விரைவில்! //

    அப்பாவைப்பற்றி அருமையானதொரு பதிவு...எனக்கு கூட தவமாய் தவமிருந்து படம் வந்தபொழுது அழுகை பீறிட்டு வந்தது.... பக்குவப்பட்ட அன்புள்ள ஒருவனது அன்பை புரிந்துகொள்ளாத உறவும் வீணே... அது எதுவானாலும் சரி... பகிர்வுக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  9. தமிழ்மணம் 7

    காவியப் படைப்பு

    ReplyDelete
  10. அப்பாவுக்கு ஒரு அன்பு மகன் எழுதிய கடிதம் போல் உள்ளது இந்தப் பதிவு.

    ReplyDelete
  11. //அப்பாக்களின் அட்வைஸ்களை சிறுவயது முதல் கேட்டுக் கொண்டிருந்ததாலோ என்னவோ அப்பா எதையும் சரியாகப் புரிந்துகொள்வதில்லை, எனக்கே அதிகம் தெரியும் எனக்காட்டிக்கொள்ள சந்தர்ப்பத்தை எதிர்பார்க்கிறோமா? சிறுவயதில் எதிர்த்துப் பேச முடியாததால்தான் பின்னர் அப்பா எது சொன்னாலும் எதிர்க்கவேண்டும், கேட்கக் கூடாது என்ற மனோபாவம் வந்து விடுகிறதா?//

    நுணுக்கமான பார்வை ஜீ!

    ReplyDelete
  12. //இப்போதும் எனக்கு அப்பாவைப் பிடிக்கும் என்பது அப்பாவுக்கு தெரிந்திருக்குமா?//

    அவருக்குள்ளும் இதே போன்ற கேள்வி இருக்கலாம்..நாம் யார் மீது அதிக அன்பு வைத்துள்ளோமோ அவர்களிடமே நாம் அதிகம் எரிச்சல் படுவது ஏன் என்று நானும் யோசித்திருக்கிறேன்!

    ReplyDelete
  13. //ஆனால் அவர்களுக்குள்ளும் ஏதோ ஒரு விஷயத்தில், குணத்தில் ஒரு ஹீரோ இருப்பார்!//

    //One father is more than a hundred schoolmasters//
    எனக்கு இது நினைவு வந்தது ,
    பையன்கள் எப்படின்னு தெரியல ஆனா பொண்ணுங்களுக்கு அப்பாதான் முதல் ஹீரோ.

    ReplyDelete
  14. அப்பப்பா, சந்தோஷ் சுப்பிரமணியம் படத்துல சொல்லாம விட்ட நெறைய விசயங்கள சொல்றீங்க, "இந்த அப்பனுக எல்லாம் ..............".
    //என்றாவது ஆரம்பிக்கும் எங்கள் இருவருக்கிடையான உரையாடலின் ஐந்தாவது வாக்கியத்தில் நான் பொறுமையை இழந்துவிடுகிறேன்//
    பலவீடுகளில் நடப்பது இதுவே... நீங்களும் அப்பா அகும்நாளில் இதன் மறுப்பக்கத்தில் இருந்து ஒரு பதிவு எழுதுவீர்கள் என நம்புகிறோம்...

    ReplyDelete
  15. அப்பா....
    உண்மையான உணர்வை வெளிப்படுத்தும் அழகான பகிர்வு.

    ReplyDelete
  16. அற்புதமா எழுதி இருக்கீங்க ஜீ.... உங்கள் பதிவுகளில் இதற்கு சிறப்பிடம் உண்டு.......!

    ReplyDelete
  17. சேம் பிளட் ,,இப்பவும் அப்பா எண்டால் நாலடி தள்ளித் தான் நான் ))

    ReplyDelete
  18. ////இப்போதும் எனக்கு அப்பாவைப் பிடிக்கும் என்பது அப்பாவுக்கு தெரிந்திருக்குமா? //// ஒரே வழி இந்த பதிவை என்றோ ஒரு நாள் அவருக்கு காண்பியுங்கள் )))

    ReplyDelete
  19. அப்பாக்களைப் புரிந்துகொள்ள, அவர்களிடம் கற்றுக் கொள்ள ஏராளம் இருக்கிறது! அது எப்படி வாழவேண்டும் என்று மட்டும் இருக்க வேண்டிய அவசியமில்லை! சில சமயங்களில் எப்படி வாழக்கூடாது என்பதாகக் கூட இருக்கலாம்!

    உண்மை...நல்லா எழுதி இருக்கீங்க...

    ReplyDelete
  20. வணக்கம் பாஸ்,
    நீங்க படம் பார்த்த பாதிப்பில் எழுதினாலும்
    தந்தையர் தினத்திற்கேற்றாற் போல உங்களின் பதிவு,
    தந்தையின் பெருமைகளைச் சுமந்து வந்திருகிறது.

    ReplyDelete
  21. பட பகிர்வையும் எதிர்பார்க்கிறோம்!

    ReplyDelete
  22. பதிவை படிக்கும் போது ஏன் அப்பா கண் முன் வந்து போகிறார் நண்பா

    அருமையான பதிவு.

    ReplyDelete
  23. உண்மைதான் நண்பா,

    அம்மா மேல் உள்ளா பாசத்தை வெளி காட்டும் பையன்கள் அப்பா மேல் உள்ள பாசத்தை வெளிக்காட்டுவது இல்லை,

    ReplyDelete
  24. பதிவு மனதை நெகிழ செய்துவிட்டது. இப்பதிவை படிக்கும் எல்லோருக்கும் ஒரு நிமிடம் அவர்கள் அப்பா கண் முன் வந்து சென்றால் அதில் ஆச்சரியம் எதுவும் இல்லை.

    ReplyDelete
  25. ஆஹா.. ஹார்ட் அட்டாக்கில் இறந்த என் தந்தையை நினைவு படுத்தியது உங்கள் பதிவு./... எல்லோருக்குமே அப்பா மேல் பசம் இருக்கும், அது பரஸ்பரம் உணரப்பட்டதா? என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி..

    ReplyDelete
  26. ஜீ...!

    அப்பா எல்லோருக்கும் மறைமுகமாகவேனும் ஏதோவொரு வகையில் ஹீரோவாக இருக்கிற ஜீவன்.

    சத்தியமாக வாரணம் ஆயிரத்தில் வருகிற அப்பாவைக் காட்டிலும் என்னுடைய அப்பா மிகவும் நட்பானவர். அதுவும், தன்னுடைய மகனின் சிறிய வளர்ச்சியைக்கூட விமர்சனத்துடன் நேருக்கு நேராக விமர்சித்து பெருமைப்படும் மனசுக்காரர்.

    இப்போது வெளிநாடொன்றில் இருந்தாலும் வாரத்துக்கொரு தடவையாயினும் மணித்தியாலக்கணக்கில் குடும்ப விடயங்களைத் தாண்டி அரசியல்- சமூகம்- இலக்கியம் என்று விவாதித்துக்கொண்டிருப்போம். மிகவும் நேர்மையான- எல்லோருடனும் எளிமையாக- இயல்பான நட்பு பாராட்ட எனக்கு பழக்கிவித்தவர் அவர்.


    எனக்கு என்றைக்கும் அப்பா ஹீரோவாகவே இருக்கிறார். ஏனெில், படங்களில் வருகிற காதல்களைக் காட்டிலும் அவர் தன்னை நம்பிய பெண்ணின் மீது கொண்ட காதலும்- அர்ப்பணிப்பும் வேறு எங்கும் நான் கண்டதில்லை. அதனாலும், அவர் எனக்கு ஹீரோவே.

    அப்பாக்கள் எப்போதுமே மனதுக்கு நெருக்கமான இருக்கிறார்கள். ஆனால், நாங்கள்தான் ஏற்றுக்கொள்வதில்லை.

    சூப்பர் பதிவு ஜீ. பட விமர்சனத்துக்கு வெயிட்டிங்க்.

    ReplyDelete
  27. இருக்கும் போது அப்பாவின் அருமை தெரியாது

    ReplyDelete
  28. அப்பா எப்போதுமே பையன்களால் லேட்டாக புரிந்து கொள்ளக் கூடியவர்கள். ஒரு சிலரை தவிர.:)

    கேபிள் சங்கர்

    ReplyDelete
  29. பொதுவாக நான் வீட்டில் பேசுவதேயில்லை. புத்தகங்களிலும், பின்னர் கணணியிலும் கலந்து, மனம் விட்டுப் பேசுவதென்பது நண்பர்களுடன் மட்டுமே என்றானபின், என்றாவது ஆரம்பிக்கும் எங்கள் இருவருக்கிடையான உரையாடலின் ஐந்தாவது வாக்கியத்தில் நான் பொறுமையை இழந்துவிடுகிறேன் என்பதை வெட்கத்தைவிட்டு ஒப்புக் கொள்கிறேன். இருந்தாலும் ஏன் இப்படி என்று தெரியவில்லை. அதென்னவோ அப்படியாகி விடுகிறது!


    உண்மை தான் பிறகு உடனே மனசுக்குள் ஒரு நெருடல்

    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  30. சார் டச் பண்ணீட்டிங்க சார்! எனது வழிகாட்டி எனது எடுகோள்கள் எனது கருத்துக்கள் அரைவாசிக்கும் மேலான உறைவிடம் என் அப்பா!
    அவரிடமிருந்துதான் அரசியல் சினிமா பொது விடயங்கள் பல வற்றை நான் கேட்டும் பார்த்தும் அறிந்திருக்கிறேன். என்னதான் மகன்மார் அப்பாவுடன் கோபமாக இருப்பதுபோல் காட்டிக்கொண்டாலும் உள்ளே இருவருக்கும் இடையே மிகப்பெரிய பாசப்பிணைப்பு உண்டு!

    ReplyDelete
  31. ரொம்ப நல்லா இருக்கு.

    ReplyDelete
  32. அபாரமான பதிவு.. பாராட்டுகள்..

    ReplyDelete
  33. அழகான பதிவு உண்மையில் தந்தையின் தியாகங்களை உணர்வதற்கு நாம் பின்னடிக்கின்றோம் புரிந்து கொள்ளும் போது அவர்கள் அருகில் இருப்பதில்லை .நானும் அதிகமாக தந்தையின் அரவனைப்பை இழந்ததால் அவரை பிரிந்ததன் வலிபுரிகின்றது காலம் நல்லவர்களை வாழவிட்டு வைக்குது இல்லை!

    ReplyDelete
  34. ''இப்போதும் எனக்கு அப்பாவைப் பிடிக்கும் என்பது அப்பாவுக்கு தெரிந்திருக்குமா? '' ஒரு கணம் எமது அப்பாவையும் சிந்தித்து பார்க்க வைத்தது .அருமை

    ReplyDelete
  35. அப்பாவை பத்தி இப்படி ஒரு presentation ...ரொம்ப matured ஆ...வார்த்தைகளை ரொம்ப கவனமா தேர்ந்தெடுத்து...சூப்பர் ஜி....அப்பா...ஆல்வேஸ்...ஸ்வீட் அப்பா..சில வேளைகளில் புரியாத குழந்தை அப்பா...:-)))

    ReplyDelete
  36. நல்லதொரு பதிவு. மிகவும் கௌரவமான முறையில் இந்தவிடயத்தை கையாண்டிருக்கிறீர்கள். தந்தை மகன் உறவு ஆண்டான் அடிமை லெவலில் இல்லாமல் நட்புரிமை கொண்டதாக இருந்தால் அப்பா பிள்ளை இருவருக்கும் இனிமையான அனுபவமாக அமையும்.

    ReplyDelete
  37. அம்மாவை போல் அல்லாமல் அப்பாக்கள் தன பிள்ளைகளை என்றும் குழந்தைகளாகவே நம்புகின்றனர்... அவர்கள் வளர்ந்து விட்டார்கள் என்று நம்ப அடம் பிடிக்கிறார்கள்..

    ReplyDelete
  38. unmayai solli irukkireergal

    ReplyDelete
  39. எமக்காக துன்பங்கள் சுமந்த எந்தையே!
    நெஞ்சுவலி யால்துடித்தும் எமக்காக
    நில்லாமல் நாடுகா டெங்கும்சுற்றி
    துஞ்சாமல் எமக்காகவே வாழ்ந்த
    தங்கக் குணத்தவர் நீங்களே வாப்பா!

    துன்பங்கள் எமைச் சூழாதிருக்க
    துயர்பட்டு நீங்கள் இன்றும்
    இன்பங்கள் தொலைத்து நின்று
    இதயத்துள் நிற்கின்றீர் எந்தன் வாப்பா!

    இயலாமை என்பது இயலாமை
    இங்கில்லை இயலாமை என்று
    முயலாமை பற்றி படித்துத்தந்த
    முனைவர் என்னில் நீங்கள் வாப்பா!

    நோய் உங்களைச் நாடிவந்து
    நீக்கினவே உங்கள் பாவமெலாம்
    தேயவேண்டாம் உளத்தால் நீங்கள்
    தாங்கிநிற்கும் செய்த நன்மைபலவும்!

    -கலைமகன் பைரூஸ்




    ReplyDelete



  40. அன்பு தமிழ் உறவே!
    வணக்கம்!

    இன்றைய வலைச் சரத்தின்,
    திருமதி R.உமையாள் காயத்ரி அவர்களின்
    "எல்லோருக்கும் பிடித்த ஹீரோ"

    சிறப்புமிகு பதிவாளராக தாங்கள் தேர்வாகி,
    வலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி!
    வாழ்த்துகள்!

    வலைச் சரம் வானத்தில் வானவில்லாய்
    உமது பதிவின் எழில் முகம் கண்டேன். களிப்புறேன்.
    உவகை தரும் உமது பதிவுகள் உயிரோவியமாய் திகழட்டும்!
    தேன் தமிழாய் சுவைக்கட்டும்! திகட்டாமல் திக்கெட்டும்.

    நட்புடன்,
    புதுவை வேலு
    WWW.KUZHALINNISAI.BLOGSPOT.COM
    (குழலின்னிசையின் உறுப்பினராகி உவகை தர வேண்டுகிறேன் நன்றி)

    வலைச் சரம்

    கவி மழை புவி புகும்
    இல்லம் வலைச் சரம்!
    கதை நல் விதை விதைக்கும்
    விளை நிலம் வலைச்சரம்!
    கட்டுரைத் தேன் தென்றல் தழுவிடும்
    மேனி வலைச் சரம்
    செந்தமிழ் இலக்கியம் பைந்தமிழ் இலக்கணம்
    பிறக்கும் கருவறை வல்லோர்
    நிறைந்த வலைச்சரம் வாழி!

    புதுவை வேலு

    ReplyDelete
  41. http://blogintamil.blogspot.com/2015/02/blog-post_6.html
    தங்களை வசைச்சரத்தில் அறிமுகம் செய்து இருக்கிறேன் சகோ வந்து பாருங்கள்

    ReplyDelete