Thursday, October 18, 2012

In the Mood for Love


காதல் என்ற உணர்வு எப்படியெல்லாம் உருவாகிறது? அது உடல் சார்ந்த தேவைகளின் அடிப்படையாகக் கொண்டு மட்டும்தான் நிகழ வேண்டுமா? ஒருவர் மீது கொள்ளும் சிறு அக்கறையைக் காதல் என்று சொல்ல முடியாதா? அப்படியானால் அது திருமணமாகாதவர்களுக்கு இடையிலே மட்டும்தான் எழ வேண்டுமா?

ஒரு பத்திரிகையாளனான சௌ மோ வான் ஹாங்காங்கின் ஒரு நெரிசலான அடுக்குமாடிக் குடியிருப்பில் தனக்குப் பிடித்த ஒரு அறையை வாடகைக்கு கேட்கிறான். அது வேறு ஏற்கனவே ஒருவருக்கு கொடுக்கப்பட்டு விட்டது எனக்கூறும் உரிமையாளர் பக்கத்து அறையை வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம் என்கிறார். அதுவும் பிடித்துவிட தனது உடைமைகளை எடுத்துவருகிறான்.

அதே நேரத்தில் பக்கத்து அறையிலும் பொருட்கள் அடுக்கப்பட, இரண்டு பேரின் உடைமைகளும் மாற்றி வைக்கப்பட்டு விடுகின்றன. மாறிப்போன பொருட்களை சரி செய்துகொள்ளும்போதுதான் அவளைக் கவனிக்கிறான் சௌ. அவள் ஓர் அலுவலகத்தில் செக்ரடரியாகப் பணிபுரியும்  சு லி ஸென்.

சௌவின் மனைவி மிக நெருக்கடியான பணியில் இருப்பவள். அடிக்கடி வெளியூர் சென்றுகொண்டிருக்கிறாள். சௌ எப்போதும் அவளுடன் தொலைபேசியில்தான் பேசிக்கொள்ள முடிகிறது! சென்னின் கணவனும் வேலை நிமித்தமாக அடிக்கடி வெளிநாடு செல்பவன். அவளும் தனிமையில் இருக்கிறாள். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களிடம் அன்பாக இனிமையாகப் பழகுகிறாள்.

சௌ தனது உணவிற்காக பக்கத்திலுள்ள உணவு விடுதிக்குச் செல்லும்போது, அங்கே உணவு வாங்கிச்செல்லும் சென்னைப் பார்க்கிறான். இருவரும் அமைதியான மெல்லிய தலையசைப்புடன் கடந்து செல்கிறார்கள். ஒருமுறை இரவு உணவின்போது, ஓர் உணவுவிடுதியில் சந்திக்கும்போது அமர்ந்து பேசுகிறார்கள்.

"ஒன்று கேட்க வேண்டும். இந்த Hand Bag எங்கே வாங்கியது"
"ஏன்?"
"என் மனைவிக்கும் ஒன்று வாங்க வேண்டும்"
"மனைவியை மிகவும் நேசிக்கிறீர்கள்"
"அப்படியில்லை. அவளுக்குப் பிறந்தநாள் வருகிறது. அவளுக்குக் கொடுக்க  இதே போல் ஒன்று வாங்கித்தர இயலுமா?"
"இதே மாதிரியே ஒன்றை அவர்கள் விரும்பமாட்டார்கள்"
"நீங்கள் சொல்வது சரி, நான் அதை யோசிக்கவில்லை"
"பெண்கள் யோசிப்பார்கள்"
"அதுவும் பக்கத்து வீட்டுக்காரர் எனில், வேறு நிறங்களில் கிடைக்குமா?"
"என் கணவரிடம்தான் கேட்க வேண்டும். அவர் வெளிநாடு சென்றபோது வாங்கிவந்தார். இங்கே கிடைப்பதில்லை!" எனக்கூறும் ஸென்,

"நானும் ஒன்று கேட்கவேண்டும். உங்கள் டை எங்கே வாங்கியது?"
"என்மனைவிதான் எல்லாமே வாங்கினாள், வெளிநாடு சென்றபோது. இங்கே கிடைப்பதில்லை" என்கிறான் சௌ.

சிறிது நேர மௌனத்தின் பின் அமைதியாகச் சொல்கிறாள் ஸென்,
"என் கணவரும் இதேபோல ஒரு டை வைத்திருக்கிறார். அவரது பாஸ் பரிசளித்தது என..ஒவ்வொருநாளும் அணிந்து கொள்வார்"
இறுகிப்போய் அமர்ந்திருக்கும் சௌ, "என்மனைவியும் உங்களுடையது போன்ற ஹான்ட் பேக் ஒன்று வைத்திருக்கிறாள்"
"தெரியும். பார்த்திருக்கிறேன்"
பின் மெதுவாகக் கேட்கிறாள்,
"இதிலிருந்து என்ன தெரிந்து கொண்டீர்கள்?"
சௌ மௌனமாக இருக்கிறான். தொடர்ந்து அவளே சொல்கிறாள்,
"நான் மட்டும்தான் தெரிந்துகொண்டேன் என்று நினைத்தேன்"

அவர்களிருவரின் துணைகளும் ஒரு நிழலான உறவில் இணைந்திருப்பது பற்றி முதலில் அதிர்ச்சியடைந்து பின்பு ஆராயத் தொடங்குகிறார்கள். எப்படி நிகழ்ந்திருக்கும் என ஒத்திகை போல பேசிப்பார்க்கிறார்கள்.முதலில் துணைகளைப் பற்றிப் பேசுவதற்காக சந்தித்துக் கொள்கிறார்கள். அப்போது இருவருக்குமிடையே உருவாகும் நட்பு ஒரு இனம்புரியாத சந்தோஷத்தைக் கொடுக்கிறது. பின்பு அதற்காகவே சந்திப்பை ஏற்படுத்திப் பேசுகிறார்கள்.

தான் ஒரு தொடர் எழுத இருப்பதாகவும் அதற்கு ஸென்னின் உதவி வேண்டுமென்றும் கூறுகிறான் சௌ. ஸென் சம்மதிக்கிறாள். அது ஹாங்காங்கின் 1962ஆம் ஆண்டு காலம் என்பதால் அக்கம் பக்கத்திலிருப்பவர்கள் காரணமாக வேறொரு இடத்தில் ஓர் அறையை எடுத்துத் தங்குகிறான் சௌ. இடையிடையே வந்து விவாதிக்கிறாள் ஸென். நட்பு என்பதைத் தாண்டி மெல்ல மெல்ல காதல் அரும்புவதை உணர்கிறான் சௌ. அனால் அது தவறானது என்பதில் இருவரும் தெளிவாக இருக்கிறார்கள்.

தங்கள் துணைகள் செய்த தவறைத் தாங்கள் செய்வதில்லை என்பதில் உறுதியாக் இருக்கிறார்கள் இருவரும். ஆனால் ஒரு கட்டத்தில் சௌ, சிங்கப்பூரில் வேலை கிடைத்துச் செல்லும்போது தன்னுடன் வந்துவிடுமாறு ஸென்னிடம் மன்றாடிக் கேட்கிறான். ஸென் முடிவெடுக்கத் தடுமாறுகிறாள். "நீங்கள் உங்கள் கணவனை விட்டு என்னுடன் வரப்போவதில்லை. நான் சென்றுவருகிறேன். உங்கள் கணவரைப் கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்" என விடைபெறுகிறான் சௌ. அவன் தோளில் சாய்ந்து அழுகிறாள் ஸென்.

சிங்கப்பூர். சௌ அலுவகத்திலிருந்து வீடு திரும்புகிறான். யாரோ வந்துவிட்டுச் சென்றதை உணர்கிறான். அங்கிருக்கும் ஒரு சிகரெட்டில் ஒட்டியிருக்கும் லிப்ஸ்டிக் எதையோ சொல்கிறது. சற்று நேரத்தில் அழைக்கும் தொலைபேசியும் அதில் தொடரும் மௌனமும் உறுதி செய்கிறது ஸென் வந்து சென்றிருப்பதை!

ஓர் நண்பனுடன் பேசும்போது சௌ சொல்கிறான், "பழைய காலத்தில் ஒவ்வொருவரும் தங்கள் மனதிலுள்ள மற்றவரிடம் பகிர்ந்துகொள்ள விரும்பாத ரகசியங்களை என்ன செய்வார்கள் தெரியுமா? ஒரு மலைக்குச் சென்று அங்குள்ள ஒரு மரத்தில் துளையிட்டு, அதில் ரகசியமாக சொல்லிவிட்டு , களிமண்ணினால் துளையை அடைத்துவிடுவார்கள். இதன்மூலம் அந்த ரகசியத்தை என்றென்றும் அங்கேயே விட்டுச் சென்றுவிடுவார்கள்"

1963 இல் மீண்டும் ஹாங்காங் செலும் சௌ தனது பழைய வசிப்பிடத்துக்குச் செல்கிறான். உரிமையாளரான பெண்மணி வெளிநாடு சென்றுவிட்டார். அங்கு குடியிருக்கும் ஒருவனிடம் ஸென் பற்றி விசாரிக்கிறான். அவனுக்கு தெரியவில்லை. ஒரு பெண்மணியும் அழகான அவள் சின்ன மகனும் இருப்பதாகச் சொல்கிறான். ஸென்தான் அந்தப்பெண்மணி என்று தெரியாமலே சௌ அங்கிருந்து செல்கிறான்.

1965. புகழ்பெற்ற அங்கூர்வாட் கோயில் செல்லும் சௌ அங்கிருக்கும் புராதன சுவர் ஒன்றில் ஒரு துளை இருப்பதைக் காண்கிறான். அருகில் சென்று ரகசியமாகத் தன மனதிலுள்ளதைச் சொல்கிறான். அவன் அங்கிருந்து நகர்ந்ததும் அந்ததுளை புற்களோடு காய்ந்த மண் கொண்டு அடைக்கப்பட்டிருப்பதைக் காட்டி காட்சி நகர, மனத்தைக் கனக்க வைக்கும் பின்னனி இசையுடன் படம் நிறைவடைகிறது.

படம் முழுவதும் சௌவின் மனைவியோ, ஸென்னின் கணவரோ காட்டப்படுவதில்லை. மற்றவர்களிடம் அக்கறைகொள்ள நேரமில்லாத அவசர கால வாழ்க்கையும், தனிமையும் அதனால் ஏற்படும் வெறுமையான மனநிலையுமே படத்தின் மையப் பொருளாக! மௌனம் ஒரு பிரதான பாத்திரமாக படம் முழுவதும்!

இந்த உலகில் ஒவ்வொருவர் மனதும் சொல்லப்படாத ஏராளமான ரகசியங்களும், காதல்களும் நிறைந்த மூடப்பட்ட துளைகளாகவே இருப்பது போலவே மென்சோகத்தை உணரவைக்கும் இறுதிக்காட்சியும், படம் நெடுக இழைந்து கொண்டிருக்கும் வயலின் பின்னணி இசையும், விவரிக்க முடியாத அனுபவத்தைக் கொடுக்கும்!

2000 ஆம் ஆண்டுக்கான Cannes விருது உட்பட பல விருதுகளைப் பெற்ற இந்த Hong Kong படத்தை இயக்கியவர் Won Kar - wai.

படத்தின் தீம் இசை!


9 comments:

 1. படத்தை முழுவதுமாக சொல்லிவிட்டீர்கள் போல...
  பார்க்கனும் என்று ஆசையாக இருக்கிறது
  பார்ப்பேன்....

  ReplyDelete
 2. லவ்;னு சொல்லிட்டு ஒரு கிளு கிளுப்பும் இல்லையாப்பா?அப்புறம் என்ன லவ்வு படம் :D

  ReplyDelete
 3. மிக அழகாக விவரித்து எழுதியிருக்கீங்க ஜீ ... ஏனோ தெரியல. நமக்கும் இந்த சைனா, ஜப்பான், கொரியா படங்களும் ஒத்தே வருவதில்லை.

  //தொழில் சாய்ந்து//
  தோளில் சாய்ந்து என்று தானே வரவேண்டும்?

  ReplyDelete
 4. @ஹாலிவுட்ரசிகன்
  நன்றி பாஸ்! மாற்றி விட்டேன்!

  ReplyDelete
 5. போகிறபோக்கில் இனி லத்தின் அமெரிக்க இலக்கிய விமர்சனமும் எழுதுவீர்கள் போல. ப ய மா க வு ள் ள து.

  ReplyDelete
 6. இந்த உலகில் ஒவ்வொருவர் மனதும் சொல்லப்படாத ஏராளமான ரகசியங்களும், காதல்களும் நிறைந்த மூடப்பட்ட துளைகளாகவே இருப்பது போலவே//

  படத்தை உடனே பார்க்கும் ஆவல் வந்துவிட்டது....!

  ReplyDelete
 7. நல்ல படம் பற்றி குறிப்பிட்டுள்ளீர்கள் பார்க்கவேணும் என்ற ஆவலை தூண்டினாலும் மேலே மைந்தன் கேட்டது போல ஒரு கிளுகிளுப்பு இல்லாட்டி பிறகு என்ன லவ் படம் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 8. இந்த மாதிரி ஒரு படத்த அணு அணுவா ரசிச்சி எழுதுறதுல ஜீதான்யா நம்பர் 1. சூப்பரா எழுதி இருக்கீங்க ஜீ. படிக்கிற எல்லாருக்குமே நிச்சயமா இந்த படத்த பாக்கனும்னு தோனும்.......!

  ReplyDelete
 9. அருமையான விமர்சனம். .

  ReplyDelete

Followers

Blog Archive

Powered by Blogger.

Archives

Copyright © வானம் தாண்டிய சிறகுகள்.. |