Saturday, October 27, 2012

தாய்மையும் சில ஆண்களின் சாதனையும்(?)!




பேரூந்தில் ஒரு பெண் கணவனுடன் முன் இருக்கையில். இருவரும் ஏதோ மெல்லிய குரலில் பேசுவதும் கணவன் சற்று எரிச்சலுடன் பேசுவது போலவும் தெரிந்தது. முடிவில் மிகுந்த சலிப்புடன் எழுந்து நின்றார். 

அந்தப்பெண்மணி மெதுவாக எழுந்து தன் பெரிய வயிற்றுடன் தட்டுத்தடுமாறி ஒவ்வொரு இருக்கையாகப் பற்றிப் பிடித்து நடந்து சென்றதைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. ஒரு சொகுசுப் பேரூந்தின் ஏ.சி காரணமாகத் தவிர்க்க முடியாத இயற்கை உபாதையை முன்னிட்டு 'விவாதம்' செய்த அந்த பிரஸ்தாப கணவன் 'எனக்குச் சம்பந்தமில்லை' என்பது போல வேகமாக முன்னால் சென்று கதவருகில் நின்றுகொண்டார். தான் ஏதோ வேகமாக நடந்து சாதனை செய்துவிட்டது போல பெருமையுடனும் சற்றே எரிச்சலுடன் மனைவியைப் பார்த்துக் கொண்டிருந்தார். அதாவது, மனைவி நேரவிரயம் செய்கிறாராம். இல்லாவிட்டால் அந்த நேரத்தில் 'திருவாளர் சாதனை' உட்கார்ந்து யோசித்து உலகின் பல பிரச்சினைகளுக்குத் தீர்வு சொல்லி விடுவார் என்பது போலவே இருந்தது அவர் பாவனை.

ஆண்கள் பலர் மனைவி கர்ப்பம் தரித்தபின் 'எனக்குச் சம்பந்தமில்லை ' என்பதுபோன்ற ஒரு மனநிலையுடன் நடந்து கொள்வதைக் காண முடிகிறது. ஒருவேளை பொது இடத்தில மட்டும் இப்படி நடந்துகொள்கிறார்களா? தாய்மை அடைந்த பெண்கள் மற்ற எல்லோரையும் விட அல்லது முற்றிலும் தவிர்த்தே கூட, தன் கணவன் தன்மீது கொள்ளும் அக்கறையே அவர்களுக்கு அதிமுக்கியமானதாக இருக்கும். இந்த நிலையில் இதுபோன்ற 'எனக்குச் சம்பந்தமில்லை' பேர்வழிகளின் உதாசீனமான நடவடிக்கைகள் எவ்வளவு மன உளைச்சலை ஏற்படுத்தும்?

சற்று நேரத்தில் 'திருவாளர் சாதனை' மீண்டும் பேரூந்தில் ஏறி விரைந்து வந்து சலித்துக் கொண்டே தனது இருக்கைக்கருகில் நின்றுகொண்டார். அந்தப் பெண்மணி சற்று அவஸ்தையுடனும், சிறு அசட்டுப் புன்னகையுடனும் வந்து அமர்ந்துகொண்டார். 

குழந்தை பிறந்ததும் 'திருவாளர் சாதனை' எப்படி நடந்துகொள்வார்? அதுவே அவரது வாழ்நாள் சாதனையாகக் கூட இருக்கலாம். மனைவி தாய்மையடைந்திருக்கும்போது 'எனக்குச் சம்பந்தமில்லை' என இருக்கும் ஒரு சில பேர்வழிகள் குழந்தை பிறந்த பின்னரும் கூட, ஏதோ அது தனது தனிப்பட்ட சாதனை என்பதுபோல் நினைக்கிறார்கள். குழந்தைக்கும்,தாய்க்கும் என்னமோ அவ்வளவா சம்பந்தமில்லை என்பதுபோல் நடந்துகொள்ளும் சில பிறவிகளும் நம் சமூகத்தில் மனிதர்கள் என்ற பெயரிலேயே வாழ்ந்து வருகின்றன.

சில நாட்களுக்கு முன்னர் வீதியில் ஒரு நண்பனுடன் பேசிக்கொண்டிருந்தபோது, என் நெருங்கிய நண்பன் ஜெயன் என்னைக் கவனிக்காமலே கடந்து சென்றதை நானும் பின்னர் தான் கவனித்தேன். அவன் மனைவியுடன் சென்று கொண்டிருந்தான். அவர் கர்ப்பமாக இருப்பதுபோல் தெரிந்தது. உறவுகள் யாருடனும் அவ்வளவாக ஒட்டாத அவன், மனைவிமீதே மிகுந்த கவனமாகத் தோள்தொட்டு அழைத்துச் சென்றுகொண்டிருப்பதைப் பார்த்த போது மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.

கொழும்பு நகரப் பேரூந்துகளில் பயணிக்க நேரும் கர்ப்பிணிப் பெண்களின் அவஸ்தைகள் சொல்லிமாளாது. நின்று கொண்டிருக்கும் ஒரு பேரூந்தை இயக்கும்போது அலுங்காமல், நிலை தடுமாறாமல் சீராக இயக்க வேண்டுமென்பது லைசென்ஸ் கொடுக்கும்போது கடுமையாக அவதானிக்கும் விஷயம். ஆனால் அதை லைசன்சுக்கு ட்ரையல் காட்டியதோடு மறந்துவிட்டது போலவே இருக்கும் ஓட்டுனரின் லாவகம். முடிந்தவரை நின்று கொண்டிருப்பவர்களின் எல்லா மூட்டுக்களையும் உலுக்கிப் பார்த்துவிடுவது என்ற முடிவுடனேயே ஓட்டுவது போலிருக்கும்.

சாதாரணமானவர்களுக்கே இந்த நிலை என்றால் கர்ப்பிணிப் பெண்கள் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட இரு இருக்கை தவிர, சமயங்களில் நடத்துனரே ஏனைய இருக்கைகளில் அமர்ந்திருக்கும் யாரையாவது எழுந்திருக்கச் செய்து, இந்த இருக்கையைப் பெற்றுக் கொடுப்பார். பெரும்பாலும் அதற்கு அவசியமேயின்றி தாங்களாகவே அமர்ந்திருப்பவர்களில் யாராவது தங்கள் இருக்கையைக் கொடுப்பார்கள்.

தாய்மையை எதிர்பார்த்திருக்கும் பெண்ணொருவர் பேரூந்தில் ஏறும்போது மனதில் இயல்பாகவே ஒரு பதற்றம் தொற்றிக் கொள்கிறது. அதுவே நம் மனதில் இன்னமும் பிறர் மீதான அக்கறை, பரிவு கொஞ்சமாவது ஒட்டிக் கொண்டுள்ளது என உணர வைக்கும் தருணமாக அமைகிறது!

ஆனால் இதெல்லாம் வெளிப்படையாக, அப்பட்டமாகத் தெரிந்தால் மட்டுமே! ஆரம்ப நிலையில் இருப்பவர்களின் நிலை? எல்போருமே, எப்போதும் மனிதாபிமானத்துடன் நடந்துகொள்வார்கள் என எதிர்பார்க்க முடியாது. அதிலும் பெரும்பாலான இளம் பெண்களிடம் இதையெல்லாம் எதிர்பார்ப்பது முட்டாள்தனமாகவே இருக்கிறது.வாய்விட்டுக் கேட்க முடியுமா? இருப்பவர்கள் தாங்களாகவே உணர்ந்து கொடுத்தால்தான் உண்டு.இதில்தான் எனக்கும் கொஞ்சம் பிரச்சினை இருக்கிறது. ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு உதவி செய்வதில் எந்தப்பிரச்சினையும் இல்லை. ஆனால் நான்கு, ஐந்து மாதகால வயிற்றுடன்  இருபவர்களை கண்டறிவதில்தான் எப்போதும் குழப்பமாக இருக்கிறது. 

பெரும்பாலான நம் தமிழ்ப்பெண்கள் அநேகமாக இருபது வயதிலிருந்து நான்கு, ஐந்து மாதகால கர்ப்பிணிகள் போலவே இருப்பதாகப் படுகிறது. வயிறு பள்ளமாக இருக்கவேண்டும் என்ற பிரக்ஞையே இல்லாமல், குன்று, சிறுகுன்று, குப்பைமேடு போல வயிறு வளர்த்து வாழ்ந்துவரும் நம் தமிழ்ப் பெண்களே இந்த விஷயத்திலும் பெண்களுக்கெதிராக இருக்கிறார்கள். ஆண்களும் ஒன்றும் சளைத்தவர்களல்ல. நண்பர் ஒருவரின் மனைவி தாய்மை அடைந்திருப்பதாக நண்பர் கூறினார். இன்னும் இரண்டு மாதங்களாவது தேவைப்படும் நண்பரின் வயிற்றை மனைவி முறியடிக்க!

இதில் உண்மையான கர்ப்பிணித் தாய்மாரைத் தேடிக்  கண்டுபிடிப்பது எப்படி? யாரைப் பார்த்தாலும் இவர் கர்ப்பிணித்தாயாக இருக்கக் கூடுமோ? என்ற எண்ணமும் அப்படியிருக்கும் பட்சத்தில் இவருக்கு இருக்கையைக் கொடுக்காமல் அமர்ந்திருக்கிறோமோ என்ற  குற்ற உணர்ச்சியும் அடிக்கடி ஏற்படுகிறது. ஆனால் கொடுமையைப் பாருங்கள். "நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா?" என்று ஒரு பெண்ணைப் பார்த்துக் கேட்கத்தான் முடியுமா? 

போனவாரம் எனக்கு அருகில் நின்ற ஒரு கர்ப்பிணிப் பெண்மணிக்கு எனது இருக்கையை கொடுத்துவிட்டு எழுந்து நின்றேன். சுற்றிலும் இருந்தவர்கள் என்னை ஏதோ வித்தியாசமான ஜந்துவைப் பார்ப்பதுபோல உணர்ந்தேன்.

மனிதாபிமானத்துடன் நடந்துகொள்வதை விசித்திரமாகப் பார்க்கும் அளவிற்கா நம் சமூகம் இருக்கின்றது என்ற ஒரு சலிப்பு உண்டானது. 

ஒரு வேளை என்னை வியந்து பாராட்டும் பார்வையாக இருக்கக்கூடுமோ? என்றெண்ணி, 'அப்படி நான் என்ன செய்துவிட்டேன் நண்பர்களே' என்பதுபோல சற்றே பெருமை கலந்த பார்வையுடன் நோட்டமிட்டு அந்தப் பெண்மணியைப் பார்த்து அதிர்ந்தேன். அவர் கர்ப்பிணியாயிருக்க வாய்ப்பே இல்லை. 

ஒரு ஆண் எப்படி கர்ப்பம் தரிக்க முடியும்?

கர்ப்பிணிப் பெண்களைப் போலவே தளர்வான ஆடையுடுத்தி, வயிறு உட்பட இன்னபிற வஸ்துகளை வளர்த்து வைத்திருந்தவரைப் பார்த்து ஏமாந்துபோயிருந்தேன்.

ஆண்,பெண் வித்தியாசமே சமயத்தில் கண்டுபிடிக்க முடியல, இதுல கர்ப்பிணிப் பெண்களை என்னத்த?

13 comments:

  1. இப்போல்லாம் பாய்பிரண்ட் புண்ணியத்துல ஓசியில் KFC, McDonalds என்று வயிறை வளர்த்துக் கொண்டு பஸ்ஸில் ஏறும் பெண்களை கர்ப்பிணி என்று நினைத்து சீட் கொடுக்கப் போய் அவமானப்படுவதற்கும் சந்தர்ப்பம் உண்டு தல(சுயஅனுபவம்) :P

    அதனால் இப்போதெல்லாம் என்னிடமிருந்து பாட்டிமாருக்கும், முழு கர்ப்பிணி தாய்மாருக்கும் மட்டுமே சீட் கொடுக்கப்படும் என்பதை அறியத்தருகிறேன். :)

    ReplyDelete
  2. //திருவாளர் சாதனை//
    என்னா ஒரு நக்கல்??

    ReplyDelete
  3. உண்மைதான் ஜீ இந்த கர்பகாலத்தில் கணவர்கள்  கொஞ்சம் ஆதரவும் பரிவும் காட்ட வேண்டும் பொதுப்போக்குவரத்தில் என்ன கட்டுப்பாடு போட்டாலும் நம் நாடு திருந்தா வழிகள்தான் அதிகம்.

    ReplyDelete
  4. பெண்ணியம் என்கின்ற போர்வையில் எந்த பெண்ணும் பேச வருகையில் சும்மா இருக்கின்ற ஆணும் ஆணியத்துள் ஆணி பிடுங்க சென்றுவிடுகிறான்..!



    இந்த பிள்ளையை வயிற்றில் கொடுத்துவிட்டு இப்படி பஸ் இல் சம்பந்தமே இல்லாமல் முன்னாடி போய் நிற்கும் ஆண்களை நானும் கண்டு பொங்கி(!) இருக்கிறேன் ஜீ.
    குறைந்தது துணைக்காவது பக்கத்தில் செல்லலாம்...அதுவும் இல்லை..
    :)

    ReplyDelete
  5. முதல் குழந்தை போது கவனிக்கும் சில ஆண்கள் கூட இரண்டாவது கர்ப்பதிற்கும் அவர்களுக்கும் சம்பந்தமே இல்லாதது போல நடந்து கொள்கிறார்கள்

    ReplyDelete
  6. ஜீ, அடிப்படையில் நம் சாப்பாடும், உடையும் தான் அப்படி தொப்பை வளரக் காரணமோ என்ற சந்தேகம் எனக்கு உண்டு..வட இந்தியாவில் இம்மாதிரி ‘போலி கர்ப்பிணி’ ஆண்/பெண்கள் குறைவு..சரி,சரி..சைபர் க்ரைம் போலீஸ் வருவது போல் தெரிகிறது..அப்புறம் பேசுவோம்!!!!

    ReplyDelete
  7. ஜீ அண்ணா,
    இப்படியான ஆண்களை நான் அதிகம் பார்த்தது இல்லை... ஆனால் ஒன்று உங்களை கட்டிக்கப்போற பொண்ணு ரெம்ப லக்கி அண்ணே :))))

    ReplyDelete
  8. அந்த அதிஷ்ட சாலி அண்ணிக்கு இப்பவே என்னோட வாழ்த்துக்கள். :)

    ReplyDelete
  9. மனைவியைக் காமம் இல்லாமாற் காதலிக்கும் வேளை அவள் கர்ப்பமாக இருக்கும்போதுதான்.

    --- ல்

    ReplyDelete
  10. இதுதான் உலகம் முடியல....!

    ReplyDelete
  11. எல்லாத்துலையும் போல இதுலையும் குழப்பமா? ஆனா, நீங்க முதல்ல் சொன்ன கேஸ் மாதிரி இருந்தா அந்த குழந்தைதான் பாவம்! பேருந்துகளில் போகும் போது நாம உஷாராத்தான் இருக்கனும்!
    சரியான நபரைப் பாத்துதான் இடம் குடுக்கனு!

    ---

    www.sudarvizhi.com

    ReplyDelete

  12. நாங்க நினைப்பது என்னன்னா: இந்த தொந்திய குறைக்கிறதுக்காக (மறைக்கிறதுக்காக) ஒலகத்துல இருக்குற அத்தன தில்லாலங்கடி வேலையையும் செய்வோம். காத்தாலயே ஜாகிங், வாக்கிங் போக ட்ரை பண்ணுவோம். கம்பெனில ஜிம் இருந்தா அதுக்கு போகயும் ட்ரை பண்ணுவோம். பக்கத்து தெருல இருக்குற சூப்பர் மார்க்கட்டுக்கு நடந்தே போவோம். அப்புடி நடந்து போனா, நம்ம தொந்தி அடுத்த நாளே கரைஞ்சிடும்னு நெனச்சுப்போம். பிரபல சேனல்கள்ள மிட் நைட்ல போடுற டெலி-பை புரோகிராம்ஸ எல்லாம் ஒன்னு விடாம பார்த்து அதுல சொல்ற நம்ம பட்ஜெட்டுக்கு ஏத்த எக்ஸேர்ஸைஸ் ஈக்விப்மென்ட எல்லாம் வாங்கிருவோம். அப்புடி அதுல எக்ஸேர்ஸைஸ் செஞ்சா ஒரே மாசத்துல சல்மான்கானுக்கு போட்டியா சிக்ஸ் பேக்ஸ்கோ, இல்ல அமீர்கானுக்கு போட்டியா எயிட் பேக்ஸ்கோ கொண்டுவந்துரலாம்ன்னு நெனச்சிக்கிட்டு இருப்போம். எக்ஸேர்ஸைஸ் செஞ்சி முடிச்சிட்டு யாரும் இல்லாதப்போ, கண்ணாடி முன்னாடி ஷர்ட்ட தூக்கி தொந்திய அளந்து பார்போம். 2mm கொரஞ்சிருக்குன்னு நெனச்சுப்போம்.

    ஆனா நடப்பது என்னன்னா: மேல சொன்ன ட்ரை பண்ணுற சமாச்சாரங்க எல்லாம் ட்ரை பண்ற லெவல்ல தாண்டியே இருக்காது. வாங்கிபோட்ட எக்ஸேர்ஸைஸ் ஈக்விப்மென்ட்ஸ நம்ம வீட்டு பொம்மனாட்டிக துணி காய போடுறதுக்கு யூஸ் பண்ணிக்கிட்டு இருப்பாங்க. நாங்க 35+ வயசுல "ஜி" படத்துல வர்ற தல-ய மாதிரி ஆகுறதையும் , 45+ வயசுல தமிழ்நாட்டு போலீஸ்ல சேர்றதுக்கான தகுதிகள உருவாக்கிக்கிறதயும் யாராலுமே தடுக்க முடியாது.

    ReplyDelete
  13. அருமையான பதிவு.
    நன்றி.

    ReplyDelete