Monday, March 5, 2012

The Artist (2011)


புகழின் உச்சியில் இருக்கும் ஒரு கலைஞன் தனது பெயர், அந்தஸ்து, பணம் எல்லாவற்றையும் இழந்து தனிமைப்படுத்தப் படும்போது அவனது உணர்வுகள் எப்படியிருக்கும்?


பொதுவாக சினிமாவிலேயே இதற்கான சாத்தியங்கள் அதிகம்! தியாகராஜ பாகவதர் தவிர, பெரும்பாலும் நடிகைகளின் கதைகளையே இவ்வாறு கேள்விப்பட்டிருக்கிறோம்.

கலைஞர்களின் தனிப்பட்ட வாழ்க்கை முறை, நடத்தைகள் தவிர்த்து, தொழில்நுட்பத்தில் ஏற்படுகின்ற மாற்றங்கள், முன்னேற்றங்கள் கூட அவர்களின் வாழ்க்கையை சடுதியாக மாற்றிவிடலாம். ஹாலிவுட்டில்  மாற்றியிருக்கிறது.


1927 ஆம் ஆண்டு. மௌனப்படங்களின் காலம். ஹாலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார் ஜார்ஜ் வாலண்டின்! தனது படத்தின் ப்ரிவியூ காட்சியைப் பார்த்துவிட்டு நிருபர்களிடம் பேட்டி கொடுக்கிறார். அப்போது அவரை தவறுதலாக இடித்துவிடுகிறாள் ஒரு பெண் - பெப்பி மில்லர்! ஜார்ஜ் அதை இயல்பாக எடுத்துக் கொள்ள,தானும் ஜார்ஜுடன் இணைந்து புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்கிறாள். கூடவே ஜார்ஜுக்கு ஒரு முத்தமும்!
மறுநாள் பத்திரிகைகளில் 'யார் அந்தப் பெண்?'

நடனம் தெரிந்த  பெப்பி மில்லர் ஜார்ஜின் படத்தில் நடனம் ஆடுபவர்களில் ஒருத்தியாக அறிமுகமாகிறாள். 1929 ஆம் ஆண்டு. பேசும் படம் அறிமுகமாகிறது. அது ஜார்ஜுக்கு முட்டாள்தனமாகப் படுகிறது. அதுதான் எதிர்கால சினிமா என்கிறார் அவன் தொடர்ந்து பணிபுரியும் ஸ்டூடியோ முதலாளி. அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஸ்டூடியோ முதலாளியுடன் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது.

ஒருபுறம் பெப்பி மில்லர் படிப்படியாக நடனப்பெண், துணை நடிகை, ஹீரோயின் என்று வளர்ந்து ஹாலிவுட்டின் தவிர்க்க முடியாத நடிகையாகிவிடுகிறாள்.


ஜார்ஜை வைத்துப் படங்களை எடுக்கும் ஸ்டூடியோ இப்போது ஜார்ஜை தவிர்த்து விட்டு 'கனவுக்கன்னி' பெப்பி மில்லர், மற்றும் பலர் நடிக்கும் Love of Life என்ற படத்தைத் தயாரிக்கிறது.

ஜார்ஜ் Tears of  Love என்ற படத்தை சொந்தமாகத் தயாரித்து, இயக்கி, நடிக்கிறார். இரண்டு படங்களும் ஒன்றாக ரிலீசாகும் அதே நேரத்தில் பங்கு வர்த்தகத்தில் மோசமான வீழ்ச்சி ஏற்படுகிறது (Wall Street Crash 1929). ஜார்ஜின் படம் படுதோல்வியடைய, புது முயற்சியான, பேசும் படமான பெப்பி மில்லரின் படம் பெரு வெற்றியடைகிறது.

பெப்பி மில்லர் மேலும் புகழடைய, ஜார்ஜ் கடன், மனைவியின் விவாகரத்து, மன உளைச்சல் எனத் தன் அடையாளங்களை இழக்கிறான். மீண்டும் பழைய நிலைக்கு வந்தானா? ஜார்ஜ் - பெப்பி இடையிலான மெல்லிய காதல்  என்னவாகிறது?


ஜார்ஜ் வாலண்டினாக நடித்த Jean Dujardin இன் சடுதியாக மாறும் முகபாவங்கள் அட்டகாசமானவை. குறிப்பாக ஜார்ஜ் வறுமையான சூழலில் பொருட்களை ஏலம்விட்டு, கோர்ட், ஷூவை விற்கும் நிலைமையின்போதும் காட்டும் ஒரு கலைஞனுக்கே உரித்தான் மிடுக்கு!

அந்தக்காலத்தில் ஹாலிவூட் சினிமாத் தயாரிப்பில் ஸ்டூடியோக்களின் ஆதிக்கம் -எவ்வளவு பெரிய நடிகரையும் ஒன்றுமில்லாமல் செய்துவிடக்கூடிய பலம் என்பவை படத்தில் சொல்லப்படுகிறது. சார்லி சாப்ளின், மர்லன் பிராண்டோ போன்ற சிலரே ஸ்டூடியோக்களை எதிர்த்து சுயாதீனமாக இயங்கியவர்கள் என்று படித்திருக்கிறோம்.

மௌனப் படங்கள் பேசும்படங்களானபோது, சிலர் காலத்துக்கேற்ப, தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப தங்களது பாணியையும் மாற்றிக் கொண்டார்கள், சிலர் பிடிவாதமாக தங்கள் பாணியில் தொடர்ந்தும் முன்னெடுத்துச் சென்று அதில் வெற்றியும் கண்டார்கள். சிலர் ஈடுகொடுக்க முடியாமல், விரும்பாமல் தொலைந்தும் போனார்கள். இந்த மாற்றங்களைச் சொல்லும் ஆவணப் படம் போலவும் எடுத்துக் கொள்ளலாம்.

படத்தில் வரும் ஒவ்வொரு சிறு பாத்திரங்களும் அருமையாக நடித்திருக்கிறார்கள். முக்கியமாக அந்த நாயும்! கருப்பு வெள்ளையில், மௌனப் படமாகவே எடுக்கப்பட்டிருக்கிறது... கடைசியில் ஓரிரு வசனங்கள் தவிர!


ஏராளமான சுவாரஷ்யமான காட்சிகள் (எனக்குக் கிட்டத்தட்ட எல்லாமே) படத்தில் கதையின் போக்குக்கு ஏற்றமாதிரியே சுவர்களில் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்கள், ஜார்ஜின் கோட்டினுள் தன் கைகளை நுழைத்து, அவன் அணைப்பது போலவே தன்னைத்தானே பெப்பி அணைத்துக் கொள்ளும் காட்சி, ஜார்ஜ் தீ விபத்தில் சிக்கும்போது அவனைக்காப்பாற்ற நாய் எடுக்கும் முயற்சி, படத்தின் இறுதியில் வரும் அட்டகாசமான நடனம்!

கடந்த ஆண்டு வெளியான இத்திரைப் படம் ஏராளமான விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டது ஐந்து ஆஸ்கார் உள்ளிட்ட ஏராளமான விருதுகளைப் பெற்றது!
Cannes, 5 Academy Awards, 7 BAFTA, 3 Golden Globes, 6 Cesar Awards


சிறந்த நடிகருக்கான Oscar, Cannes, BAFTA, Golden Globe விருதுகளைப் பெற்றுக் கொண்டார் ஜார்ஜ் வாலண்டினாக நடித்த Jean Dujardin.

இயக்கம் : Michel Hazanavicius
மொழி : Silent
நாடு : France

டிஸ்கி : எனக்கு இப்படம் வித்தியாசமான அனுபவமாக, மிகப் பிடித்திருந்தது! தவிர ஒரு காமிக்ஸ் ரசிகனான எனக்கு பார்த்த உடனேயே ஹீரோவின் தோற்றம் ஏனோ மந்திரவாதி மாண்ட்ரேக்கை ஞாபகப்படுத்தியது!

20 comments:

  1. தங்களது விமர்சனங்கள் படிப்பதே தனி அனுபவம்..தங்களது எழுத்துக்கள் எப்போதுமே பிடித்தமானவை.
    இதுவும் அருமையான விமர்சனம்...மேலும், பல நல்ல படங்களை விமர்சனம் செய்யுங்கள்.மிக்க நன்றி.

    Falling Down (1993) - ஹாலிவுட் "இந்தியன்" தாத்தா (திரைப்பார்வை)

    ReplyDelete
  2. பார்க்கவேண்டுமென்று நினைத்துக்கொண்டிருக்கும் படம்.. விமர்சனம் சூப்பர் ஜீ..

    ReplyDelete
  3. நல்லது ஜீ.இன்னொரு நல்ல படம் அறியத்தந்திருக்கிறீர்கள்போல.பாத்திடலாம்.நன்றி ஜீ !

    ReplyDelete
  4. நண்பா. உங்கள் பதிவுகளை திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

    நன்றி
    யாழ் மஞ்சு

    ReplyDelete
  5. ஹீரோயினாக நடிக்க வந்து துணை நடிகை, குரூப் டான்ஸர் ஆனவங்க மத்தியில இது கொஞ்சம் வித்தியாசம் தான். அதிர்ஸ்டம் கூடவே துணை இருந்தா எதுவும் நடக்கும்.

    ReplyDelete
  6. //உடனேயே ஹீரோவின் தோற்றம் ஏனோ மந்திரவாதி மாண்ட்ரேக்கை ஞாபகப்படுத்தியது!//

    அட .... எனக்கும் போஸ்டரைப் பார்த்தவுடன் மனதில் தோன்றியது இதுதான்.

    ReplyDelete
  7. இன்னும் ஒரிஜினல் ப்ரிண்ட் இன்டர்நெட்ல ரிலீஸ் ஆகல.அதுவரைக்கும் தான் வெயிட்டிங்.

    ReplyDelete
  8. >>காமிக்ஸ் ரசிகனான எனக்கு பார்த்த உடனேயே ஹீரோவின் தோற்றம் ஏனோ மந்திரவாதி மாண்ட்ரேக்கை ஞாபகப்படுத்தியது!

    யா யா மீ டூ

    ReplyDelete
  9. எனக்கும் ரொம்ப பிடிச்சு இருந்தது பாஸ் ..., படத்தோட இசையை பத்தி சொல்ல மறந்துட்டிங்க போல..

    ReplyDelete
  10. புகழின் உச்சத்திலிருந்து அனுபவித்துவிட்டு இந்த புகழ் கண் முன்னாலேயே இழக்கப்படுவதை அனுபவிப்பது அவ்வளவு பரிதாபக்குரியது. ஆனாலும், படத்தின் ஹீரோ அப்போதும் மிடுக்கு குறையாமல் இருக்கிறார் என்று சொல்லியிருக்கிறீர்கள். அந்த இடம் நல்லாயிருக்குமென்று நினைக்கிறேன்.

    பார்க்க வேண்டும். கறுப்பு வெள்ளை புகைப்படங்களே அழகாக இருக்கும் தொழில்நுட்பங்களின் ஆட்சிக்காலத்தில் மீண்டுமொரு கறுப்பு- வெள்ளைப்படம். அனுபவிக்க வேண்டும், உணர்ச்சிகளுடன்!!

    The Artist இன் தலைப்பில் பாவிக்கப்பட்டிருக்கிற சிவப்பு நிறம் ஏனோ எனக்கு இந்தப் படத்தின் போஸ்டர்களைப் பார்த்ததுமே பிடித்திருந்தது.

    ReplyDelete
  11. விமர்சனத்தை படித்தவுடன் பார்க்கவேண்டும் போல ஆவலை தூண்டுகிறது. கூடிய விரைவில் பார்த்து விடுவேன் என நினைக்கிறேன்

    ReplyDelete
  12. விமர்சனம்

    ம்.

    ReplyDelete
  13. நான் படம் பார்க்கவில்லை. இவரை பார்த்ததும் எனக்கும் மாண்ட்ரேக் ஞாபகம் தான் வந்தது. படம் மிக மெதுவாக செல்கிறது என்று சொல்கிறார்களே?

    ReplyDelete
  14. //...αηαη∂.... said...
    எனக்கும் ரொம்ப பிடிச்சு இருந்தது பாஸ் ..., படத்தோட இசையை பத்தி சொல்ல மறந்துட்டிங்க போல..//
    ம்ம்..நிறைய விஷயம் சொல்லல பாஸ்!

    ReplyDelete
  15. //பாலா said...
    நான் படம் பார்க்கவில்லை. இவரை பார்த்ததும் எனக்கும் மாண்ட்ரேக் ஞாபகம் தான் வந்தது. படம் மிக மெதுவாக செல்கிறது என்று சொல்கிறார்களே?//
    இருக்கலாம்..எனக்கென்னவோ அப்படித் தோன்றவில்லை. சுவாரஷ்யமாகவே இருந்தது!

    ReplyDelete
  16. ஆஸ்கர் விருது அறிவிக்கப்படும் முன்னரே இப்படத்தை பார்த்தேன். மிகவும் பிடித்து இருந்தது. ஆஸ்கருக்கு தகுதியான படைப்பு.

    ReplyDelete
  17. நல்ல விமர்சனம் சார் !

    ReplyDelete
  18. ///மௌனப் படங்கள் பேசும்படங்களானபோது, சிலர் காலத்துக்கேற்ப, தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப தங்களது பாணியையும் மாற்றிக் கொண்டார்கள், ////

    எக்காலத்திலும் மாற்றங்கள் உடனேயே ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை என்பதை அவர்கள் கொட்டியதை சுவாரசியமாகச் சொல்லியுள்ளீர்கள் ஜீ... மிக்க நன்றி..

    ReplyDelete
  19. அருமையான விமர்சனம் ஜீ,கண்டிப்பா பார்க்க வேண்டிய படம்.உடனே பார்க்கிறேன்..

    ReplyDelete