தொலைதூரப் பிரயாணங்கள் கொடுக்கும் அனுபங்கள் ஏராளம். பல்வேறுபட்ட மனிதர்களும், பல நேரங்களில் சுவாரஷ்யமாகவும், சில அவஸ்தையாகவும்! ஒரு ஐரோப்பிய நாடொன்றில் மேற்கொள்ளும் பிரயாணம் எப்படியிருக்கும்? நாடு, மொழி, கலாச்சாரத்தால் வேறுபட்ட பல மனிதர்களைச் சந்திப்பது நிச்சயம் புதுமையான அனுபவமாகவே....
மத்திய ஐரோப்பாவிலிருந்து ரோம் நோக்கிச் செல்கிறது ஒரு புகைவண்டி! அதில் நிகழும் சம்பவங்களை மூன்று பிரதான பகுதிகளாக்கி, அதில் பங்குபெறும் காதாபாத்திரங்கள் வாயிலாக கதை நகர்கிறது. பிரதான பாத்திரங்களின் தனிப்பட்ட கதை ஒரு சில உரையாடல்கள் மூலமாக சொல்லப்படுகிறது!
காலநிலை காரணமாக விமானப் போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டதால், டைனிங் டேபிள்களுடன் கூடிய ஆடம்பர முதல் வகுப்புப் பெட்டியில் பயணிக்கும் இத்தாலியைச் சேர்ந்த ஒரு பேராசிரியர்.
இரண்டாம் வகுப்பு டிக்கெட் எடுத்துவிட்டு முதல்வகுப்பில் பயணிக்கும் அடாவடிப் பேர்வழியான வயதான விதவைப் பெண்மணியும், சமூகநலம் சார்ந்த பயிற்சி ஒன்றுக்காக அவளுக்கு ஒத்தாசையாக இருக்கும் இளைஞன் பிலிப்போவும்!
ரோமில் நடைபெற இருக்கும் உதைபந்தாட்ட போட்டியைக் காண்பதற்காக நீண்ட நாட்களாக திட்டமிட்டு, பணம் சேர்த்து, பெரும் எதிர்பார்ப்புடன், மிகுந்த மகிழ்ச்சியுடன் மூன்றாம் வகுப்பில் பயணிக்கும், சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரியும் மூன்று இளைஞர்கள்!
இவர்களோடு தமது குடும்பத் தலைவரைச் சந்திக்க பயணிக்கும் ஒரு அல்பேனிய ஏழைக் குடும்பம்!
பேராசிரியர் தனது இளமைக் காலத்தில் தவற விட்ட சில தருணங்களை மீண்டும் நினைவூட்டுகிறது இந்தப்பயணம்.
ரயிலில் தற்செயலாக சந்திக்கும் பிலிப்போவின் ஊரைச் சேர்ந்த ஒரு பெண் பிலிப்போவிடம் அவனைத் தனக்குத் தெரியுமென்றும், அவனது பழைய காதலைப் பற்றியும் சொல்கிறாள்.
உதைபந்தாட்டம் பார்க்கப் போகும் நண்பர்களில் ஒருவனின் டிக்கெட்டைக் காணவில்லை! இதன் தொடர்ச்சியாக ஏற்படும் சம்பவங்கள்!
ஒவ்வொருவரின் மனநிலையும் சூழ்நிலைகளுக்கும், நிகழும் சம்பவங்களுக்கு ஏற்ப எப்படி மாற்றமடைகின்றது என்பதை நகைச்சுவையாகவும், சுவாரஸ்யமான உரையாடல்களாகவும் சொல்கிறது படம்.
பேராசிரியரோடு பயணிக்கும் இந்தியக் குடும்பமொன்றின் சிறு பெண், அருடைய சிறுவயதில் கேட்ட ஒரு பியானோ இசையை நினைவு படுத்த, அதேவேளையில் ஒரு இசைக்கலைஞர் தான் எழுதிய இசைக்கோர்வையைத் தன்மனதில் கைகளை அசைத்து ஒலிக்கவிட்டுப் பார்ப்பதும், அந்த நேரத்திற்கான இசையும் மிக அருமை!
உதைபந்தாட்டம் பார்க்கப் போகும் மூவரும் மிகுந்த உற்சாகமாக, சத்தமாகப் பேசிக்கொள்கிறார்கள். டிக்கட் பரிசோதகருடன் சின்ன பிரச்சினையாகி வாக்குவாதம் செய்து, கிண்டல் அடித்துக் கொள்கிறார்கள். அல்பேனியச் சிறுவனிடம் பேசும் அவர்கள் அவனுக்கும் ஒரு சான்ட்விச் கொடுக்கிறார்கள். திரும்ப அவர்கள் இருக்கைக்கு வரும்போது, ஒருவன் 'அங்கே கவனி!' என்கிறான்.
அந்த அல்பேனியச் சிறுவன் தனக்குக் கிடைத்த ஒரு சாண்ட்விச்சை குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்வதைப் பார்க்கிறார்கள். அதிர்ச்சி, மனவேதனை அடைகிறார்கள். அவர்களில் ஒருவன் நிறைய சாண்டிவிச் வாங்கிச் சென்று அவர்களுக்குக் கொடுக்க நன்றி சொல்லிப் பெற்றுக் கொள்ளும் காட்சி நெகிழ்ச்சியானது.
அவர்களில் ஒருவனின் டிக்கெட்டைக் காணவில்லை என்றதும் தொற்றிக்கொள்ளும் பதட்டம், பணம் பற்றாக்குறை என்றதும் நண்பர்கள் ஒருவருக்கொருவர் குற்றம்சாட்டுவது எல்லாமே நாம் ஒவொருவரும் வாழ்வில் சந்தித்த அனுபவங்கள். நேர்மையாக தங்கள் பிரச்சினையை எதிர்கொள்ளவே முடியாதென்ற நிலைமையில் அவர்களின் சடுதியான முடிவு பார்ப்பவர்களை எல்லாம் புன்னகையுடன் ரசிக்கவைக்கும்!
சட்டம் பலசமயங்களில் மனித நேயம் பற்றிக் கவலைப்படுவதில்லை. அது போலவே பெரும்பாலான சிறு குற்றச் செயல்களில் நேர்மையானவர்களே மாட்டிக் கொள்கிறார்கள்!
ஒரு பிரயாணத்தில் நாம் சந்திக்கக்கூடிய காட்சிகளான, தெரியாமல் இருக்கை மாறி உட்கார்பவர்கள், தெரிந்தே உட்காரும் வம்படியானவர்கள்! வெறும் 'உச்' கொட்டி மனித நேயத்தை காட்டிக் கொள்ளும் மேல்தட்டு வர்க்கத்தினர்! கொஞ்சம்கூட மனிதாபிமானமற்றவர்கள்! பந்தா பேர்வழிகள், வயது முதிர்ந்த மனதளவில் கொஞ்சமும் முதிராத வயோதிகப் பெருந்தகைகள்! விளையாட்டுத்தனமும், குறும்பும் கொண்ட இளைஞர்களிடையே காணப்படும் இரக்கமும், மனித நேயமும்! அது போல நமது நாடுகளில் காணமுடியாத, ரயில்வே ஊழியர்களின் பொறுமையும் மரியாதை கொடுக்கும் பண்பும்!
நம்மில் பலரிடம் காணப்படும் எதையும் முன்கூட்டியே முடிவு செய்து வைத்திருக்கும் அபிப்பிராயங்கள். குறிப்பாக அகதிகள் பற்றி இளைஞர்கள் பேசிக்கொள்வது ஒட்டுமொத்த ஐரோப்பியர்களின் அகதிகள் குறித்த பார்வையாக இருக்கக்கூடுமோ என்ற எண்ணத்தையும் ஏற்படுத்தியது!
மொத்தத்தில் நிறைய விஷயங்களை உறுத்தாமல் அழகாகச் சொல்லிச் செல்லும் படம்!
2005 இல் வெளியான இந்தப் படத்தின் மூன்று பகுதிகளையும் மூன்று இயக்குனர்கள் இயக்கியிருக்கிறார்கள்!
Abbas Kiarostami - Iran
Ken Loach - England
Ermanno Olmi - Italy
மொழிகள் : English, Albanian, Italian
You Tube இல் பார்க்க.. http://www.youtube.com/watch?v=U3FCQXUKLeE&feature=related
மிக அழகாக சொல்லியிருக்கிறிங்க பாஸ்.. பார்த்துடவேண்டியதுதான். இவ்வாறான காட்சிகளால் நகரும் திரைப்படங்கள்,பயணத்தின் போதான திரைப்படங்கள் என்னை மிகவும் கவர்ந்தவை..
ReplyDeleteஇனிய மாலை வணக்கம் பாஸ்.,
ReplyDeleteஒரு பிரயாணத்தின் போது தென்படும் மனிதர்களை,
பெற்றுக் கொள்ளும் அனுபவங்களைச் சொல்லுகின்ற படம் பற்றிய விமர்சனத்தினைக் கொடுத்திருக்கிறீங்க.
நேரம் கிடைக்கும் போது பார்க்க முயற்சிக்கிறேன்,
இப்போதைக்கு புக் மார்க் செஞ்சுக்கிறேன்.
ரொம்பவும் இயல்பான சினிமாவாக தெரிகிறது.
ReplyDeleteஒருசில வார்த்தைகளினுாடு ஒட்டுமொத்த சமூகத்தின் கருத்தியலையே சொல்லிவிடக்கூடிய வசனங்களை சில இயக்குனர்கள் மிகவும் சரியாக கையாள்வார்கள். அவ்வாறான காட்சிகளும் எம்மை தொடர்ந்தும் குறித்த படத்தின் மீது ஆர்வம் செலுத்த வைக்கும். அப்படிப்பட்ட சினிமாவாக ரிக்கட்ஸ் இருக்கிறது என்கிறீர்கள்.
பார்க்கலாம், ரிக்கெட்ஸ்சை நேரம் கிடைக்கும் போது!
வணக்கம் பாஸ்
ReplyDeleteவிமர்சனத்தை படிக்கும் போது படம் பார்க்கும் ஆவல் எழுகின்றது.உங்கள் விமர்சனம் அருமை.
யதார்த்தமான படமாக தெரிகின்றது.
வணக்கம் நண்பரே ...
ReplyDeleteசொல்லிய விதம் கண்டு பிரமித்து போகிறேன் ..
விரைவில் நானும் பார்க்கிறேன் நன்றி
படிக்கவே வித்தியாசமான கதையாக இருக்கிறது..அழகான விமர்சனம்.அருமையான எழுத்துக்கள்.பார்த்துவிடுகிறேன்..நல்ல படத்தை சிறப்பாக அறிமுகம் செய்து வைத்ததற்கு எனது நன்றிகள்.
ReplyDeleteவணக்கம் ஜீ!பார்த்த படம் தான்,இருப்பினும் உங்கள் பாஷையில் விமர்சிக்கும்போது,மீண்டும் பார்க்கத் தூண்டுகிறது!வாழ்த்துக்கள்!!!!!
ReplyDeleteபிரயாணம் என்பதே பலவித அனுபவங்களைத் தரும் உங்கள் விமர்சனம் பார்க்கத்தூண்டுகிறது படத்தை.அதுதோடு லிங்க்ம் தந்திருக்கிறீர்கள்.
ReplyDeleteஇன்றைக்கே பார்த்துவிடலாம்.நன்றி ஜீ !
நல்ல விமரிசனம்
ReplyDeleteநல்ல விமர்சன பதிவு...
ReplyDeleteஎன்னய்யா மாப்ள விமர்சனத்துல தனி முத்திரை பதிச்சிட்டு வர்ற....ஒவ்வொருத்தரா சொல்லிட்டு வர்றது தனி ட்ராக்ல சொல்ற கதை போல இருக்கு...யதார்த்தமான படம் போல..உங்க விமர்சனம் நல்லா இருக்குய்யா!
ReplyDeleteஇப்படியான யதார்த்தமான படங்கள்தான் அருமையாக இருக்கும், விமர்சனத்திலேயே தெரிகிறது. நேரம் கிடைக்கும்போது பார்க்கவேண்டும்.
ReplyDeleteவிமர்சனம் விமர்சித்த விதம் அருமை ! படம் பார்க்க ஆவலை தூண்டுகிறது ! நன்றி நண்பரே !
ReplyDeleteவெறுமே ஒரு விமர்சனத்தை எழுதாமால் அதனுடன் சமப்ந்தப்பட்ட விடயங்களையும் தொட்டு நேர்த்தியான விமர்சனம் தந்திருக்கிறியள். விமர்சனம் படத்தை பார்க்கும் ஆவலை தூண்டிவிட்டது
ReplyDelete