Wednesday, February 1, 2012

கவுதம்மேனன்-காதல்-வசனங்கள்!


தமிழ் சினிமாவில் கவுதம் மேனன் படங்களின் காதலுக்குத் தனியிடம் என்றும் இருக்கும்! அதுபோல காதல் காட்சிகளின் உரையாடல்கள்/ வசனங்களுக்கும்! முழுநீளக் காதல் படங்களிலுள்ள காதலை விட 'காக்க காக்க' படத்தில் இழையோடும் மெல்லிய காதலும், வசனங்களும் ரசிக்க வைத்தன!

கவுதம் மேனனின் அடுத்த காதல் படமான 'நீதானே என் பொன்வசந்தம்' படத்தின் போஸ்டர்கள் பார்த்தபோது, படம் பற்றிய மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தின. வசனங்கள் குறித்தும்!

இளையராஜா இசையமைக்கிறார் என்று சொல்கிறார்கள். பாடல்கள்/படம் வெளிவரும் வரையில் இதை உறுதியாகக் கூறமுடியாது! அழகான காதல் காட்சிகளுக்காகவும், மிக முக்கியமாக வசனங்களுக்காகவே இந்தப்படத்தை மிகவும் எதிர்பார்க்கிறேன்!   

ஒரு காதல் கதையில் வரக்கூடிய வசனங்கள் மிகச் சுவாரஸ்யமாக அமையக்கூடிய வாய்ப்புகள் இருந்தபோதிலும் தமிழ் சினிமாக்களில் பெரும்பான்மையான நாம் சந்தித்தது, பார்பவர்களைக் கதறியழ(?!) வைக்கும் சென்டிமென்ட் பிழியும், 'நீ என் உசுருல கலந்துட்ட!', 'என் உயிரையே உன்கிட்டக் குடுத்திட்டேன்' மாதிரியான இயல்பற்ற, நடைமுறையில் பேசிக் கொள்ளாத, மரண மொக்கையான வசனங்களாகவே இருந்து தொலைக்கின்றன.

'உன்னாலே உன்னாலே' படத்தில் எஸ்.ராமகிருஷ்ணனின் வசனங்கள் அருமையாக இருக்கும்! குறிப்பாக ஆரம்பக் காட்சிகளில் ஆண்கள், பெண்கள் பற்றி மாறி மாறி பேசிக்கொள்ளும் காட்சிகள். இதில் ஒரு முக்கியமான விஷயம் - தமிழ்சினிமாவைப் (அல்லது எல்லா சினிமாவிலுமா?) பொறுத்தவரை ஒரு படம் வெற்றி பெற்றபின்னர் அதற்கான காரணங்களில் ஒன்றாக வசனங்களைச் சேர்த்துக் கொள்ளலாமே தவிர, ஒரு படத்தின் தோல்விக்கு வசன கர்த்தாவைக் குற்றம் சொல்ல முடியாது!

ஒரு படத்தில் வரும் சுவாரஸ்யமான வசனங்கள் அந்தப்படத்தின் இயக்குனரின் ரசனையைச் சொல்கின்றன! இயக்குனரே இறுதியாக படத்தில் இடம்பெறும் வசனங்களைத் தீர்மானிக்கிறார்!

ஹாலிவுட் படங்களில் சுவாரஸ்யமான உரையாடல்கள் என்றவுடன் உடனே நினைவுக்கு வருபவர் Quentin Tarantino! பொதுவாக ஆக்சன் படங்களில் வசனங்களுக்கு அதிகம் வேலை இருக்காது என்பது பலரின் பொதுவான நம்பிக்கை! ஆனால் குவாண்டின் தனது ஆக்சன் படங்களிலும் ஏராளமான வசனங்களை வைத்து மெதுவாகக் கதையை நகர்த்திச் செல்பவர்.

குறிப்பாக அவரது மாஸ்டர் பீஸ் எனச் சொல்லப்படும் Pulp Fiction படத்தில் வரும் உரையாடல்கள்! ஒரு உணவகத்தில் கொள்ளையடிப்பதற்காக வந்திருக்கும்போது மிக இயல்பாகப் பேசிக் கொள்ளும் வசனங்கள் அடுத்து நடக்கப் போவதைப் பற்றி பார்வையாளர்கள் சற்றும் உணர விடாதபடி பொது விஷயங்களைப் பற்றியதாக இருக்கும்! அதுபோல் சாமுவேல் ஜாக்சன் அடிக்கடி பைபிளில் இருந்து மேற்கோள் காட்டிப் பேசும் வசனங்கள்!

இது பின்னாளில் பலருக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்திருக்கக்கூடும். ஹரியின் முதல் படமான 'தமிழி'ல் நாசர் அடிக்கடி திருக்குறள்களை மேற்கோள் காட்டிப் பேசுவதும் நன்றாகவேயிருந்தது!


காதல், ஆழமான அதே சமயம் இயல்பான அழகான உரையாடல்கள் எனும்போது ஞாபகத்திற்கு வரும் படங்களில் Before  Sunrise , After  Sunset படங்கள் முக்கியமானவை! சில படங்களைப் பார்க்கும்போது தமிழில் இப்படி ஒரு படம் வராதா என்று தோன்றும்! அப்படியான படங்களில்  இந்தப்படங்களும்! 

புதிதாகச் சந்திக்கும் இருவருக்கிடையே இயல்பாக, உரையாடல்களினூடாக மெதுவாகக் காதல் உண்டாவதைக் கூறும் தமிழ்சினிமா ஏதாவது இருக்கிறதா?

அறிமுகமில்லாத இருவர் ஒரு ரயில் பயணத்தில் சந்தித்துக் கொள்கிறார்கள். அவர்களின் ஒருநாள் பயணம்! அவர்களுக்கிடையில் ஏற்படும் காதல்! - மிக அழகான காட்சியமைப்புகளாலும், உரையாடல்களும் மட்டுமே படம் முழுவதும்!


படம் முழுவதும் இரண்டு பேர் உரையாடுவதையே பார்த்து ரசிக்க முடியுமா? முடியுமெனில் அந்த வசனங்களுக்கு எவ்வளவு உழைப்பு தேவைப்படும்? நிச்சயமாக இந்தப்படங்களின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக வசனங்களைச் சொல்லலாம்!  Ethan  Hawke, Julie Delpy ஜோடியாக நடித்த  Before  Sunrise படம் 1995 இல் வெளிவந்தது. 

இதன் தொடர்ச்சியாக Befor Sunset படம் 2004 இல் வெளிவந்தது! இதிலும் அதே ஜோடியே நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது!

இந்தப்படங்களில் கதாநாயகியின் பெயர் ஜெஸ்ஸி!

27 comments:

 1. டாங்க்கோ அண்ட் கேஷ் படத்துலயும் பேசிட்டே இருப்பாங்க..

  ReplyDelete
 2. அருமையான பதிவு.அதில் சில படங்களை, வசனங்களை பற்றி சொன்ன விதம் சிறப்பு.நன்றி.தொடரட்டும் தங்களது பணி.
  Before Sunrise - என்னால மறக்க முடியாத ஒரு படம்.அதை பற்றி எனக்கும் எழுத வாய்ப்பு கிடைத்ததை எண்ணி மகிழ்கிறேன்.
  http://kumaran-filmthoughts.blogspot.com/2011/12/before-sunrise-1994-12.html

  ReplyDelete
 3. ஜெஸ்ஸிக்குப் பின்னாலுள்ள கதை நல்லாயிருககு. அதுபோக, ஜெஸிக்களும் நெருக்கமாகத்தான் இருக்கிறார்கள்.

  கௌதம் மேனனிடமிருநது துள்ளல் நிறைந்த காதலாக “நீ தானே என் பொன் வசந்தம்“ இருக்கும் என்று நினைக்கிறேன்- எதிர்பார்க்கிறேன்.

  ReplyDelete
 4. சமீபத்தில் திரைக்கு வந்து இருக்கும் "good night good morning" இதே போல் வசனங்களால் ஆன படம் தான். இது ஒரு இந்திய தயாரிப்பு..,

  தமிழ்ல எனக்கு ஒண்ணும் தோணல.., "அவள் அப்படி தான்" முழுசா நீங்க சொல்ற கேட்டகிரில வராதுன்னாலும் நிறைய அருமையான வசனங்கள் நிறைந்த படம்...,

  ReplyDelete
 5. //
  படம் முழுவதும் இரண்டு பேர் உரையாடுவதையே பார்த்து ரசிக்க முடியுமா? முடியுமெனில் அந்த வசனங்களுக்கு எவ்வளவு உழைப்பு தேவைப்படும்? //

  உழைப்பை விட ரசனை தான் முக்கியம்ன்னு நினைக்கிறேன்.., "Before Sunset" படத்துல ஸ்கிரிப்ட் முழுசா எழுதவே இல்லன்னு சொல்லுவாங்க பெரும்பாலான வசனங்கள் shot in sequence முறையில் எடுக்க பட்டது.., அதாவது காட்சியை மட்டும் தான் நடிகர்கள் கிட்ட சொல்லுவாங்க அவுங்களே அப்போதைக்கு தோன்ற வசனம் பேசிடுவாங்க.., :)

  ReplyDelete
 6. நீ தானே என் பொன்வசந்தம் நல்ல படமாக அமையும் என்று நினைக்கின்றேன் பார்ப்போம்

  ReplyDelete
 7. அவரிடம் இருந்து மீண்டும் ஒரு மின்னலே எதிர்பார்கின்றோம்

  ReplyDelete
 8. தமிழ் சினிமாக்களில் பெரும்பான்மையான நாம் சந்தித்தது, பார்பவர்களைக் கதறியழ(?!) வைக்கும் சென்டிமென்ட் பிழியும், 'நீ என் உசுருல கலந்துட்ட!', 'என் உயிரையே உன்கிட்டக் குடுத்திட்டேன்' மாதிரியான இயல்பற்ற, நடைமுறையில் பேசிக் கொள்ளாத, மரண மொக்கையான வசனங்களாகவே இருந்து தொலைக்கின்றன.//////

  ஸேம் ப்ளட்! சரியா சொன்னீங்க ஜீ

  ReplyDelete
 9. கௌதம் மேனனின் படத்துக்கு ஹாரிஸ் இல்லாமல் போனது வருத்தமா இருக்கு!

  ReplyDelete
 10. நல்லதொரு முயற்சி. பகிர்வுக்கு நன்றி சகோ

  ReplyDelete
 11. ம்...நல்ல படமொன்று பார்க்கலாம்ன்னு
  சொல்றீங்க ஜீ !

  ReplyDelete
 12. கவுதமின் படத்தில் வசனங்கள் சிறப்பாக இருக்கும். ஆனால் அதிக அளவில் ஆங்கிலத்தை கலந்து விடுகிறாரோ என்று தோன்றுகிறது.

  ReplyDelete
 13. மிக மிக எதிர்பார்ப்பை உண்டாக்கும் பதிவு.அருமை வாழ்த்துகள்

  ReplyDelete
 14. காதலை மையமாக வைத்து வசனம் எழுதப்பட்ட சமீபகால படங்களில் என்னை மிகவும் கவர்ந்தது எஸ்.ரா.வின் 'உன்னாலே உன்னாலே'. ஆனால் அதன் இயக்குனர் ஜீவா இப்போது நம்முடன் இல்லாமல் போனது மிகவும் வருந்தத்தக்கது.

  ReplyDelete
 15. அருமையான பதிவு அண்ணா!

  ReplyDelete
 16. இனிய காலை வணக்கம் நண்பா,

  நேற்றைய தினம் நான் வெளியே போகும் போது இந்த பதிவினை நீங்க ரிலீஸ் செஞ்சீங்க.
  ஆனால் உடனே வரமுடியலை,.

  மன்னிக்கவும்.

  ReplyDelete
 17. நல்லதோர் பதிவு,

  வித்தியாசமான முறையில் கவுதம் மேனனின் வசனங்களைப் பற்றிய பார்வையினைப் பதிவாக்கியிருப்பதோடு, ஆங்கிலத் திரை இயக்குனருடனும் ஒப்பிட்டு அலசியிருக்கிறீங்க.

  அருமை.

  ReplyDelete
 18. அருமையான பதிவு பாஸ்,சினிமாவில் கவனிப்பாரற்ற வசனங்கள் பற்றியும் அதனால் முக்கியத்துவம் பெற்ற படங்கள் பற்றியும் பேசியிருக்கிறீர்கள்.

  உன்னாலே உன்னாலே எஸ் ரா வசனங்கள் எனக்கும் பிடிக்கும் (உன்னாலே உன்னாலே தவிர்த்து பாபா முக்கியமாக மனிஷாவின் நிராகரிப்புக்கு பின்னர் தலைவர் வசனம் பேசும் இடம்) வசனம் எழுதிய வேறு எழுத்தாளர்கள் என்றால் டாப் சந்தேகமில்லாமல் சுஜாதாதான் இப்போதைக்கு எஸ் ரா தான் அசத்துகிறார். ஒரே படம் என்றாலும் மதன் அன்பே சிவத்தில் அசத்தியிருந்தார். பாலகுமாரன் என்னை திரை வசனங்களில் அவ்வளவாய் கவரவில்லை பாட்ஷா, நாயகன் தவிர்த்து (இரண்டும் ஹீரோயிஸ படங்கள் என்பதால் யதார்த்ததை மீறிய வசனங்கள் இருந்தாக வேண்டிய கட்டாயமும் இருந்திருக்கும்.) ஜெமோ வசனங்களில் ரொம்பவும் சிரத்தை இருக்கும்(அங்காடி தெரு, நான் கடவுள் இரண்டிலும்)

  எழுத்தாளர்கள் தவிர்த்து ரா. பார்த்திபன், கமல், இயக்குனர் சரண் (வட்டாரம், ஜெமினி வசனங்களை கவனிங்க பாஸ்) என்னைக் கவர்ந்தவர்கள். அண்மையில் கவனிக்க வைத்தவர் ஆரண்ய காண்டம் குமாரமங்கலம் தியாகராஜா. நாடகத் தன்மையான கடி ஜோக்குகள் என்ற போதும் க்ரேஸி மோகன் வசனமும் பிடிக்கும் ஆனால் அது கமல் என்ற நடிகனால் அழகாய் ப்ரஸண்ட் செய்யப் படும் போது
  மணி, கவுதம் மேனனையும் சேர்க்கலாம் மணி ரட்னம் வசனங்கள் ரொம்ப கவர்ந்தது தளபதியில்

  பல்ப் ஃபிக்‌ஷன் என்னா படம் பாஸ் அது அந்த நாலெழுத்து கெட்ட வார்த்தை கூட அத்தனை அழகாய் ஒரு பாத்திரம் போல படத்தோடு வந்தது. முக்கியமா சாமுவேல் ஜான்ஸன் மார்க் வெலஸ பார்த்தா எப்படி தோணுதுன்னு ஆரம்பிப்பாரே (அதை தமிழில பேசிப் பாருங்களே) அப்புறம் ட்ரவல்டோ சாமுவேல் ஜோன்ஸனிடம் மார்க் வேலஸ் மனைவி பற்றி கேட்கும் இடம், ப்ரூஸ் வில்லிஸ் சொப்பர் யாருடையது என கேட்பவளிடம் சொல்லும் Zed is dead உம் அந்தத் தொனியும்

  உங்கள் பதிவு பல ஞாபகங்களை கிளறி விட்டது பாஸ். நானும் வசனங்களுக்காகவும் படம் பார்க்கும் ஒருவன்.

  ReplyDelete
 19. நல்ல அலசல் ! நன்றி சார் !

  ReplyDelete
 20. வசணகர்த்தாக்களின் முக்கியத்துவத்தை அழகிய ஆங்கிலப்பட ஓப்பீட்டுடன் கொடுத்திருக்கின்றீங்க .

  கவுத்தம் அடுத்ததும் ஒரு வி.தா  வ. போலஇனிய காதல் கதையை வித்தியாசமான வடிவத்தில் தருவாரோ என எண்ணுகின்றேன்.

  ReplyDelete
 21. மாப்ள என்னமா சொல்றீங்கய்யா...இதெல்லாம் அப்படியே வர்றது தானே..எனக்கு அம்புட்டு ஆங்கில பட அனுபவம் இல்ல ஹிஹி!

  ReplyDelete
 22. சமீபத்தில் வந்த சுதீஷ் காமத் படமாகிய Good Night, Good Morning படத்தில் கூட ஓரிரவு முழுக்க இருவர் பேசுவதே படமாக்கப்பட்டுள்ளது.


  சாவி
  யின் தமிழ் சினிமா உலகம்


  மெரினா: 03.02.2012 - திரைவிமர்சனம்!

  ReplyDelete
 23. கலக்கலான பதிவுங்க. அதவிட முதல்ல போட்டிருக்கிற படம் காதலைச் சொல்லாமல் சொல்கிறது. மிக அழகா இருக்கு :))

  அதே சமயம் எனக்கு வசனங்கள்னு பார்த்தா முதல்ல ஞாபகத்துக்கு வர்றது ” அன்பே சிவம் “ மதன் சார்தான். பெரும்பாலான இடங்களில் நம்மையும் அறியாமல் சிரிக்கமுடியும். கூடவே கிரேசி மோகன் வசனங்களும்.

  ReplyDelete
 24. நல்லதோர் பதிவு,

  ReplyDelete
 25. நீதானே என் பொன் வசந்தம் எதிர்பாத்திருக்கிறேன், இசைதான்? ரெண்டு படமும் பார்க்கவேணும் before sunrise, before sunset

  ReplyDelete
 26. "after sunset" ஆ அல்லது "before sunset" ஆ

  ReplyDelete