Wednesday, May 23, 2012

தட்டி வான்(Van)!

'என்ன பிளைட் அது!யன்னலெல்லாம் லொட லொடன்னு சத்தம் போட்டுக்கொண்டு...  தட்டிவான் மாதிரி!'

ஏ -9 திறக்கப்படாத போர்க்காலத்தில், கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற தனது விமானப்பயண அனுபவத்தைத்தான் ஒருவர் இப்படிக் கூறினார்.



தட்டிவான்! - நீண்ட நாட்களாக அந்தப் பெயரே சொல்லக் கேள்விப்படாமல் ஏறக்குறைய நினைவிலிருந்து மறைந்து போன ஒரு அடையாளம்! ஒரு காலத்தில் தட்டிவான் பயணம் என்பது கேட்ட மாத்திரத்திலேயே மனதில் குதூகலத்தை ஏற்படுத்தும் கொண்டாட்டமான வார்த்தையாக இருந்திருக்கிறது!

ஒரு லொறி போல, அளவில் கொஞ்சம் சின்னதாக இருக்கும். ஒரு பழைய காலத்து Chevrolet கார் (அல்லது லொறி? - எதற்காகச் சொல்லி வைத்ததுபோல Chevrolet? ஒருவேளை அந்தக்காலத்தில் நிறைய Chevrolet கார்கள் யாழ்ப்பாணத்தில் இருந்திருக்குமோ? ) முன் பாகமும், பின்பாகம் ஒரு லாரியின் பெட்டி போல இரும்புச்சட்டத்தில் மரப்பலகைகளைப் பிணைத்தும் தட்டிவான் தயாரிக்கப்பட்டிருக்கும்! என்ன ஒரு வித்தியாசம் யன்னல்கள்! அதுவும் கண்ணாடிகள் இல்லாமல்! மற்றும் மரக்கதிரை போன்ற இருக்கைகள்! மிக முக்கியமாக தட்டிவான்களுக்கே உரிய பிரத்தியேக காற்றை அமுக்கி ஒலிக்கச் செய்யப்படும் ஹார்ன்களின் 'பாப்! பாப்!' சத்தம்!



இன்றும் அமெரிக்கா உட்பட சில நாடுகளில் லொறிகளின் தோற்றத்தை ஒத்த பேரூந்துகள் இயக்கப்படுகின்றன. அவை வெளித் தோற்றத்தில் மட்டுமே அப்படியிருக்கின்றன  என நினைக்கிறேன்.

சின்ன வயதில் தெல்லிப்பளையிலிருந்து அளவெட்டி செல்லும்போது முதன்முறையாக பயணித்ததாக ஞாபகம். அதுபோல் சுன்னாகத்திலிருந்து ஊரெழு செல்லும்போதும் அதே இனிய அனுபவம்! வேறு எந்தெந்த ரூட்களில் ஓடியதென்று எனக்குத் தெரியவில்லை.

உண்மையில் அதற்கு என்ன பெயர்? எதற்கு அப்படியொரு பெயர் என்று தெரியவில்லை. யாழ்ப்பணத்தில்  தட்டிவான் என்றுதான் அழைப்பார்கள். தட்டி என்று தற்காலிகமாக அமைக்கப்படும் சிறிய கூரையைச் சொல்வார்கள் என்று நினைக்கிறேன். யாழ்ப்பணத்தில் சில இடங்களிலும், வன்னியிலும் மட்டுமே பார்த்திருக்கிறேன். வன்னியிலும் அப்படித்தான் அழைப்பார்களா என்று தெரியவில்லை!

உள்ளே சிறுவர்கள் தவிர யாரும் நின்று கொண்டு பயணிக்க முடியாது. இட வசதியும் இருக்காது தாழ்வான மேற்கூரையும் அனுமதிக்காது! நாலரை ஐந்தடி உயரம்தான் இருக்கும்! அதனால் பெண்கள், வயோதிபர்கள், சிறுவர்கள் உள்ளே அமர்ந்திருக்க,  பின்பக்கம் இருக்கும் அரைக் கதவை திறந்துவிட்டு, சங்கிலியால் பிணைக்கப்பட்டிருக்கும் அந்தப்பலகையின் மேல் நின்று கொண்டு ஆண்கள் கும்பல் பயணிக்கும்!

மூன்றரை அடி உயரம் வரை வளர்ந்த நானும் எப்படியாவது அடம்பிடித்து, அந்தக்கும்பலில் அப்பாவோடு நின்று பயணித்த ஞாபகங்கள் இன்றும் பசுமையாய்.

அது ஒரு செம்ம த்ரில்லான அனுபவம். பள்ளங்களில் ஏறி இறங்கும்போது குலுங்கிக் குலுங்கி ஒருவரையொருவர் பார்த்து சிரித்தவாறு..அது போன்ற ஒரு கிக்கான அனுபவம் வேறு எதிலுமே கிடைத்ததில்லை! அந்தச் சங்கிலி மட்டும் மாட்டப்பட்டிருக்கும் கொளுக்கியிலிருந்து கழன்றுவிட்டால் சங்குதான் என்பது வேறு விஷயம்!

ஒரு கதையில் சுஜாதா எழுதியிருப்பார் மாருதி வேன் ஒன்று குதித்துக் குதித்து  ஓடி வந்து நின்றது! அது எப்படியிருக்கும் என்பதைத் தட்டி வானில் ஒருமுறையாவது சென்றவர்களால் இலகுவாக உணரமுடியும்.

பொதுவாக சந்தைக்கு காய்கறிகளை ஏற்றிப் போகும் ஆச்சிமார்தான் பெரும்பான்மையான பயணிகளாக இருப்பார்கள்.நடத்துனரின் 'ரைட் ரைட்!' சத்தம் கேட்குதோ இலையோ 'கெதியா ஏறணை ஆச்சி!', 'அந்தப்பெட்டியத் தள்ளி வையுங்கோ அம்மா' என்ற சத்தம் கேட்காமல் அந்தப் பயணங்கள் சாத்தியமில்லை.

கிறீச் கிறீச்சென்ற பிணைச்சல்கள், பலகைகளின் சத்தத்தோடு தாலாட்டுவதுபோல அசைந்துகொண்டு..செம்மண் புழுதியையும் தாரளமாக தெளித்துக் கொள்ளும் இனிமையான பயணங்கள் என்றும் மறக்க முடியாதவை! 

தொண்ணூறாம் ஆண்டிற்குப் பிறகு யாழ் நகரப் பகுதியில் இருந்தகாலத்தில் தட்டிவானைப் பார்த்ததில்லை. அப்பப்போ அந்த நினைவுகள் வரும். சில வருடங்கள் கழித்து வன்னியில் நிறையத் தட்டிவான்களைப் பார்க்க முடிந்தது. யாழில் பார்த்தது போலன்றி கலர் கலராகப் புதுப் பொலிவுடன்! ஒருநாள் மாங்குளத்திலிருந்து கனகராயன் குளம் வரை பயணிக்கச் சந்தர்ப்பம் வாய்த்தது!

அப்போதுதான் முதன்முறையாக உள்ளே இருக்கையில் அமர்ந்து பயணம். காலி இருக்கைகள் இருந்தது மட்டுமல்ல. உடலும் அதைவிட மனமும் ஏற்கனவே பல பயணங்களினால் நிறையக் களைத்திருந்ததுதான் காரணம்! 

பயணத்தில் கூடவே துணையாக சினிமாப்பாடல்களும் ஒலித்துக் கொண்டிருந்தன.. அப்பொழுது பிரபலமாகி அடிக்கடி வானொலிகளில் ஒலிக்கும் 'ராசிதான் கை ராசிதான்' பாடல் அந்தப் பயணத்தில் கேட்ட ஞாபகம் இருக்கிறது. இப்பொழுதும் அந்தப் பாடலைக் கேட்க நேரும்போதெல்லாம்  கண்களை மூடிக்கொள்ள, கடைசியாக நான் தட்டிவானில் பயணித்தது காட்சியாக மனத்திரையில் விரியும்!

எமது மண்ணுக்குரிய, கிராமங்களுக்குரிய அடையாளங்களில் ஒன்றாக தட்டிவானையும் கொள்ளலாம். இப்போதும் தட்டி வான்கள் எங்கேயாவது ஓடுகின்றனவா?


அமெரிக்காவிலோ, வேறு வளர்ந்த நாடுகளிலோ பழைய பாணியில், லொறி வடிவிலான பேரூந்துகளைப் பயன்படுத்துவதற்கான அவசியம் என்ன இருக்கிறது? நிச்சயம் பழமையை மறக்கக் கூடாது என்ற காரணம் இருக்கும்!

அது போல நாங்களும் தட்டிவான்களை பயன்படுத்தலாம்! ஆனால், சாதாரண போக்குவரத்தில் ஈடுபடுத்தப்படுவதைத் தவிர்த்து அமைதியான, பொழுது போக்கான சவாரிக்கு, வெளிநாட்டுப் பிரயாணிகள் மெதுவாகச் சுற்றிப்பார்க்க - இப்படியான தேவைகளுக்காக புதிய, அழகிய தட்டிவான்களை தயாரித்து உபயோகப்படுத்தலாம்.

அது எமது பழைய அடையாளங்களை, பாரம்பரிய வாழ்க்கையை நினைவூட்டும் அதேவேளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்லும் ஒரு நல்ல முயற்சியாகவும் இருக்கும்!    

11 comments:

  1. நல்லா அழகா விளக்கி சொல்லி இருக்கய்யா...நானும் போனாப்ல இருந்தது!

    ReplyDelete
  2. நல்ல பதிவும் நல்ல அனுபவமும்

    ReplyDelete
  3. ஆனாலிம் இலங்கையில் இப்படி ஒரு வாகனம் இருந்திருக்கிறது என்று எனக்கு இப்போதுதான் தெரியும்...இதையும் இன்று கற்றுக் கொண்டேன்..பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  4. பழமைக்கான இந்த பதிவுக்கு நிச்சயம் தட்டி வாகனம் இல்லாவிட்டாலும் வேறு ஏதாவது ஒரு பழமையை புதுப்பிப்பார்கள் என நினைக்கிறேன்.

    ReplyDelete
  5. நல்ல ஒரு பின் நோக்கிய பார்வையாக மீண்டும் பழைய நினைவைக்கிளரும் தட்டிவான் அனுபவம் ரசித்தேன் ஜீ.சமாதான காலத்தில்(2002 -2003) நானும் இதில் பயணித்தேன் கொடிகாமம் ஊடாக பருத்தித்துறை நெல்லியடி  எல்லாம் இது பாவனையில் இருந்தது விவசாயிகளின் தோழன் என்றும் சொல்ல முடியும்!

    ReplyDelete
  6. பாரம் பரியத்தை பாதுகாப்பது ஒவ்வொருத்தரின் சமுக கடமை ஆனால் நாம் ???

    ReplyDelete
  7. வணக்கம்,ஜீ!அது ஈழமெங்கணும் "தட்டி வான்" என்றே தான் அழைத்தார்கள்/அழைப்பார்கள்.கொடிகாமம்-பருத்தித்துறை/நெல்லியடி.மற்றும்,கிளிநொச்சி--விசுவமடு/முல்லைத்தீவு.என்று அந்த நாட்களில் அதன் சேவை அளப்பரியது!"தட்டி" என்பது அந்நாட்களில்,குடிசை வீடுகளுக்கு மறைப்பாக கிடுகு கொண்டு அமைத்துப் பயன்படுத்துவார்கள்!போக,வீட்டில் சிறிய படலைக்கு மேலதிகமாக,வாகனங்கள்(உ-ம்:மோட்டார் கார்,டிராக்டர்,மாட்டு வண்டி)உள்ளே வருவதற்கு வசதியாக சுமார் பத்து/எட்டு அடி நீளத்துக்கு வேலியை அகற்றி விட்டு,மாற்றீடாக தடி/சிலாகை கொண்டு "தட்டி" அமைத்து விடுவார்கள்.நீங்கள் குறிப்பிட்டது போல் அந்த வான்களில் மறைப்பு எதுவும் இன்றி கட்டம்,கட்டமாக யன்னல்கள் இருப்பதால் "தட்டி"வான் என்று பெயர்!

    ReplyDelete
  8. அருமையான் அனுபவப் பகிர்வு.
    வாழ்த்துக்கள் ஜீ...

    ReplyDelete
  9. வணக்கம் நண்பா,
    என்னுடைய நினைவுகளையும் கிளறி விட்டுள்ளீர்கள்.
    எல்லாம் ஒரு காலம்.
    அதுவும் தட்டிவான் காலத்தில் கச்சான் கடலை வாங்கிக் கொண்டு கோயிலால் வரும் போது உண்டு மகிழ்ந்த நினைவுகள் இன்னமும் மனதில் இருக்கின்றது.

    ReplyDelete
  10. தட்டிவானில் பல தடவை பிரயாணம் செய்திருக்கிறேன் .. வன்னிப்பயனங்கள் பல தட்டிவானில் தான் .. ஒரு முறை நயினாதீவுக்கு கூட தட்டிவானில் ... பெரும் தேடாவவளையம் ஒன்றை பிடித்துக்கொண்டு பின் பகுதியில் நின்று செய்யும் பயணம் அலாதியானது .. அவ்வப்போது நிறுத்தங்களில் ஏறும் பெண்களுக்கு உதவி செய்யிறது ... பாக்கை வாங்கிவைத்துக்கொண்டு ஏற சொல்லுறது .. டீச்சர் மார், ஏஎல் பொண்ணுங்க ஏண்டா எக்ஸ்ட்ரா கவனம்!! அழகான சிறுகதையே எழுதலாம் ஜி!

    ReplyDelete