Thursday, December 2, 2010

The Road Home


ஒவ்வொரு மனிதனுக்கும் வெவ்வேறு காலகட்டங்களில் ஏதோ ஒரு வீதி வாழ்வோடு கலந்திருக்கும். அதில் அன்றாடம் எதிர்கொள்ளும் தெரிந்தவர்கள், பார்வையில் மட்டும் அறிமுகமானவர்கள், மனதிற்குப் பிடித்தவர்கள், பிடித்த வீடுகள், மரங்கள். ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கைப் பயணத்திலும், அனுபவங்களிலும் கூடவே ஒரு மௌன சாட்சியாக இருக்கின்றன வீதிகள்.

தந்தை இறந்த செய்தியறிந்து தனது கிராமத்துக்கு வரும் 'யுசெங்'கிடம் அவரது உடல் நாற்பது கிலோமீட்டர் தொலைவிலுள்ள வைத்தியசாலையில் இருக்கிறது என்கிறார்கள் ஊரிலுள்ள பெரியவர்கள். வயதான அவன் தாய் ஷாவோ கிராமத்திற்கு வரும் வீதி வழியே அவரது உடலைத் தூக்கிகொண்டே நடந்து வரவேண்டும் எனக் கூறுகிறாள். கடுமையான பனிக் காலம் வேறு. வயதான அந்தத் தாயின் வேண்டுகோளை மறுக்க முடியாமல் ஏற்பாடு செய்கிறான்.


அப்படி என்ன அந்த வீதிக்கு முக்கியத்துவம்? ஏன் தூக்கிக் கொண்டு நடந்துவர வேண்டும்?

அந்தப் பாதையில்தான் அவள் முதன்முதலில் பார்த்தது, ஏதேச்சையாக சந்திப்பதுபோல் ஒவ்வொரு நாளும் சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொண்டது, பிரிவுத்துயரின் கொடுமையில் அவளோடு கூடவே சாட்சியாக இருந்து அந்தப்பாதை. அப்படிக் கொண்டு வந்தால்தான் அவருக்கு இறுதிவரை எதுவும் மறக்காமல் இருக்கும் என்கிறாள் தாய்.

அப்பாவின் அறைக்குள் வரும் யுசெங், தான் பெற்றோர் கல்யாணமான புதிதில் எடுத்த போடோவைப் பார்த்ததும், அவர்களின் இளமைக் காலத்தை நினைத்துப் பார்க்கிறான். அப்படியே கடந்தகாலம் காட்சிகளாக விரிகின்றது.


அந்தக் கிராமத்திற்கு பள்ளி ஆசிரியராக பணிபுரிய வருகிறான் ஷாங்யு. அவனைப் பார்த்த உடனேயே காதல் கொள்கிறாள் அழகான இளம்பெண் ஷாவோ. கம்யூனிச சீனாவில் பள்ளிக்கூடம் இல்லாத அந்த ஊரில் ஆசிரியர் உட்பட எல்லோரும் சேர்ந்து பள்ளி கட்டடம் கட்டும் பணியில். எல்லா வீடுகளிலிருந்தும் பணியாளர்களுக்கு உணவு வர, மரியாதை கருதி, ஆசிரியர் எடுத்துக் கொண்ட பின்னரே ஏனையோர். ஒவ்வொரு முறையும் மற்றவர்கள் அறியாமல் தனது பீங்கான் பாத்திரத்தை அவர் பக்கமாக முதலில் நகர்த்தி வைக்கிறாள் ஷாவோ.


கண்களின் வழியே அவர்களின் காதல் வளர்கிறது. கிராமத்தில் ஒவ்வொரு நாளும் ஒருவர் வீட்டில் ஆசிரியருக்கு விருந்து வைக்கிறார்கள். ஷாவோவின் முறை வரும்போது, வீட்டில் ஷாவோ அந்த பீங்கான் கோப்பையைக் காட்டி, ஞாபகம் இருக்கிறதா? எனக் கேட்க, ஷாங்யு அர்த்தமுள்ள ஒரு புன்சிரிப்பால் தனது காதலை வெளிப்படுத்துகிறான்.

ஷாங்யு நகரம் சென்றுவிட, ஷாவோ மிகவும் வருந்துகிறாள். அவன் சொன்ன காலத்தில் திரும்பவில்லை. பனிக்காலத்தில், பள்ளி விடுமுறையும் வருகிறது.இரவுகளில் அவன் வரும் பாதையில் குளிரையும் பொருட்படுத்தாமல் நடந்து செல்கிறாள். ஊரவர்களுக்கு விஷயம் தெரியவர, ஷாங்யு வந்ததும், அவனை அழைத்துப் பேசி, திருமணம் செய்து வைக்கிறார்கள். பின்பு அவர்கள் பிரியவே இல்லை.


பழைய காட்சிகள் முடிய இப்போது, தந்தையின் உடலைத் தூக்கிக்கொண்டே நடந்து வருகிறார்கள்.தூக்கிவந்த ஒருவரும் பணமும் பெற்றுக்கொள்ளவில்லை.எல்லோரும் அவரின் மாணவர்கள். பள்ளிக்கூடத்திக்கு எதிரிலேயே அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது.

இறுதியாகத் தந்தை படிப்பித்த பள்ளியில் பாடம் நடத்தச் சொல்கிறாள் தாய். அவனும் அவ்வாறே செய்ய அந்த சத்தம் கேட்டு தாய் ஷாவோ ஓடி வரும் காட்சி, அவள் மீண்டும் அந்தக் காலப்பகுதிக்கே சென்றுவிட்டதாய்க் காட்டுகிறது.

மிகக் குறைந்த வசனங்களுடன், அழகாக, கவிதைத் தனமாகச் சொல்லப்படும் காதல் காட்சிகள் சினிமா ஒரு காட்சி ஊடகம் என்பதை வலியுறுத்திச் சொல்கிறது.


ஷாங்யு பரிசளித்த ஹேர் கிளிப்பைத் தொலைத்துவிட்டு பாதையில் ஷாவோ தேடிக்கொண்டிருக்கும் காட்சி, காதலர்களால் பரிமாறிக் கொள்ளப்படும் மிகச் சிறிய பரிசுப் பொருட்களுக்கும் உள்ள பெறுமதியைச் சொல்கிறது.

கிணற்றில் நீர் அள்ளிக் கொண்டிருக்கும் ஷாவோ, ஷாங்யு பார்த்துக் கொண்டிருப்பதைக் காண்கிறாள். அவளைப் பார்த்ததும் ஷாங்யு நீர் எடுக்க அங்கே வருகிறான். அவன் வருவதைப் பார்த்ததும் ஷாவோ தான் அள்ளிய நீரை மெதுவாக மீண்டும் கிணற்றுக்குள் ஊற்றும் காட்சி என்னை மிகவும் கவர்ந்த கவிதை.

இயக்கம் - Zhang Yimou 
மொழி - Mandarin

1999 இல் வெளியான இந்தப்படம், Golden Rooster for Best Picture, Berlin International Film Festival விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றது.

15 comments:

  1. நல்ல விமர்சனம்.

    ReplyDelete
  2. அழகாய் விமரிசிக்கிரீர்கள்

    ReplyDelete
  3. மிக நல்ல விமர்சனம்!

    ReplyDelete
  4. அருமையான விமர்சனம்,

    அழகான ரசனயுடன் அருமையாக பதுவு செய்துள்ளீர்கள்

    தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

    தளத்தின் தலைப்பே அருமை ”வானம் தாண்டிய சிறகுகள்”

    நன்றி
    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  5. Excellent Jee..wonderful review:)

    ReplyDelete
  6. அருமையான விமர்சனம்
    சென்னையில் ஒரு உலகசினிமா திரையிடல் நிகழ்வில்
    பார்த்திருக்கின்றேன். தங்கள் பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  7. @அன்பரசன்
    @Chitra
    @மோகன்ஜி
    @எஸ்.கே

    @ஆனந்தி
    நன்றி!:-)

    @மாணவன்
    நன்றி!உங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும்!:-)

    @Jana
    //சென்னையில் ஒரு உலகசினிமா திரையிடல் நிகழ்வில்
    பார்த்திருக்கின்றேன்//
    மகிழ்ச்சி!:-)

    ReplyDelete
  8. ஆழ்ந்த ரசனையுடனான விமர்சனம். நான் பார்க்கவில்லை. கேள்விப்பட்டிருக்கிறேன்.

    ReplyDelete
  9. @பார்வையாளன்
    நன்றி!

    @பிரஷா
    நன்றி!

    ReplyDelete
  10. விமர்சனங்களுடன் படம் அருமை

    ReplyDelete
  11. விமர்சனமும்,படங்களும் சூப்பர்.. :-)

    ReplyDelete
  12. @Dr.எம்.கே.முருகானந்தன்
    @THOPPITHOPPI
    @Ananthi

    நன்றி!:-)

    ReplyDelete