Monday, November 14, 2011

Schindler's List



ஒருவன் தனது சுயநலத்திற்காக ஆரம்பத்தில் செய்யும் ஒரு செயல் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அவனை ஒரு மகாத்மாவாக மாற்றக்கூடுமா? அதுவும் பரம வைரிகளாக இருக்கும் எதிர் இனத்தவரிடம்? அப்படி ஒருவர்தான் ஷிண்ட்லர்!

1939 இரண்டாம் உலகப்போரின் ஆரம்பகாலம்! போலந்து நாட்டின் Krakow  நகரம்! அங்குள்ள யூதர்களெல்லாம் தமது வீடுகளை விட்டு வலுக்கட்டாயமாக அவர்களுக்காக அமைக்கப்பட்ட பிரத்தியேக குடியிருப்புகளுக்கு கொண்டு செல்லப்படுகிறார்கள். ஒருவருக்கு நான்கு கன அடியுள்ள செல்களில்தான் தூங்க வேண்டும்!

யூதர்களை ரயிலில் ஏற்றும் முன் அவர்களது உடைமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு மலைபோல் குவித்து வைக்கப்பட்டிருக்கிறது! ஏராளமான பணம், நகைகள், காலணிகள், விலையுயர்ந்த பரிசுப் பொருட்கள். அவற்றைப் பிரித்து ஒழுங்கு படுத்தும் பணியிலும் யூதர்களே.

தங்க நகைகளைத் தரம்பிரிக்கும் ஒரு யூதன் திடீரென அதிர்ச்சியடைந்து பார்க்க......தங்கத்தைப் பிரிதெடுப்பதற்காக பிடுங்கி எடுக்கப்பட்ட ஏராளமான தங்க முலாம் பூசப்பட்ட பற்கள்!

Moraviaவைச் சேர்ந்த தொழிற்கட்சி (Nazi) உறுப்பினரான Oscar Schindler போலந்துக்கு வருகிறான். அங்குள்ள ஜெர்மன் இராணுவ அதிகாரிகளுக்கு நிறையப் பணம், மதுவை லஞ்சமாகக் கொடுத்து மிக விரைவாக அவர்களது நட்பைப் பெற்றுக் கொள்கிறான் ஷிண்ட்லெர். புதிதாகத் தொழில் தொடங்க நினைக்கும் அவன், தனது தொழிலுக்கு முதலீடு செய்வதற்காக ஒரு பணக்கார யூதனைத் தேடுகிறான் - காரணம், யூதர்களிடம் பணம் நிறைய இருந்தாலும், நேரடியாக பயன்படுத்தவோ, வங்கியில் வைத்திருக்கவோ அனுமதி கிடையாது.


போலந்தில் யூதர் ஒருவரின் தொழிற்சாலையைக் குத்தகைக்கு எடுத்து பாத்திரங்களுக்கு முலாம்பூசும் தொழிலைத் தொடங்குகிறான். திறமையான யூதக் கணக்காளனான Itzhak Stern உடன் நட்பாகும் ஷிண்ட்லெர், ஜெர்மன் படையதிகாரிகளிடமிருந்து அனுமதி பெற்று அவரைப் பெற்றுக் கொள்கிறான்.

ஷிண்ட்லெர் தனது தொழிற்சாலையின் கணக்காளனாக இஸ்தக் ஸ்டேர்னை நியமித்துக் கொள்கிறான். இதுவே ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வுக்கு வழியமைக்கிறது. தொழிற்சாலைக்கு ஆட்களை வேலைக்கு எடுக்க வேண்டும். இந்த நேரத்தில் இஸ்தக் சொல்லும் ஆலோசனை -  யூதர்களை வேலைக்கு எடுக்கும் பட்சத்தில் அவர்களுக்கு ஊதியம் கொடுக்கத் தேவையே இல்லை! அவர்களை பெற்றுக்கொள்ள நாஜிப் படைக்கு லஞ்சம் கொடுத்தாலே போதுமானது!

அடிப்படையில் சுயநலமியான, உல்லாசப் பேர்வழியான ஷிண்ட்லெரின் வியாபார மூளை அதற்குச் சம்மதிக்க, உடனடியாக 400 யூத தொழிலாளிகளை முதற்கட்டமாக நாஜி வதை முகாமிலிருந்து அழைத்து வருகிறார் இஸ்தக்! போலியான வேலைச் சான்றிதழ்கள் தயாரித்து காண்பித்து பணம், பரிசுப்பொருள்கள் லஞ்சமாக வழங்கி, யூதர்களை மீட்கும் இஸ்தக் முடிந்தவரை குடும்பமாகவே அழைத்து வருகிறார். அவர்களில் குழந்தைகள் உட்பட ஒரு கையை இழந்த முதியவரும் கூட!

ஷிண்ட்லரின் தொழிற்சாலை புதுப் பொலிவுடன், கோலாகலமாக இயங்க ஆரம்பிகிறது. கூடவே பத்துக்கும் மேற்பட்ட கத்தோலிக்க போலிஷ் இனப் பெண் காரியதரிசிகளோடும்! ஷிண்ட்லெர் எப்போதும் கேளிக்கை, பெண்கள் என்று பணத்தை அள்ளியிறைத்துக் கொண்டிருக்க, ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து அவனை விட்டுப் பிரிந்து செல்கிறாள் மனைவி எமிலி (Emilie)

யூதர்களைப் பயன்படுத்தி ஏராளமான பணம் சம்பாதிப்பதை ஷிண்ட்லெர் குறிக்கோளாக வைத்திருக்க, மறுபுறம் இஸ்தக் ஷிண்ட்லெரைப் பயன்படுத்தி முடிந்தளவு யூதர்களைக் காப்பாற்றுவது என செயற்படுகிறார்!

1941 ஆம் ஆண்டு! நாஜிப்படிகளின் தலைமை இராணுவ அதிகாரியாக வருகிறான் அமான் கோத் (Amon Goeth). ஒரு யூதப் பெண் பொறியியலாளர், நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டடத்தின் அத்திவாரம் போதுமான உறுதித்தன்மை பெறவில்லை, கொலாப்ஸ் ஆகிவிடுமென நாஜிப் படையதிகாரியிடம் வாதிக்க, அவள் எதிர்த்துப் பேசிவிட்டாள் என்று அவளைக் கொல்ல உத்தரவிடுகிறான். பின்னர் அவள் சொன்ன மாதிரியே வேலையை இடை நிறுத்துகிறான்.


ஒரு சாடிஸ்டான அவன் ஒவ்வொரு நாள் காலையிலும் தனது இருப்பிடத்தின் பல்கனியில் நின்று தொழிலாளிகளை தூரநோக்கித் துப்பாக்கி மூலம் கவனிப்பான். உடல்நலம் குன்றியோர், களைத்துப் போய் ஓய்வெடுப்போர் என வேலை செய்ய முடியாதவர்கள் எனத் தான் கருதுவோரை களைஎடுத்த பின்னரே அவனது அன்றைய நாள் தொடங்கும்!

ஷிண்ட்லரின் ஊழியரான ஒற்றைக்கை முதியவரை நாஜிப்படைகள் கொன்று விட்டு அவரால் உனக்கென்ன பயன்? என்று கேட்க, முதன்முறையாக அவர் பற்றி அறிந்துகொள்ளும் ஷிண்ட்லர் மற்றவர்கள் செய்யமுடியாத குழாய்களைச் சுத்தம் செய்ய அவரால்தான் முடியும் என எப்படியோ சமாளித்துவிட்டு இஸ்தக்கிடம் வந்து கடிந்துகொள்கிறான்! நான் இங்கு தங்குமடம் நடத்தவில்லை! நான் ஒரு போர்ச்சந்தர்ப்பவாத முதலாளி (War  profiteer )! எனது குறிக்கோள் பணம் சம்பாதிப்பது மட்டுமே என்கிறான்.

அப்போதைக்கு எல்லாவற்றுக்கும் சரியெனத் தலையாட்டும் இஸ்தக் தொடர்ந்தும் தனது கைவரிசையைக் காட்டுகிறார்!

ஒரு நாள் ஷிண்ட்லெர் தனது ஒரு மிஸ்ட்ரெஸ் ஒருத்தியுடன் குதிரையில் மலைப்பாங்கான இடத்தில் நிற்கிறான். அன்று 1943 மார்ச் 13! Operation Reinhard  in Krakow என்ற நடவடிக்கையில் அமான் கோத்தின் கொடூரங்களை நேரடியாக, முதன்முறையாகப் பார்க்கிறான். அதுவே அவனின் மனநிலையில் மாற்றத்தைக் கொண்டுவருகிறது. சொல்லமுடியாத வேதனையை அநுபவிக்கும் ஷிண்ட்லெர் இவ்வளவு நாளும் யூதர்களின் சூழ்நிலையைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திய தன்னை எண்ணி வெட்கப்படுகிறான்! அப்போது அவன் எடுக்கும் முடிவுதான் - தன்னுடைய சொத்து முழுவதையும் இழந்தேனும், தன்னால் முடிந்தளவு யூதர்களைக் காப்பாற்றுவேன் என்பது!

இப்போது இஸ்தக், ஷிண்ட்லெர் இருவரும் இணைந்து மேலும் ஆட்களைச் சேர்க்கிறார்கள்!தங்கள் தொழிலார்கள் சுட்டுக் கொல்லப்படும்போது அவர்களுக்கு மாற்றீடாக வேறு சிலரைப் பெற்றுக்கொள்கிறார்கள்.


அமான்கோத் அவ்வப்போது யூதர்கள் பணிபுரியும் தொழிற்சாலைகளுக்கு விசிட் அடித்து அங்கும் தன கைவரிசையைக் காட்டுகிறான். ஒரு தொழிலாளியைக் கொல்ல முடிவு பண்ணி தனது கைத்துப்பாக்கியால் சுட, பலமுறை நிதானமாக முயன்றும் அது சரிவர வேலை செய்யவில்லை. அமான் தனது இன்னொரு துப்பாக்கியால், தொடர்ந்து பக்கத்தில் நிற்கும் இராணுவ வீரனின் கைத்துப்பாக்கியால் சுட முயல அதுவும் வேலைசெய்யாது விட ஆத்திரத்தில், துப்பாக்கியால் தலையில் அடித்து வீழ்த்திவிட்டு செல்கிறான். இந்த நேரத்தில் அவர் அனுபவிக்கும் மரண வேதனையைப் பார்க்கும் இஸ்தக் அவரையும் ஷிண்ட்லரின் தொழிற்சாலைக்கு அழைத்துச் செல்கிறார்.

அமான் கோத் ஒரு அழகிய யூதப் பெண்ணை வேலைக்கு வைத்திருக்கிறான். திடீரென்று அவள்மீது காதல் வந்து தழுவுவதும், உடனேயே அடித்துத் துன்புறுத்துவதுமாக சித்திரவதை செய்கிறான். ஒருநாள் அவளை விடுவிப்பேன் என்று தனிமையில் சந்தித்துக் கூறுகிறார் ஷிண்ட்லெர். அதை அவளே மறந்த நிலையில், அமான் கோத்திடம் பேரம்பேசி, அவளைப் பிரிய மனமின்றி, அவளைக் கொல்லமாட்டேன் என்றெல்லாம் உறுதிகூறி, முரண்டுபிடிக்கும் அமானிடம் ஒரு பெருந்தொகை கொடுத்து அவளை மீட்டெடுக்கிறார் ஷிண்ட்லெர்! மனந்திருந்திய ஷிண்ட்லருடன் மீண்டும் வந்து சேர்கிறார், பிரிந்து சென்ற மனைவி எமிலி!

இந்நிலையில் திடீரென ஷிண்ட்லரின் தொழிலாளிகள் - இஸ்தக் உட்பட அனைவரையும் கைது செய்து விடுகிறான் அமான். பழைய ஒப்பந்தம் காலவதியாகி விட்டதாகவும் மீண்டும் புதுப்பிக்க வேண்டும் என்று சொல்ல, ஆளுக்கு பணம், லாபத்தில் ஒரு பகுதி அமானுக்கு என பேரத்தில் முடிவாகிறது. முதலில் இஸ்தக்கை மீட்கிறார் ஷிண்ட்லெர்!


அந்த நேரத்தில் ஷிண்ட்லரின் தொழிற்சாலையில் இருந்தவர்கள் 800 பேர்! ஷிண்ட்லெரும், இஸ்தக்கும் ஒரு பெயர்ப் பட்டியலைத் தயார் செய்கிறார்கள். தமது தொழிலாளிகளின் பெயர்களை நினைவிலிருந்து மீட்டு, திருத்தி, இரவெல்லாம் விழித்திருந்து மேலும் சிலரைச் சேர்த்து தயாரிக்கப்பட்ட 1200 பேர் கொண்ட அந்தப் பட்டியலே Schindler's list!

ஒருகட்டத்தில் அமானிடமிருந்து யூதர்களைக் காப்பாற்றுவது கடினம் என உணரும் ஷிண்ட்லெர் தனது சொந்த ஊரான Moraviaவில் தொழிற்சாலை ஒன்றை அமைக்கப் போவதாக அனுமதி கேட்கிறார். எப்படியும் இறுதியில் உன்னால் என்னிடமிருந்து இவர்களைக் காப்பாற்ற முடியாது என்று கூறி அதற்கு அனுமதியளிக்கிறான் அமான்! ஷிண்ட்லெர் அவர்களைக் காப்பாற்றினாரா?


ரயிலில் வந்து இறங்கும் பெண்கள் அனைவருக்கும் கூந்தலை ஒட்ட வெட்டி, ஆடைகளை களையச் செய்து கூட்டம் கூட்டமாக குளியலறைக்குள் அனுப்ப, அவர்கள் நெருக்கமாக, நடுங்கியவாறு நிற்கிறார்கள். திடீரென மின்விளக்குகள் அணைய பெரும் கூச்சல், கதறல். ஷவரிலிருந்து நீர் வருமா அல்லது நச்சுப்புகை வருமா என அனைவரும் நடுங்கியவாறே பார்த்திருக்க....நீர் வருகிறது! எங்கும் சந்தோஷக் கூச்சல்! பைத்தியம் பிடித்தது போல ஒரு பெண் சிரிப்பது மனத்தைக் கலங்கச் செய்யும். அவர்கள் உயிர்பிழைத்து, வெளியில் வந்து நிம்மதிப்பெருமூச்சு விடும்போதே தமது குழந்தைகளை கொல்ல அழைத்துச் செல்வதை அந்தத் தாய்மார் காண நேர்வது...

விஷவாயுக் குளியலுக்காக, ரயிலில் ஏற்றப்பட்டிருக்கும் முதியவர்கள் தாகத்தில் தவிக்க ஷிண்ட்லெர், அமான் கூட்டம் ஷிண்ட்லெர் கொடுத்த வோட்காவை பருகியவாறே அவரைக் கிண்டல் செய்வதைப் பொருட்படுத்தாமல் சிறிய யன்னலூடாக தண்ணீர்க்குழாய் மூலம் நீர்பாய்ச்சி அவர்களின் தாகத்தைப் போக்க உதவும் காட்சி அருமையானது!

கருப்பு வெள்ளைத் திரைப்படத்தில் ஒரேயொரு சிவப்புக் கோர்ட் அணிந்த சிறுமியை காட்டுவார்கள். உயிர்பிழைப்பதற்காக அவள் மேற்கொள்ளும் முயற்சிகள் மனம் பதைக்கச் செய்யும் இதனை ஷிண்டலெரும் பார்த்துக் கொண்டிருப்பார்.


ஒரு நாள் பனி பொழிவது போல் எங்கும் சாம்பல் தூசியாகப் படிவத்தைக் காணும் ஷிண்ட்லெர் அங்குசென்று பார்க்க ஏராளமான பிணங்கள் பெருந்தீக்கிடங்குகளில் கொட்டி  எரிக்கப்படுகின்றன. அப்போது ஷிண்ட்லெர் காணும் சிவப்புக் கோர்ட் அணிந்த அந்த சிறுமியின் உடல்...


இறுதியில் தனது தொழிலாளிகள் முன் ஷிண்ட்லெர் ஆற்றும் உரை முக்கியமானது! காவலுக்கு நிற்கும் நாஜிப் படைகளுடன் கேட்கும் கேள்வி, 'நீங்கள் மனிதர்களாக உங்கள் வீடுகளுக்குத் திரும்பப் போகிறீர்களா?அல்லது இவர்களைக் கொன்று, இராணுவ வீரர்களாகவே இருக்கப் போகிறீர்களா?'

ஷிண்டலெருக்கு அவரது தொழிலாளர்கள் எல்லாரும் அவர் போர்க்குற்றவாளியல்ல என கையெழுத்திட்டுக் கொடுக்கிறார்கள். கூடவே ஒரு தொழிலாளியின் தங்கப் பல்லைப் பிடுங்கி, தயாரிக்கப்பட்ட மோதிரத்தை வழங்க, கைகள் நடுங்க அதை அணிந்து கொள்கிறார்.

இறுதியில் விடைபெற்றுச் செல்லும்போது 'நான் எவ்வளவு சுயநலமானவனாக இருந்துவிட்டேன். இந்தக்காரைக் கொடுத்து இன்னும் பத்துப் பேரைக் காப்பாற்றியிருக்கலாம். தங்கத்தாலான இந்த யூத இலச்சினையைக் கொடுத்து ஒருவரையாவது மீட்டிருக்கலாம்'என இஸ்தக்கை கட்டிக் கொண்டு அழும் ஷிண்ட்லெரை எல்லாரும் ஆதரவாகக் கட்டிக் கொண்டு தேற்றும் காட்சி மிக நெகிழ்ச்சியானது!


ஷிண்ட்லெர் காப்பாற்றிய யூதர்களின் எண்ணிக்கை 1200 அவர்களது வழித்தோன்றல்கள் உட்பட இப்போது 6000 இற்கு மேல்! இவர்கள் Schindler's Jews என அழைக்கப்படுகிறார்கள்.

இறுதிக்காட்சியில் ஜெருசலேமில் அமைந்துள்ள ஷிண்ட்லரின் கல்லறைக்கு Schindler's Jews வந்து யூத முறைப்படி சிறிய கற்களை வைத்து அஞ்சலி செலுத்துகிறார்கள். படத்தில் வரும் சில பாத்திரங்களும், ஷிண்ட்லரின் முன்னால் மனைவி எமிலியும், இறுதியாக ஒரு கை வந்து ரோஜா ஒன்றை கல்லறை மீது வைக்கிறது. அது படத்தில் ஷிண்ட்லராக நடித்த Liam  Neeson!

மனதைக் கனக்கச் செய்யும் (குறிப்பாக இறுதிக் காட்சியில் ) John Williams இன் இசை!

1993 இல் வெளியான இந்தப்படம் இயக்குனர் ஸ்பில் பேர்க்கிற்கு  முதன்முறையாக சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கார் விருதினைப் பெற்றுக் கொடுத்தது!

படம் இரண்டாம் உலகப்போரின்போது கொல்லப்பட்ட 6 மில்லியன் யூதர்களுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.

ஒரு திட்டமிட்ட இன அழிப்பை முக்கிய ஆவணமாக பதிவு செய்து உலகத்திற்கு உரக்க எடுத்துச் சொன்ன இந்தக் காவியம், இந்த உலகமும், மனித குலமும் உள்ளவரை மிகச்சிறந்த படைப்பாக நினைவு கூரப்படும்!

இயக்கம் - Steven Spielberg
இசை - John Williams
மொழிகள் - English, Jerman, Polish, French, Hebrew
விருதுகள் -
7 Academy Awards (சிறந்த படம் , சிறந்த இயக்குனர், இசை, காமெரா, ஆர்ட் டைரக்ஷன் உள்ளிட்ட)
3 Golden Globe
7  BAFTA  
இன்னும் ஏராளமான விருதுகள்!

டிஸ்கி : பதிவுலகிற்கு வந்த நாளிலிருந்தே எழுதியே தீரவேண்டுமென நினைத்த பதிவு! முடியுமா, எழுதலாமா, வேண்டாமா என யோசித்து இறுதியில்....
பதிவு நீண்டுவிட்டதால் சுவாரஷ்யம் குறைந்திருக்கலாம்...நான் சொல்ல நினைத்ததை சரியாகச் சொல்ல முடியாவிட்டாலும் எழுதியதில் ஏதோ நிம்மதி!

21 comments:

  1. இது போன்றவை, காவியங்கள் எனலாம்! பல இறுக்கமான காட்சிகள் இருந்தபோதும், நான் விரும்பிப் பார்த்த படம்.
    அத்துடன் பல யூதர்கள் ஏன் ? ஜேர்மனியினரை வெறுக்கிறார்கள் என்பதை இதன் மூலம் மேலும் அறியக் கூடியதாக இருந்தது.
    இதை இந்தோனேசியாவில் யூத ஆதரவுப் படம் என தடை செய்தார்கள் ; தாம் இஸ்லாமிய நாடென்பதால்!!!!

    ReplyDelete
  2. வணக்கம் சகோ,

    ஒரு வரலாற்றுச் சம்பவத்தினை கண் முன்னே கொண்டு வரும் ஒஸ்கார் விருது வாங்கிய திரைப்படத்தினைப் பற்றிய விமர்சனத்தினை விளக்க குறிப்புக்களோடு இணைத்து தந்திருக்கிறீங்க.

    கண்டிப்பாக டைம் இருக்கும் போது பார்த்திட வேண்டியது தான்!

    நன்றி சகோ!

    ReplyDelete
  3. மாப்ள நல்ல காரியம் செய்ஞ்சே...விமர்சனம் அருமைய்யா....அதுவும் அந்த காரை வித்து இன்னும் பத்து பேரை காப்பாற்றி இருக்கலாமேன்னு சொல்லி கதறும் காட்சியில் என்னையும் அறியாமல் அழுதிருக்கிறேன்!..பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  4. என் மனதை மிகவும் கலங்கடித்த ஒரு படம்.

    ReplyDelete
  5. அற்புதமான படம்.. ஒருவரை சுடுவதற்க்காக கூட்டி வந்து சுட போகும் போது துப்பாக்கி சிக்கி கொள்ளுமே .. அப்பாடி உறைஞ்சு போக வைக்கும் காட்சி..படத்த pause பண்ணிட்டு 5 நிமிஷம் மாடில நின்னுட்டு வந்து தான் மறுபடி பாத்தேன்..

    ReplyDelete
  6. நான் பார்க்கவேண்டிய லிஸ்ட்டில் ரொம்ப நாளாய் இருக்கும் படம்..

    ReplyDelete
  7. மிகத் தெளிவாக படத்தைப் பற்றிச் சொல்லியிருக்கீங்க ஜீ..நன்றி.

    ReplyDelete
  8. முதன்முறையாக சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கார்//

    உங்கள் விமர்சனப்படி பார்த்தால் கண்டிப்பாக நேரம் கிடைக்கும் பொது பார்க்க வேண்டும் என்ற ஆவல் எழுகிறது.

    ReplyDelete
  9. எப்படிப்பட்ட மனதையும் கலங்க வைக்கும் திரைப்படம்

    ReplyDelete
  10. அருமையான விமர்சனம் சார்..ஒரு மாஸ்டர்பீஸ் என்று சொல்லலாம்.மிக்க நன்றி.

    ReplyDelete
  11. என் நண்பன் பார்க்க சொல்லி கொடுத்த படம். சோம்பலால் பார்க்க வில்லை. டெலீட்டும் செய்து விட்டேன். உங்கள் விமர்சனம் படித்தவுடன் மிஸ் பண்ண பீல் :(

    ReplyDelete
  12. கண்ணீர் காவியமா இருக்கே நெஞ்சம் பதருதய்யா...!!!

    ReplyDelete
  13. பழைய படமாயினும் நினைவில் நிற்கும் படம்.

    ReplyDelete
  14. ஜீ...படம் பார்க்க அதன் இணைப்புகள் கிடைத்தாலும் தந்துவிடுங்களேன்.கண்டிப்பாய் பார்க்கவேண்டிய படம்.நன்றி !

    ReplyDelete
  15. பல வருடத்திற்கு முன்பு பார்த்தேன் அருமையான படம்

    ReplyDelete
  16. //ஹேமா said...
    ஜீ...படம் பார்க்க அதன் இணைப்புகள் கிடைத்தாலும் தந்துவிடுங்களேன்//

    இந்த லிங்கில் டவுன்லோட் பண்ணலாம்!
    http://isohunt.com/torrent_details/53146046/Schindler%27s+List?tab=summary

    ஹாலிவுட் படம் என்பதால் அலைய வேண்டியதில்லை..எல்லா இடங்களிலும் DVD கிடைக்கும்!

    ReplyDelete
  17. நீண்ட நாட்களாக பார்க்க வேண்டுமென்று நினைக்கும் படங்களில் ஒன்று...

    இவ்வளவு நீளமாக கதை சொல்லாமல் இருந்திருக்கலாம்...

    ReplyDelete
  18. மிகத்தெளிவான விமரிசனம்.

    ReplyDelete
  19. வரலாற்றை வெளிபடுத்திய சிறந்த திரைப்படம்.அருமையான விமர்சனம்.

    ReplyDelete
  20. இந்தப்படம் பொறுமையா பார்க்க வேண்டிய படம்தான்

    ReplyDelete