Thursday, January 6, 2011

முதல்வன்!


நம் ஒவ்வொருவருக்கும் அடிமனதில் சில ஆசைகள், தேவைகள், ஏக்கங்கள் இனம்புரியாத என்னென்னவோ இருக்கும்! அது என்ன என்று எங்களுக்கே தெரியாமல் இருக்கும். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அவற்றை கண்டடையும்போது, அடடா! இதைத்தான் எதிர்பார்த்தோமா?...எனத் தோன்றும்! 

அப்படித்தான் எனக்கும் தோன்றியது....ஏதோ ஒன்று வித்தியாசமாக, இதுவரை உணராத இனம்புரியாத உணர்வு....முதன்முதலாய் 'சின்ன சின்ன ஆசை' பாடல் கேட்டபோது! 

மின்சாரமில்லாத அந்தக் காலத்தில் வீட்டில் இலங்கை வானொலியில், தேநீர்க்கடைகளிலும், அயலவர், உறவினர் திருமண வீடுகளிலும் சக்கை போடு போட்டன ரோஜா பாடல்கள்! பாடல்வரிகளை நான் எப்போதுமே கவனித்ததில்லை. இசை மட்டுமே (இப்போதும்)

அதிலும் எனக்கு 'புது வெள்ளை மழை' அப்படிப் பிடித்துக்கொண்டது! குறிப்பாக அந்தப்பாடலின் பின்னணி இசையே பனிச்சாரலடிப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தியது! சில வருடங்களின் பின்னரே நான் பாடல்காட்சியைப் பார்த்தேன்! (அதே போல் James Horner இன் Titanic theme பாடலில் அலையடிப்பதை உணரலாம்)

ஒரு கட்டத்தில் வெறித்தனமான ரஹ்மான் ரசிகனாக...எல்லாப் பாதையும் ரோமிற்குச் செல்வதைப் போல எந்தப் பேச்சினிடையேயும் ரஹ்மான் வந்துவிட, அப்போது நான் வவுனியாவிலிருந்து யாழ் வந்து பள்ளியில் இணைந்திருந்ததால் 'வவுனியா ரஹ்மான்' என்று வகுப்பில் அழைப்பார்கள்! 

அநேகமாக ரஹ்மானின் 2000 இற்கு முன் வெளியான அனைத்துப் பாடல்களும் மிகவும் பிடித்திருந்தது! பிறகு வந்தது பிடிக்கவில்லை என்று அர்த்தமில்லை முன்பு வந்தது அதிகம் பிடித்தது...இன்றுவரை! அதிலும் ரோஜா, கிழக்குச்சீமையிலே, பம்பாய், இந்தியன்,  ஜீன்ஸ், முதல்வன், தேசம் படங்களின் பின்னணி இசை, டைட்டில் இசை என்றும் புதிதாகவே! 

பிடித்த பாடல்களைக் கேட்டுக்கொண்டே வேறு வேலைகளைச் செய்தல் என்பது என்னளவில் சாத்தியமாவதில்லை! இசையைக் கவனிப்பதும் கரைந்து போவதுமே என்னியல்பு! அதிக சத்தம் பிடிக்காது. ஓசைகள் அடங்கிய ஆழ்ந்த இரவுகளில் எனது அறையை மட்டுமே நிரப்பும் 5.1 surround ஒலியில்...நிசப்தமான பின்னிரவில் 'புத்தம் புது பூமி வேண்டும்' கேட்பது மிகவும் பிடிக்கும். இது யாழ்ப்பாணத்தில் இருந்தவரை மட்டுமே! நாடோடியாய் மாறியபின் mp3 player இல் ஒடுங்கிக்கொண்டது என் இசை.

என் தனிமை, சந்தோஷம், சோகம், உற்சாகம் எல்லாவற்றிலும் என்னோடு பயணம் செய்யும் என் இன்னொரு நிழலாக இசை...அதுவும் குறிப்பாக ரஹ்மானின் பின்னணி (BGM ) இசை! 

என் உற்சாகமான பொழுதுகளிலும் , காலையில், இளந்தேன்றல் வீச, நடந்து செல்லும்போதும் இயல்பாகவே எனக்குள் 'முதல்வன் தீம் மியூசிக்' ஒலிக்க ஆரம்பித்து விடுகிறது எனக்குமட்டும் கேட்க! 

இப்போ அதை நீங்களும் கொஞ்சம்...?



எளிமை, தன்னடக்கம், இறைநம்பிக்கை இவற்றின் வடிவமான இசைப்புயலின் 45  ஆவது பிறந்தநாளில் அடுத்த Academy Award ஐ பெற்றுக்கொள்ள வாழ்த்துவோம்!   

எனக்குப் பிடித்த ஒரு Theme Music, Slumdog Millionaire படத்தில் இடம்பெற்றது!
    


இன்னும் ஏராளம் இருக்கு சொல்ல....எழுத முடியவில்லை! அதான் ஒரு சின்ன பதிவாக!          

Wednesday, January 5, 2011

காவலன்?

சத்தம் கேட்டு விழித்துக் கொண்டான் அலெக்ஸ்.

ஏதோ பிரச்சினை பக்கத்தில். வாய்த்தகறாரில் இருந்தது. இனி பேச்சு முற்றி, ரத்தக் காயம் பார்க்காமல் ஓய மாட்டார்கள்!

ஏதோ ஏரியா சண்டை. அலெக்ஸ் அவை எவற்றிலும் பங்கு கொள்வதில்லை. 'எதற்காக வீண் சண்டை? எதுவுமே இங்கு நிரந்தரமில்லை. வர வர சாமியார் மாதிரி ஆகிறோமா? அப்போ சாமியாரெல்லாம்?'

தூக்கம் கலைந்துவிட்டது. சரியான குளிர். நீண்ட கொட்டாவியுடன் உடம்பை இறுக்கி சோம்பல் முறித்து... வெளியே வர...


எதிரிலுள்ள டீக்கடை வாசலில் வழக்கம்போல 'பெருசு' உட்கார்ந்து பழைய பேப்பரை பிரிச்சு மேஞ்சிட்டிருந்தது. 'அப்பிடி என்னத்தத் தான் ஒவ்வொருநாளும்...?'

'முகத்தில் எப்போதும் ஒரு சிரிப்பு! வாழ்கையை நிறைவாய் வாழ்ந்து முடித்த திருப்தியோ? சிரிப்புன்னா சும்மா சிரிப்பில்லை. கடைவாய்ப்பல் தெரியிற அளவு!'

மெதுவாக நடந்தான்.

எதற்கோ(?!) அவசரமா போய்க்கொண்டிருந்தான் அம்பு (அப்படித்தான் சொல்வார்கள்) எப்போதுமே ஒரு அவசரம். அவனைப் பார்க்கும்போதெல்லாம் அலெக்ஸ்சுக்கு ' நாய்க்கு வேலையுமில்லை, நிக்க நேரமுமில்லை' தான் ஞாபகத்துக்கு வரும்!

'நேற்று 'ஒற்றைக்கண்ண'னைப் பிடித்துவிட்டார்களாம். நாளைக்கு எங்களுக்கும் இதேநிலை வரலாம் என்பதால் அதிர்ச்சியாக இருந்தது'.

அனாலும் மனதின் ஒரு மூலையில் ஒரு சின்ன சந்தோஷமும்...அவன் பெரிய ரௌடி அலெக்ஸ்சுடன் ஒரு முறுகல் நிலை வேறு....காரணம்...அவள்!

அவள் நினைப்பே ஒரு தென்றலாய்...இதுவரை அலெக்ஸ் யாரையும் ஏறெடுத்தும் பார்த்ததில்லை முதன்முதலாய்...அவள் பெயர் தெரியாது ஆனால் பெரிய இடம்!

கொஞ்சம் அலட்சியம்...கொஞ்சம் ஆச்சரியம் கலந்து, தலையைச் சிறிது சரித்து, அவள் பார்க்கும் பார்வை...அலெக்ஸ் கண்களை மூடித்திறந்து லேசாகத் தலையை உதறினான் ஒருமுறை!

 இதோ அவள் வீடு! பெரிய மாடிவீடு, பார்வையால் தேட...பல்கனியில் அவள்!

'ஓ! என்னைப் பார்க்கிறாள்'?! அலெக்ஸ் பரபரப்பானான். நிலை கொள்ளாமல்...

'இல்லையே என்னைத் தாண்டி..?' அனிச்சையாய்த் திரும்ப..


பார்வை நிலைகுத்த...உடல் விறைப்பாக..மூளைஎச்சரிக்க 'நாய்பிடிகாரன்கள்!' நாலுகால் பாய்ச்சலில் ஓடத் தொடங்கினான் அலெக்ஸ்!
  

Sunday, January 2, 2011

A Walk to Remember


சில சமயங்களில், எதிர்பார்த்தேயிராத, எந்தப் பொது இயல்புகளும் இல்லாத இருவர்   சாதாரணமாகப் பழகிக் கொண்டிருக்கும்போதே சட்டென்று ஒருநொடியில் நிகழ்ந்துவிடும் ஆச்சர்யம்..காதல்!......அப்படீன்னு அனுபவப்பட்டவங்க சொல்றாங்க!

அப்படித்தான் இந்தப் படத்திலும்.

எதற்கும் கவலைப்படாத, அலட்டிக் கொள்ளாத மற்றவர் மனநிலை பற்றிக் கவலைப்படாத ஈகோ உள்ள இளைஞன் கார்ட்டர்! பாதிரியாரான தந்தையின் சொல் தட்டாத, கடவுள், தன் சொந்த நம்பிக்கைகளுன் வாழும் அமைதியான அழகான நல்ல பெண் ஜேமி!


ஆரம்பத்தில் எந்த வித ஈடுபாடுமின்றி பழகிக்கொண்டிருக்கும் கார்ட்டர் படிப்படியாக ஜேமியிடம் ஈர்க்கப்படுகிறான். அதுவும் உயர்பள்ளியில் நிகழும் ஒரு நாடகத்தில் இருவரும் இணைந்து நடிக்கையில், ஜேமி பாடும்போது முற்றுமுழுதாக அவள் வசம்...!

ஒரு நல்ல காதல் எப்படி ஒருவனது வாழ்க்கையில், நடத்தையில், உறவுமுறை குறித்த புரிதல்களில்களில்  மாற்றத்தை ஏற்படுத்துகிறது எனக்கூறுகிறது படம்.


ஜேமிக்கு Leukemia என்றதும் கார்ட்டரை விட எனக்கு அதிர்ச்சியாகிடுச்சு! அந்தக் காட்சியில் இருவரதும் நடிப்பு...என்ன சொல்றது!




ஜேமியை மகிழ்விக்க தனக்கு சம்பந்தமில்லாத விஷயங்களை எல்லாம் (அம்மாவிடம் டான்ஸ் கற்றுக் கொள்வது, இரவு பகலாக் ஒரு பெரிய தொலைநோக்கியை வடிவமைப்பது- ஜேமியின் ஆசை) மகிழ்ச்சியுடன் செய்கிறான்.

குறிப்பாக தனக்குப் பிடிக்காத, பேச விரும்பாத ஆனால் பாசத்தைக்காட்டும் தந்தையிடம் சென்று உதவி கேட்பது, பின்னர் அவரிடம் சென்று நன்றி சொல்லும் காட்சி.


என்னதான் காதல், சென்டிமென்ட் என்றாலும் அலட்டலில்லாமல் அதைச் சொன்னவிதம் ...ஹாலிவுட் காரங்களை Copy அடிப்பவங்க இதைக் கவனிப்பதே இல்லையா?



இதுவே தமிழ்ல நாயகனுக்கோ, நாயகிக்கோ பிளட் கான்சர் வந்தா என்னென்ன கொடுமைய எல்லாம் பார்க்க நேரிடும்! 
தன்னோட காதலி தன்னை வெறுக்கணும்னு இன்னொரு பெண்ணோட சேர்ந்து நாடகம் போட்டு, வாழ்க்கைத் தத்துவப் பாடல் பாடி, உள்ள ஆபாச, ஆபத்துக் கூத்துகளையெல்லாம் அரங்கேற்றி, சாகும்போது கூட ரத்தவாந்தி எடுத்துக் கொண்டே பாட்டுப்பாடி, அவன் இம்சை தாங்காம படம் பார்க்கிறவங்க 'எப்படா இவன் சாவான்'னு யோசிக்க வைக்க மாட்டாங்க?!
படம் பார்க்கும்போது சம்பந்தமே இல்லாமல் ஒரு தமிழ்க் 'காவியம்' நினைவுக்கு வந்து தொலைத்தது!

மனதை வருடும் பின்னணி இசை- Mervyn Warren

பிரபல Pop Singer, நடிகை Mandy Moore ஜேமியாக!

A walk to remember என்ற நாவலை அடிப்படியாகக் கொண்டு 2002 இல் வெளிவந்த படம் இது.


படத்தில் வரும் மேற்கோள்களில்? (Quotes) ஒன்று இது,

"Love is always patient and kind. It is never jealous. Love is never boastful or conceited. It is never rude or selfish. It does not take offense and is not resentful"


படம் பார்த்து, சில வருடங்களாக, எனக்குப் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று! இதைக் கொஞ்சம் கேட்டு...பார்த்து....இதுவே கதை சொல்ற மாதிரி இருக்கு!