நீண்டநாட்களாக கணனியில் சேமித்து வைத்திருந்து, ஒருவழியாகப் பார்த்து, மனதில் தோன்றியதை எழுத வேண்டுமென்று நீண்ட நாட்களாக நினைத்து, நீண்ட நாட்களாக எழுத முயற்சித்து, வேலைப்பளு, என் சோம்பேறித்தனம் தாண்டி, ஒருவழியாக! 'ஓநாயும் ஆட்டுக் குட்டியும்' - வழமை போலவே தமிழின் நல்லபடங்களைப் பார்ப்பதற்கான தயக்கம் இன்னும் போகவில்லை. மிக எளிமையான த்ரில்லர் என்டர்டெயினர்! எல்லோரையும் கவரக் கூடிய இந்தப்படம் குறித்த குறியீடுகள் பற்றிய பேச்சு கொஞ்சம் மிரட்டியிருந்தது. கூடவே எதிர்கருத்துக்கள்.
மிஷ்கின் படத்தின் ஆரம்பக் காட்சியைப் பார்ப்பதே மிகுந்த எதிர்ப்பார்ப்பைக் கொடுப்பது. Top angle இல் கமெரா நிலையாக இருக்க, யாருமில்லாத வீதி, ஒற்றை மின் கம்பம், சில நொடிகளில் வலது பக்கமிருந்து மையப் பகுதிக்கு வரும் மனிதன் என் அழகான ஆரம்பக் காட்சி! படம் தனக்குள் உள்ளீர்த்துக் கொள்வதாகவோ, கதாபாத்திரங்களுடன் நெருக்கமாக ஒன்றவோ வைக்கவில்லை. சற்றுத் தள்ளி நின்றே வேடிக்கை பார்க்க வைக்கிறது. அவ்வப்போது மிக நெருங்க வைக்கிறது. போலவே இணைந்து கொள்ளவும். இது இயக்குனர் திட்டமிட்டே செய்ததுபோலத் தோன்றுகிறது. பலருக்கு இது ஒரு குறையாகவும் தோன்றலாம். ஆனால் ஒரு நீதிக்கதை போலவே சொல்லப்பட்டிருப்பதால் சரியாகவே தோன்றுகிறது. ஈசாப் நீதிக்கதைகள், பஞ்ச தந்திரக் கதைகள் படித்தபோது நாங்கள் கதாபாத்திரங்களுககாக யாருக்காகவும் வருந்தியதில்லை என்பது ஞாபகம் வருகிறது.
ஆரம்பத்தில் உதவி செய்யப்போய் ஸ்ரீ சிக்கலில் மாட்டிக் கொள்ளும்போது எந்த வித அனுதாபமும் வரவில்லை. யாரோ ஒருவனுக்கு என்னமோ பிரச்சினை என்கிற ரீதியில் வேடிக்கை பார்க்கும் மனநிலையே இருந்தது. அந்தக் கதாபாத்திரத்துடன் இணைந்து பயணிக்கவோ, காட்சிகளுடன் ஒன்றவோ முடியவில்லை. அதுபோலவே, இறுதியில் வூல்ஃப் இறந்துபோகும்போது எந்த சோகமும் வருவதில்லை. ஏனெனில் அவன் இருக்கவேண்டும் என்பதற்கான எந்த அவசியமும் இல்லை. அந்தச் சிறுமிக்கு பாதுகாப்புத் தேவை. ஸ்ரீ கிடைத்துவிட்டான் இனி வூல்ஃப் தேவையில்லை என்பதுபோலவே இருக்கிறது.
ஒருவகையில் போலீஸ் கையில் சிக்குவதை விட வூல்ஃப் சுதந்திரமாக இறந்து போவதைத்தான் நாம் விரும்புகிறோம். அதுபோல அந்த வில்லனைக் கொல்லாமல் விடுவதும் பிடித்திருந்தது. அந்தக் கதா பாத்திரத்துக்கு மரணத்தை விட அதன் லட்சியம் ஈடேறாமல் உயிருடன் விட்டுவைப்பதே பெரிய தண்டனை! சமயங்களில் உயிருடன் இருத்தலே மரணத்தை விடக் கொடுமையான தண்டனை!
"அந்த அக்காவை நான்தான் கொன்னுட்டேன்" - என்று சொல்லி ஸ்ரீ அழும்போது மிஷ்கினின் மாறும் முகபாவங்கள். சில நொடிப்பொழுதுகள் வரும் அந்தக்காட்சியொன்று போதும். மிஷ்கினைத் தவிர யாரையும் அந்த இடத்தில் பொருத்திப் பார்க்க முடியவில்லை. மிஷ்கின் கல்லறையில் அமர்ந்து 'ஓநாயும் ஆட்டுக் குட்டியும்' கதை சொல்லும் காட்சியை விடவும் அதிகம் என்னைக் கவர்ந்தது இந்தக் காட்சிதான். இறுதிக் காட்சியில் கண்தெரியாத அந்தச் சிறுமி உயிர் பிழைக்கும் பிரயத்தனத்துடன் தட்டுத் தடுமாறி சுவரோரமாக வேகமாக நகர்ந்து கொண்டே வந்து சுவர்த்தடுப்பில், ஏதோ ஒரு பாதுகாப்புக் கிடைத்துவிட்ட நம்பிக்கையில் ஒடுங்கி நிற்கும் காட்சி அதிர வைத்தது. பார்த்துக் கொண்டிருக்கும் நாங்களே ஒரு கணம் எதைப் பற்றியும் யோசிக்காமல் உயிரைப் பணயம் வைத்து அந்தச் சிறுமியைக் காப்பாற்ற முனையும் உத்வேகத்தைக் கொடுத்தது.
ஸ்ரீ துப்பாக்கியைக் காட்டி மிரட்டி 'ஒன்று' சொல்லும்போது மிஷ்கின் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் தான் பிடித்து வைத்திருக்கும் பெண்ணின் கழுத்தில் துப்பாக்கியை அழுத்தி 'ரெண்டு' சொல்லும் காட்சி, மிக அசால்ட்டாக வில்லன்களை சுட்டு விட்டு கொடுக்கும் சின்ன சின்ன ரியாக்சன்கள் உள்ளிட்ட சில காட்சிகள் ஒரு பெரிய ஹீரோவின் வணிக சினிமாவின் மாஸ் காட்சிகள். வேகமாக அலட்டிக் கொள்ளாமல் இருப்பதால் கண்டுகொள்ளப்படாமல் கடந்து விட்டிருக்கக் கூடும். துரதிருஷ்டவசமாக மாஸ் ஹீரோக்களின் மாஸ் சீன்கள் ஸ்லோமோஷனில், பில்டப் இசை (அல்லது இரைச்சலுடன்) காட்டப்பட வேண்டியது என்கிற நம்பிக்கை தமிழ்சினிமாவில் வளர்க்கப்பட்டு விட்டது.சேசிங் காட்சிகளுக்கு இரைச்சலாகத்தான் இசை வழங்கவேண்டும் என்கிற விதி மாறவில்லை எனத்தெரிகிறது. பின்னணி இசை எனும்போது எனக்கு இன்னமும் நிசப்தத்தில் மெதுவாக கமெரா நகர, மிக மெல்லியதாக ஆரம்பித்து மனதை அதிர வைக்கும் அந்த ஒற்றை வயலினைத் தாண்டி வேறெதுவும் தோன்றவில்லை (யுத்தம் செய்!). அந்தளவுக்கு கவரவில்லை.
படத்தில் தர்க்கப் பிழைகள் சொல்லலாம். ஆனாலும் 'தங்க மீன்கள்' பார்த்தபோது எழுதியது, 'இதுவே ஓர் இரானியப் படமாகவோ, இத்தாலியப் படமாகவோ இருந்தால் எந்த உறுத்தலுமில்லாமல் கொண்டாடியிருப்பேனோ என்று எனது நேர்மையையும் கேள்வி கேட்கத் தோன்றுகிறது'. இது இயக்குனர் சிருஷ்டித்த தனி உலகம். குழந்தைகளுக்கு கதை சொல்வதுபோல புனையப்பட்ட ஒரு காடு. நம் தர்க்கங்களை, கெடுபிடிகளைத் தவிர்த்துவிட்டுக் குழந்தைகளாகவே நுழைந்து பார்த்தால் நல்லதோர் அனுபவம். அதை அப்படியே உணர்கிறேன்.
உருவகங்கள், குறியீடுகள் மூலம் உணர்த்தப்படும்,கவிதை போன்று எடுக்கப்படும், இயக்குனர் சிருஷ்டித்த தனித்த உலகத்தில் நிகழும் கதைகளைக் கொண்ட உலக சினிமாக்களில் தர்க்கப் பிழைகள் கண்டுபிடிப்பதில் நாம் ஆர்வம் காட்டுவதில்லை. ஆனாலும் தமிழில் வரும்போது மட்டும் விடுவதில்லை. அகிரா குரசாவாவின் 'ட்ரீம்ஸ்' படத்தை எட்டு வருடங்களுக்கு முன்னர் பார்த்தேன். எதுவும் புரியவில்லை. சரியாகக் கவனிக்கவுமில்லை. இப்போது பார்த்தாலும் எனக்குப் புரியும் என்று நம்பவில்லை. ஒரு கவிதை போல, உருவகங்களால் புனையப்படும் படங்களில் காட்டப்படுவது இயக்குனர் சிருஷ்டிக்கும் தனி உலகம். அதில் நம் தர்க்கங்களோடு உள் நுழைந்து கேள்வி கேட்பது சரியாகுமா என்பது புரியவில்லை.
இன்றும் மிஷ்கினின் மாஸ்டர் பீஸ் என்று நான் நம்புவது அஞ்சாதே படம்தான். போலீஸ் ட்ரெஸ்ஸை மாட்டியதுமே கடமையுணர்ச்சி, வீரம் வந்து டாய் என்று கத்திக் கொண்டே வில்லன்களை துவம்சம் செய்யப்புறப்படும் ஆறுச்சாமிகள், துரைசிங்கங்களை மட்டுமே பார்த்துப் பழகிய எங்களுக்கு முதன்முறையாக போலீஸ் வாழ்க்கையின் நங்கள் பார்க்காத இன்னொரு பகுதியைச் சொன்னதும்கூட ஒரு காரணம். தமிழில் கொஞ்சமேனும் வித்தியாசமான முயற்சிக்கப்படும் படங்கள் ஒநாய்க்கூட்டத்தில் சிக்கிய தனித்த ஆட்டுக் குட்டியின் நிலையிலேயே வெளிவருகின்றன. இயக்குனர்களும் அப்படியே. அவர்களில் முக்கியமானவர் மிஷ்கின்.
மிஷ்கின் அதிகம் பேசுகிறார் என்கிற குற்றச்சாட்டு பரவலாக இருக்கிறது. சிலவேளைகளில் உண்மைதான். அதனாலென்ன? பேசட்டுமே! வெறும் அபத்தக் குப்பையாக ஒரு படத்தை எடுத்துவிட்டு, ஒவ்வொரு நாளும் விடாமல் தொலைக்காட்சிகளில் வந்து கதறக் கதற கதைவிடும் இயக்குநர்களைப் பார்க்கும்போது தோன்றுவது, 'மிஷ்கின் பேசுகிறாரா என்ன?'
படத்தின் பிரச்சினையே, அந்த ஒட்டாத தன்மை தான்...டெக்னிகலாக சிறந்த படம். ஆனால் கதையில் பெரிய லாஜிக் ஓட்டை.
ReplyDeleteஇந்தா எழுதப்போறேன்.. இந்தா எழுதப்போறேன்.. என்று சொல்லிட்டிருந்தீங்க.. எதிர்பார்த்திட்டு இருந்தேன்.. இப்போது சந்தோசம்.. இந்த படம் பார்க்கும்போது, ஏற்பட்ட அனுபவத்தை அழகாக பதிந்திருக்கிறீர்கள்..
ReplyDeleteஇந்த படத்தில் Neo noir வகையாக காட்சியமைப்புகள் என்னை மிகவும் கவர்ந்திருந்தன. அந்த ஓநாய்-கரடி கதை புதுமையான ஐடியா. அதில் கண்ணிமைக்காமல் நடிக்கும் மிஷ்கின் அழகாக நடித்திருக்கிறார்.
//
இன்றும் மிஷ்கினின் மாஸ்டர் பீஸ் என்று நான் நம்புவது அஞ்சாதே படம்தான்.
//
எனக்கும் அவ்வாறே..
"இன்றும் மிஷ்கினின் மாஸ்டர் பீஸ் என்று நான் நம்புவது அஞ்சாதே படம்தான்."
ReplyDelete-- Ditto
//மிஷ்கின் அதிகம் பேசுகிறார் என்கிற குற்றச்சாட்டு பரவலாக இருக்கிறது.//
ReplyDeleteஇது தவறு. அவர் மிக மிக மிக மிக மிக அதிகமாக பேசுகிறார். அவர் நவயுக TR . ஸப்பா தாங்க முடியாது.
அருமையா எழுதியிருக்கீங்க ஜீ...
ReplyDeleteஅஞ்சாதேக்கு அப்புறம் மிஷ்கின் ஒரு நல்ல படத்தைக் கொடுக்க முடியவில்லை என்பதே உண்மை.
அவரின் பேச்சு ரொம்ப அதிகம்தான்... பேச்சைக் குறைத்து காரியத்தில் கவனம் செய்தால் நல்ல படமாகக் கொடுக்க முடியும்...
நன்று!நல்ல சாட்டை.மிஸ்கின் பேசட்டுமே?யாருக்கும் தொல்லை இல்லையே?
ReplyDelete