Saturday, June 22, 2013

தலைவா, சினிமாப்பெண்கள், அலப்பறை - பஸ்ல உட்கார்ந்து யோசிச்சது!



'தலைவா'க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். சமீப காலமாக (நண்பனுக்குப் பின்) விஜய் படங்களைப் பார்க்கலாம் என்று ஒரு முடிவுக்கு வந்திருந்தேன். தலைவா- இயக்குனர் விஜய்தான் சற்று யோசிக்க வைக்கிறார்.

* * * * * * * *

'உணமையான அழகு கிராமங்களில்தான் வாழ்கிறது போலும்' - பஸ்ஸில் பிலியந்தலைல இருந்து கெஸ்பாவ போகும்போது தோன்றியது. கொழும்புக்கு அருகே ஒரு அட்டகாசமான கிராமப்புறம். வயல் வெளிகள், குளம் எல்லாவற்றையும் பார்க்கும்போது தோன்றியது - மற்றபடி பஸ்ஸில் யாரையும் பார்த்து அல்ல!

* * * * * * * *

தமிழ்சினிமாவும் பெண்களும்   
போன பதிவில் சிங்கம் பற்றிச் சொல்லிவிட்டு அனுஷ்காவை மறந்துபோனேன். தமிழ் சினிமாவில் கதாநாயகிகள் லூசுப் பெண்களாக இருப்பது தொன்று தொட்ட வழக்கம்தான். தற்போது பெரிய ஹீரோக்கள்  படத்தில் தவிர்க்க முடியாமல் அது ஒன்றுதான் வழி. இருந்தாலும் அனுஷ்கா மாதிரி ஒருவர் நடிக்கும்போது சகிக்கவில்லை. ஒரு தமன்னா லூசுப்பொண்ணா நடிச்சா ஒக்கே. தோற்றத்துக்கு அது செட்டாகும். அனுஷ்கா அப்படி நடிப்பதைப் பார்க்கும்போது, 'எருமை மாதிரி வளர்ந்திருக்கே கொஞ்சம்கூட அறிவே வளரலைப் பாரு' என்று மட்டுமே தோன்றியது.

தமிழ்சினிமாவின் இயல்புக்கு மாறான பெண்கள்!

துறுதுறுப்பான பெண் (அதாவது படத்திலயே லூசுன்னு சொல்லுவாங்க) - ரேவதி, ராதிகா மற்றும் பலர்.
புர்ச்சிப் பெண் - அந்தக் காலத்தில் சுஜாதா பின்னர் அறிவுஜீவி சுகாசினி!
ஆம்பிளைப் பெண்- விஜயசாந்தி
ராவான ரவுடிப் பொண்ணு - பானுபிரியா, ராதிகா
அறிவு வளராத ஓவரா வளர்ந்த பொண்ணுங்க - மீனா, ரம்பா மற்றும் பலர்.
'மெண்டலி டிப்ரெஷன்' காரெக்டர் (படபடப்பா, பதற்றமா இருப்பாங்க) - சில படங்களில் ரேவதி, எல்லா படங்களிலும் கீதா!
அப்புறம் பொண்ணுங்க மா....திரி - சமீரா ரெட்டி!

இயல்பான பொண்ணுங்க அப்பப்ப வரலாம். மற்றப்படி லூசுப் பொண்ணுங்கதான். இதைப்பார்த்து சில பொண்ணுங்க ஹீரோயின் ஆவதற்கு 'ட்ரை' பண்ணுவதுதான் உச்சகட்ட கொடுமை! அதாவது தாங்களும் லூசுப்பொண்ணு என்று ஃபேஸ்புக்கில் அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். அதற்கென்றே இருக்கிறார் ஜெனிலியா. சமகாலத்தில் லூசுப்பெண்களைப் பிரதிநிதித்துவப்படுத்த ஜெனிலியாவைத் தவிர யாரும் இல்லை என்பதே யதார்த்தம்.

* * * * * * * *

அலப்பறை!
நண்பன் ஒருத்தன் வெளிநாட்டிலருந்து வந்திருந்தான்.

அப்பிடியே வழக்கம்போல ரோட்ல நின்றுகொண்டிருந்தோம். திடீர்னு சொன்னான்.
"கொழும்பில கார் கூடிப்போச்சு"
"இங்க எப்பவுமே அப்பிடித்தானே ..புதுசா சொல்லுற"
"இல்லடா நான் நிக்கேக்க இப்பிடி இல்ல.என்ன டிராஃபிக்"
ஒரு முறை ஏற இறங்கப் பார்த்தேன். பயபுள்ளைக்கு என்னாச்சு? நல்லாத்தானே இருந்தான்?
"அங்க பார் பென்ஸ் .. கிறைஸ்லர்..அந்தா அங்க பி. எம். டபிள்யூ!" ஆச்சரியமா சொன்னான்.
"இதில என்ன புதுசா இருக்கு.. இங்கதான் பென்ஸ், பி.எம்.டபிள்யூ எல்லாம் குப்பையா (நிறைய என பொருள்படும்) இருக்கே!"
"நான் இங்க இருக்கேக்க பார்த்ததே இல்ல?"
"டேய் நீ எங்கடா காரைப் பார்த்தே? நாங்கள் காரைப்பற்றிக் கதைச்சாலும் என்னமோ லூசுப்பயலுகள் என்கிறமாதிரியே பார்ப்பே!"
"--"
"மச்சி மனச்சாட்சியோட பேசு.. இங்க இருக்கும்போது, உனக்கு பென்ஸ், BMW லோகோ எல்லாம் தெரியுமா? உனக்கு அது தெரியுறதுக்கே வெளிநாடு போக வேண்டியிருந்திருக்கு"

உச்சக்கட்டக் கடுப்பாகியிருந்தேன்.

பொதுவாக வெளிநாட்டிலிருந்து வரும் உறவுகள் கொழும்பில் பார்த்து ஆச்சரியப்படும் ஒரு விஷயம் இந்தக் கார்கள். குறிப்பாக இந்தியாவிலிருந்து வரும் நண்பர்கள். புதிதாக வரும் எந்தக் கார்களையும் உடனேயே இறக்குமதி செய்து விடுவார்கள். இங்கே வரி 400% என்பது குறிப்பிடத்தக்கது. 2010 இல் ஒரு கொரொல்லாவின் உண்மையான விலை இலங்கை மதிப்பில் 16 லட்சம். ஆனால் இலங்கையில் 80 லட்சம்.   (ஒரு இந்திய ரூபாய் = 2.17 இலங்கை ரூபாயாம் இப்போது - புத்தகங்களெல்லாம் 4 மடங்கு விலை) அப்போது பென்ஸ் (2010 மொடல்) 50 லட்சம் போட்டிருந்தார்கள். அப்படியிருந்தும் வாங்கிக் குவிக்கிறார்கள். கடந்த வருடம் BMW - X1 வந்தபோது, வீதியில் இறங்கும்போதெல்லாம் புதிது புதிதாக X1 கண்ணில் படும்.

உறவினர் ஒருவர் வெளிநாட்டில் கார் வாங்கியதை ஒருவர் பெருமையாகச் சொன்னார். ஒரு ஐரோப்பிய நாட்டில் கார் வாங்குவது பெரிய விஷயமா என்ன? உண்மையில் இங்கே இருந்துகொண்டு ஒரு கார் வாங்குவதுதான் பெரிய விஷயம். கனடா சென்ற என் நண்பனொருவன் ஒரே மாதச் சம்பளத்தில் ஒரு செகண்ட் ஹாண்ட் கொரொல்லா வாங்கினான். இலங்கை மதிப்பில் 3 லட்சம். ஆனால் அதே செகண்ட் ஹாண்ட் கார் இலங்கையில் 30 லட்சம். நம்மைப் போல சாதாரணர்கள் இங்கேயிருந்துகொண்டு ஒரு நல்ல கார் (Benz, BMW, Jaguar ....etc ) வாங்குவதென்பது சாத்தியமில்ல்லை. நண்பனொருவன் அடிக்கடி சொல்வான் இதைஎல்லாம் வாங்குறதுனனா, ஒன்றில் பிறக்கும்போதே கோடீஸ்வரனாகப் பிறக்க வேண்டும். அல்லது ஏழையானாலும் ஐரோப்பாவில் பிறக்க வேண்டும்.

இதையெல்லாம் யோசிச்சு நொந்து நூடுல்சாகியிருக்கோம். இதுல இவன் வேற வந்து காமெடி பண்ணிக்கிட்டு..

அதில பாருங்க, ரோட்டில நிற்கும் பசங்க பொதுவா இரண்டு வகை. பொண்ணுங்களை சைட் அடிக்கிறவங்க பெரும்பான்மை. மிகச்சிறுபான்மை ஒன்றிருக்கு கார்களை சைட் அடிப்பவர்கள். நானும் ஜெயனும் சேர்ந்து சின்சியரா அதைத்தான் பண்ணுவோம், நண்பர்கள் எல்லோரும் ஒன்று கூடும்போது. (காருக்குள்ள இருக்கிற பொண்ணுங்களை சைட் அடிக்கிற இன்னொரு வகையும் இருக்கு - அதுவும் முதலாவது வகைக்குள் அடங்கும்)

றோட்டில இறங்கின பொண்ணுங்களை மட்டுமே பார்த்த இந்த நாதாரி இப்போ புதுசா ஆச்சரியப்பட்டா காண்டாகுமா இல்லையா?

"டேய் அங்க ஜாகுவா."
"டாய்ய்ய்ய்!!!..கொண்டேபுடுவன்"

இதையெல்லாம் கூட விட்டுடலாம். இன்னொரு விஷயம்தான் தாங்க முடியல.
"என்னடா இங்க ஒரே டஸ்டா இருக்கு.. பார் காலைல புதுசாப் போட்ட டிஷர்ட் ஊத்தையாயிருக்கு .. அங்கயெண்டா.."
"தோய்க்காமலே நாலு மாசம் போடுவீங்களா?"

இதுல முக்கியமான் ஒரு விஷயம்..தலைவர் வெளிநாடு போய் மூன்றே மூன்று வருஷம்தான் ஆகுது! இதுக்கே இவ்வளவு அலப்பறை. ஆமா, பொதுவாப் பொண்ணுங்கதானே ஆறுமாசம் கொழும்பில இருந்துட்டு திரும்ப யாழ்ப்பாணம் வந்து, ஜாஃப்னா கிளைமேட் ஒத்தே வருதில்லன்னு இப்பிடி ஓவராப் பண்ணுவாங்க?
  

9 comments:

  1. எனக்கும் அந்த பயம் இருக்கு ஒழுங்கா நடிசுகிட்டு இருக்குற தளபதிய மறுபடி மாத்தி விட்டுருவான்களோ அப்படின்னு

    ReplyDelete
  2. தலைவா- இயக்குனர் விஜய்தான் சற்று யோசிக்க வைக்கிறார்.// இங்க ரொம்ப பலமாவே யோசிக்க வைக்கிறார்.... படம் நல்லா இருக்காது... நல்லா இருந்தா காப்பியா இருக்கும்.. எப்பிடியோ நம்ம உலக விமர்சகக்கூட்டத்திட்ட நசிபடப்போறது கன்ஃபோர்ம் :(

    ReplyDelete
  3. தலைவா தலைவரை நாறாம இருந்தா சரி...

    நண்பனை அங்கேயே தூக்கிப்போட்டு மிதிக்கலையாக்கும் ஹா ஹா ஹா ஹா....

    ReplyDelete
  4. உங்கட நண்பர் 'சிதம்பரத்தப் பேய் பாத்த மாதிரி'ப் போய்த் திரும்பி வந்திருக்கிறார் எண்டு சொல்லுறீங்கள்,ஹி!ஹி!!ஹீ!!///உங்கள் பார்வையில் நடிகைகள்:பெர்பெக்ட்!!!

    ReplyDelete
  5. ஒரு ஃபோர்ட் லேசர் 1993 வைத்திருந்தேன். 2006 அளவில் 3000 $ இற்கு வாங்கினேன். பிறகு 2010 பிற்பகுதியில் மக்கர் பண்ணி விற்க வேண்டி வந்தது. இல்வசமாகக் கொடுக்கவும் ரெடி யாரும் வாங்கவில்லை. (ரோட் டாக்ஸ், அது இது, ரிப்பேர் என்று இன்னும் இழுக்கும் என்று பயம்). கடைசியில் 150 $ இற்குச் "சப்பளிப்பவர்களிரடம் விற்றேன். கார் விற்கும்போது சின்னவனுக்கு வயது இரண்டேகால் இருந்திருக்கும். இந்த வருடத் தொடக்கத்தில் கேட்டான் , "அப்பா அந்த நீலக் கார் எங்கே?" என்று. அவனின் நனைவிடை தோய்தல் போல.

    ReplyDelete
  6. விஜய் சினிமாவில் அரசியல் பிரச்சாரத்தை செய்யும்போதெல்லாம் ஆப்பு தான் விழுந்திருக்கிறது. கூடவே இயக்குநர் விஜய் வேறு.......கன்ஃபார்ம்.

    ReplyDelete
  7. ஜீ, அலம்பல் செய்யும் ஃபாரீன் ரிட்டர்ன்கள், ஃபாரினில் என்ன செய்கிறார்கள் என்று விசாரித்தால் தெரியும் சேதி!

    ReplyDelete
  8. //பொதுவாப் பொண்ணுங்கதானே ஆறுமாசம் கொழும்பில இருந்துட்டு திரும்ப யாழ்ப்பாணம் வந்து, ஜாஃப்னா கிளைமேட் ஒத்தே வருதில்லன்னு இப்பிடி ஓவராப் பண்ணுவாங்க?// this is too much Ji...

    Vythehi

    ReplyDelete
  9. றோட்டில இறங்கின பொண்ணுங்களை மட்டுமே பார்த்த இந்த நாதாரி இப்போ புதுசா ஆச்சரியப்பட்டா காண்டாகுமா இல்லையா?

    "டேய் அங்க ஜாகுவா."
    "டாய்ய்ய்ய்!!!..கொண்டேபுடுவன்"

    ReplyDelete