Sunday, August 15, 2010

இதே பூமி....இதே நிலவு....அரிசிலாற்றங்கரையில்.....

நிலா வெளிச்சம், கருமை படர்ந்த மரங்களும், கிளைகளும், மெலிதாக வீசும் காற்றில் இலைகளின் சலசலப்பு - அழகான இந்தப் பொழுதில் உங்களுக்கு என்ன தோன்றும்?

எனக்கு மனதில் ஒரு மென்சோகம் படரும். ஏன்?
நிலவு வெளிச்சத்துக்கும் சோகத்துக்கும் என்ன சம்பந்தம்?

நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா?

நிலவொளி சோகத்தை ஏற்படுத்துகிறதா? இல்லை அந்த ஒளியில் எமது அடிமனதின் சோகங்கள் கிளறப்பட்டு பிரதி பலிக்கிறதா?

இதைவிட இன்னொன்றும்  கற்பனையில் தோன்றும்.
ஒரு ஆற்றங்கரை, குதிரையின் குழம்புச் சத்தம்.
இதே போன்ற ஒரு ராத்திரியில் தானே இதே பூமி, இதே நிலவில்தானே அரிசிலாற்றங்கரையில் வந்தியதேவன் குதிரையில் சென்றிருப்பான்.

நீங்கள் கல்கியின் பொன்னியின் செல்வன் வாசித்தவரா? அப்படியானால் நிச்சயம் உங்களுக்கும் இந்த அனுபவம் இருக்கும், அல்லது இதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை.


ஆறாம் வகுப்பு முடித்து, பள்ளியின் ஆண்டிறுதி விடுமுறையின் போது எனக்கு வாசிக்கக் கிடைத்தது. சில தினகலாகத் தொடர்ந்து வாசித்தேன் என்று சொல்ல முடியாது, அதே தியானமாக இருந்தேன்.

நாளின் அத்தியாவசிய கருமங்கள் தவிர்ந்த ஏனைய பெரும்பகுதி முழுவதையும் ஆக்கிரமித்துக் கொண்டது பொன்னியின் செல்வன்.

மின்சாரமில்லாத அந்த இரவுகளில் மண்ணெய் விளக்கில் வெகு நேரம் விழித்திருந்து வாசித்தது இன்னும் பசுமையாய் என் நினைவுகளில்.

இடையிடையே வீட்டு முற்றத்தில் நிலா வெளிச்சத்தில் வந்து நிற்கும்போது, மனம் நூற்றாண்டுகள் கடந்து, கடல் கடந்து,

அரிசிலாற்றங்கரையிலும், பழையாறையிலும், தஞ்சை, கோடிக்கரை என சஞ்சரிக்கும்.

எனது நினைவிலும் , கனவுகளிலும் வாட்களும், வேல்களும், குதிரையின் குழம்பொலிகள், யானையின் பிளிறல்கள், வெற்றி முழக்கங்கள்.

வந்தியத்தேவன், குந்தவை, ஆதித்த கரிகாலன், ஆழ்வார்க்கடியான், அருள்மொழி, வானதி, பூங்குழலி, சேந்தன் அமுதன், பார்த்திபன், பழுவேட்டரையர்கள், நந்தினி, சுந்தரச் சோழர், அநிருத்தர், கந்தமாறன், ரவிதாசன் எல்லோரும் என் சொந்தக்காரர், அயலவர்கள் ஆனார்கள்.

அவர்களின் உருவமும், குணவியல்புகளும் மனதில் ஆழமாக பதிந்து போய், பார்க்கும் மனிதர்களிளெல்லாம் அவர்களைத் தேட முயற்சித்திருக்கிறேன்.

கல்கியின் அளவுக்கு மீறாத வர்ணனைகள், நகைச்சுவை கலந்த எழுத்து, ஓவியர் மணியம் வரைந்த அருமையான, உயிரோட்டமுள்ள ஓவியங்கள் என்றும் மனதை விட்டகலாதவை.

குறிப்பாக ஆரம்பத்தில் வந்த அந்த ஓவியங்கள் பின்னாளில் எந்தப் பதிப்பிலும் நான் காணவில்லை. கல்கியில் தொடராக வந்தபின் முதல் பதிப்பான புத்தகங்கள் வைத்திருந்த வாசிக்கக் கொடுத்த கண்ணன் மாமாவும் மறக்க முடியாதவர்.

இதைத் திரைப்படமாகவோ, தொடராகவோ எடுத்தால் நிச்சயம் நன்றாயிருக்காது (வாசித்தவர்களுக்கு). கல்கியும், மணியமும் மனதில் பதித்துச் சென்ற பாத்திரங்களுக்கு யாருமே இணையாக முடியாது.

                  முன்பு எம்.ஜி.ஆர். திரைப்படமாக எடுக்கும் முயற்சியில் இருந்தாராம். அவர் வந்தியத்தேவனாக? நடிப்பதை ஓரளவாவது ஜீரணிக்க முடிந்தாலும் (நிச்சயமாக என்னால் முடியாது), அதைவிடக் கொடுமை, எம்.ஜி.ஆர்.வந்தியத் தேவேனாக நடித்தால்,         குந்தவை? ஜெயலலிதாவோ, சரோஜாதேவியோ குந்தவையாக நடித்தால்?

அய்யய்யோ நினச்சாலே பயங்கரமா இருக்கு. நல்ல வேளை தஞ்சைப் பிரகதீஸ்வரர்தான் காப்பாற்றினார்.

6 comments:

  1. கும்பகோணத்தை சுற்றி உள்ள கிராமங்களில் வசித்தவர்களுக்கு இந்த உணர்வும் மன நிலையும் இயல்பாக வந்துவிடும்.
    குறிப்பாக தினமும் கல்லூரி செல்லும்போது அரசலாற்றின் பாலத்தின் மீதுதான் சென்று வருவது வழக்கம். பாலத்தை தாண்டியவுடன் அருகில் ஒரு ஐயனார் கோவில் இருக்கும். வண்ண வண்ண பொம்மைகளும் அந்த அரச மரமும் கண்ணில் பட்டு 'குடந்தை சோதிடர்' என்ற ஒரு பாத்திரத்தை நினைவு படுத்தும்.'இந்த வழியாகத்தானே அவர்கள் குடந்தை சென்றிருப்பார்கள்?' போன்ற அசட்டுத்தனமான எண்ணங்கள் மனதில் ஓடும். கல்கி அந்த நாவலை எழுதியபோது அந்தந்த ஊர்களுக்கு சென்று வந்து பின்னர்தான் எழுதினார் என்று படித்த ஞாபகம். ஒரு வேலை கல்கி இதே மன நிலையில் எழுதி அதே கற்பனை வாசகர்களையும் சென்று சேர்ந்து விட்டது போல! இதுதான் ஒரு தூமையான இலக்கிய வாதியின் , எழுத்தாளனின் தாக்கம். நல்ல வேலை அது திரைப்படமாக வந்து நம் வயிற்றெச்சலைகொட்டிகொல்லாமல் போனது நமது முன்னோர்கள் புண்ணியம் போலும்.

    ReplyDelete
  2. உங்கள் பகிர்தலுக்கு நன்றி கக்கு-மாணிக்கம்!

    ReplyDelete
  3. //நன்றாயிருக்காது (வாசித்தவர்களுக்கு).//

    சரியாச் சொன்னீங்க...

    ReplyDelete
  4. இந்த பொன்னியின் செல்வன் வாசிச்ச புண்ணியம் நான் என்னும் பெறலங்க...ஆனா நீங்க என்ன சொல்ல வாறேல் என்டு புரியுது....

    ReplyDelete
  5. AnonymousMay 26, 2011

    ////மின்சாரமில்லாத அந்த இரவுகளில் மண்ணெய் விளக்கில் வெகு நேரம் விழித்திருந்து வாசித்தது இன்னும் பசுமையாய் என் நினைவுகளில்.
    ---------
    ---------
    ---------
    ---------
    கல்கியின் அளவுக்கு மீறாத வர்ணனைகள், நகைச்சுவை கலந்த எழுத்து, ஓவியர் மணியம் வரைந்த அருமையான, உயிரோட்டமுள்ள ஓவியங்கள் என்றும் மனதை விட்டகலாதவை.//

    யோவ், நான் எழுத நினைத்தவற்றை எல்லாம் நீங்களே எழுதினால் என் பிழைப்பு என்ன அவுறது. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.
    நான் தான் கிறுக்கு என்று நினைத்தேன். இன்னும் கொஞ்ச கிறுக்குகளும் இருக்கிறார்கள் என்று தெரியும் போது சந்தோசமாகவே இருக்கிறது.

    ReplyDelete
  6. கல்கி அவர்களின் தாக்கம் எல்லா தமிழ் நெஞ்சங்களிலும் படர்ந்துவிட்ட ஒரு விருட்சம்..... இப்படியான தாக்கம் என்னுள்ளும் உண்டு மாமல்லபுரம் செல்கையில்....www.anathal.com

    ReplyDelete