Monday, January 31, 2011

சிநேகமுள்ள சிங்கம் - பாலகுமாரன்


சித்திரைப் பாண்டியன் - என்னை மிகவும் பாதித்த, கவர்ந்த ஒரு கதாபாத்திரம்!

எழுத்தாளர் பாலகுமாரனின் கதைகளை முதலில் எனது பதினைந்து வயதில் வாசித்திருப்பேன் என்று நினைக்கிறேன். அப்போது சரியான புரிதல்கள் இல்லாததாலோ என்னவோ மற்றைய எழுத்தாளர்களைப் (ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா) போலவே ஒரு விறுவிறுப்பான சுவாரஸ்யத்துக்காக மட்டுமே வாசித்தேன். வேறேதும் விசேடமாகக் கவரவில்லை. (தலைவர் சுஜாதாவிற்கு மட்டும் எப்போதுமே தனியிடம்)

இடையில் சில வருடங்களாக மற்றையதெல்லாம் விட்டு தலைவனின் எழுத்தை மட்டுமே! இருபது வயதில் தற்செயலாக மீண்டும் பாலகுமாரனின் புத்தகமொன்றை வாசித்தபோது, ஏதோ ஒரு வித்தியாசமான தனித்தன்மை இருப்பதாகத் தோன்ற, தொடர்ந்து எனது பெருமளவு நேரத்தை ஆக்கிரமித்துக் கொண்டார் பாலகுமாரன். கூடவே மனதையும்!

எங்கள் வீட்டிற்கு அருகாமையிலிருந்த நூலகத்தில் எனது தேடுதல் வேட்டை தொடங்கி சிறிது நாளிலேயே கைவிட நேர்ந்தது பெரிதாக எதுவும் சிக்காததால்! பிறகு சற்றுத்தொலைவிலிருந்த ஒரு தனியார் நூலகத்திற்கு எல்லையை(?!) விரிவுபடுத்த, அங்கு நல்ல தீனி கிடைத்தது. அப்போது கிடைத்த ஒரு புத்தகம்தான் சிநேகமுள்ள சிங்கம்! சித்திரைப் பாண்டியன் அதில் வரும் நாயகன் பெயர். 

ஒரு நல்ல படம் பார்த்தால் இரண்டு, மூன்று நாட்கள் அதன் பாதிப்பு இருக்கும், இருக்கவேண்டும் அது போலவே ஒரு நல்ல நாவலை வாசித்தாலும்! அனால் எழுத்தின் வீச்சு இன்னும் அதிகம் என்றே நான் நினைக்கிறேன். சினிமாவில் விஷூவலாகவே காட்டப்படுவதால் நாங்கள் பார்ப்பதோடு சரி. 

ஆனால் ஒரு நல்ல ஆழமான எழுத்துக்களால் சொல்லப்படும் கதை, காட்சிகள் தொடர்பான விவரிப்பு, காரெக்டர் டீட்டெயிலிங்  இவற்றை ஒருங்கிணைத்து எமது மனத்திரையில் காட்சிகள் விரிகின்றன அல்லது உருவாக்கிக் கொள்கிறோம். அதனால்தான் அதன் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது என நான் நினைக்கிறேன்!

தொடர்ந்து பல நாட்களாக அந்த காரெக்டர் மனதில். அநேகமான பாலகுமாரனின் கதைகளின் நாயகன் எல்லோருமே தனித்துவமான குணங்களையுடைய ஒருவனாகவே இருப்பது வழமை என்றாலும் சித்திரைப் பாண்டியன் மட்டும் தனியாக! வேறு எந்தக் கதைகளினதும் கதாபாத்திரங்களின் பெயர்கூட ஞாபகத்தில் இல்லை. அதுவும் வாழ்வில் தோற்ற ஒருவனின், அரசியல், துரோகங்களால் அலைக்கழிக்கப்படும் ஒருவனின் கதை!

அந்தப் பொழுகளில் எனது நண்பன் 'எபி' யுடன் உரையாடும்போது நான் பாலகுமாரன் பற்றிப் பேச, அவன் வாசித்திருக்கவில்லை. அவனுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் முதல் அறிமுகம் சும்மா 'நச்'சுன்னு இருக்க வேண்டாமா? நான் 'சிநேகமுள்ள சிங்கத்தையே வாசிக்கக் கொடுத்தேன். என்னைப்போன்ற ரசனையையுடைய அவனுக்கும் சித்திரைப் பாண்டியனே ஹீரோவானான். பிறகென்ன 'எபி'யும் பாலகுமாரன் தேடலில் இறங்க, இனிமையான வாசிப்பனுபவங்கள்!

ஒரு காரெக்டர் ரெண்டு வரியில் ஒரு வசனம் பேசினால், அதன் அர்த்தம், பேசுபவரின் உள்மனதில் உள்ள எண்ணங்கள், தர்க்கங்கள், எழுத்தாளரின் விளக்கங்கள், கேள்விகள், பதில்கள் என இரண்டு மூன்று பக்கங்களுக்கு ஆழமாக ஆராய்ந்து விவரித்துச் செல்வது பாலகுமாரனின் பாணி. அதனால் சில நண்பர்கள் போரடிப்பதாகவும் சொன்னதுண்டு. ஆனால் எனக்கு அது பிடித்திருந்தது. ஒரு புத்தகத்தைப் படித்து முடித்தவுடன் ஏதோ வாழ்க்கையில் நாமும் ரொம்ப அனுபவப்பட்ட மாதிரி ஒரு எண்ணம் தோன்றும் அப்போதெல்லாம்.

முதன் முதலில் வேலை கிடைத்து அலுவலகம் சென்றபோது, பலதரப்பட்ட மனிதர்களோடு, என்னைவிட எல்லோரும் வயதுகூடியவர்களாக, வெவ்வேறு நாட்டவர்களாக இருந்த  சூழலில், நான் சரியாக எல்லோரையும் புரிந்து கொள்ள, நடந்துகொள்ள  ஏதோ ஒருவகையில் எனக்கு அவரின் எழுத்துக்கள் துணை நின்றதாக உணர்ந்தேன்!

வாழ்வின் சில பாதுகாப்பான பகுதிக்குள் மட்டுமே பழக்கப்பட்ட வயதில், வெளி மனிதர்கள், முரண்பாடுகளைச் சந்தித்திராத பருவத்தில் நல்ல புத்தகங்களே வழிகாட்டிகளாகவும், வாழ்வியலைச் சொல்லிக் கொடுப்பவையாகவும் இருக்கின்றன.

சினிமாவில் பல படங்களில் வசனகர்த்தாவாக பணியாற்றியிருந்தலும் யாராலும் மறக்கமுடியாத, எல்லோருக்கும் தெரிந்த ஒரு பிரபலமான வசனம்,
'நாலு பேருக்கு நல்லது செய்தா எதுவுமே தப்பில்ல!'

அவர் எடுத்துக் கொள்ளும் கதைக்களத்திற்கான விபரிப்பில் அதற்கான உழைப்பு தெரியும் .உதாரணமாக இரும்புக்குதிரைகள், அதே போல சினிமா உலகைப்பற்றிக்கூரும் ஒரு நாவல் - பெயர் ஞாபகமில்லை. சுஜாதாவின் கனவுத்தொழிற்சாலை ஒரு இண்டலெக்சுவல் ஹீரோவின் பார்வையில் சொல்லப்படும். இது உதவி இயக்குனர், ஏனைய தொழிலாளிகளின் பார்வையில் பயணிக்கும் கதை!

தனது சுய சரிதையான முன்கதைச்சுருக்கத்தில் தனது இளமைக்காலம், தவறுகள், கற்றுக்கொண்டவை பற்றி ஒளிவு மறைவின்றி கூறியிருப்பார். சுஜாதா பற்றி, தனக்கு சிறுகதை எழுத சொல்லித்தந்தவர் என்றும், பின்னாளில் சுஜாதாவிடமே குடிபோதையில் சவால் விட்டது பற்றியும் கூறியிருப்பார். முன்கதைச்சுருக்கம் படித்தபின்னர் அவரது எல்லாக்கதா நாயகர்களிலும், அவரது சாயலே தெரிவதை உணர முடிந்தது.

நான், எனது நண்பர்கள் சிலர் ஓஷோவைத் தீவிரமாக வாசித்துக் கொண்டிருந்த காலத்தில், யாராவது புதிதாக ஓஷோ படிப்பவரைச் சந்தித்தால் ஒரு தனி மகிழ்ச்சி! எங்களுக்கும், அவருக்கும். (அப்படியானவர்களைச் சந்திப்பது அருமையாக இருந்ததால்/இருப்பதால்) ஓஷோவின் வாசகன் என்றதும் அவர்களின் அடுத்த கேள்வி, 'அப்போ பாலகுமாரன் படித்திருப்பீர்களே?'. பின்பு நானே ஒருசிலரிடம் செக் பண்ணியதுண்டு. அதென்னவோ அப்படித்தான்! 

பழைய பாலகுமாரனைப் பார்த்து சில வருடங்களாகிறது. சமீபத்தில் ஓரிரு கட்டுரைகளப் பார்த்தபோது, ஒன்ற முடியவில்லை. ஒருகாலத்தில் வெறித்தனமாக வாசித்த எழுத்தாளன். வயதாகிவிட்டது எழுத்துக்களில் பிரதிபலிப்பதாகத் தோன்றுகிறது.எந்த வயதிலும் இளமையாகவே வாழ்வதென்பது, தலைவர் சுஜாதா போன்ற ஒருசிலருக்கே சாத்தியமாகிறதோ!       

Friday, January 28, 2011

ஜீயும் தொலைக்காட்சியும்!



உன்னை நினைச்சா எனக்கு ரொம்பப் பெருமையா இருக்கு! தினமும் ஏதோ ஒரு சீரியலிலாவது, யாரோ ஒருவர் இன்னொருவரைப்பார்த்து  பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்! (நிஜத்தில் நடக்குமா? அப்படி வசனம் பேச்சுவழக்கில்தான் உள்ளதா?) 

நான் தொலைகாட்சி பார்ப்பது மிக அரிது! எப்போதாவது பார்த்தாலும் நகைச்சுவை, டிஸ்கவரி. டீ.வி.யைக் கடந்து செல்லும்போது கவனிப்பதுண்டு. பொழுது போகாமல் ஒருநாள் தொலைகாட்சியில் ஒரு ரவுண்டு வந்தபோது!

எல்லாரும் நல்லாயிருக்கனும்! - இதுவும் ஒரு டெம்ப்ளேட் காட்சி! கோவிலுக்குப் போனா நல்லவங்க (சீரியல்ல!) எல்லாம் இப்பிடித்தான் கும்பிடுறாங்க! (எந்தப் பிள்ளையாரோ, முருகனோ இப்படி ஒருவரைப் பார்த்திருப்பர்ர்களா? அவர்களுக்கே வெளிச்சம்!) 

அப்புறம் ஒரு சொல் வழக்கத்திலுள்ளது மூலியமா - அதாவது சேகர் மூலமா தெரிஞ்சது என்பதை சேகர் மூலியமா தெரிஞ்சது (இதை நான் வேறு எங்குமே கேட்டதில்லை, சீரியல் தமிழென்று ஒன்றுள்ளதோ?)

*******************************************************************************************************

ஜெயா டீ.வி.ல மம்மி வழக்கம்போல மைனாரிட்டி தி.மு.க.வையும், அய்யாவையும் திட்டிட்டிருந்தாங்க! (விடுங்க மம்மி இவிய்ங்க எப்பவுமே இப்பிடித்தான்!)

தூர்தர்ஷனில் யாரோ ஒரு ஹிந்தித் தாத்தா! பல்லில்லாததாலோ என்னவோ கஷ்டப் பட்டு கதைத்தார் (யாராவது எம்.பி.யாக இருக்ககுமோ!)

*******************************************************************************************************

ஏதோ சீரியல்  டைட்டிலில் எழில்வரதன் என்ற பெயர் கண்டு, மனம் பின்னோக்கி...

எழில்வரதன் - ஆனந்த விகடனில் 2005,6 களில் என்று நினைக்கிறேன் அட்டகாசமான சிறுகதைகளை எழுதி வந்தவர். அவரது கதைகளின் கரு அநேகமாக துன்பியல் சார்ந்ததாக இருந்தாலும், அதைச் சொல்லும்போது நக்கல், நகைச்சுவையில் பின்னியெடுத்துவிடுவார். 

இப்போது சீரியலில்? பொருளாதார ரீதியில் வளம் பெறமுடிந்தால் சரிதான். இருந்தாலும் சினிமா வசனகர்த்தா என்றால் நன்றாயிருக்கும்! (எல்லா சீரியல்களிலும் ஒரே காட்சிகள், வசனங்களைத்தானே பெயர்கள், ஆட்களை மாற்றி?)

*******************************************************************************************************

சில (அல்லது பல?) நாட்களுக்குமுன் சன் டீவியில்(?) இராமாயணம் ஒளிபரப்பானபோது, கவனித்தேன்..

அதில் வந்த ராவணனைப் பார்த்தபோது, சிறுவயதில் எங்கள் ஸ்கூல் வாசலில் மாங்காய் விற்றுக் கொண்டிருந்த 'அங்கிள்' போலவே இருந்தார்! ஒரு நிமிஷம் அவர்தான் நடிக்கிறாரோன்னு அசந்து போயிட்டேன்னா பார்த்துக்கொள்ளுங்க!

*******************************************************************************************************

ஊட்டச் சத்துக்கள் நிறைந்த, பெரியோர்களுக்கு ரொம்பநல்ல, குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் ஏதோ பதார்த்தத்தை ஒரு ஆன்டி செய்திட்டிருந்தாங்க! 
இப்படியான நிகழ்ச்சிகளுக்கு இல்லத்தரசிகள் ஆதரவு எப்பவுமே இருக்கும்போல! பலர் ஆர்வமா பார்ப்பதை கவனித்திருக்கிறேன். சிலர் நோட்ஸ் கூட எடுப்பாங்க.ஆனா எதுவும் செய்கிறார்களா தெரியவில்லை!

மூன்று வருடங்களுக்கு முன், நம்நாட்டு  டீ.வி ஒன்றில் சமையல் நிகழ்ச்சி செய்யும் ஆன்டி, பிரபல பேக்கரியொன்றில் பாண் (பிரெட்) வாங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தேன்! பக்கத்தில் நின்ற நண்பன் சொன்னான் தான் அடிக்கடி பார்ப்பதாகவும், வீட்டில் அநேகமாக நாட்களில் இரவுச்சாப்பாடு பாண் போல என்றான்!        

நாங்கெல்லாம் ஒரு காலத்தில தூர்தர்ஷனில் வசந்த் அன்கோ ஓனர் சாப்பிடுவதை வாய் பார்த்தவய்ங்க..தெரியும்ல!

*******************************************************************************************************

விஜய் டீ.வி.யின் ஆன்மீக விளம்பர சேவைகள் ஒருபக்கம் நடந்து கொண்டிருந்தது. நித்திக்கும் ஒரு 'ஸ்லாட்' கொடுக்கலாமே!
பகலில் 'ஆன்மிகம்' இரவில் 'நடந்தது என்ன?'

*******************************************************************************************************

நம்நாட்டு தனியார் சானல் ஒன்றில் நிகழ்ச்சித் தொகுப்பாளினிகளை எப்படி செலக்ட் செய்யக்கூடாதுன்னு தெரியவேண்டுமா? அந்த சானலை பார்க்க! (எந்த அடிப்படையில் தேர்வு செய்கிறார்கள் என்றே புரியவில்லை!) 

காலைல ஆரம்பிப்பாங்க பாருங்க, நண்பன் ஒருவன் சொன்னான் 'எங்க இருந்துடா இதுங்களைப் பிடிச்சிட்டு வந்தாங்க? காலைல முழிச்சா, நாள் வெளங்கிரும்! அவர்களின் பேச்சு,ஸ்டைல்(?),தமிழ் எல்லாம் பார்க்கும்போது கொழும்பில் ஒரு குறித்த பிரதேசத்திலிருந்தே 'பிடிச்சுக்கொண்டு' வந்திருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது!

இதில் இந்தியத் தொகுப்பாளினிகளை பார்த்து இவர்கள் அதேபோல் ட்ரை பண்ணுகையில் கானமயிலாட...'தான் ஞாபகத்துக்கு வருகிறது! வான்கோழி ஆடினாக்கூட போனாப் போகுதுன்னு விட்டுவிடலாம் (தோகையாவது இருக்கே!) வாத்துகள், காக்காய்கள் எல்லாம் ஆடினா? ஸ்ஸ்ஸ..ப்பா! 


*******************************************************************************************************

ஏதோ சானலில் ஒரு விளம்பரம் கவர்ந்தது,
டாக்டர் எக்ஸ் நிகழ்ச்சியில் பாலியல் தொடர்பான உங்கள் சந்தேகங்களுக்கு விடை அளிக்கிறார் Dr.காமராஜ்! (பார்ரா!)

********************************************************************************************************


ஏதோ ஒரு சீரியலில் (பார்க்கல காதில் கேட்டது) இளையராஜாவின் 'How to name it? வயலின் இசையை அப்பட்டமாகக் copy அடித்து பின்னணி இசை போட்டுத்தாக்குகிறார்! (மாற்றியிருந்தாலும் அப்படியே தெரிகிறது) அலறல்கள், கதறல்கள், கத்தல்கள் இடையே கிடைக்கும் 'கேப்'பில் வயலின் இழைகிறது!

********************************************************************************************************

மொத்தமாக ஆராய்ந்ததில் நமக்கு டிஸ்கவரிதான் சரி! நம்மளயே டிஸ்கவரி சானலில் வரும் ஒரு காரெக்டர்(?!) போலவே வீட்டில் அதிசயமாகப் பார்ப்பது போலத்தோன்றுவதால் எதுக்கு வம்பு? டீ.வியே வேணாம்!    

Wednesday, January 26, 2011

Christopher Nolan


2006 இல் ஒருநாள். தற்செயலாக ஒரு DVD கடையில் அந்த ஆண்டில் வெளியான  The Prestige  என்று ஒருபடம். டைரக்க்ஷன் கிறிஸ்டோபர் நோலன் என்றிருந்தது! ஏதோ ஒன்று பார்த்ததும் ஈர்க்க, (அப்போது நோலன் பற்றி எதுவும் தெரியாது!)  வாங்கினேன்.

நல்ல தரமான DVD. அருமையான ஒளிப்பதிவு, அழகான ஆர்ட் டைரக்சன்! ஆனா, படத்தில என்ன நடக்குதுன்னு ஒண்ணுமே புரியல! அப்போதிருந்த மனநிலையில் பொறுமையில்லாமல் அரைமணி நேரம் பார்த்துவிட்டு நிறுத்திவிட்டேன் (முடியல!)

சரியாக இரண்டு வருஷங்களின்பின் ஒரு ஆர்வக்கோளாறில படம் பார்க்க முடிவு செய்து, மேஜிக் கலைஞர்கள் பற்றிய கதை என்பதால் ஈடுபாட்டுடன் பார்த்தேன். ஒன்றும் புரியாமலே சும்மா படம் பார்க்க , கதையில் வரும் சில ட்விஸ்டுகள் அசரவைக்க (ச்சே! இவ்வளவு நாளா மிஸ் பண்ணிட்டியேடா!)

இருந்தாலும் படம் சரியாக பிடிபடவில்லை. படம் என்பதை படத்தில் பேசப்படும் ஆங்கிலம் எனத் தவறாகப் புரிந்து கொண்டு, தமக்கு இங்லீஷ் நல்லா தெரியும் அதால படம் புரிந்ததுவிட்டது எனக் கூறும் பயபுள்ளைகள் நம்மிடையே பலர். அப்படியானவர்களுக்கு எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் ஜே ஜே சில குறிப்புகள் நாவலைப் பரிந்துரைக்கிறேன்.
  

கதை - இரண்டு மேஜிக் கலைஞர்கள் தொழில் போட்டி மற்றும், தனிப்பட பழிவாங்கல் காரணமாக முட்டிக் கொள்ள... என்னவாகிறது? - என்பதுதான்! திரைக்கதையில்தான் இருக்கு உண்மையான மேஜிக்!

இது  ஒரு Nonlinear ஸ்டைலில் அமைந்திருக்கும். (இது நோலனின் ஸ்பெஷாலிட்டி)

இரண்டாம் முறை பார்க்கும்போதுதான் (நம்முடைய அறிவுக்கு?!)தெளிவாக(??) விளங்கியது. கூடவே சில குழப்பங்களும்! 
மூன்றாம் முறை பார்க்கையில் இன்னும் புதிய சில விஷயங்கள், கூடவே அதிகரித்த குழப்பங்களும்! 
நான்காம் முறை....வேணாம் இத்தோட நிறுத்திக்குவோம்!

ஏன்?, எப்படி?, எதற்காக?, யார்?, யார் நல்லவன்?, உண்மை என்ன? - இப்படி ஏராளமான கேள்விகள், குழப்பங்கள். மண்டை காய்ஞ்சிருச்சு! அந்தக் காலகட்டத்தில் நம்ம தலையில் ஏராளமான முடி இருந்திச்சு....அப்புறம் கணிசமாகக் குறைந்ததுபோல ஒரு உணர்வு!

படம் பார்த்த நமக்கே இவ்வளவு குடைச்சல்னா, திரைக்கதை அமைக்க எப்படி உட்கார்ந்து யோசிச்சிருக்கணும்? அண்ணன் கிறிஸ்டோபர் நோலன் வாழ்க!

Christopher Nolan
வயது 40. ஹாலிவுட் இயக்குனர், திரைக்கதையாசிரியர், தயாரிப்பாளர்

லண்டனில் பிறந்தவர் - அதனால்தான் லண்டனில் பிறந்த ஹாலிவுட் நடிகர் Christian Bale, இங்க்லீஷ் நடிகர் Michael Caine இருவரையும் அதிகமாகத் தான் படங்களில் பயன்படுத்துகிறார்? (எப்பூடி??...தமிழேண்டா!!! )

நோலனின் முதல் படம் 1998 இல் வெளியான Following. இவரே எழுதி, இயக்கிய சின்ன பட்ஜெட் படம் (6000 டொலர்ஸ், black & white ). லண்டனில் படமாக்கப்பட்ட இப்படத்தின் வெற்றி ஹாலிவுட் வாய்ப்பை ஏற்படுத்தியது!

ஆறுமாசம் ஹோட்டலில் ரூம் போட்டு கதை யோசிச்சு, படமெடுத்து ரிலீஸ் பண்ணினா எங்கே கதை? ன்னு தேட அதுக்கு தனியா ரூம் போட்டு யோசிக்கணும் - பல படங்களில் பார்த்த அனுபவம்.

கதையென்ற ஒன்றையே முடிவு பண்ணாமல் ஒரு பெரும்படையுடன் காமெராவைத் தூக்கிக்கொண்டு போய் மூன்று வருடங்களாகப் படமெடுக்கும் அறிவுஜீவி இயக்குனர்களையும் நாங்கள் பார்த்திருக்கிறோம்.

அனால் கதையை தேர்ந்தெடுத்த பின்னர் திரைக்கதைக்கான அசுர உழைப்பு நோலனின் படங்களில் (Memento, The Prestige) தெரியும்!

தமிழில் கஜினி வெளியானபோது நோலனின் இன்னொரு புகழ்பெற்ற படைப்பான Memento (2000) குறித்துப் பேசப்பட்டது!


Memento பார்த்தபோது அது இன்னொரு விதமான அனுபவம்!

- மனைவி/காதலியின் கொலைக்கான பழிவாங்கல்
- Short term memory loss,
- உடலில் பச்சை குத்துதல்,
- Polaroid Photography
என்ற 'கஜினி' யுடனான ஒற்றுமைகள் தவிர்த்து, திரைக்கதையமைப்பு முற்றிலும் புதிய அனுபவம்!

அதுவும் முதல் தடவை எதுவும் புரியவில்லை, பின்பு புரிந்தபின் அதிலும் விடை காண முடியாத கேள்விகள், குழப்பங்கள்!

மெமெண்டோ ஒரு Revers Chronological ஸ்டைலில் எடுக்கப்பட்ட Psychological Thriller படம்! அதுவரை இல்லை அதைத்தவிர அப்படி ஒரு படத்தைப் பார்த்ததில்லை நான்.

வழமையான த்ரில்லர்/பழிவாங்கல் படங்களில் அடுத்து என்ன நடக்கும் என்பதே பெரும் எதிர்பார்ப்பாக இருக்க, மெமெண்டோவில் இதுக்கு முதல் என்ன நடந்திருக்கும்? என எதிர்பார்க்க வைப்பது புதிதாக!

ஆனால் கதை (அல்லது தீம்?) என்று பார்க்கும்போது மெமெண்டோ, கஜினி இரண்டுமே,
மனைவி/காதலியின் கொலைக்காக, Short term memory loss பிரச்சினையுடைய ஒருவனின் பழிவாங்கல் - என்பதுதானே!

'கஜினி' இந்திக்குப் போனபோது, படத்தின் கதை உரிமை(?!) உன்னோடதா? என்னோடதா? ன்னு சண்டை போட்டாங்க இயக்குனரும், தயாரிப்பாளரும். ஆனால் இது எதுவுமே பாவம் ஜொனதன் நோலனுக்கு தெரியாது! ஜொனதன் நோலன்? அவரோடதுதான் 'மெமெண்டோ' கதை!

Jonathan Nolan
எழுத்தாளர், திரைக்கதையாசிரியர்
கிறிஸ்டோபர் நோலனின் தம்பி.
Memento Mori என்ற இவரது சிறுகதையே மெமெண்டோ திரைப்படமானது!

இவரும், அண்ணனும் சேர்த்தே கிறிஸ்டோபர் நோலன் படங்களின் திரைக்கதையைப் பின்னுகிறார்கள்!

கிறிஸ்டோபர் நோலனின் மற்றைய படங்கள்,
Insomnia (2002), Batman Begins (2002), The Dark Night (2008), சென்ற வருடம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய Inception.

Inception நான் இன்னும் பார்க்கவில்லை (பார்த்தால் மட்டும் உனக்கு புரிஞ்சிடுமா?) எல்லாம் ஒரு பாதுகாப்பு நடவடிக்கைதான் (இருக்கிற தலைமுடியைக் காப்பாற்றிக் கொள்ள வேணாமா?) அதுதான் நோலனின் master piece என்கிறார்கள்.

இயக்குனர் முருகதாஸ், கிறிஸ்டோபர் நோலனின் ரசிகர் போலும்! தற்போது இயக்கிவரும் 'ஏழாம் அறிவு' படம், The Prestige + Inception என்று சந்தேகிக்கப் படுகிறது. சூர்யா வேறு மேஜிக் கலைஞராக நடிக்கிறார் என்கிறார்கள்! 'கஜினி' போலவே  நன்றாயிருக்கும் என நினைக்கிறேன்!