Friday, July 15, 2011

I am Sam

மனதளவில் ஏழு வயது குழந்தையின் வளர்ச்சியை மட்டுமேயுடைய ஒரு ரெஸ்டாரெண்டில் வேலை செய்யும் சாம் (Sam), அவசரமாக மருத்துவமனைக்கு ஓடுகிறான். அங்கே அவன் மனைவிக்கு அழகான பெண் குழந்தை பிறக்கிறது! லூசி எனப் பெயரிடுகிறான்! திடீரென நடு வீதியில் சாமையும், அந்தக் குழந்தையையும் அநாதரவாக விட்டுப் பிரிந்து விடுகிறாள் அவன் மனைவி! ஒரு கணம் தவித்துப் போகிறான் சாம்!


ஒரு ஆண் யாருடைய உதவியுமின்றித் தனியாக பிறந்து ஓரிரு நாட்களேயான சிசுவை வைத்துப் பராமரிப்பதென்பது எவ்வளவு சிரமமான காரியம்! அதுவும் அவன் மனதளவில் அந்த வயதுக்குரிய சரியான வளர்ச்சியை அடைந்திராத பட்சத்தில்? அவனுடைய அயல் வீட்டுக்காரியான ஆனி அவனுக்கு இவ்விஷயத்தில் உதவி செய்கிறாள்! சாமைப் போலவே இருக்கும் குழந்தைத் தனமான அவன் நண்பர்கள் சிலர் எப்போதுமே அவனுக்கு உறுதுணையாக இருக்கிறார்கள்! அவர்களும் குழந்தை லூசி மீது மிகுந்த அன்பாக இருக்கிறார்கள்!  

அழகான சிறுமியாக வளர்ந்துவிட்ட லூசி, தன தந்தை மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்பட்டிருப்பதை உணர்ந்து கொள்கிறாள். லூசியின் பாடப்புத்தகங்களை வாசிக்கிறான் சாம். அவனால் முடியாத கஷ்டமான சொற்களை படிக்க  உதவுகிறாள் லூசி. Different என்ற சொல்லையே லூசி உச்சரிக்க விரும்புவதில்லை!



லூசியின் நண்பர்கள் அவளின் தந்தை குறித்து கேலி செய்கிறார்கள். தந்தை மீதி மிகுந்த அன்பு வைத்திருக்கும் ஆரம்பத்தில் தந்தைக்கு பரிந்து பேசும் லூசி ஒரு கட்டத்தில், அவர் என் உண்மையான தந்தை அல்ல என்று கூறிவிடுகிறது அந்தப் பிஞ்சு!

சாமை தவறுதலாக ஒரு இசகு பிசகான கேசில் அழைத்துச் செல்லும் போலீஸ் அவனைப்பற்றிப் புரிந்து கொள்ள, சமூக நல தொண்டர் ஒருவரின் பார்வை சாம் - லூசி மேல் விழுகிறது - விளைவு? லூசி சாமிடமிருந்து பிரிக்கப்படுகிறாள்! லூசி மீண்டும் கிடைக்க வேண்டுமானால் சாம் தன்னை நிரூபிக்க வேண்டும் - ஒரு குழந்தையை சரியான முறையில் வளர்க்க முடியுமென்று! தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்றே தெரியாமல் குழம்பும் சாமுக்கு அவனின் நண்பர்கள் பிரபல வக்கீல் ரிட்டா பற்றிச் சொல்ல, ரிட்டாவின் உதவியுடன் மகளை மீட்க முயற்சிக்கிறான்! பின்பு என்னவாகிறது?



சாமின் நிலையை அவனுடைய விரல்களால் மட்டுமே விளக்கிச் சொல்லும் படத்தின் ஆரம்பக் காட்சியே அசத்தலானது!
மிக உருக்கமான கதையை, படம் முழுவதும் நகைச்சுவை இழையோட சொல்லியிருப்பார்கள்! 
லூசியைப் பார்க்க ஓடிவந்து தடுக்கி விழும் சாம், எழுந்திருக்காமல் அந்த நிலையிலேயே லூசியை முத்தமிட்டுப் பேசிக் கொண்டிருக்கும் காட்சி!
சிறுமி லூசியின் நடிப்பு குறிப்பாக தந்தையிடம் மிகுந்த தயக்கத்துடன் கேட்கும் 'இது எப்படி...ஆக்சிடென்டா? காட்சி!
லூசிக்கு 'ஷூ' வாங்குவதற்கு, ஒரு கடையில் சாமும் அவன் நண்பர்களும்! சாமிடம் பணம் போதவில்லை! உடனே நண்பர்கள் எல்லாரும் தங்களிடமுள்ள பணத்தையும் கொடுத்து ஷூவை வாங்குகிறார்கள்! மீதிப்பணத்தில் சாம் பலூன் வாங்கப்போக, நண்பர்களில் ஒருவர், 'அவளுக்கு மட்டுமா...இல்ல எங்களுக்குமா? எனக்கேட்பார்! அடுத்த காட்சியில் எல்லோரும் கையில் பலூனுடன் வரிசையில் நடந்து செல்வது, அழகான கவிதை! 
கோர்ட்டில், தனக்கு பாதகமான வாதங்கள் வரும்போதும் அதை உணராமல் கைதட்டி மகிழும் சாம், ஒரு கட்டத்தில் இனி எதுவும் செய்ய முடியாது என்று உணர்ந்து குமுறும் காட்சிகள்,  குறிப்பாக ரிட்டாவிடம் எனது நிலையை உங்களால் புரிந்து கொள்ள முடியாது ஏனெனில் You are perfect! - அழுது கொண்டே கூறும் காட்சி!


சாமுக்கு ஆதரவாக வரும் அவனுடைய நண்பர்கள் நடிப்பு - அதுவும் கோர்ட்டில் விசாரணையின்போது அவர்கள் பண்ணும் அமைதியான கலாட்டாக்கள் அட்டகாசம்!
படம் முழுவதும் வரும் எளிமையான, அருமையான உரையாடல்கள்!
ட்ரையல் நடைபெறும்போது கண்காணிப்புடன் லூசியும் சாமும் பேசும்போது லூசி சாமிடம். 'I want no other daddy but You ! உடனேயே  கண்ணாடி பக்கம் (கண்காணிப்பவர்களை) திரும்பி சத்தமாகச் சொல்கிறாள், 'Did You hear that? I said I didn't want any other daddy but him! Why don't you write that down?'   

2001 இல் Seen Penn நடிப்பில், Jessie Nelson இயக்கத்தில் வெளியான இந்த ஹாலிவுட் படம் ஏராளமான விருதுகளை வென்றது. சிறந்த நடிகருக்கான Academy Award க்கு Seen Penn பரிந்துரைக்கப்பட்டார்!

Trailer


**********
ந்தப் படத்தை எப்படித் தமிழில் தழுவலாம்?
குழந்தையை முக்கியமாக ஹீரோவை விட்டுப் பிரியும் பெண்  - நிஜத்தில்  எவ்வளவு மோசமான பெண்கள் இருந்தாலும், தமிழ் சினிமாவுக்கு சேராது என்பதால் அந்தத் தாயை சாகடித்து விடலாம்!
ஹீரோவுக்கு உதவும் பெண் வக்கீல் - இவருக்கு காதலனோ, கணவனோ இருக்கக்கூடாது! அப்புறம் டூயட் பாடுவது எப்படி? அதுவும் தவிர படத்தில் ஹீரோவுக்கு உதவும் பெண் எப்படியும் (படம் முடிந்த பின்பும்!) அவரைக் காதலிப்பார் என்பது நமது ஆழ்ந்த நம்பிக்கை!
குழந்தை,தந்தை பிரிவு - குழந்தையின் தாத்தா தன் மகள் நினைவாக, தந்தையிடமிருந்து பிரிக்க நினைக்கிறார்! (மகள் தன் தந்தையை எதிர்த்தே ஹீரோவை திருமணம் செய்திருப்பார்)
ஒரிஜினல் படம் நெடுக நகைச்சுவை இழையோடி இருந்தாலும், தமிழில் அழுகுணித்தனமாக எடுப்பது விருது குறித்த நம்பிக்கையைக் கொடுக்கும்!
குழந்தையை அடிக்கடி அழ விடுவது, தாய்க்குலங்கள் மத்தியில் செண்டிமெண்டலாக நல்ல பலனைக் கொடுக்கும்! (அப்பாவுடன் இருக்கும்போது அம்மா பாசத்துக்கு ஏங்குவதாகவும், பிரிந்த பின் அப்பாவை நினைத்து!)
Seen Penn ஐப்பாருங்கள் அவரை மாதிரி ஒரு ஹீரோ! அதே ஹெயார் ஸ்டைலைப் பயன்படுத்தலாம்! புதுசா இருக்கும்!
எந்த விவரமான தமிழ்ப் பெண்ணாவது இப்படி ஒரு ஹீரோவைக் காதலித்து திருமணம் செய்வாளா? - என்ற கேள்வி எழக்கூடும்! - அதனால் ஒரு பெரிய ஹீரோ படத்துக்கு தேவை! (ஆனால் இதுக்காகவே  வில்லங்க பதிவர்கள் சிலர் கேட்கக்கூடும்!)

குழந்தையை இயல்பாக மனுஷக் குழந்தையாகவே நடிக்க வைக்கலாம்!   
அந்தக் காலத்திலிருந்து (ஷாலினி, ஷாமிலி) தமிழ் சினிமாவில் குழந்தைகள் அதிகப் பிரசங்கிகளாகவும், பெரிவர்களுக்கு அட்வைஸ், தத்துவம் சொல்லும் தெய்வத் திருமக்களாகவே மிரட்டுகிறார்கள்!
ஒருவர் மனவளர்ச்சி குன்றியிருந்தால் அந்தக் குடும்பத்தில் பெரியவரோ, சிறுவரோ எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினை மற்றவர்களைச் சமாளிப்பதுதான்! - இந்த யதார்த்தத்தை சரியாக வெளிப்படுத்தலாம்!
இதையெல்லாம் விட கொஞ்சமாவது நேர்மை இருந்தால் இன்ஸ்பிரேசன்னு, I am Sam படத்தைக் குறிப்பிடலாம்!

Saturday, July 9, 2011

யாழ்ப்பாணம் - ஒரு பயணம்!



இருக்கைகள் அனைத்தும் பயணிகளால் நிறைக்கப்பட்டு, எந்த மேலதிக வசதிகளும் இல்லாத ஒரேயொரு பேரூந்துதான் அந்த நேரத்திற்கு! திருகோண மலையிலிருந்து யாழ்ப்பாணம்! வழக்கம் போல இல்லாமல் ஒருபக்கத்தில் மட்டும் மூன்று பேர் அமரும்படியான இருக்கை அமைப்பு வேறு!

எனக்குப் பக்கத்தில் ஒரு அங்கிள் சிநேகமாகப் புன்னகைத்து, தன்னைப்பற்றி, என்னைப்பற்றி அளவளாவிக் கொண்டார்! பக்கத்தில் அவர் மனைவி. ஆன்டி கொஞ்சம் சந்தேகப் பார்வையுடன் (எங்கே தன் மகளைப் பொண்ணு கேட்டு வந்துடுவானோ என்பது போல) ஒரு அரைச்சிரிப்பு!

முன்பக்கத்தில் சலசலப்பு! ஒரு அங்கிள் தனது சூட்கேசை மேலே வைக்க, கண்டக்டர் ' பெட்டியை கீழே வைக்குமாறும், கீழே இருப்பவரின் தலையை பதம்பார்த்து மண்டை 'பணால்' ஆனா, கம்பெனி பொறுப்பல்ல என்று கூற, அங்கிள் 'போன கிழமையும் தான் இப்படியே வைத்துச் சென்றதாகவும் அப்படி எதுவும் நடக்காததால் அதற்கான சாத்தியம் இல்லையென்று வாதிட, 'விழுமா-விழாதா' ஒரு குட்டிப் பட்டிமன்றம்!

அந்தப் 'பதம்' பார்க்கும் பரிசோதனையின் 'எலி'யான அந்தப் பயபுள்ளையும் ஆர்வமாக இருதரப்பு வாதங்களையும் அமைதியாக கவனித்தது வேடிக்கையாக இருந்தது - நான் அந்த இருக்கையில் இல்லாததால்!

A-9 பாதையூடாக வரும்போது, வழிநெடுகிலும் இருமருங்கிலும்...ஏன் எல்லாப்பக்கங்களிலும் எதுவுமே தெரியாமல்! இரவு நேரத்தில் இருட்டாக இருப்பதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை என்பதால் இதுபற்றி மேற்கொண்டு விவரிக்கவில்லை!

அப்புறம் அங்கிள் தூங்க ஆரம்பித்ததும் நமக்கு ஏழரை ஸ்டார்ட் ஆகிட்டுது! அதுவும் அவர் ஆன்டி இருக்கிற பக்கம் சாயாமல் சரியா நம்ம பக்கமே தூங்கி விழுந்தார். ஆனாலும் ரொம்ப நல்லவரா, நேர்மையானவரா இருந்தார். தனது செயலுக்கு அடிக்கடி மன்னிப்புக் கேட்டார். அட! இவ்வளவு அவஸ்தையிலும் சமாளித்து லேசாகத் தூங்க ஆரம்பித்த என்னை தட்டி எழுப்பி ஸாரி சொன்னார் என்றால் பார்த்துக் கொள்ளுங்க!

***********

எப்பிடி யாழ்ப்பாணம்? நல்லா டெவலப் ஆகிட்டுது பார்த்தியா? - கேட்டார் ஒரு ஆன்டி! ஒரு கதையுமில்லாமல் அவசரமாக ஆமோதித்துக் கொண்டேன்! 

நிறைய புதிய வங்கிகள் ,கடைகள், தனியார் நிறுவனங்கள் காலூன்றிக் கொள்வதை வைத்து அப்படிச் சொல்வதில் கொஞ்சம் நியாயம் இருந்தாலும், அது அந்தந்த நிறுவனங்களின் வளர்ச்சி என்றுதானே...ஒரு நகரத்தின் வளர்ச்சி என்பது முதலில் அதன் தரமான சாலைகளிலும், வீதி ஒழுங்குகளிலும் பிரதிபலிக்கவேண்டும் என்பதை நான் அப்படியே நம்புகிறேன்! - யாழ் குடா நாடெங்கும் சாலைகளை அகலப்படுத்தி தரமான கார்ப்பெட் வீதிகள் போடும் பணி நடைபெறுவது மகிழ்ச்சியாக இருந்தது! 

எல்லா வங்கிகள், நிறுவனங்களும் குறிப்பிட்ட சில பகுதிக்குள்ளேயே முண்டியடிப்பதால், ஏற்கெனவே நெருக்கடி மிகுந்த பகுதிகள் மேலும் நெருக்கடியாக! கொஞ்சம் ஒதுக்குப் புறமான இடங்களில் அமையும் பட்சத்தில் நகரம் விஸ்தரிக்கப்படுவதுடன், நெருக்கமும் குறையும் என்று தோன்றுகிறது! குறிப்பாக பிரதான வீதி, முதலாம், இரண்டாம் குறுக்குத் தெருக்கள் இன்னும் யாராலும் கவனிக்கப் படாமலேயே! ஏனைய நகரங்களில் இந்த வீதிகளே அதிக புழக்கத்துடன்!

**********

என்ன இருந்தாலும், சில விஷயங்களில் 'கன்னா பின்னா'ன்னு 'டெவலப்' ஆகியிருப்பதை நல்லாவே உணர முடிந்தது!

**********

காதில் விழுந்த தொலைபேசி உரையாடல் ஒன்று!

ஹலோ! ஆ...என்னமாதிரி ### தானே நிக்கிறீங்க?
"---"
அங்க இல்லையே? மாறிட்டீங்களே...நான் நீங்க அங்கதான் எண்டு நினைச்சன்.. பிரண்டு ஒருத்தன் ரூம் எடுக்கலாமோன்னு கேட்டான் அதான்...எவ்வளவு போகுது ரெண்ட் இப்ப?
"---"
அதெல்லாம் என்னமாதிரி...எல்லாம் கொண்டு போகலாம்தானே?
"---"
பிரச்சனை இல்லையே?
"---"
ஓக்கே...ஓக்கே!

ஒண்ணுமே புரியல! நாம இன்னும் வளரணுமோ?

**********

ஹெல்மெட், பொது இடங்களில் சிகரெட் பிடித்தல் தொடர்பாக நான் நினைக்கிறேன் நான் பார்த்த அளவில் நாட்டின் ஏனைய இடங்களைவிட மிகக் கடுமையான கெடுபிடிகள் போலீசாரால்! - நல்ல விஷயம்! 

**********

பதிவர் ஜனா, பாலவாசகன் சந்தித்தார்கள்! யாழ் சென்று வந்த பின் பிரபல பதிவர் மதிசுதா தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடினார். நிறையப் பேசினோம். பிலாக் பற்றி நிறைய புதிய விஷயங்கள் சொன்னார்.அடுத்தமுறை வரும்போது சந்திப்பதாக முடிவு!

**********

எல்லாவற்றுக்கும் மேலாக இருபது வருடங்களாக உயர் பாதுகாப்பு வலயமென்று கூறி, பார்க்கக் கூட அனுமதிக்கப்படாத எங்கள் சொந்த ஊரை, தாய்மண்ணை சென்று பார்த்தேன்! மிகச் சமீபத்திலேயே செல்ல அனுமதிக்கப்பட்டது! இதுபற்றி பதிவிடுமாறு பதிவர் மதிசுதா கூறினார். அதுவரை அப்படியொரு யோசனை இருக்கவில்லை! பார்க்கலாம்!

Friday, July 1, 2011

லெவலிங்! சிங்களப் பொண்ணு! பல்பு!

லெவலிங்!


சென்றவாரம் Leveling செய்ய ஒரு காட்டு (நாட்டுப்) புறமா அனுப்பிட்டாங்க. கூடவே ஒரு கன்சல்டன்ட் மாமாவும்! செம்ம வெயில்! இன்ஸ்ரூமெண்டை 'செட்' செய்யும்போது பார்த்தா..

பார்த்தேனா.. 

பார்த்தேனா...

சும்மா சொல்லக் கூடாது! நல்லாத்தான் இருந்திச்சு! நாம கொஞ்சம் மெனக்கெட மாமா கண்டுபிடிச்சிட்டாரு! (ஏற்கெனவே 'உனக்கு நல்ல சிங்களப் பொண்ணு பாக்கிறேன், கட்டுறியா?' ன்னு சீரியஸா காமெடி பண்ணிட்டிருப்பார்) அப்புறமென்ன 'நாங்களும் சின்ன வயசில...'ன்னு ஒரு பிளாஷ்பாக்! எல்லாப் பயபுள்ளகளும் ஒரே மாதிரிதானா!


தமிழுக்கு வந்த சோதனை!

நம்ம Blog கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக Blogger in draft ஆக மாறிவிட்டது! பல புதிய வசதிகள் இருப்பதாகச் சொல்லப்பட்டாலும், User interface மாறி விட்டதால் பழைய வசதிகளைப் பாவிப்பதற்கே கொஞ்சம் சிரமமா இருக்கு! Edit HTML ஐ நேற்றுத்தான் கண்டுபிடித்தேன் என்றால் பாருங்க! (நம்ம அறிவும்(?!) ஒரு காரணமா இருக்கலாம்!)

நேற்று காலை ஒரு புதிய அதிர்ச்சி வேறு! நண்பர்களுக்கு கமெண்ட் போடலாம்னு போஸ்ட்ல போய் பார்த்தா, தமிழ் ட்ரான்ஸ்லேட்டரைக் காணவில்லை! (எனக்கு Phonetic முறைலதான் தட்டச்ச தெரியும்) எங்கே போய் தேடுறதுன்னு தெரியாம...முழிச்சு..தேடி....முடியல!

அதிர்ச்சியா இருந்துச்சு! ஒருவேளை நாம தமிழுக்கு ஆத்துற சேவை பிடிக்காம சதிமுயற்சியா பிலாக்கர்காரனுங்க சூனியம் வச்சிட்டானுங்களோ? 

அப்பிடீன்னா இனித் தமிழோட நிலைமை? - ஆடிப் போயிட்டேன்!

சரி பாத்துடலாம்னு நேரா பிலாக்கர்  help center போய் பிரச்சினைய சொன்னேன்! மதியம் பார்க்கும்போது சரி பண்ணிட்டாய்ங்க! தீயா வேலை செய்யுறாங்க! Thanks to Blogger!

எழுதிக் கிழிச்சது!

பதிவுலகிற்கு வந்து ஒரு வருஷமாயிற்று! உருப்படியா ஒண்ணும் எழுதினதா தெரியல! இனியும் எழுத முடியும்னு தோணல! பழைய பதிவுகளை பார்க்கும்போது எதுவும் திருப்தியா இல்லை!

குறிப்பாக உலக சினிமா, கொஞ்சம் நல்ல பதிவுகள் (அப்பிடியெல்லாம் இருக்கான்னு கேட்கக் கூடாது!) -   சொல்லவந்ததை அவசரத்தாலோ இல்லை சோம்பேறித்தனத்தாலோ எல்லாமே அரைகுறையா இருக்கிற மாதிரியே ஒரு உணர்வு! அதுக்காக நிறுத்திறதா இல்ல! - யாரும் அவசரப்பட்டு சந்தோஷப் பட்டுராதீங்க!

பீதி!

சரியா பன்னிரண்டு மணி! உச்சிவெயில் மண்டைபிளக்க.. நம்ம நண்பர் ராஜன் போன் பண்ணினார்!

ஜீ! அபீஸ்லையா?
இல்லண்ணே! ஒரு காட்டுக்குள்ள நிக்கிறேன்! லெவலிங் செய்றேன்!
ஒரு முக்கியமான மேட்டர் கதைக்கலாமா உங்ககூட!
முக்கியமான....மேட்டரா...அப்போ ஏதும் பொண்ணு விஷயமா? புதுசா இருக்கே
எப்பிடி ஜீ? அதேதான்! உங்களுக்கு ஒரு பொண்ணு பாக்கலாமான்னு? கேக்குறாங்க!
இது வேற ஆரம்பிச்சுட்டீங்களா? சொல்லவே... இல்ல? கைவசம் எத்தினை வச்சிருக்கீங்க? 
ஜோக் இல்ல ஜீ! சொல்லுங்க!
போங்கண்ணே சின்னப் பசங்ககிட்ட போய்...
கொஞ்சம் சீரியஸா கதைங்க நீங்க இன்னும் சின்னப்பிள்ள இல்லையே! உங்களுக்கும் .....கழுதை வயசாகுதுல்ல!
ஏண்ணே...? ஏன்? வெயில் நேரத்தில தலைல வெந்நிய ஊத்துறீங்க? ஏற்கெனவே தலையிடிக்குது...நீங்கவேற புதுசா பீதியக் கிளப்புறீங்க! ஆளவிடுங்க!

பல்பு!

அப்பப்ப யாரிட்டயாவது பல்பு வாங்கிறதே வேலையாப் போச்சு! ஆனாலும் அசரமாட்டோமே! நாங்கெல்லாம் அப்பாகிட்டயே பல்பு வாங்கினவய்ங்க!
வலைப்பூவ சொந்த டொமைனுக்கு மாத்திறாங்கதானே அதில என்ன அட்வான்டேஜ்னு தோணிச்சு! சரி தெரிஞ்சுக்கலாம்னு,

நண்பன் பார்த்திகிட்ட சிம்பிளா ஒரு கேள்வி கேட்டேன்!
'அப்பிடி மாத்தினா என்னாகும்? உன்னோட ஐடியா என்ன?'

அதுக்கு அவன் அத விட சிம்பிளா ஒரு பதில் சொன்னான்!
'மாத்தலாம்! ஆனா அதுக்குமுதல் உருப்படியா ஏதாவது எழுதலாமே!'

தேவையா எனக்கு? - பட், அந்த நேர்மை எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது!