Friday, December 25, 2015

உரையாடல்!

'நாய் வாலை நிமிர்த்த முடியாது' என்றார் தூரத்து நண்பர். 

தூரத்து நண்பர்களுடன் பேசும்போது மிகுந்த குழப்பமாகி விடுகிறது. நாம் விளையாட்டாகப் பேசுவதை அவர்கள் சீரியசாக எடுத்துக் கொள்ளலாம். நாம் சீரியசாகப் பேசுவதை விளையாட்டாக எடுத்துவிடலாம். அதைவிடக் கொடுமை, அவர்கள் மிகுந்த சீரியசாகப் பேசும்போது நாம் இசகுபிசகாகக் குபீரென்று சிரித்துத் தொலைத்துவிடலாம். 

இந்தக் குழப்பத்தைத் தவிர்க்க நான் கையாளும் உத்தி எதிரிலிருக்கும் நபர் பேசும் அதே பாணியிலேயே பதிலுரைப்பது.
நண்பரின் முகத்தைப் பார்த்தேன் சீரியசாகத் தோன்றினார்.
'எனக்கு அதில் எந்த ஆர்வம்மில்லை' என்றேன் சீரியசாக. 
கொஞ்சம் குழப்பமானர். தெளிவுபடுத்தினேன்.
'என் பரட்டைத்தலையையே படிய வைக்க முடியாத நிலையில் நாய் வாலை நிமிர்த்துவது பற்றியெல்லாம் நான் யோசித்ததில்லை'.

அதுசரி நாய்வாலை நாம் ஏன் நிமிர்த்த வேண்டும்? அதுகுறித்து நாய்களுக்கு ஏதேனும் புகார்கள் இருக்கின்றனவா? ஆனாலும் நம் முன்னோர் அந்தக்காலத்தில் எதையும் தம் அனுபவத்திலேயே உணர்ந்து, தெளிந்துதான் பழமொழிகளை உருவாக்கினார்கள் எனச் சொல்லப்படுகிறது. அந்தவகையில் நாய்வாலை தனித்தனியாகவோ குழுமுயற்சியாகவோ நிமிர்த்துவதற்கு கடும் முயற்சி செய்திருக்கக்கூடும் என்பதில் ஐயமில்லை.

'நீங்கள் சொல்வதில் ஒரு நியாயமிருக்கிறது. அதுதான் உண்மை என்று நானும் நம்புகிறேன்' என்றேன். 
'நேரமாகிவிட்டது' என்றார்.

தூரத்து நண்பர்களுடனான என்னுடைய இந்த உரையாடல் உத்தி இப்போதெல்லாம் நல்ல பலனைக் கொடுகிறது. அநேகமாக அவர்கள் இன்னொருமுறை நம்மிடம் எந்த முடிவுகளையும் தெரிவிப்பதோ சந்தேகம் கேட்பதோ இல்லை.

3 comments:

  1. ஹா.. ஹா...
    இதுதான் உண்மை.

    ReplyDelete
  2. எனக்கு இந்த பதிவில் பல உள் அர்த்தங்கள் புலப்படுகிறது. நீங்கள் அவற்றை எல்லாம் சிந்தித்துக் தான் எழுதினீர்களோ தெரியவில்லை... நேரடியாக படிக்கும் போது நகைச்சுவையாக இருந்தாலும் பலமான பல சிந்தனைகளை தூண்டிவிடுகிறது..

    நன்றி

    ReplyDelete