Thursday, December 31, 2015

கடந்து செல்லல்!

பனி படந்த அழகான குளிர்காலைப் பொழுது. யாழ்நகரம். பரபரப்பாக மக்கள். அலுவலகம் செல்லும் வழியில் வீதியில் நடந்துகொண்டிருந்தேன். ஒருகணம் துணுக்குற்றேன். எதிரே தூரத்தில் எழுத்தாளர் ஙேநா வந்துகொண்டிருந்தார்.

ஙேநாவின் படைப்புகளை அவ்வளவு இலகுவில் நாம் கடந்துசெல்ல முடியாது. ஙேநாவையும் அவ்வளவு இலகுவாக நாம் புறம்தள்ளிக் கடந்துவிட முடியாது. உண்மையைச் சொன்னால், யாழ்ப்பாணத்தில் யாரையும் அவ்வளவு இலகுவில் கடந்துவிட முடியாது. வீதிப்போக்குவரத்து முறை அப்படி.

இரு வருடங்களுக்குமுன்னர் வந்தபோது, 'வீதியில் இடையிடையே என்ன மஞ்சள் வர்ணத்தில் கோடு? யாரும் கண்டுகொள்ளாமல் எதுக்கு டிசைன்? என ஆச்சரியமடைந்தேன். 'அது பாதசாரிகள் கடவை. ஆனால் கவனம். பயன்படுத்தினால் உயிருக்கு உத்தரவாதமில்லை' என்றார்கள். இப்போதும் கடக்கும்போது எந்திரசாரிகள் விரோதமாக முறைக்கிறார்கள்.

சமீபத்தில் புத்தகம் வெளியிட்ட எழுத்தாளரை எதிரே காணும்போது உடனே அருகிலிருக்கும் சந்துக்குள் புகுந்து தெறித்து ஓடிவிடவேண்டும் என்கிற தமிழ்கூறும் நல்லுலகின் நம்பிக்கையை நான் பின்பற்றுவதில்லை. ஆனாலும் பேய் நம்பிக்கை இல்லாமலே நாம் பேய்க்குப் பயப்படுவதில்லையா?

நம்முன் இரண்டு மோசமான தெரிவுகள் மட்டுமே உள்ளபோது அதில் வலுக்குறைந்ததைத் தேர்வதுதானே முறை? ஙேநாவின் சமீபத்திய படைப்பு தமிழ் எழுத்துலகில் ஒரு மைல்கல். நேராக நம் தலையிலேயே 'ணங்'கென்று போட்டது போலிருக்குமாம்.

ஆபத்துக்குப் புண்ணியமில்லை. உயிராவது கூந்தலாவது என்று வீதியைக் கடந்துவிட்டேன். ஆக, ஙேநாவை கடந்துவிட்டேன் என்பதே ஆசுவாசமாக இருந்தது. மனிதர் லேசுப்பட்டவர் இல்லை. பேசப்பிடித்துக் கொண்டால் விடமாட்டார்.

2 comments:

  1. ஹா... ஹா...

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. ஹாஹா.. செம... இன்று திரும்பவும் வாசிக்க நேர்ந்தது.

    நீங்கள் மொறட்டுவை பல்கலை பாஸ்-அவுட்டா?

    ReplyDelete