நன்கு திட்டமிட்டு நிகழ்த்திய தொலைதூரப் பயணமொன்றின் மறுநாள் காலையில் டூத் பேஸ்ட் உள்ளிட்ட வஸ்துகளை எடுத்துவைத்துக்கொண்டு சரியாக பிரஷ்ஷை மட்டும் மறந்து தொலைத்ததை உணரும் 'ஙே' ரகமா நீங்கள்?
அப்படியானால் நீங்களும் நானும் ஒரே பேரூந்தில் ஏறிவிடுகிறோம்!
பாரிய திட்டமிடல் சிக்கல்களை உருவாக்காத பயணங்களே உண்மையான பயண இன்பத்தை நல்குபவை என்பது என் கருத்து. தவிர, தொலைதூரப்பயணம் என்பது உண்மையில் பயணத்தூரம் சார்ந்ததல்ல.. மனவோட்டமும், காலமும் சேர்ந்தது என்கிற கிரேக்க அறிஞர் ஜியோக்கிரீட்டசுவின் (கி.மு.792 - 756) கூற்றையும் நாம் நினைவு கொள்ளவேண்டும்.
இந்தப் பேரூந்தில் பயணிக்கும் மனிதர்களின் முகங்களைப் பார்க்கும்போது... (மனிதர்களின் முகங்கள் எப்போதும், எங்கும் மனிதர்களின் முகங்களைப் போலவேதான் இருக்கின்றன. ஆனால் ஒரு பயணக்கட்டுரையை எழுதும்போது வேற்றுக் கிரகவாசிகளைப் பார்த்ததுபோல அல்லது நாம் செவ்வாய்க் கிரகத்திலிருந்து வந்தவர்களைப் போலவே பாவனை செய்யவேண்டும் என்பது மரபாம். ஆகவே..) டிப்பொசிட் இழந்த வேட்பாளர்களைப் போல சிலர், சொந்தமாக எதுவும் இல்லாமல் குத்துமதிப்பாக அடுத்தவர்களைக் குறை சொல்லும் அரசியல்வாதிகள் போல சிலர், எங்கட சனத்துக்குப் புத்தியே வராது என இரண்டு நாட்களில் திட்டப் போகிறவர்கள் போலச் சிலர், மற்றும் ஏராளமான என்னத்த வோட்டுப் போட்டு...
இந்தவகைப் பேரூந்துப் பயணத்தில் எந்தவிதமான சிக்கல்களுமில்லை. இரண்டு சீட்களுக்கு இடையிலுள்ள கைப்பிடியில் யார் கை வைப்பது என்பதில் சிவாஜி, கமலுக்கிணையான சிறந்த தூக்கக்கலக்க நடிகருக்கான போட்டியில்லை. சமயங்களில் பயணங்களில் 'எங்கே செல்லும் இந்தப்பாதை' என்கிற ஞான நிலையை அதாவது இந்த மனித வாழ்வின் சாரத்தைப் புரிந்துகொள்கிறார்கள். வாழ்வின் சாரத்தைப் புரிந்தவர்களுக்கு என்ன கவலை? ஏது குழப்பம்? எது தடை? எந்த நெருக்கடியிலும் தூங்கிவிடுகிறார்கள்.
இங்கே சீட் தேவையேயில்லை. பயப்படாதீர்கள் நீங்கள் தேவையென்றாலும் கூட யாரும் தரமாட்டார்கள். உணவுக்கட்டுப்பாடு அவசியமில்லை. விரும்பிய இடத்தில் இடையில் இறங்கி டீ குடிக்கலாம். யாரும் கேட்க மாட்டார்கள். நீங்கள் வந்த பஸ் போய்விடுமா என்கிற கவலை வேண்டாம். இன்னொரு பஸ்ஸில் தொடரலாம். கொஞ்சம் வேகமாக முயற்சித்தால் நீங்கள் வந்த பஸ்ஸையே பிடித்துவிடலாம்.
அவ்வளவு ஏன் உங்களுக்கு அவசரமில்லையெனில் திரும்ப வீட்டுக்குப் போய் தூங்கிவிட்டு நாளைக்குக் கூடச் செல்லலாம். மொத்தத்தில் அருமையான பயண அனுபவம்.
வெள்ளவத்தை டு தெஹிவளை - பயணத்தூரம் 2.5 km
நடந்து செல்ல 1/3 மணிநேரம்..பேரூந்தில் 40 நிமிடங்கள் மட்டுமே!
No comments:
Post a Comment