Friday, November 29, 2013

இரண்டாம் உலகம்!



படம் பார்க்கும்போது, ஏனோ செல்வராகவன் கொடுக்கும் பேட்டிகள் ஞாபகத்துக்கு வந்து தொலைத்தன. தமிழில் இதுவரை இல்லாதவகையில் நல்ல சிஜி அமைந்திருக்கிறது. எனினும் அழகான முகம், அகலமான முதுகு, தடந்தோள்கள், ஆஜானுபாகுவான உயரம் என்று அனுஷ்காவின் பிரம்மாண்டத்துக்கு முன் வேறெதுவுமே அவ்வளவு பிரமாதமாக இல்லை.

வழமையான செல்வராகவன் பட நாயகிகள்,ஆண்களைவிட உறுதியானவர்களாக, திடமாக முடிவெடுப்பவர்களாக இருப்பார்கள். மாறாக இதில் ஆர்யாவிடம் காதலைச் சொல்ல முடியாமல் தயக்கம், தவிப்புடன் இருக்கிறார். தப்பில்லை. ஆனால் தனியாளாக முப்பது பேருக்கு திருமணம் பேசி, நடாத்தி வைத்தவர் போலிருக்கும் அனுஷ்கா வெட்கப்படுவதுதான் (அவர் சொன்னால் கூட நம்பியிருக்க மாட்டேன்,தோழி சொல்கிறார்) அதிர்ச்சியளிக்கிறது. அவரே மூன்று கல்யாணம் முடித்தவர்போலத்தான் இருக்கிறார் என்பது கூடுதல் சிறப்பு. ஆனால் ஆர்யா கச்சிதமாகப் பொருந்துகிறார் - அவர் நடித்த, இனி நடிக்கவிருக்கும் எல்லாப் படங்களையும் போலவே!

அனுஷ்காவின் மருத்துவத் தோழிகளுடனான உரையாடல்கள், ஆர்யா அனுஷ்காவின் இரவு உரையாடல் போன்ற இடங்களில் செல்வா டச். ஆர்யா தன் இயலாத தந்தைக்கு உதவும் காட்சிகளில் செண்டிமெண்ட் பிழியாமல் வயலின் வாசிக்காமல் இயல்பாகக் கடந்துவிடுவது அழகு. அநிருத்துக்கு வயலின் வாசிக்கத் தெரியாததுதான் காரணமா என்ற சந்தேகம் வருகிறது. தெரிந்திருந்தால் பின்னியிருக்ககக்கூடும்.

'இரண்டாம் உலக'த்தில் காதல் இல்லை. அதனால் பூக்கள் பூப்பதில்லை. பெண்களை மதிப்பதில்லை. அதனால் அழிந்துகொண்டிருக்கிறது. அந்த அழிவைத் தடுக்க ஒரு குழந்தை பிறக்க வேண்டும். அதற்கு வர்ணாவுக்கு ஆர்யா மேல் காதல் வரவேண்டும். இது ஆரம்பத்தில் சொல்லப்படுகிறது.

அங்கே இருக்கும் ஆர்யாவும் (மறவன்) வழமையான செல்வராகவன் பட ஹீரோ போலவே அனுஷ்கா (வர்ணா) பின்னால் அலைகிறார். அது காதல் இல்லையா? மறவன்,வர்ணாவை மதிக்கிறான். வர்ணாதான் ஆரம்பத்தில் கண்டுகொள்ளவில்லை. பின்னர் அவளுக்கும் காதல் வந்துவிடுகிறது. அதற்கு நம்மூர் ஆர்யாவின் தேவை என்ன? எந்தவகையில் அவர் பயன்படுகிறார்? நம் ஆர்யா அங்கே போய் வர்ணாவைப் பார்த்தவுடன் பூக்கள் பூக்கின்றன. இது மட்டும்தான் ஆர்யா அங்கே செல்வதற்கான தேவை? இதற்குத்தான் அவர்களின் கடவுள் அனுஷ்காவைப் போட்டுத்தள்ளி, ஆர்யாவை அங்கே அழைக்கிறார்? ஃபான்டசி படங்களில் குறித்த ஒரு நபர் இன்னோர் உலகத்திற்கு தற்செயலாகப் போகலாம். ஒரு காரணத்தோடு செல்லும்போது அது சரியாக, வலுவாக  இருக்க வேண்டிய அவசியமில்லையா? செல்வராகவன் அசிஸ்டென்டுகளுடன் கதை, திரைகதை பற்றி விவாதிப்பாரா? அவர்களின் கருத்தைக் கேட்பாரா?

இப்படியெல்லாம் கேட்கலாம். ஆனால் படம் பிடிக்கவில்லை எனச் சொன்னவர்களை ஒருவாரமாக பலர் ஃபேஸ்புக்கில் மானாவாரியாக திட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் கேட்க மாட்டேன்.  'ஆயிரத்தில் ஒருவ'னில் தமிழன் வரலாறு சொன்னதிலிருந்து செல்வராகவன் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் என நம்பும் கூட்டம் உருவாகிவிட்டது. கூடவே இந்தப்படத்துக்கு ஏன் அறுபத்தேழு கோடி செலவாயிற்று என்ற பாமரத்தனமான கேள்வியும் எழுந்தது.

இரண்டாம் உலகத்தில் தமிழில் பேசுவது கேட்க மகிழ்ச்சியாக இருந்தது. வெள்ளைக்கார நண்பர் ஒருவர் 'அது நம்மை நோக்கித்தான் வந்திட்டிருக்கு' பாணியில் தமிழில் பேசும்போது விசிலடிக்கத் தோன்றுகிறது. இயக்குனர் நினைத்திருந்தால் அவதார் படத்தைப்போல தனியான ஓர் பாஷையையே உருவாக்கி பேச வைத்திருக்கலாம். இருந்தும் தமிழிலேயே பேச வைத்திருப்பது இயக்குனரின் தமிழுணர்வைக் காட்டுகிறது. பெருமையாக இருக்கிறது.

இரண்டாம் உலகத்தின் கடவுளான 'அம்மா'வைக்கடத்த அவ்வப்போது அயல்நாட்டு கொடிய மன்னன் முயல்கிறான். ஆர்யா சொன்ன அளவுக்கு முக்கியமானவராக சொந்தநாட்டில் யாரும் அம்மாவைக் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. கடவுளைக் கடத்தும்போது, 'இவிங்களுக்கு வேற வேற வேலையேயில்லை' என்பதுபோல அசுவாரசியமாக வேடிக்கை பார்க்கிறார்கள். 

'அம்மா'வைக் காப்பாற்ற நாயகி, நாயகன் இருவரும் சேர்ந்து சண்டையிடுகிறார்கள். இடையிடையே தமக்குள்ளே பேசிக் கொள்கிறார்கள். வழமையான சண்டைக் காட்சிகளில் அடியாட்கள், ஹீரோவிடம் ஒவ்வொருவராக வந்து அடிவாங்க, மற்றவர்கள் சுற்றி நின்று தனியாக நடனம் ஆடிக் கொண்டிருப்பார்கள். ஆனால் இங்கே பொறுமையாக அவர்கள் பேசுவதை அனுமதிக்கிறார்கள். ஒட்டுக் கேட்பதுபோல ஆர்வமாகக் கூர்ந்து கவனிக்கிறார்கள். அதன்பின்னரே ஒவ்வொருவராக வந்து அடிவாங்குகிறார்கள். இதில் அம்மாவை யாரோ தூக்கி வைத்திருக்க, அவரும் சுவாரசியமாக வேடிக்கை பார்ப்பது அட்டகாசம்! தமிழ்சினிமாவில் இது முற்றிலும் புதிய முயற்சி. வரவேற்கலாம்.

'அம்மா'வை ஒவ்வொரு முறையும் மிக இலகுவாக, நர்சரியில் படிக்கும் அஞ்சு வயசு அம்முவை ஐஸ்பழம் வாங்கிக் கொடுத்து 'அம்மா கூப்பிட்டாங்க' என்று சொல்லிக் கடத்துவதுபோல, சாகவாசமாக அழைத்துச் செல்கிறார்கள். அம்மாவும் ஜாலியாக டூர் போவதுபோல கிளம்பிவிடுகிறார். உடனே நாட்டின் படைவீரர்கள் பதினைஞ்சு பேரும் துரத்துகிறார்கள்.கடவுளையே கடத்தும்போது, துரத்திச் சென்று  பாதி வழியில் திரும்பி வந்து, 'இனி பனிக்காலம். நனைஞ்சா காய்ச்சல் வந்துடும். ஆறு மாசம் கழிச்சு ஆறுதலாப் பார்த்துக்கலாம்'  என்பது போல நடந்துகொள்வது மேலதிக கொடுமை!

கிராஃபிக்ஸ் சிங்கத்தின் சண்டைக்காட்சியில் சிஜி அற்புதமாக இருந்ததாக பலரும் பாராட்டியிருந்தார்கள். சிங்கத்தின் முகம் ஒரு பரிதாபமான மனிதனுடையதைப் போல இருந்தது. ஏனோ தயாரிப்பாளர் ஞாபகம் வந்தது. அது என் பிரச்சினை. சிலருக்கு பயமாகவும் இருந்திருக்கலாம், கொலைவெறியும் வந்திருக்கலாம். குறிப்பாக தயாரிப்பாளருக்கு செல்வாவின் முகம் தெரிந்திருக்கலாம்.

இதுபோன்ற படங்கள் தமிழ்சினிமாவை அடுத்தகட்டத்துக்கு கொண்டுசெல்லுமா எனத் தெரியவில்லை. ஆனால் தயாரிப்பாளர்களை நிச்சயமாக அடுத்தகட்டத்துக்கு கொண்டுபோய் விட்டுவிடும்.

தமிழ்சினிமாவில்  நல்ல முயற்சிகளுக்கு ஆதரவில்லை, யாருக்குமே அறிவில்லை. தமிழ்சினிமா உருப்படாது. தமிழர்கள் ஃபான்டசி படத்திற்கு தயாராகவில்லை என்கிற செல்வராகவன் பேட்டியை விரைவில் எதிர்பார்க்கிறேன்.

செல்வராகவனைக் கொண்டாடுகிறேன். அது, புதுப்பேட்டைக்காக!

5 comments:

  1. ஹி!ஹி!!ஹீ!!!எல்லோருக்கும் என்ன தான்யா பிரச்சினை?ஒலகத் தரத்துல சினிமா வேணுமா?அதுக்கு ஏய்யா தமிழ்ப் படம் பாக்குறீங்க?///எவ்ளோ அடி தான் அவரு வாங்குவாரு என்கிற நல்லெண்ணம் தான்!கண்டுக்காதீங்க!ஹ!ஹ!!ஹா!!!!

    ReplyDelete
  2. //இப்படியெல்லாம் கேட்கலாம். ஆனால் படம் பிடிக்கவில்லை எனச் சொன்னவர்களை ஒருவாரமாக பலர் ஃபேஸ்புக்கில் மானாவாரியாக திட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் கேட்க மாட்டேன். //

    ஹா..ஹா..மணிரத்னம் வரிசைல செல்வா சேர்ந்துட்டாரேன்னு பெருமைப்படறதா, பரிதாபப்படறாதான்னு தெரியலியே!

    ReplyDelete
  3. //'அம்மா'வை ஒவ்வொரு முறையும் மிக இலகுவாக, நர்சரியில் படிக்கும் அஞ்சு வயசு அம்முவை ஐஸ்பழம் வாங்கிக் கொடுத்து 'அம்மா கூப்பிட்டாங்க' என்று சொல்லிக் கடத்துவதுபோல, சாகவாசமாக அழைத்துச் செல்கிறார்கள். அம்மாவும் ஜாலியாக டூர் போவதுபோல கிளம்பிவிடுகிறார்//

    படத்தில் மோசமான காட்சி ஏதோ குழந்தையை இடுப்பில் தூக்கி வைத்துக்கொள்வது போல் ’கடவுளை’ கடத்துவது தான்..ஆர்யா இரண்டாம் உலகத்தில் நுழையும்போது, ’கடவுள்’ அண்ணாந்து மேலே பார்த்தபடி, ப்ளூ கலர் லைட்டிங்கில் கொடுத்த எக்ஸ்பிரசனைப் பார்த்து, பாவியானேன்!...ஆம், கடவுளிடமே பிட்டை எதிர்பார்த்த பாவியானேன்!

    ReplyDelete
  4. இரண்டாம் உலகம் எல்லோரையும் நொந்து போக வைத்துவிட்டது என்பது வருத்தமான விசயம்...

    ReplyDelete
  5. உலக சினிமாவின் விமர்சனம், Trailer, டவுன்லோட் லிங்க், rating இவை அனைத்தும் ஒரே இடத்தில் தமிழில் கிடைக்கிறது.

    https://www.facebook.com/pages/Hollywood-Movies/174422536006819

    My Posted Movies in this Page:

    1) The Prestige (2006)
    2) City of god (2002)
    3) 11:14 (2003)
    4) Run lola run (1998)
    5) 3-Iron (2004)
    6) Buried (2010)
    7) Eternal Sunshine of the spotless mind (2004)
    Mr.Nobody (2009)
    9) The Chaser (2008)
    10)The Thieves (2012)
    11)Source Code (2011)
    12)The Croods (2013)
    13)Inception (2010)
    14)Timecrimes (2007)
    15)Rope (1948)
    15)Groundhog day (1993)
    16)Dial M for murder (1954)
    17)The Terminal (2004)
    18)Reservoir Dogs (1992)
    19)Fight Club (1999)
    20)Memento (2001)
    21)A Beautiful Mind (2001)
    22)Pulp fiction (1994)
    23)The Shawshank Redemption (1994)
    24)Children of Heaven (1998)
    25)The way home(2002)
    26)50 first dates (2004)
    27)12 monkeys (1995)
    28)The Curious Case of Benjamin Button (2008)
    29)New World (2013)
    30)Disconnect (2012)
    31)Life is beautiful (1997)
    32)The Dark Knight Rises (2012)
    33)Memories of Murder (2003)
    34)The Time Traveler's wife (2009)

    ReplyDelete