Friday, November 22, 2013

மூடர்கூடம், இன்னும் பிடித்தவை சில..


"ஒரு மனுஷன் எவ்வளவு கடன் வாங்குறானோ அந்தளவுக்கு பணக்காரனா இருக்கான். ஆயிரத்தில் சம்பாதிக்கிறவன் ஆயிரத்தில கடன் வாங்குறான். லட்சத்துல சம்பாதிக்கிறவன் லட்சத்தில..... கோடிக்கணக்கில ஒருத்தன் கடன் வாங்குறான்னா....  என்ன அர்த்தம்?"

"தெரியல பாஸ்!"

"சென்ட்றாயன்! நீங்க தனியா இருக்கிற ரூம்ல ட்ரெஸ் இல்லாம ஒரு பொண்ணு  வந்துச்சுன்னா எனக்கிது பழக்கமில்ல, தெரியலன்னு விட்ருவீங்களா சென்ட்றாயன்?"

"ட்ரை பண்ணுவேன் பாஸ்"

"அப்ப ட்ரை பண்ணுங்க சென்ட்றாயன்..எடுத்த உடனே தெரியலன்னு சொல்லாதீங்க"

'சூது கவ்வும்' படத்திற்குப் பிறகு இந்த ஆண்டில் வந்த படங்களில் எனக்கு மிகப் பிடித்த படம் 'மூடர் கூடம்'. சரவெடியான வசனங்கள், அதை நவீன் சீரியசாகப் பேசும் பாணி அட்டகாசம்.

நகைச்சுவை என்பது வாய்விட்டு, வயிறு வலிக்கச் சிரிக்க வைக்க வேண்டியதில்லை என்பது என் நம்பிக்கை. சிறு புன்னகையுடன் அட! போட வைப்பதையே நான் அதிகம் விரும்புகிறேன். சூது கவ்வும் படமும் அதைச் செய்தது. 'சூது கவ்வும்' பார்த்து சிரிப்பே வரவில்லை எனக் குறைபட்டவர்களும் இருக்கிறார்கள்.நகைச்சுவை நடிகரைப் பார்த்தவுடனேயே சிரிக்க ஆரம்பித்துவிடுவதற்கு பழக்கப்பட்டிருப்பதால், மாற கால அவகாசம் தேவைப்படலாம்.

கொரியப் படத்தைச் சுட்டுவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. பார்த்துப் பார்த்துச் சலித்த தமிழ்ப்படங்களையே மீண்டும் மீண்டும் சுட்டு, மிகப்பெரிய வெற்றிபெறும் கமர்ஷியல் படங்கள் எடுக்கப்படும்போது வித்தியாசமான முயற்சிகள் அப்படி வரும்போது வரவேற்கவே தோன்றுகிறது.என்ன இன்ஸ்பிரேஷன் என்று ஒரு வார்த்தை சொல்லிவிடலாம். என்வரையில், ஒரு I am Sam படத்தை அப்படியே சுட்டு தமிழில் ஒரு,'ஐயாம் சாம்'எடுப்பதில் எந்தப் பிரச்சினையுமில்லை.'தெய்வத்திருமகளாக'எடுப்பதைத்தான் சகிக்க முடிவதில்லை. அதுவும் அந்த அபத்தக் குப்பைகள் காவியங்களாகக் கொண்டாடப்படுவது மேலதிக கொடுமை.

படத்தின் இசையும் பல இடங்களில்  அட்டகாசமாக இருந்தது. கதாபாத்திரங்களின் முன்கதை சொல்லலில் குபேரனின் கார்ட்டூன் ஸ்டைல் முன்கதையும் இசையும் மிகக் கவர்ந்தது.சென்ட்றாயன் அசத்தியிருக்கிறார், கூடவே அந்தக் குட்டிப் பொண்ணும்!

புத்திசாலித்தனமான வசனங்களில் உலக மயமாக்கல், முதலாளித்துவம் சார்ந்த கருத்துக்கள், புத்திமதிகள் சில இடங்களில்,  குறிப்பாக நவீன் பேசும் வசனங்களைவிட, குபேரன் பேசும்போது சற்றுத் தூக்கலாகவே தெரிகிறது. கொஞ்சம் பிசகினாலும் பிரச்சாரமாக மாறிவிடக்கூடிய அபாயமிருக்கிறது. இயக்குனர் ராமின் படங்களில் நிகழ்வதும் இதுதான். மிக இயல்பாக, நகைச்சுவையுடன் இதனைக் கையாண்டவர் இயக்குனர் சிம்புதேவன். என்ன துரதிருஷ்டவசமாக புலிகேசியில் வடிவேலு இருந்ததாலேயே பல நுணுக்கமான விஷயங்கள் பலரால் கண்டுகொள்ளப்படவில்லை என்றே தோன்றுகிறது.


ழுதுவதிலுள்ள சோம்பேறித்தனம் போலவே படம் பார்ப்பதிலும் இருக்கிறது. புதிய படங்களைப் பார்க்காமல் சமயங்களில் பார்த்த படங்களையே திரும்பவும் பார்க்கும் கெட்ட பழக்கமும் நீண்ட நாட்களாகஉள்ளது.  அப்படித் திரும்பப் பார்க்கவைத்த படம் 'சூது கவ்வும்!'.

குறைகள் பற்றிப் பொருட்படுத்தத் தேவையில்லாத ( ஒரு உதாரணத்துக்கு, Life of Pi படத்தில் கிராஃபிக்ஸ் சரியில்ல, மொக்கைன்னு சொல்லலாம் ஆனால் அந்தப் படத்திற்கு அது ஒரு பொருட்டல்ல) அட்டகாசமான படம். 'சூது கவ்வும்' வெற்றி பெற்றபோது, தற்போது வெளியாகும் படங்களில் அநீதி ஜெயிப்பது போலவே வருகின்றன எனக் குறைபட்டுக்   கொண்டவர்களும் உண்டு. 'மங்காத்தா' இவற்றுக்கு முன்னோடியாக இருக்கலாம். எனக்கென்னவோ அவைதான் உண்மையிலேயே யதார்த்த சினிமாவோ எனத் தோன்றுகிறது.

 'நடுவில் கொஞ்சம் பக்கத்தைக் காணோம்', 'பீட்சா', 'வத்திக்குச்சி', 'உதயம் NH4' போன்ற படங்களும்  மிகப் பிடிச்சிருந்தது. இந்த வரிசையில் இறுதியாகப் பார்த்தது, 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?'-எனக்குப் பிடிச்சிருக்கு. அடுத்ததாக ஆவலுடன் எதிர்பார்ப்பது 'பண்ணையாரும் பத்மினியும்' படம்தான். எனக்குப் பிடித்திருந்த 'மதுபானக்கடை', 'வ.குவாட்டர் கட்டிங்' படங்கள் கூட இப்போது வந்திருந்தால் வெற்றிபெற்றிருக்குமோ எனத் தோன்றுகிறது.இதுபோன்ற படங்களையே பார்க்க பார்க்க ஆவலாக இருக்கிறது. பெரிய நடிகர்களின் படங்களைப் பார்க்கும் ஆர்வம் சுத்தமாக இல்லாமல் போய்விட்டது. இயக்குனர்கள் வெற்றிமாறன், தியாகராஜன் குமாரராஜா படங்களை மட்டுமே ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.


குவென்டின் டெரென்டினோ படங்களைப் பார்த்து இப்பிடித் தமிழில் வராதா? என்று ஏங்கிய பலருக்கு ஆரண்யகாண்டம் பார்த்தபோது ஏற்பட்ட உணர்வைச் சொல்லிவிட முடியாது. அனால் அந்தப் படத்தைப் புறக்கணித்தே தீருவது என்ற முடிவில் இன்றுவரை உறுதியாக இருக்கும் தமிழ்சினிமாவின் ஆண்டவர்கள், அறிவுஜீவிகள், அடையாளங்களைப் பார்க்கும்போதுதான் எவ்வளவு மோசமான, கேவலமான 'கொண்டாடப்படுதலின் அரசியல்' இருப்பது தெரியவருகிறது. 'தியாகராஜன் குமாரராஜா' பெயரை இவர்கள் யாரும் உச்சரித்ததாகவே தெரியவில்லை. செல்வராகவன் சிலாகித்திருக்கிறார்.

'தமிழ்சினிமாவின் அடையாளம்' பதவியையும் அவ்வப்போது புதுப்பித்துக் கொள்ளலாம். இளையராஜா இனி ஓய்வெடுத்துக் கொள்ளவேண்டும் என அவ்வப்போது அவர்மீது அக்கறை(?) கொள்பவர்களும்கூட, விடாப்பிடியாக நாற்காலியைப் பிடித்துவைத்திருக்கும் 'அடையாளங்கள்' குறித்து ஏதும் பேசுவதில்லை. ஒருவரை தமிழ் சினிமாவின் அடையாளம் என்று சொல்வார்கள். பார்த்தால், அவர் இருபது வருஷத்துக்கு முதல் ஒரு நல்ல படம் எடுத்திருப்பார். வேறு நல்ல படமே வருவதில்லையா? புதியவர்கள் எப்போது அடையாளமாக இருப்பார்கள்? இந்த அடையாளம் பதவிகூட கட்சித்தலைவர் பதவி மாதிரியானவைதானோ? இளைஞர்களுக்கு வாய்ப்பே இல்லைப் போலும். வெற்றிமாறன் அடையாளமில்லையா? 'புதுப்பேட்டை' வந்தவுடன் செல்வராகவன் அடையாளமாகக் கொண்டாடப் பட்டிருக்க வேண்டாமா?

இன்றைய புதிய இயக்குனர்கள் பலரின் கதையில் காதல் அப்படியொன்றும் முக்கியமானதாக முன்னிறுத்தப்படுவதில்லை. சென்டிமென்ட் கலந்து அச்சுப் பிச்சுத்தனமான டயலாக்குகளின் உதவியோடு யாரும் படத்தில் காதலிப்பதில்லை என்பது பெரிய ஆறுதல்.இது இன்னொரு வகையில் கெட்டதாகவும் அமைந்துவிடுகிறது. இளைஞர்கள் காதலைக் கைவிட்டதில், அடையாளங்கள், பெருசுகள் கையிலெடுத்து விடுகிறார்கள். காலம் போன காலத்தில் காதல் பற்றிப் படமெடுத்துப் படுத்துகிறார்கள்.

உண்மையில் 'ஆரண்ய காண்டம்' விஷயத்தில் ஏன் அப்படி ஒரு கள்ள மௌனம்? திட்டமிட்டு புறக்கணிக்கிறார்களா? படத்தின் ஒரிஜினல் DVD கூட வரவில்லை என்பதுதான் சோகம்! இந்தப் படம் தொடர்பான அரசியல் தெரியாமல் DVD கடைகளில் சென்று விசாரித்திருக்கிறேன். அப்படியொரு படம் வந்ததே பலருக்கும் தெரியாது. இன்றுவரை இணையத்தில் வெளியான ஒரேயொரு மங்கலான பிரதி மட்டுமே இருக்கிறது. ஒருமுறை ஃபேஸ்புக்கில் சினிமா விகடன் கேட்டிருந்தது ஒரிஜினல் DVD வந்தால் வாங்குவீர்களா? என. பின்பு அதுபற்றிப் பேச்சில்லை.

'ஆரண்ய காண்டம்' தவறான காலப்பகுதியில் வெளிவந்துவிட்டதா? இன்றைய நாட்களில் வெளியாகியிருந்தால் பெரு வெற்றி பெற்றிருக்குமா? வெறும் அபத்தக் குப்பைகளும், போலிகளும் கொண்டாடப்படுகின்ற சூழலில், ஒரு நல்ல படமும், அதன் இயக்குனரும் அவர்கள் சார்ந்த தமிழ் சினிமா உலகத்தாலேயே திட்டமிட்டு கண்டுகொள்ளப்படாமலிருப்பதுதான் சோகம்! தியாகராஜன் குமாரராஜாவின் அடுத்த படத்திற்காகக் காத்திருக்கிறேன்.

12 comments:

  1. moodar koottam ..........koriyan movie ...attack of the gas station 1........xerox copy boss ..........moodar koottatha over ah pukala vendaan.......... attack of the gas station 2 movieum release ayrichi..........boss.........

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. சூப்பரா சொன்னீங்க பாஸ் நானும் ஆரண்ய காண்டம் ஒரிஜிநல் தேடி அலையாத கடை இல்ல இன்று வரை வரவில்லை அந்த படத்தில் அந்த சிறுவனும் அவனின் தந்தையின் நடிப்பும் அவ்ளோ சூப்பர் தந்தை யாக நடித்தவர் கூட வேறு எந்த படத்தில்லும் இல்லை ஜிகர்த்தாண்டா படத்தில் நடிப்பதாக செய்தி அதுவே அந்த படம் நான் எதிர்பார்க்க காரணமாகிவிட்டது

    மூடர் கூடம் செம்ம நான் ரொம்ப என்ஜாய் பண்ணினேன் நவீன் கலக்கிட்டாரு

    ஐ அம் சாம் நான் பார்க்கவில்லை அதனால எனக்கு விக்ரமின் நடிப்பும் அந்த க்ளை மெக்ஸ் கலங்க வைத்தது

    ReplyDelete
    Replies
    1. தந்தை யாக நடித்தவர் கூட வேறு எந்த படத்தில்லும் இல்லை////

      கடல் படத்தில் அரவிந்த் சாமியுடன் சர்ச்சில் உதவியாளராக நடித்திருப்பார்.

      Delete
  4. நல்ல விமர்சிப்பு!கூடவே,'சாட்டையடி' களும்!

    ReplyDelete
  5. Attack The Gas station இன்னும் பாக்கல.. ஆனா மூடர் கூடம் படம் எனக்கு ரொம்ப புடிச்சிருந்துச்சி. ஒரு புதுவிதமான அனுபவத்தைக் கொடுத்தது. இந்த மாதிரிப் படங்கள் தான் எனக்கும் பாக்க ஆசை.

    இதில் ஒரு ஆச்சரியமான கோ-இன்சிடன்ஸ் என்னென்னா பலருக்கும் புடிக்காத வா குவார்ட்டட் கட்டிங்க்- எனக்கும் புடிச்சது.

    ஆரண்ய காண்டம் - வரிக்கு வரி ஒத்துப்போகிறேன். ஒரிஜினல் டிவிடி வரும் என்று நம்புவோம்..

    ReplyDelete
  6. அருமையான பார்வை...
    விரிவான அலசல்...

    ReplyDelete
  7. //இளையராஜா இனி ஓய்வெடுத்துக் கொள்ளவேண்டும்//
    வானம் மெல்ல, சாய்ந்து சாய்ந்து, என் தேவதை, வெளி நாட்டு கிராமபுரத்தில்,முகிலோ மேகமோ, செல்லம் கொஞ்சும், கள்வனே எல்லாம் கேட்கும் படியே இருக்கிறது.

    ReplyDelete
  8. ஆரண்ய காண்டத்தை தமிழ்த்திரையுலகினர் திட்டமிட்டே புறக்கணிக்கிறார்கள் என்பது உண்மை தான். பாலாவுக்கு கிடைத்த வெளிச்சம் தியாகராஜனுக்கு கிடைக்கவில்லை. தயாரிப்பாளருடன் தியாகராஜன் பட ரீமேக் அல்லது டப்பிங் சம்பந்தமாக ஒரு சண்டை போட்டார், அது வழக்குவரை சென்றது. இறுதியில் தயாரிப்பாளர் தரப்பே வென்றது. அது தான் அவர் செய்த தவறு என்று நினைக்கிறேன். பின்னர் எந்தவொரு தயாரிப்பாளரும் அவரை அணுக விரும்பவில்லை. மேலும் படத்தின் பட்ஜெட் 4 கோடிக்கு மேல் போனது இன்னொரு தவறு.

    கடுமையான நிதிச்சுமையில் சிக்கிய தயாரிப்பாளர், பட மார்க்கெட்டிங்கிற்கே காசு இல்லாமல் அலையும்போது, இயக்குநரும் கேஸ் போட்டு இழுத்தடித்ததால், தயாரிப்பாளர் தரப்பே அந்த படத்தை இல்லாமல் ஆக்கிவிட முடிவு செய்துவிட்டது. எனவே தான் டிவிடிகூட வரவில்லை என்று நினைக்கிறேன்.

    இப்போது இணையத்தில் கிடைக்கும் நல்ல ப்ரிண்ட்கூட விஜய் டிவியில் ஒளிபரப்பான ப்ரிண்ட் தான். நல்லவேளையாக முன்பே டிவி ரைட்ஸை விற்றுவிட்டார்கள். இல்லையென்றால் அதுவும் கிடைத்திருக்காது.

    ஆனாலும் இன்னும் 100 வருடம் கழித்தும், அந்தப் படம் பேசப்படும்.

    ReplyDelete
  9. Movie is ok but seems quite slow moving.

    ReplyDelete
  10. சிம்புதேவன் பற்றிய குறிப்புடன் முழுக்க உடன்படுகிறேன்.

    ReplyDelete