"நீ ஏமாத்துறே...நான் போலீசில சொல்லுவேன்!"
"போலீஸ் நான் சொல்றதத்தான் நம்பும். நீ தமிழ் நீ சொல்றதக் கேக்காது"
இறுதிப் போர் நடந்து கொண்டிருந்த காலம். கொழும்பில், அயல் வீட்டில் ஐந்து வயதே நிரம்பிய இரு தமிழ், சிங்களக் குழந்தைகளிடையே விளையாட்டின் போதான பேச்சு! நம்பக் கஷ்டமாக இருந்தது. தமிழர்கள் சொல்வதை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று அந்தக் குழந்தைக்கு யார் சொல்லிக் கொடுத்தது?
இந்தச் சின்ன வயதிலேயே என்ன ஒரு தெளிவான சிந்தனை. அரசியல் பார்வை! எதிர்காலத்தில் ஒரு தேர்ந்த அரசியல்வாதியாகவோ, ரவுடிக் கும்பல் தலைவனாகவோ அல்லது நன்கு படித்து உயர்பதவியில் அமர்ந்து துவேஷம் காட்டும் அறிவுஜீவியாகவோ மாறலாம்! எல்லாவற்றையும் விட ஒரு துவேஷம் பிடித்த புத்த பிக்குவாக மாறுவதற்கும் அதிக சாத்தியங்கள் உண்டு!
மற்றைய தமிழ்க் குழந்தையின் மனநிலை எப்படியிருக்கும்? அது அன்றுதான் புதிதாக ஒரு விஷயத்தைக் கேள்விப்பட்டிருக்கிறது. தன் பெற்றோரிடம் கேட்டு உறுதிப்படுத்தியிருக்கலாம். நாளை இதுபோல் பல சம்பவங்களை பள்ளியிலோ, விளையாட்டின்போதோ எதிர்கொள்ளலாம்.
ஓர் இனமக்கள் மீது ஏற்படும் அசூயை, வன்மத்தை தங்கள் அடுத்த தலைமுறைக்கும் திட்டமிட்ட பரப்புரைகள், திரிக்கப்பட்ட வரலாறுகள் மூலமாகக் கடத்தப்படும். யார் மண்ணின் ஆதிக்குடிகள் என்பது பற்றிய திரித்த விஷமத்தனமான பரப்புரைகளைப் பள்ளிகளில் பாடமாகவே வைத்திருப்பார்கள்.இதற்காக வரலாற்றையே அடிக்கடி அடித்துத் திருத்துவார்கள்.இதன்மூலம் சிறுபிராயம் முதலே உருவாகும், உருவாக்கப்படும் துவேஷம் ஒருவகை.
தன் இனத்தின்மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அடக்குமுறைகளையும், வன்முறைகளையும் பார்த்துக் கொண்டு அல்லது தாங்கிக் கொண்டு வளரும் ஒருவனுக்கு இயல்பாக, சிறிது சிறிதாக ஏற்படும் பாதிக்கப்பட்டவனின் மனநிலையில் ஏற்படுவது துவேஷம் இரண்டாவது வகை! இந்த இரண்டு வகைககளையும் பார்த்தும், உணர்ந்தும் வளர்ந்தவர்கள் நாங்கள்!
நம்நாட்டில் தமிழர் மீதான துவேஷத்தை யாரும் ஒரு சில அரசியல்வாதிகள் தவிர பேச்சில் யாரும் வெளிப்படையாக காட்டாவிட்டாலும் கூட - நான் சந்தித்த பெரும்பான்மையான சிங்களவர்கள் நல்லவர்கள், மிகநல்லவர்களாக இருந்தாலும் கூட - எல்லோரிடமும் துவேஷம் இருக்கிறது, அது தவிர்க்கவும் முடியாதது என்பதுதான் உண்மை! - அது எத்தனை சதவீதம் என்பதுதான் ஆளாளுக்கு மாறுபடும்.
ஏதோ ஒரு சிறு பேச்சில் உன்னிப்பாக கவனிக்கும்போது துவேஷத்தின் சாயலை உணர்ந்து கொள்கிறோம் அல்லது அப்படி இருப்பதாக எண்ணிக் கொள்கிறோம்? இதில் ஒரு பிரச்சினை, இவர்கள் இப்படித்தான் என்று ஒரு முன்முடிவை நாங்கள் ஏற்கெனவே எடுத்துக்கொண்டு அதற்கேற்றபடி அவர்களின் பேச்சுக்கு அர்த்தம் கற்பித்துக் கொள்கிறோமா? ஆனாலும் இது தவிர்க்க முடியாத ஒன்று என்றே தோன்றுகிறது. எப்படியோ பிரிவினை என்பது இருதரப்பிலும் ஆழமாக எப்போதோ வேரூன்றிவிட்டதா?
இரண்டு வேறுபட்ட இனங்கள் இணைந்து வாழும் நாட்டில், குறைந்த சனத்தொகையைக் கொண்ட இனம் ஏதோ ஒரு வகையில் மேலாதிக்கம் செலுத்தி வருமானால் அல்லது அதிகாரத்தில் இருக்குமானால், அதனால் உருவாகும் வன்மம் ஒரு கட்டத்தில் மிகப்பாரிய விளைவுகளை ஏற்படுத்தலாம்.உதாரணமாக ருவாண்டாவில் இடம்பெற்ற இனப்படுகொலைகள்!
ருவாண்டா, ஹங்கேரியின் காலனித்துவ ஆட்சியிலிருந்து 1961 இல் சுதந்திரம் பெற்றது. நாட்டின் எண்பத்தைந்து வீதமானோர் ஹுட்டு இனத்தவர். சிறுபான்மை டுட்ஸி இனம். ஒரு பெரும் கலவரத்துக்கான அனைத்துப் பூர்வாங்க ஏற்பாடுகளையும் திட்டமிட்டு, ஏற்கனவே இரண்டு இனங்களுக்குமிடையே இருந்த பிரிவினையை வளர்த்துவிட்டிருந்தது ஹங்கேரி. ஆட்சி அதிகாரம் முழுவதும் ஹுட்டு இனத்தவரிடம் சென்றுவிட, 'டுட்சி' கெரில்லா குழுக்கள் உருவாகின்றன. ஏற்கனவே டுட்சி இனத்தவரின் உயரம், வலிமை காரணமாக டுட்ஸி என்றாலே பயம். 1994 இல் கெரில்லாக்களால் ஜனாதிபதி சுட்டுக் கொல்லப்பட்டதும், ஆரம்பமானது வரலாற்றில் மறக்கமுடியாத இனப் படுகொலை! ஏறத்தாள நூறு நாட்களில் கொல்லப்பட்ட டுட்ஸி இனத்வர்களின் எண்ணிக்கை எட்டு லட்சம். இந்நிகழ்வு அந்நாட்களில் எந்த அளவிற்கு உலக அரங்கில் கவனிக்கப்பட்டது எனத் தெரியவில்லை. எட்டு லட்சம் மக்கள் இறந்தபின் வழக்கம்போல ஐ. நா. தலையிட்டு தனது மனிதாபிமானத்தைக் காட்டியது!
ஒரு நாட்டில் ஒரு குறிப்பிட்ட இனம் மீது வரைமுறையற்ற இனத்துவேஷம் நிலவுகிறது! அல்லது இருந்திருக்கிறது - இதை அந்த நாட்டில் புதிதாக செல்பவர்கள் கூட உணர்ந்துகொள்ளும் வகையில் விளம்பரப்படங்கள்(?!) சுவரொட்டிகள் தயாரிக்கும் வழக்கம் ஒன்று இருந்திருக்கிறது!
அந்தக் குறிப்பிட்ட, ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஒருவர் விளம்பரப் படமொன்றில் தோன்றி 'நான் இந்த நாட்டில் பிறந்தமைக்காகாக பெருமைப்படுகிறேன்!' - தமது நாட்டில் எல்லா மக்களும் சமத்துவமாக வாழ்வதைக் 'காட்டுவதற்காக' அரசாங்கம் தயாரிக்கும் 'எங்கப்பன் குதிருக்குள் இல்லை' டைப் படங்கள் இவை!
ஆனாலும் தற்போது இளைய தலைமுறையினர் மத்தியில் இது போன்ற உணர்வுகள் குறைந்துள்ளதாகக் கூறுகிறார்கள். இலங்கையில் அப்படிக் குறைந்துள்ளதாக கூறமுடியாது. அதற்கான வாய்ப்புகளும் குறைவு. எந்த முயற்சிகளும் எடுக்கப்படுவதாகத் தெரியவில்லை. ஆனால் என்றுமே 'இலங்கையில் பிறந்ததற்காக பெருமைப்படும் தமிழனின் விளம்பரப்படம்' வெளிவரவில்லை என்று வேண்டுமானால் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்!
குறிப்பாக ஜெர்மனியில் வாழும் உறவுகள் கருப்பர்களை வைத்து எடுக்கப்பட்ட இப்படியான விளம்பரங்களைப் பற்றிச் சொல்லியிருக்கிறார்கள். இப்பொழுதும் அப்படித்தானா தெரியவில்லை! கருப்பர் மட்டுமன்றி வெளிநாட்டுப் பிரஜைகள் அதிலும் குறிப்பாக நம்மவர் மீதான உச்சகட்டமான துவேஷம் ஜேர்மனியில்தான் இருந்ததாக சொல்லக்கேள்வி. இதில் நம்மவரும் கறுப்பர் என்ற வகைக்குள்ளேயே அடங்குவது இன்னும் சிறப்பான(?!) பலன்களையே கொடுத்திருக்கும்!
ஜெர்மன் போன்ற நாடுகளில் முன்னர் இருந்த இருந்த நிலைமைக்கு இப்போது எவ்வளவோ பரவாயில்லை என்று சொல்லப்படுகிறது. யாராவது தெளிவுபடுத்தினால் நலம். இந்தக் குறும்படமும் அதையேதான் சொல்கிறது. இளைஞர்கள் மாறிவிட்டார்கள். ஆரோக்கியமான சிந்தனை அவர்களிடம் இருக்கிறது. ஆனால் பெரியவர்களிடம் மட்டும் இன்னும் வரட்டுக் கொள்கைகள் இன்னமும் அப்படியேதான் இருக்கின்றன என்கிறது.
பொதுவாக ஜெர்மானியர்கள் சட்டம், ஒழுங்கை கடைப்பிடிப்பதில் மிக கண்டிப்பாக இருப்பார்கள் எனக் கேள்வி. அப்படியான சூழ்நிலையில் அந்த வயதான பெண்மணியின் நிலை... 1992 இல் சிறந்த குறும்படத்துக்கான Oscar விருதினைப் பெற்றுக் கொண்டது இப்படம்.
இரண்டு மாதத்துக்கு முன் எங்கள் ஆபீஸ் ரெசிடென்சுக்கு இரண்டு பெண்மணிகள் வந்திருந்தார்கள். அதில் ஒருவர் வெள்ளைக்காரப் பெண்மணி. உணவு வேளை உரையாடலின்போது நம்ம சோசியோலோஜிஸ்ட் அங்கிள் தான் அமெரிக்காவில் இருந்தவர் என்று காட்டுவதற்காகவே அமெரிக்கர்களுக்குப் பழக்க வழக்கம், பண்பாடு சரியில்லை எனக் குறைபட்டுக் கொண்டார். அந்தம்மாவும் அதைக் கண்கள் மின்ன, மிக மகிழ்ச்சியுடன் ஆமோதித்துக் கொண்டார். அது அவர் இயல்புக்கு மாறாகத் தெரிந்தது. அமெரிக்கர்கள் மேல் இங்கிலாந்துக்காரர்களுக்கு இருக்கும் தலைமுறை கடந்த எரிச்சலாக இருக்குமோ எனத் தோன்றியது. இன்னும் Boston Tea Party யை மறக்கவில்லையா?
Supper
ReplyDeleteஎடுத்து கொண்ட கருவின் ஆழத்தை நீங்கள் கொண்டு சென்ற நடைதான் பல படி உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளது... ஒரு மெல்லிய கம்பியின் மீது நடக்கும் செயலை போல மிக நேர்த்தியாய் நீங்கள் கையாண்டிருக்கும் சிங்கலத்தவர் பற்றிய பத்திகள் பிரமாதம்...வாழ்த்துக்கள் நண்பரே... அந்த காணொளி ப்ளே ஆகவில்லை.. கொஞ்ச நேரம் கழித்து முயற்சிக்கிறேன்...
ReplyDelete//மயிலன் said...
ReplyDeleteஅந்த காணொளி ப்ளே ஆகவில்லை.. கொஞ்ச நேரம் கழித்து முயற்சிக்கிறேன்...//
பதிவில அப்படியே இணைக்க முடியவில்லை பாஸ்! அதான் யூ-டியூப் லிங்க் கொடுத்திருக்கிறேன்!
ஆரம்ப உரையாடலிலேயே சிங்கள அடக்குமுறையை உணர முடிகிறது..சிறுபான்மையினர் அடக்குமுறையில்
ReplyDeleteசிக்காமல் இருந்ததாக எந்த உலக சரித்திரமும் இல்லை என்பதை உணரமுடிகிறது..
நிதர்சனமான கட்டுரை..
பிரபல பதிவர்கள் சங்கமிக்கும் சென்னை பதிவர் சந்திப்பு
நம்நாட்டில் தமிழர் மீதான துவேஷத்தை யாரும் ஒரு சில அரசியல்வாதிகள் தவிர பேச்சில் யாரும் வெளிப்படையாக காட்டாவிட்டாலும் கூட - நான் சந்தித்த பெரும்பான்மையான சிங்களவர்கள் நல்லவர்கள், மிகநல்லவர்களாக இருந்தாலும் கூட - எல்லோரிடமும் துவேஷம் இருக்கிறது, அது தவிர்க்கவும் முடியாதது என்பதுதான் உண்மை! - அது எத்தனை சதவீதம் என்பதுதான் ஆளாளுக்கு மாறுபடும்.
ReplyDelete//அதுதான் நிஜம் என்றாலும் ஜீ இருபக்கத்திலும் துவேஸம் இது இருக்கின்றது என்பது என் கருத்தும் !
:)))...ஐீ..என் நண்பியின் சின்னப்பெயர் இதுதான்....:)
ReplyDelete