Monday, June 29, 2015

The Wayward Cloud (2005)



படம் பார்ப்பதற்கான மனநிலை என்பது என்னிடம் எப்போதும் வாய்த்திருப்பதில்லை. ஓரிரு நாட்களுக்கு முன்னர் தோன்றியபோது, எந்தத் தீர்மானங்களுமின்றிக் கணணியில் சேமித்து வைத்திருந்த படங்களில் ஒன்றை எழுந்தமானமாகத் தெரிவு செய்தேன். அது The Wayward Cloud ஆக இருந்தது.

படத்தின் ஆரம்பம் மிக நீளமான ஷொட். ஒரு கட்டத்தினுள்ளே நான்கு கொரிடோர்கள் சந்திக்கும் இடமாக இருக்கவேண்டும். இரண்டு நீண்ட கொரிடோரை பார்த்தவாறு கமெரா நிலையாக அப்படியே இருக்கிறது. சிறிது நேரத்தில் இரு புறமும் தூரத்திலிருந்து இரண்டு பெண்கள் நடந்து வருகிறார்கள். ஒருவரையொருவர் தாண்டிச் செல்கிறார்கள். மிக நீளமான இந்தக் காட்சியைப் பார்த்ததும், உடனடியாக இயக்குனர் மிஷ்கின் ஞாபகத்தில் வந்தார். தொடர்ந்து பார்க்கையில் படத்தில் காட்டப்படும் தனிமை, ஆரம்பத்திலேயே அது மனதளவில் பார்வையாளனைத் தயார்படுத்தும் உணர்வு, எனக்கு The Hole (1998)  படத்தை நினைவுபடுத்தியது. ஒரு பாடல்வேறு இடம்பெற்றிருந்தது. உடனேயே தேடிப்பார்த்தேன். எதிர்பார்த்தது போலவே அது இயக்குனர் Tsai Ming-liang இன் படம்தான்.

நாயகி வோட்டர் மெலன் பழத்துண்டுகளைச் சாப்பிட்டுக்கொண்டே தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கிறாள். தொலைக்காட்சியில் வோட்டர் மெலன் பற்றிய பரிந்துரைகள் இடம்பெறுகின்றன. மினரல் தண்ணீர்ப் போத்தல்களை விட ஒரு வோட்டர் மெலன் ஜூஸ் விலைகுறைந்தது என்கிறார்கள். ஒரூ பெண் பழங்களின் அளவை வைத்துக்கொண்டு பெண்களின் குணாதிசயங்களுடன் ஒப்பிடுகிறாள். பழ விற்பனையாளர்கள் தங்கள் வியாபாரம், லாபம் குறித்துப் பேசுகிறார்கள். வோட்டர் மெலன் பழங்கள் சாப்பிடும் போட்டி ஒளிபரப்பப் படுகிறது. நீருக்குப் பதிலீடாக வோட்டர் மெலன் பழங்கள் உண்ணப் பரிந்துரைக்கப்படுகிறது. இதெல்லாம் எதற்காக? இன்னொரு செய்தி காட்டப்படுகிறது. அதில் தாய்வானின் நீர்வழங்கலுக்கான பிரதான நீர்நிலை வறண்டு போய்விட்டது. சில நாட்களுக்குத் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது குறித்து அறிவுறுத்துகிறார்கள். நாயகியின் வீட்டுக் குளியலறை முழுவதும் ஏராளமான மினரல் தண்ணீப் போத்தல்கள் நிரம்பியிருக்கின்றன. நீர்க்குழாயில் சுத்தமாகத் தண்ணீர் வருவது நின்றுபோயிருக்கிறது.

நாயகி தனது சூட்கேசை திறக்க முயற்சிக்கிறாள். முடியவில்லை. சலிப்புடன் திறப்பை வீசுகிறாள். அது யன்னலூடு வெளியே விழுந்துவிடுகிறது. கீழே வருகிறாள். வீதியைச் செப்பனிட்டுக் கொண்டிருக்கிறார்கள் சில தொழிலாளிகள். தேடுகிறாள். 'திறப்பு ஒன்றும் இங்கே இல்லை, வேலை செய்யும்போது இங்கே நிற்பது ஆபத்து' என்று சொல்கிறார்கள் அவர்கள். மறுநாள் காலை கீழே வந்து பார்க்கிறாள். இரவு செப்பனிடப்பட்ட வீதியில் தாரில் பதிந்து போயிருக்கிறது அவளது சூட்கேஸ் திறப்பு. அதை இன்னொரு திறப்பால் எடுக்க முயற்சிக்கிறாள், முடியவில்லை. அப்படியே வீதியில் நடந்து செல்கிறாள். ஒரு பையில் வெற்றுப்போத்தல்களை வைத்திருக்கிறாள். நீர் சேகரிக்க வேண்டும். வீதியின் அருகாக ஓடும் பெரியதொரு கழிவுநீர் கால்வாயில் ஏராளம் வோட்டர் மெலன் பழங்கள் மிதந்து செல்வதைக் காண்கிறாள். 

நாயகன் வீதியோரமுள்ள பூங்காவொன்றில் தூங்கிக் கொண்டிருக்கிறான். அவனருகே வோட்டர் மெலன் பழம் ஒன்றுடன் வரும் நாயகி, அவனருகே இருக்கும் தண்ணீர்ப் போத்தலை எடுத்துப்  பழத்தைக் கழுவித் துடைக்கிறாள். போத்தலை இருந்த இடத்தில் வைத்துவிட்டுச் செல்கிறாள். சற்று நேரத்தில் மீண்டும் சென்றவழியே வருகிறாள். நாயகன் இன்னும் தூங்கிக்கொண்டிருக்கிறான். அவனெதிரே இருக்கையில் அமர்ந்திருக்கிறாள். அவனைத் தேடித்தான் வந்திருக்கிறாள். அவனிடம் பேச வேண்டும் என்கிற முடிவில் தூங்கும் அவனை எழுப்பலாமா வேண்டாமா என்கிற குழப்பத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறாள். அப்படியே தூங்கியும் விடுகிறாள்.

தூக்கத்திலிருந்து எழும் நாயகன் அவளைப் பார்க்கிறான். அவளும் விழித்துக் கொள்கிறாள். சற்றுக் கண்களைச் சுருக்கிப் பார்த்துவிட்டு அவள் பேச ஆரம்பிக்கட்டுமென்று  காத்திருக்கிறான்.  இருவரும் ஒரே அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப்பவர்கள். அவனுக்கும் பார்த்த பரிச்சயம் இருக்கிறது. இதுவரை பேசிக்கொண்டதில்லை. அவள் ஆரம்பிக்கிறாள், "நீ இன்னும் கைக்கடிகாரங்கள் விற்கிறாயா?". ஆக, அவனைப்பற்றி அவளுக்கு மேலதிகமாக இன்னொரு விடயமும் தெரிந்திருக்கிறது. சிறுபுன்னகையுடன் இல்லை என்பதாய்த் தலையசைக்கிறான். வேறெதுவும் சொல்லவில்லை. அவன் ஒரு தொழில்முறை நீலப்படநடிகனாக இருக்கிறான். அவனது வேலைநேரம் இரவு. பகலில் தூக்கமும் தனிமையுமாகப் பொழுதைக் கழிப்பவன். நாயகிக்கு அவன்மீது அந்தச் சந்திப்பிலேயே காதல் வந்துவிட்டது எனச் சொல்கிறது தொடர்ந்து வரும் பாடல். 

நாயகன் தாரில் பதிந்து கிடக்கும் அவளது சூட்கேஸ் திறப்பைக் கிளறியெடுத்துக் கொடுக்கிறான். அவளது வீட்டில் சூட்கேசைத் திறக்கும் முயற்சியில் அவன் ஈடுபட்டிருக்க, நாயகி, வோட்டர் மெலன் ஜூஸ் தயாரித்து வந்து கொடுக்கிறாள். அவனுக்கு வோட்டர் மெலன் ஜூஸ் இப்போது குடிக்கும் மனநிலையிலை. முந்தையநாள் இரவின் படப்பிடிப்பில் வோட்டர் மெலன் பழமொன்று பிரதான பங்கேற்றிருந்தது. அவன் மிகக் கவனமாக அவள் கவனிக்காதவண்ணம் யன்னலைத் திறந்து வெளியே கொட்டிவிட்டு அவளிடம் புன்னகையுடன் கண்ணாடிக் குடுவையைக் கொடுக்கிறான். அவள் மீண்டும் ஜூஸ் நிரப்பிக் கொண்டுவந்து கொடுக்கிறாள். அவள் எதிரிலேயே நின்று கொண்டிருப்பதால், வேறுவழியில்லாமல் குடிக்கிறான். இருவருக்கும் சேர்த்து அவன் உணவு தயாரிக்கிறான். மகிழ்ச்சியான அந்தத்தருணத்தை இருவரும் மிகவும் ரசிக்கிறார்கள். 

மின்தூக்கியில் கூடவே வந்து அவனை வழியனுப்புகிறாள். கதவு மூடிக்கொள்கிறது. தனது தளத்துக்குச் செல்லவேண்டிய எண்ணை அழுத்த மறந்து கனவு காண்பவள் போல லயித்து நிற்கிறாள். சிறிது நேரத்தில் கதவு திறக்கிறது. எதிரே நாயகன். சுய உணர்வு பெறுகிறாள். இருவரும் சிரிக்கிறார்கள். அவள் தளத்தின் எண்ணை அவனே அழுத்திவிட்டு விடைபெறுகிறான். அவள் அடுத்த கட்டத்துக்குச் செல்வதற்குத் தயாராகவே இருக்கிறாள். தனது உடல்மொழியில் சற்று வெளிப்படுத்துகிறாள். அவன் கவனிக்கவில்லை, அல்லது தவிர்த்துவிடுகிறான். ஆயினும் அவள் மிக உற்சாகமாக ஒரு பாடலை முணுமுணுத்துகொண்டு செல்கிறாள்.    

இன்னொருமுறை இருவரும் சந்திக்கும்போது வீட்டில் இன்னும் கொஞ்சம் நெருக்கமாகி விடுகிறார்கள். அவள் முழுவதும் தயாராகும்போது அவன் அவள் காலைக் கட்டிக் கொண்டு தூங்கி விடுகிறான். அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருக்கிறாள். அன்றைய இரவில் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாத நாயகி, குளிர்சாதனப்  பெட்டியைத் திறந்து, அதன்முன்னே அமர்ந்து உள்ளேயிருக்கும் முழுதான வோட்டர் மெலன் பழம் ஒன்றை உணர்ச்சிப் பெருக்குடன் முத்தமிடுகிறாள். அதே நேரத்தில் இன்னோர் தளத்தில் நீலப்பட படப்பிடிப்பு முடிந்து, நடிகை தனிமையில் குளியலறையிலிருந்து சுய இன்பத்தில் ஈடுபடுகிறாள். அதனை மறைந்து நின்று பார்த்தபடியே நாயகனும்! 

அந்த இரவில் மூன்று பேருமே தமது உடல்வேட்கையைத் தனிமையில் தீர்த்துக் கொள்கிறார்கள். நாயகிக்கு ஆண் துணை தேவை, கிடைக்கவில்லை. தேவையான மற்றைய இருவருக்கும் துணை ஒருபிரச்சினையில்லை. மேலும் அவர்கள் இருவரும் நீண்ட உடலுறவில் ஈடுபட்டுவிட்டுத்தான் இருக்கிறார்கள். அது தொழில். அவர்களின் சொந்த உடல் சார்ந்த தேவை தீரவில்லை. ஒருவேளை அவனுக்கு பெண்ணுடல் அலுத்துப்போய் இருந்திருக்கலாம். பெண்ணுடன் உறவு கொள்வதென்பது தொழில் என்பதாகிவிட்ட மனநிலையில் அவன் வாழ்ந்துகொண்டிருக்கலாம். படப்பிடிப்பில் எப்போதும் நான்குபேர் அருகிலிருக்க இயந்திரத்தனமாய் இயங்கிமுடித்துவிட்டுத் தனிமையில் குளியலறையில் அரைகுறை அடையணிந்த பெண்களின் புகைப்படங்களடங்கிய சஞ்சிசிகைகளை வைத்துக் கொண்டு சுய இன்பத்தில் ஈடுபடுவதுதான் அவனது சொந்தத் தேவைக்கான தீர்வாக இருக்கிறது.

நாயகியின் யாருமற்ற தனிமை அவளை மிகவும் வாட்டுகிறது. நள்ளிரவு நேரங்களில் அவளின் உலகம் வேறானதாக இருக்கிறது. வோட்டர் மெலன் பழம் ஒன்றை தனது ஆடைக்குள் வயிற்றுப் பகுதியில் குழந்தை போல வைத்துக்கொண்டு, கர்ப்பிணிப் பெண்போல தடவிக் கொடுக்கிறாள். அப்படியே பாவனை செய்கிறாள். ஆயாசமாக இடுப்புக்கு ஒரு கையைக் கொடுத்துக்கொண்டு  கொண்டு நடக்கிறாள். மாடிப்படிகளில் மிகுந்த சிரமத்துடன் மூச்சு வாங்கிக்கொண்டு, கால்களை அகட்டி வைத்து ஏறி இறங்குகிறாள். ஒருமுறை பிரசவ வலி கண்டு அப்படியே படியில் உட்கார்ந்து வழியில் முனகி குழந்தை பெறுகிறாள். அப்படியோருமுறை மாடிப்படியில் அவள் நடந்துகொண்டு வரும்போது, அங்கே நாயகன் வேலைநேரம் முடிந்து வந்து நிற்கிறான். நாயகி பார்வையில் பட்டுவிடாமல் ஒளிந்துகொள்கிறான்.

ஒருநாள் நீலப்பட நடிகை போதை மயக்கத்தில் மின்தூக்கியில் சரிந்துகிடக்கிறாள். அவளைத் தன்வீட்டுக்குக்கொண்டு வருகிறாள் நாயகி. தன்னிடமுள்ள நீலப்பட டிவிடிக்களில் அவள்நடித்த படமும் இருப்பது கண்டு டிவியில் பார்க்கிறாள். பார்ப்பவள் அதிர்ச்சியடைகிறாள். அங்கே நாயகனைப் பார்த்துவிடுகிறாள். அவன் பற்றித்தெரிந்து கொண்டுவிடுகிறாள். படத்தயாரிப்பாளருடன் அவளும் சேர்ந்து அந்த நடியையைத் தூக்கிச் செல்கிறாள். அங்கே அவனையும் காண்கிறாள். அன்றைய படப்பிடிப்பை வேடிக்கை பார்க்கிறாள். இறுதிக்காட்சியில் அவரவருக்கான தீர்வைக் கண்டுகொண்டார்களா? என்பதுதான் சொல்லப்படுகிறது என நம்புகிறேன். இந்தக்காட்சி அருவருப்படையவும் செய்யலாம். படத்தில் நாயகன், நாயகிக்கிடையில் வரும் ஒரே வசனம் அவள் அவனிடம் கேட்கும், 'நீ இன்னும் கைக்கடிகாரங்கள் விற்கிறாயா?' என்பதுதான்!

நாயகியின் உலகம் முழுக்க முழுக்கத் தனிமையாலானது. அது அவள் விரும்பாத, அவளாகத் தேர்ந்தெடுக்காத அப்படியே அமைந்துவிட்ட, நிர்ப்பந்திக்கப்பட்ட தனிமையாக இருக்கலாம். அது வாழ்வில் வெறுமையையும், சில சமயங்களில் ஒருவித இனம்புரியாத பயத்தையும் கொடுத்துவிடுகிறது. அப்படியே அது ஓர் அதீத எச்சரிக்கையுணர்வையும் எப்போதும் கொடுத்துக்கொண்டிருக்கும். ஒருமுறை டிவிடி லைப்ரரியில் படங்கள் தெரிந்தெடுக்கிறாள். அங்கே அநேகமானவை நீலப்படங்கள். அங்கே வரும் ஒருமனிதனைக் கண்டு சற்றுப் பதற்றமடைந்துவிடுகிறாள். தன் வீட்டுக்கு திரும்ப லிஃப்ட்டுக்குள் நிற்கிறாள். கதவு மூடும் சமயத்தில் திடீரென ஒரு கை கதவைத் தடுக்கிறது. அதே மனிதன் இப்போது அவளுடன் லிஃப்ட்டுக்குள். அவன் அவளைப்பின்தொடர்வது போலவே படுகிறது. ஒருகணம் மிகுந்த பயம், பதற்றத்துடன் பார்க்கிறாள். தனது தளம் வந்ததும் மிக அவசரமாக வெளியேறுகிறாள். அவன் அவளைச் சட்டை செய்யவில்லை. மேலே தான் செல்ல வேண்டிய இடத்துக்குப் போகிறான். மின்தூக்கியின் கதவுகள் மறுபடி மூடிக்கொண்டதும், நாயகி திரும்ப வந்து மறைந்து நின்று கவனிக்கிறாள். அதீத எச்சரிக்கையா? அல்லது அதனுடன் கூடிய எதிர்பார்ப்பா என்பது அவளுக்கும் சரியாகப் புரியாத குழப்பத்துடன் பார்க்கிறாள்.

நாயகிக்கு இயல்பான ஒரு வாழ்க்கை வேண்டும். ஆண்துணை, குழந்தைகள் பற்றிய கனவுகள் அவளிடம் எப்போதுமுண்டு. அவளுக்கு இயல்பாக எழும் பாலியல் இச்சை நாயகனால் தீர்க்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கிறாள். அதுதான் அவள் தேவை, ஒருவகையில் வறட்சி. நாயகனுக்கு பெண்ணுடல் எப்போதும் கிடைக்கிறது. துரதிருஷ்டவசமாக அதனால் தேவை தீர்வதில்லை. வடிகாலாகவுமில்லை. அவனது வாழ்வும் யாருமற்ற தனிமையும் வெறுமையும் நிரம்பியதாய் இருக்கிறது. காதலில்லாத, காமமும் உறவும் கொடுக்கும் ஒருவகையான வறட்சி எப்போதும் அவனிடம் இருக்கிறது. அவன் எதிர்பார்க்கும் ஏதோ ஒன்று  நாயகியிடம் கிடைக்கிறது. உடல்சார்ந்த தேவையைத் தவிர்த்து, ஒரு அர்த்தபூர்வமான மகிழ்ச்சியை அவளுடன் பழகும்போது உணர்கிறான்.

இந்தப்படம் பார்ப்பதற்கான மனநிலையை ஏற்படுத்திக் கொடுத்தது இயக்குனரின் The Hole படம்தான். அதுதான் இயக்குனரின் காட்சியமைப்பைப் பொறுமையையாகப் பார்ப்பதற்கு, திரைமொழியை உள்வாங்குவதற்கு தயார்படுத்தியது. The Hole படத்தில் வருவது போலவே இதிலும் தனிமை என்பதுதான் பிரதானமாக சொல்லப்பட்டிருகிறது. ஆட்கள் அதிகமில்லாத அடுக்குமாடிக் குடியிருப்பு. எப்போதும் படம் முழுவதும் கூடவே இருக்கும் ஈரம். The Hole படம் முழுவதும் மழை பெய்துகொண்டே இருக்கும். பார்க்கும்போதும், படம் முடிந்தபின்னரும் எங்களுக்கு வெளியே மழை பெய்வது போன்ற உணர்வே இருக்கும். இந்தப்படத்தில் வறட்சி! எனினும் இதிலும் ஒரு ஈரம் பரவியிருப்பதையே உணரமுடியும். நீளமான காட்சியமைப்புகள். மிகக்குறைந்த அளவிலான வசனங்கள். இயக்குனரின் படங்களில் ஆச்சரியமளிப்பது பாடல்கள். தமிழ் சினிமா போலல்லாது கனவுப் பாடல்கள் கதாபாத்திரங்களின் மனநிலையை ஏக்கங்களைச் சொல்வது போல, படத்தின் கதையை நகர்த்துவதுபோன்ற அமைந்திருக்கும். இந்தப்படத்தில் முதலாவதாக நாயகன் பாடும் பாடலில் நிலவு, தனிமை, நிறைவேறாத கனவுகள் பற்றிய வரிகளைக்  கொண்ட பாடல் பற்றிய அவனது வாழ்க்கை பற்றிச் சொல்வதாகவே இருக்கிறது.   

வறட்சி அல்லது தாகம் இன்னொரு விதத்தில் தேவை என்றுகூடச் சொல்லலாம் - படம் ஒருவிதமான தேவைகளும் அதற்கான தீர்வுகள், பிரதியீடுகள் பற்றியே பேசுகிறது என நம்புகிறேன். நம் எப்போதும் தேவைகளுக்கான தீர்வுகளைக் கொடுக்கிறோமா அல்லது தீர்வுகளுக்கான பிரதியீடுகளை வழங்கிக் கொள்கிறோமா? என்றுகூட யோசிக்கலாம். பிரதியீடுகள் எப்போதுமே நம் தேவைகளுக்கான சரியான தீர்வாக இருப்பதில்லை. நீர், வோட்டர்மெலன் என்பவை குறியீடுகளாகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். நாயகியின் அந்த சூட்கேஸ்கூட அப்படியாக இருக்ககூடும். அவ்வப்போது நாயகன் திறக்க முயற்சிக்கிறான், இறுதிவரை திறக்கப்படவில்லை.

இப்படியெல்லாம் இருக்கலாம் என்றுதான் சொல்ல முடிகிறது. திட்டவட்டமாகச் சொல்ல முடியாமைக்குக் காரணம் இருக்கிறது. அதை இயக்குனரே ஒரு சந்தர்ப்பத்தில் இப்படிச் சொல்கிறார்,

"எனக்கு வசனங்களிலோ, கதை 'சொல்வதிலோ' ஆர்வமில்லை. படங்களில் தெளிவான ஒரு செய்தியைச் சொல்ல முயற்சிப்பதில்லை. ஒவ்வொரு தருணமும் உடல் மொழி, உடற்செயற்பாடுகள் அவை என்ன சொல்ல வருகின்றன என்பது பற்றியே. அவை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாதவை என உணர்கிறேன். படம் என்ன சொல்ல வருகிறது என்பது முக்கியமல்ல. நீங்க என்ன உணர்கிறீர்கள் என்பதுதான் முக்கியமானது. நீங்கள் என்ன உணர்கிறீர்கள் என்று சிந்தியுங்கள்!"

(பிரான்சிலிருந்து வெளிவரும் 'ஆக்காட்டி' இதழுக்காக எழுதியது)

2 comments:

  1. விரிவான விமர்சனம் அருமை ஜி.

    ReplyDelete
  2. Eagerly waiting for your next post. It's been a very long time.

    ReplyDelete