Monday, August 25, 2014

பரோட்டாவும் சமகாலவாழ்வும்!



மா பரோட்டாவாகிறதா இல்லை சமோசா ஆகிறதா என்பது மாவுக்குத் தெரிவதில்லை. மாறாக பிசையும் மாஸ்டருக்கே தெரியும். ஆனால் எந்தப் பரோட்டாவை யார் சாப்பிடப் போகிறார்கள் என்பது அந்த மாஸ்டருக்கே... தெரிவதில்லை. உலக மயமாக்கலில் கடைக்கோடி ஏழைக்கும் சாத்தியமான ஒரே நுகர்பொருள் பரோட்டாதான் என்பதில் உண்மையில்லாமலில்லை. ஏதோ ஒரு தருணத்தில் பரோட்டா மாஸ்டர் அய்யாச்சாமிகூட அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பிரதிநிதியாகத்தான் தெரிகிறாராம் என்பார் தோழர் பொன்னுஸ்க்கி என்கிற பொன்னுச்சாமி

இந்த வாழ்க்கைதான் எவ்வளவு விசித்திரமானது. வெட்டிவைத்த முட்டை பரோட்டா போல கச்சிதமான வாழ்க்கை எல்லோருக்கும் அமைந்துவிடுவதில்லை. சிலருக்கு வெந்தும் வேகாமலும் அமைகிறது. பலருக்கு காய்ந்து காலாவதியாகிவிடுகிறது. இன்னும் சிலருக்கோ ஓவர் குழம்பு ஊற்றிய கொத்துப்பரோட்டா போல கொழ கொழவென்று கலவரமாகிவிடுகிறது. வாழ்க்கை ஒரு வட்டம் என்கிற உண்மையை மெக்கானிக் திருமலை அண்ணனுக்கு முதலே கண்டறிந்து சொன்னவர் எங்களூர் பரோட்டா மாஸ்டர் ஐன்ஸ்டீன்தான் என்பதில் எங்களுக்கு எப்போதும் பெருமை.

'நாபியிலிருந்து கிளம்பும் அமிலச்சுனையொன்று நெஞ்சை அடைத்துக் கண்டம்வரை எரிந்து சாமம்கடந்தும் ஓயாத ஏப்பங்களாக ஒரு பரோட்டா மாஸ்டரின் கைவண்ணத்தைப் பேசியபடி காற்றில் கரைகிறது' - 'பரோட்டா உண்ட ராவுகள்'  தொகுப்பில் கவிஞ்ஞர் சங்கூவின் கவிவரிகள் நினைவுக்கு வருகின்றன.ஒரு பரோட்டா என்பது வெறும்பரோட்டா மட்டுமல்ல....வாழ்க்கையின் தத்துவமே... சரிவிடுங்கள், வெறும் பரோட்டா மட்டுமே வெறும்பரோட்டா! மற்றபடி, சேர்க்கையைப் பொறுத்து முட்டைப்பரோட்டா, கொத்துப்பரோட்டா, ஆளுப் பரோட்டா...

பரிசாரகர் வந்து ஈ மற்றும் சிந்தனையைக் கலைத்தார்.
"சொல்லுங்க"
"பரோட்டா"

வெளிப்பார்வைக்கு சாதுவாக, அழகாக மனதைப் பரபரப்படைய வைக்கும் பரோட்டாக்கள் உண்ணும்போது, அவ்வாறிருப்பதில்லை. தாடைகளின், பற்களின் கடும் உழைப்பைக் கோருபவையாகவும், சமயங்களில் கன்னத்தின் உட்தசைகளைப் பதம் பார்ப்பவையாகவும் அமைந்துவிடுநின்றன. ஒரு பரோட்டாவைப் போல வாழ்வியலைச் சொல்லிக் கொடுப்பது...

'டொக்' பரிசாரகரின் அன்பும், தண்ணீரும் ஏக காலத்தில் தெறித்தன.
ஆரம்பிக்க வேண்டியதுதான்.

வெளியே பதமாக இருந்தது, உள்ளே பசையாகப் பற்றிப் பிடித்துக் கொண்டது. பற்களிலும், மேலண்ணத்திலும் (கீழண்ணம் என்று இருக்கிறதா?) வெகுவாக ஒட்டிக் கொண்டது. இனி, கோக்காகோலா போட்டுத்தான் கழற்றியெடுக்க வேண்டும். நிச்சயம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சதிதான். இதையெல்லாம் வெளியே சொல்ல முடியுமா? அப்படியே முயன்றாலும் ஒட்டிக்கொண்ட பரோட்டாதான் அனுமதிக்குமா? மூடிக் கொண்டே சாப்பிட வேண்டியதுதான். அப்படியே கேட்டாலும் நீதி கிடைத்துவிடுமா? மேலதிகமாக இரண்டு பரோட்டாக்கள் கிடைக்கலாம். நல்ல பரோட்டா தருகிறேன் என்று சொல்லிக் கொடுப்பார்கள். அதையும் நாங்கள் அல்லவா காசு கொடுத்துத் தின்று தொலைக்கவேண்டும்?

ஏதோ நம்மால் முடிந்தது. பல்லுக் குத்திக் கொண்டே ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போடலாம். யாரேனும் ஆறுதல் சொல்லலாம். அந்தப் பரோட்டக் கடைக்காரனின் சொந்தக்காரன்போல யாராவது வந்து கமெண்டில் விளக்கம் சொல்லக்கூடும்.
'சூடா இருந்திருக்கில்ல அதான் தலைவா!'
'பத்து நிமிஷம் கழிச்சு சாப்பிடவேண்டிய பரோட்டாவ அவசரப்பட்டு முழுங்கிட்டீங்க பாஸ்!'

எனக்குப் புரிவதே இல்லை. பரோட்டான்னா சுட்டு, உடனே சுடச்சுட சாப்பிடவேண்டும். அதற்காகத்தானே கடைக்குப் போகிறோம்? அதென்னய்யா அது.. 'பத்து நிமிஷம் கழிச்சு'? வித்தியாசமான ரெசிப்பியோ? தனக்குப் பிடிச்சவன் அரைகுறையாச் சமைச்சத பிடிச்சு சாப்பிட்டவன் எவனைப் பாத்தாலும் 'பத்து நிமிஷம் கழிச்சு சாப்பிடவேண்டிய பரோட்டா', 'பத்து மணித்தியாலம் கழிச்சு சுட்டிருந்தா நல்லாயிருந்திருக்கும்', 'பார்சல் கட்டி பத்து நாளைக்கு அப்புறம் சாப்பிட்டிருந்தா கலக்கியிருக்கும் ' என்கிறார்கள்.

அதுகூடப் பரவாயில்லை. யாரோ ஒருவர் வந்து 'தமிழர்களின் நாக்கு இன்னும் சரியா வளரலைய்யா' என்று ஒட்டுமொத்தமாக அசிங்கப்படுத்தி விடுகிறார்கள். என்னய்யா கதை விடுறீங்க? இப்ப கேவலமா இருக்கிறது பத்து நாளைக்கு அப்புறம் நல்லாயிருமா? இன்னும் கேவலமாயிடாதா? என்ன, இப்ப கழுவி ஊத்துறவன்..அப்ப ஊத்தி ஊத்திக் கழுவ மாட்டானா?

இதைக்கூடப் பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் இந்த மார்க்கின் கைங்கரியத்தைப் பாருங்கள். ஒரேயொரு ஃபேஸ்புக்! அப்பப்பா! ஊரில் உள்ள அத்தனை பேரையும் நல்லவர்களாக்கி விட்டதைப் பாருங்கள். இந்த உலகமே அன்பால், மனித நேயத்தால், நிறைந்து மலர்ந்து கிடப்பதைப் பாருங்கள். எங்கும் ஏராளமான புத்தன், யேசுகள் எல்லாரும் கையில் லேப்டாப், செல்பேசிகள் சகிதம் ஸ்டேட்டஸ் மூலம் அன்பைப் போதிக்கும் சமகாலத்தில், ஒரு பரோட்டா குறித்து கண்டபடி சமூகப் பிரக்ஞையற்றுப் பேசிவிட முடியுமா?

'ஒரு பரோட்டாக்குப் பின்னால இருக்கிற உழைப்பைப் பற்றி உங்களுக்கு என்னய்யா தெரியும்? எத்தனை பேரோட வியர்வை, உணர்வு கலந்திருக்கு தெரியுமா? ஒரு பரோட்டா மாஸ்டர் காலைல அஞ்சு மணிலருந்து இரவு பதினோரு மணிவரைக்கும் அடுப்புக்கு முன்னால நின்னுட்டே இருக்கிறத கூட இருந்து பாத்திருக்கியா? ஒவ்வொரு பரோட்டாலயும் அசுர உழைப்பு கொட்டிக் கிடக்கு தெரியுமாய்யா? அந்த உழைப்பைப் பாருங்கைய்யா' என்கிறார்கள்.

“ஆ... ஊ... என்றாலே உழைப்பைப் பாருங்கள் என்கிறார்கள். பிறகு இன்னொன்று வைத்திருக்கிறார்கள். என்னாது... ஆங்க்.. மனசைப்பாருங்கள். செண்டிமெண்டல் பிளாக்மெயில்!

'அந்தா பாருங்க மாவைத் தொட்ட கையால நெஞ்சைச் சொறிஞ்சுக்கிட்டே நிக்கிற பரோட்டா மாஸ்டரைப் பாருங்க. அவர் சொறியிற நெஞ்சைப் பாருங்க.. அதில வளர்ந்திருக்கிற முடிதாண்டி, தோல் தாண்டி, நாடி நரம்பு தாண்டி உள்ள ஒரு மனசு இருக்கு! அந்த மனசைப்பாருங்க! அந்த மனசுக்குள்ளயும் ஒரு உணர்வு' அப்பிடி இப்பிடீன்னு ஆரம்பித்துவிடுவார்கள். மனிதாபிமானம் இல்லாத பயல் என்று முத்திரை குத்திவிடுவார்கள். நமக்கெதற்கு வம்பு?

ஆனால் ஒன்று மட்டும் புரியவேயில்லை. பசியில் காசு கொடுத்துச் சாப்பிட போகிறவன் பரோட்டா நன்றாக இருக்கிறதா என்றுதானே பார்ப்பான்? அதுதானே அவன் தேவை? பரோட்டா மாஸ்டரின் உழைப்பையோ, மனதையோ பார்ப்பதற்காக யாரும் சாப்பாட்டுக் கடைக்குப் போகிறார்களா என்ன!

Friday, August 15, 2014

மாலைநேர மயக்கம்!



அலுவலகத்திலிருந்து நடந்து வந்துகொண்டிருந்தேன். பிரதான வீதியிலிருந்து ஒரு கிலோமீட்டருக்குள்ளேயே இப்படியொரு கிராமப்புறத்தை யாராலும் கற்பனை செய்ய முடியாது. நானும் செய்யவில்லை. நேரில் பார்த்தபிறகு எதற்குக் கற்பனை? ஆனாலும் இங்கும் பென்ஸ், ஜாக்குவார் கார்கள்தான் திரிகின்றன.

வாழ்க்கையின் விசித்திரங்களை எண்ணி வியந்தபடியே நடந்தேன். சிக்கன் பிரியாணியை ஃபுல் கட்டு கட்டியபின், இரவு சாப்பிட முடியாது என்கிற மந்தமான வயிற்றுநிலையில் வாழ்வின் அபத்தங்கள், ஏற்றத் தாழ்வுகள் குறித்த திடீர் சமூகப் பிரக்ஞையை அடைபவரா நீங்கள்? அப்படியானால் நீங்களும் என் தோழனே! வாருங்கள் இணைந்து நடப்போம்!

'டொக்.. டொக்'  - சீரான குளம்புச்சத்தம்..அல்ல, குதியுர்ந்த காலணிச் சத்தம் என் சிந்தனையைக் கலைத்தது. சேலை கட்டிய ஒரு பெண்மணி எனக்கு இருபதடி முன்னால் சென்று கொண்டிருந்தார். பெரும்பாலும் சிங்களப் பெண்மணிகள்தான் பொருத்தமாக, மிகத்திருத்தமாக, அழகாக, கச்சிதமாகச் சேலை உடுத்துகிறார்கள் என்கிற உண்மையைச் சொன்னால் தமிழினத் துரோகியாகச் சித்தரித்துவிடக் கூடும் என்கிற அச்சத்திலேயே பலரும் சொல்வதில்லை எனத் தெரிகிறது. நானும் அதுபற்றி ஒன்றும் சொல்வதாக இல்லை.

என்போலவே வேகமாக நடந்துகொண்டிருந்தார். ஆக, அவரை ஓவர் டேக் செய்வது சாத்தியமில்லை என்பதால் முயற்சிக்கவில்லை. ஒரு பெண்மணி நம் முன்னால் சென்றால் அவரை ஓவர்டேக் செய்து விடவேண்டும், அல்லாவிடில் அவரைப் பின்தொடர்வது போலாகிவிடும் என்கிற ஒழுக்கவியல் சார்ந்த உயரிய கொள்கை உங்களுக்கும் இருக்கிறதா? அப்படியானால் நீங்களும், நான் வளர்ந்த யாழ்ப்பாணத்தில் சைக்கிளில் செல்லும் பெண்மணியை ஓவர்டேக் செய்து பழகியதால் ஏற்பட்ட சிந்தனை என்பேன். ஆனால் பாருங்கள், சரியாக நாம் கடந்து செல்ல முற்படும் நேரம்தான் அவர்களும் நமக்கு இணையான வேகத்தில் செல்வர்கள். 'அடியே எடுபட்ட சிறுக்கி..' என பாரதிராஜா பட அப்பத்தா போல உங்கள் மனமும் அப்போதெல்லாம் அலறியிருக்கலாம்.

அந்தப் பெண்மணி அழகானவராக இருக்கக்கூடும். சிங்களவர்களின் பாரம்பரிய கண்டிய நடனம் பயின்றிருப்பார் என்று தோன்றியது. சிலரைப் பார்க்கும்போதே உங்களுக்கும் அப்படி உறுதியாகத் தோன்றுகிறதா? கலைக்கண்கள் உங்களுக்கு. எந்த நேரத்திலும் அந்தப்பெண்மணி பின்னோக்கி, பின்புறமாகவே, கால்களை நாலைந்து அடிகள் எட்டி வைத்து, இடையை ஒடித்து, ஒரு அரை வட்ட U Turn அடித்து, ஒரு கண்டிய நடன ஸ்டெப் போடுவார். கண்டிப்பாக அந்தக் காட்சியை நான் தவற விட்டுவிடக் கூடாது என எண்ணிக் கொண்டேன்.

தூரத்தே குதிரையின் கனைப்பொலி கேட்டது! ச்சே! என்ன இது பிரமை! இந்தத் தமிழ்சினிமாதான் நம் மனதை எந்த அளவுக்குக் கெடுத்து வைத்திருக்கிறது பாருங்கள். கலாச்சாரக் காவலர்கள் சினிமா சமுதாயத்தைச் சீரழிக்கிறது எனப்பொங்குவதில் நியாயம் இருக்கிறதுதான் போலும். சடுதியாக என் சமூக சிந்தனை விழித்துக் கொண்டது.

மீண்டும் சிதறவிட்ட என் சிந்தனையைக்கூட்டிப் பொறுக்கிப் பிரக்ஞை பெற்று நிகழுலகைக் கவனித்தேன். அப்பெண்மணி எனக்கு ஏழடி தூரத்தில் செல்வதைக்கண்டு திடுக்குற்றேன். 'உண்மையிலேயே அந்த கண்டிய நடன ஸ்டெப் போட்டிருப்பாரோ? ச்சே மிஸ் பண்ணிவிட்டோமே!' என் சமூக சிந்தனை செய்த சதியை நொந்து கொண்டே எதிரில் பார்த்தால் இரண்டு குதிரைகள் வந்துகொண்டிருந்தன. இருங்கள் குதிரைகள் என்றால் உண்மையான குதிரைகள். கடற்கரையில் பரிதாபமாக, நன்கு வளர்ந்த மனிதத் தடிமாடுகளை வயிற்றுப் பிழைப்புக்காகச் சுமந்து ஓடுகின்றனவே அதே குதிரைகள்.

பெண்மணி பயந்து போய் பின்னடைந்திருக்கிறார். நான் இன்னும் பயந்துபோய் வீதியின் அடுத்த கரைக்கு கடந்து போய்விடலாமா எனத்தீவிரமாக யோசித்தேன். வாய்ப்பிருக்கவில்லை. குதிரைகளை இப்படியா வளர்ப்பார்கள்? மாடுகள் வீதியில் திரிவது போல தனியாக வரும் குதிரையை எங்கேயும் பார்த்ததில்லையே! மனதிற்குள் பீதி பீடித்துக் கொண்டது. நான் தனியாக என்றால் பரவாயில்லை. அந்தப்பெண்மணி குறித்து இன்னும் பீதியடைந்தேன். அவரும் நான் பயந்தமாதிரியே பயந்தாரா? இல்லை, வேறுமாதிரிப் பயந்தாரா எதுவும் புரியவில்லை. அந்தக் குதிரைகள் என்ன நினைக்கின்றனவோ? மனிதர்கள் நினைப்பதையே புரிந்து கொள்ள முடியாதபோது குதிரை நினைப்பதை எங்ஙனம் புரிந்துகொள்வது?

மீண்டும் என் சிந்தனை கலைந்து பார்க்க, குதிரைகள் நெருங்கியிருந்தன. அந்தப் பெண்மணியைக் காணவில்லை. 'எங்கடா?' ஆச்சரியப்பட்டு தேடினால் என்பின்னால் நின்றுகொண்டிருந்தார். 'அய்யய்யோ இது எப்படா நடந்திச்சு?' மனம் அலறியது. இப்போது கலவரம் அதிகமாகியிருந்தது. மனதைத் திடப்படுத்திக் கொண்டு மெதுவாக நடந்தேன்.

அப்படி எந்த விபரீதமும் இடம்பெறவில்லை. என்னை மெதுவாகக் கடந்த குதிரை, "நான் பயந்துபோய்விட்டேன்" பதற்றமான சிரிப்புடன் கூடிய குரலில். ஆச்சரியமாக இருந்தது. 'அந்தப் பெண்மணியைப் பார்த்து குதிரை எதற்குப் பயந்து போயிற்று?' 'அதைவிட குதிரை சிங்களம் பேசுமா?' 'பெண்குதிரையா அது?' துணுக்குற்றுத் திரும்பிப் பார்த்தேன்.

அந்தப் பெண்மணி சிரித்தார். குதிரைகள் கண்டுகொள்ளவில்லை. தம்பாட்டில் வீதியோரமாக் இருந்த புற்களை மேய்ந்துகொண்டு சென்றன. குதிரைகள் பாவம். அவை, குதிரைகளையே குதிரைகளாகப் பார்க்கின்றன. தவறாக நினைத்ததற்காகக் குதிரைகளிடம் மானசீகமாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டே நடந்தேன்.

Tuesday, August 5, 2014

ஸ்டேட்டஸ்!

வவுனியா ரயில்வே ஸ்டேஷன். பளையிலிருந்து ரயில் வந்து நின்றதும் அவசரமாக ஏறிக் கொண்டேன். உண்மையைச் சொன்னால் சரியான நேரத்திற்கு ரயில் வந்து தொலைத்ததில், ஒரு ஃபேஸ்புக் போராளியாக இந்தச் சமூகத்தின் பொறுப்பின்மையைச் சாடும் ஒரு ஸ்டேட்டஸ் கைநழுவிப்போன சலிப்புடன் ஏறினேன். என்போன்ற போராளிகளுக்கு பார்க்குமிடமெங்கும் சமூக அவலங்களும், ஒழுங்கின்மையுமே நீக்கமற நிறைந்திருக்கவேண்டும். எல்லாமே சரியாக இருந்தால் என்னதான் செய்வது?

எனது டிக்கட்டில் B1 54 என எழுதியிருந்தது. B கம்பார்ட்மெண்டில் ஏறியிருந்தேன், 'B1 எங்கே?' நகரும்போதே டிக்கட் பரிசோதகரின் குரல் இதுதான் B1 என்று யாருக்கோ சொன்னது. 54ம் இலக்கத்தைக் கண்டுபிடித்து அமர முற்படுகையில் கவனித்தேன். எனக்கு அருகில் ஒரு தமிழ்ப் பெண்மணி. இப்போது குழப்பமாக இருந்தது. எனது டிக்கட் இலக்கத்தை மீண்டும் சரி பார்த்துக் கொண்டேன். ஒருவேளை என் தவறா? கம்பார்ட்மெண்ட்டில் A1 என்று எழுதியிருந்தது. 'குழப்புறானுகளே...'யோசித்தபடி என் பயணப்பையை மேலே வைத்தேன்.

அந்தப் பெண்மணி வன்னியிலிருந்து வருகிறார் எனத் தோன்றியது. ஏழ்மை அப்பட்டமாகத் தெரிந்தது. யாரேனும் உறவினர் வீட்டுக்குச் செல்பவராக இருக்கக்கூடும். தவறுதலாக இந்த இருக்கையில் வந்து அமர்ந்திருக்கலாம். அல்லது அவருக்கான டிக்கெட்டைப் பதிவு செய்தவர் ஒரு ஆணாக இருந்து, பயணப்படுபவர் பெண் எனக் குறிப்பிடாது விட்டிருக்கலாம். அதனால் ஆண்களுக்கருகில் அமர நேர்ந்துவிடும். பதிவு செய்தவரின் தவறை விட, இருக்கையின் குழப்பமாக இருக்கவே சாத்தியம் அதிகம். டிக்கட் சோதகர் வந்து அந்தப் பெண்மணி இருக்கை மாறி அமர்ந்ததைச் சுட்டிக் காட்டக் கூடும்.

வழமைபோல வாயிற் கதவருகே வந்து நின்றுகொண்டு பயணத்தைத் தொடங்கினேன். அனுராதபுரம் நெருங்கியதும் வந்தமர்ந்தேன்.

"தன்ர புத்தக வெளியீட்டு விழா ஒண்டுக்கும் சேர் வாறேல்ல எண்டு ரெண்டுமூண்டு பேரிட்ட குறையாச் சொல்லியிருக்கிறார். அதான் இந்தமுறை எப்பிடியும் போவேனுமேண்டு.." - சத்தமாகப் பக்கத்து முன்வரிசை இருக்கையில் அமர்ந்திருந்தவர் ஒரு தமிழ் ஆசிரியர்.

வெளிர் மஞ்சள் நிறத்தில் பச்சைப் பூக்கள் பெரிதாக வரைந்த சேர்ட் அணிந்திருந்தார். பின்மண்டையில் ஒரு டென்னிஸ் பந்தின் அளவிற்குச் சமமாக வழுக்கை. அதை மறைக்க இடது பக்கமாக சற்றே நீளமாக முடிவளர்த்திருந்தார். மூன்று கற்றையாக இருந்தது. அவற்றை அப்படியே வளைத்து வழுக்கையை மூடித் தொப்பி அணிந்திருந்தார். தொப்பியைக் கழற்றியதும் மின்விசிறியின் உதவியுடன் முடிக்கற்றைகள் விடுதலை பெற்று இரண்டு கற்றை மகரதோரணம் போல தொங்கி ஆடிக்கொண்டிருந்தது. மூன்றாவது கற்றை தலைகீழாகப்(?) பறக்கும் பட்டத்தின் வால் போல மேல்நோக்கிப் பறந்துகொண்டிருந்தது.

சோதகர் என்னிடம் வந்து டிக்கட் சரிபார்த்தார். அந்தப் பெண்மணியிடம் டிக்கட் கேட்க, அவர் என்னைத் தாண்டி சற்றுப் பின்னால் கையைக் காட்டினார். ஏராளமாக இருக்கையை நிறைத்துக் கொண்டு அமர்ந்திருந்த இளைஞர் ஒருவர் தன்னிடம் இருப்பதாகச் சிங்களத்தில் சொன்னார். ஆக, அவர்தான் அழைத்துக் கொண்டு வந்திருக்கிறார். ஆண்களுக்கான இரண்டு பயணச்சீட்டைப், பெற்றுக் கொண்டிருக்கிறார். ஆனால், வெகுகவனமாக தனது அருகில் வந்துவிடாமல் வேறு வேறு இருக்கையைப் பதிவு செய்திருக்கிறார். இரண்டு பயணச்சீட்டைப் பதிவு செய்யும்போது அருகருகாகவே கொடுப்பார்கள், நாம் சொல்ல வேண்டியதில்லை. தனித்தனியாக பதிவு செய்வதற்குத்தான் பேச வேண்டும்.

இப்போது புரிந்தது. அவர் தனது வீட்டிற்குப் பணியாளாக அந்தப்பெண்ணை அழைத்துச் செல்கிறார். தன் அருகே வேலைக்காரியை அமரச் செய்து அழைத்துச் செல்வது அவரது கவுரவத்தைப் பாதிக்கும் என முடிவு செய்து, அதற்காக மிகுந்த சிரத்தையெடுத்துப் பேசி, தன கவுரவத்தைக் காப்பாற்றியிருக்கிறார். பார்க்கும்போது, திருவாளர் கவுரவம் ஒரு சிங்களவர் எனத் தெரிந்தது.

"ஒழுங்காப் பள்ளிக்கூடம் போகோணும்... ஹரிஷிட்ட குடுங்கோ" என்றார் அந்தப் பெண்மணி தொலைபேசியில். இரண்டு குழந்தைகள் இருக்கக் கூடும். வருமானத்திற்கு வேறுவழியின்றிப் புறப்பட்டிருக்கலாம்.

சிங்களவர்கள் வன்னியிலிருந்து வேலைக்கு ஆட்களை அழைத்துச் செல்வதை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. ஏதோ ஒரு வித பழிவாங்கல் போலவே எண்ணத் தோன்றுவதைத் தவிர்க்க முடிவதில்லை. எல்லாவிதமான வளங்களோடும், தன்னிறைவோடும், வந்தாரை வாழவைக்கும் நல்லிதயங்களோடு வாழ்ந்தவர்கள் வன்னிமக்கள். இறுதிப்போர் மிக மோசமாகப் பழிவாங்கிவிட்டது. கொஞ்சம் மனதைவிட்டுப் புத்தியைப் பாவித்து யோசித்தால், அவர்களுக்குத் தேவை வேலை, வருமானம். அதைக் கொடுக்க விரும்புபவர்கள், மனமிருப்பவர்கள் கொடுக்கிறார்கள். அவ்வளவுதான்! ஆனால் நான் அப்படி யோசிப்பதாக இல்லை. என் ஃபேஸ்புக் போராளிப்பார்வையில், இது சற்றும் அனுமதிக்க முடியாத ஒரு விடயம். இது பற்றி உடனே ஒரு ஸ்டேட்டஸ் போட்டுவிடலாமா என கை பரபரக்க, யோசித்துக் கொண்டிருந்தேன்.

"அது பாருங்கோ.. அவ்வளவு குருபக்தி..அவரோட அவ்வளவு திறமையும் அப்படியே அவனுக்கு வந்திட்டுது..." புளகாங்கிதமடைந்து யாரையோ பாராட்டிக் கொண்டிருந்தார் தமிழ். யூ-ட்யூபில் 'சிரிச்சா போச்சு' நிகழ்ச்சி பார்க்கும் பழக்கமுடைய எனக்கு வடிவேல் பாலாஜி, சிங்கப்பூர் தீபன் எல்லோரும் வரிசையாக ஞாபகம் வந்தார்கள். யாரென்று உத்தேசிக்க முடியவில்லை.

"கூல் வத்துற பீம.." தண்ணீர்ப் போத்தல் விற்பவர் கூவிக் கொண்டு கடந்து போனார். திருவாளர் கவுரவம் தான்மட்டும் ஒரு மைலோ வாங்கிக் குடித்துக் கொண்டிருந்தார். அதிர்ச்சியாக, மிகுந்த கோபமாக இருந்தது. இந்தச் சிங்களவர்களே இப்படித்தான். அந்தப் பெண்மணி பற்றிய எந்த அக்கறையுமில்லாமல், தண்ணீர் வேண்டுமா? என ஒரு வார்த்தை கேட்காமல் தனக்கு மட்டும். பாவம் அந்தத் தமிழ்ப்பெண்மணி! இவர் வீட்டிலா வேலை செய்யப் போகிறார்? இதே கோபத்துடன், இந்தச்சம்பவத்தை நான் மிகுந்த ஆக்ரோசமான ஸ்டேட்டஸ் போட்டேயாகவேண்டும் எனத் தீர்மானித்துக் கொண்டேன்.

"வல்லவன் பம்பரம் மணலிலும் ஆடும் எண்டுற மாதிரி...." அவரே கண்டுபிடித்த பழமொழியோ என்னவோ. சொல்லிவிட்டு ஒரு பெருமிதச் சிரிப்புடன் அவருக்கு நேர் பக்கத்து இருக்கையிலிருந்தவர்களைத் திரும்பிப் பார்த்தார் தமிழ். ஆனால் கொடுமையைப் பாருங்கள், அவர்கள் இது எதையும் கவனிப்பதாக இல்லை, காதலர்கள்! கவனித்தாலும் அவர்கள் அதுகுறித்து அலட்டிக் கொள்ளப் போவதில்லை. காரணம் அவர்கள் சிங்களவர்கள்.

"அதில பாருங்கோ டீவில கேட்டாங்கள் என்ன.. நீங்கள் ஒரு மருத்துவத்துறை மாணவரா இருந்துகொண்டு எப்பிடி தமிழ்ல இவ்வளவு ஆர்வமெண்டு..அவன் சொன்னான் என்ர தமிழாசிரியர்தான் காரணமெண்டு... "
வலதுகால் மேல் இடது காலை நான்கு போல் போட்டுக் கொண்டு வலதுகையால் கணுக்காலைப் பிடித்துக் கொண்டு, வேகமாகக் காலை ஆட்டியபடி ஒரு அமர்த்தலான பொஷிஷனில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார் தமிழ்! பக்கத்திலிருந்த சக தமிழ் ஒரு இஸ்லாமியர். புன்னகையுடன் அமர்ந்திருந்தார். அவர் முகத்தின் களைப்பு நோன்பு காரணமாக ஏற்பட்டதா சக பயணியால் ஏற்பட்டதா? அனுமானிக்க முடியவில்லை.

"ஓமோம்..அகளங்கன் சேர் அப்ப கம்பன் கழகத்தில இருந்தவர் பழைய ஆள் பிறகு விலத்தீட்டார்..போன முறை கம்பன் விழா நல்லாச் செய்தவங்கள் அதில..." சொல்லிக் கொண்டே பக்கத்து இருக்கைக் காதலர்களைத் தற்செயலாகப்  பார்த்தார்.

சரியாக அதே நேரத்தில் அந்தக்காதலி, காதலனை வாரித்தன் தன் தோள்மேல் தலை சாயவைத்து அவன் தலைமுடியைக் கோதிக் கொண்டிருந்தார். தமிழ், இந்தக் காட்சியைக் கண்டதும் சற்றே துணுக்குற்றவர் போல முகத்தைத் திருப்பிக் கொண்டார் . மறுகணமே, சடுதியாகத் திரும்பித்தன் கண்களை நம்பிக்கொண்டார். இதுபோன்ற காட்சிகள் தமிழுக்கு ஒவ்வாததுபோலும். மீண்டும் ஓரிரு தடவை பார்த்துக் கொண்டார். கம்பராமாயணத்தில் இதுபோன்ற வர்ணனைகள் இருக்குமா? அல்லது உண்மைகளுக்கு அப்பாற்பட்ட எந்தவித ப்ரோபோஷிஷனும் இல்லாத மிகை உவமானக் காட்சிகள்  இருக்ககூடுமோ?அயோத்திமாநகரத்துப் பெண்கள் தங்கள் காதலனை இறுகத் தழுவிக் கொண்டு அவன் முதுகுப் பகுதியை இருகைகளாலும் தடவிக் கொள்கிறார்கள். அதாவது சோதனை செய்கிறார்களாம். தங்கள் கூரான முலைகள் அவன் நெஞ்சை ஊடுருவி வெளிவந்திருக்கின்றனவோ? எனச் சொல்லியிருந்தது பத்தாம் வகுப்பில் நான்படித்த பதின்வயதினருக்கான ஓர் இலக்கியப் புத்தகத்தில்.

செல்பேசியில் ஃபேஸ்புக்கில் ஆழ்ந்திருந்தேன். அந்தப் பெண்மணி எதையோ கேட்க விளைவதுபோல, சற்றே அவஸ்தைப் படுவதைப்போல தோன்றியது என் பிரமையாகக் கூட இருக்கலாம். ஒருவேளை தண்ணீர் தேவையா? இயற்கை உபாதையா? கழிவறை எங்கேயென்று கேட்கக் கூச்சமா? தெரியவில்லை. என்னிடம் யாரும் எந்த உதவியும் கேட்காமல் நான் வலியச்சென்று உதவுபவனில்லை. தவிர, பெண்கள் என்னிடம் பேசினாலன்றி நானாகப் பேசமாட்டேன். இதுவும் தமிழன் பெருமையில் அடங்குமா எனத் தெரியவில்லை. ஆனால், பக்கத்திலிருப்பவர்களை பொருட்படுத்துவதில்லையே தவிர, உலகில் எங்கோ யாருக்கோ நடக்கும் கொடுமைக்கு கண்டனம் தெரிவிப்பேன். எனது தொலைநோக்குப் பார்வை குறித்து எனக்குச் சந்தேகம் ஏதுமில்லை.

கையிலிருந்த ரம்புட்டான் பழங்களை மிக அவசரமாகக் காலி செய்துகொண்டிருந்தார் தமிழ். ஒருவேளை பக்கத்து இருக்கை நண்பர் நோன்பை முடித்துவிட்டால் பறித்துத் தின்றுவிடுவார் என்பதுபோல. என் பின்பக்கமாகத் தமிழில் பேச்சுக்குரல் கேட்டது. திரும்பிக் கவனித்தேன். திருவாளர் கவுரவம் பக்கத்து இருக்கைக் காரருடன் சுவாரசியமாக உரையாடிக் கொண்டிருந்தார்.

கவுரவம் தமிழர் என்கிற உண்மை எதிர்பாராத அதிர்ச்சியாக இருந்தது. என் ஸ்டேட்டஸ் ஆட்டங்காணத் தொடங்கியிருந்தது. இப்போது எடிட்டிங் மோடிலிருந்தது. எப்போது வேண்டுமானாலும் மனதிலிருந்து மானசீகமாக ரிமூவ் ஆகிவிடலாம்.
"ஓ! யாழ்ப்பாணம்தான் அப்பவே வந்திட்டம்" இது அதிர்ச்சியாக இல்லை. நான் சரியாக ஊகித்தது குறித்து ஒரு தமிழனாக மகிழ்ச்சி கொள்ள, பெருமைப்பட ஏதேனும் வாய்ப்பிருக்கிறதா என யோசித்துக் கொண்டிருந்தேன்.

"என்ன இருந்தாலும் தமிழுக்கெண்டொரு பாரம்பரியம் இருக்கில்ல?"
உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தார் தமிழ். இன்னும் கம்பராமாயணம், கம்பன்கழகம், தமிழ்விழா என்றே பேசிக் கொண்டிருந்தார். ஃபேஸ்புக் பற்றி அவருக்குச் சரியாகத் தெரியவில்லைப் போலும். உலகின் மிகப்பெரிய கோவில் கட்டியது, தஞ்சைப் பெரிய கோவிலைச் சாய்த்துவிடாமல் நேராகவே கட்டியது உட்பட ஒரு தமிழனாக பெருமைப்படுவதற்கு ஏராளமான சாத்தியங்களை ஃபேஸ்புக் வழங்குவதை பலரும், குறிப்பாகத் தமிழ் ஆசிரியர்கள் அறிவதில்லை என்பது பெரும் சோகம்.

ரயில் புறக்கோட்டை நிலையத்தை நெருங்கியது. சரியான நேரத்தில் அசந்து தூங்கிக் கொண்டிருந்த தமிழ், சக தமிழ் தட்டி எழுப்ப, திருதிருவென விழித்துக் கொண்டிருந்தார். கவுரவம் என்னருகே வந்து நின்று, "வெள்ளென போனாத்தான் பஸ்ஸ பிடிச்சு கெதியா வீட்ட போகலாம்" என்றொரு அறிவுறுத்தலை வழங்கினார். 'புகையிரதம் இன்னும் சற்று நேரத்தில் முதலாவது மேடைக்கு வரும்' பாணியில் வழங்கப்பட்ட அந்த அறிவுறுத்தல் யாருக்கானது? என என்னைக் குழம்பவிடாமல் அந்தப்பெண்மணி அவசரமாக எழுந்து சென்றார். கவுரவத்துடன் பக்கத்துப் பெட்டிக்குச் சென்றார். ஆச்சரியகரமாக எல்லாப்பெட்டிகளும் ஒரேநேரத்திலேயே ஓய்வுக்கு வந்தன.

கூட்டத்தினரோடு மெதுவாக நகர்ந்து, வீதிக்கு வந்து நிறுத்தத்தில் நின்றிருந்த பேரூந்தில் ஏறினேன். அதே தமிழ்ப்பெண்மணி தனியாக அமர்ந்திருந்தார். மற்றவரிசையில் இரண்டு இருக்கைகள் தள்ளி எனக்குப் பக்கத்தில் கவுரவம் அமர்ந்திருந்தார். வெள்ளவத்தைக்கு இரண்டு டிக்கட் எடுத்தார். ஒரே ரயில், பேரூந்து, ஒரே விலையான டிக்கெட்டில் வெகு சிரத்தையாகத் தனது கவுரவத்தை நிலைநாட்டும் அவரது முயற்சிகளை வியந்து கொள்ளத் தோன்றியது. பெருமையாக இருந்தது. என்போலவே கவுரவமும் செல்பேசியில் ஃபேஸ்புக் பார்த்துக் கொண்டிருந்தார். அவரும், ஏதேனும் தமிழன் பெருமையை மிகுந்த பெருமையுடன் பகிரக் கூடும். தமிழனுக் கெதிரான கொடுமையைச் சாடும் ஸ்டேட்டஸ்க்கு ஆவேசமாக லைக் செய்யக்கூடும். என்னைப்போலவே லைக்குதல், பகிர்தல் மூலம் எந்தக் கொடுமையையும் தீர்த்துவிட முடியும் என கவுரவமும் நம்பக்கூடும்.

நம்பிக்கை எதையும் சாத்தியமாக்கும். நானும் நம்புகிறேன். புலரும் பொழுதில் கவுரவத்தின் வீட்டில் புதிய சூழலில் அந்தப் பெண்மணியின் புது வாழ்க்கை நல்லபடியாகத் தொடங்கும். கவுரத்தின் குடும்பத்தினர் அந்தப் பெண்மணியை நீ, வா, போ என ஒருமையில் அழைக்க மாட்டார்கள். முக்கியமாக குழந்தைகளும் அப்படி அழைக்க மாட்டார்கள். சரியானவேளையில் அவருக்கு நல்ல உணவு கிடைக்கும். நல்ல படுக்கை வசதிகள் வழங்கப்படும். அவர் கவுரவமாக நடத்தப்படுவார். வீட்டுப் பணியாளரைத் தம்மில் ஒருவராக நினைக்கும் குடும்பங்களில் ஒன்றாக கவுரவம் குடும்பமும் இருக்கும். வரும்நாட்களில் அவர் குழந்தைகள் உண்மையில் மகிழ்ச்சியான தம் அம்மாவின் குரலையே செல்பேசியில் கேட்பார்கள். என் நம்பிக்கையில், நான் உத்தேசித்திருந்த என் ஆக்ரோசமான ஸ்டேட்டஸ் இப்போது முற்றாக அழிந்துபோயிருந்தது.

இப்போது சிங்கள சினிமா இயக்குனர் ஒருவர் தமிழரின் உணர்வுகளைக் கேவலப்படுத்திவிட்டது குறித்து ஆக்ரோசமாகப் பேசிய ஒரு ஸ்டேட்டஸ் என்னைக் கவர்ந்தது. அதெப்படி தமிழ்ப்பெண் சிங்கள இளைஞனைக் காதலிக்க முடியும்? இதற்குமுன் நடந்திருக்கிறதா? இனித்தான் நடக்க முடியுமா? சரித்திர, பூகோள, விஞ்ஞான, இலக்கிய இன்னபிற எந்தரீதியிலாவது இது சாத்தியமா? அனுமதிக்கலாமா? கொடுமையைக் கண்டதும் பொங்கியெழுந்து ஒரு ஆவேச லைக் போட்டேன். அதே ஸ்டேட்டஸ்க்கு கவுரவமும் லைக் போட்டிருக்கலாம்.