Wednesday, November 28, 2012

No Bra Dayயும் சில எண்ணங்களும்!"அதக் கேட்க நீர் யார் ஐசே? நான் வைஃபுக்கு வாங்குவேன் இல்ல மகளுக்கு வாங்குவேன்"
கடையின் பணியாளரிடம் உரத்த குரலில் சத்தமிட்டார் ஒரு கனவான்.


ஒரு உள்ளாடை வாங்குவதாயின் பெண்களே நேரடியாக வாங்குவார்கள் விற்பனையாளர் ஆணா பெண்ணா என்பது முக்கியமில்லை. அல்லது கணவனிடமோ, தாய்,தந்தையிடமோ சொல்லிவிட்டு வாங்குவார்கள் அதுதான் வழமை. எந்த ஆணும் பெண்ணை அழைத்துச் சென்று தான் கேட்டு வாங்குகிறார்களா தெரியவில்லை. அந்தக் கனவான் மொட்டையாக பிரா வேணும் என்று கேட்டதால் விற்பனையாளர் "யாருக்கு?" என்று இயல்பாகக் கேட்டதை பிரச்சினையாக்கியிருந்தார்.

அந்தக் கனவானை நான் முன்னரே பார்த்திருகிறேன். படு மோசமான அடக்குமுறையாளர், அரசாங்க உயர்பதவி வகித்தவர் என நினைக்கிறேன். சாதாரணமாக காரிலிருந்து இறங்கி நடந்தாலே முதலில் அவர் செல்ல, பின்னர் மனைவி, மகள், மகன் என்று பவ்வியமாக, அமைதியாக சீரான இடைவெளிவிட்டு ராணுவ ஒழுங்குடன் அணிவகுத்துச் செல்வதைப் பார்க்கமுடியும். இவ்வளவுக்கும் அவரது மகன் எந்த ஒழுங்குமுறையையும் உடைத்தெறிய முனையும் பருவவயதில் இருந்தவர் என்பதுதான் கொடுமை.

அங்கு நின்றவர்களெல்லாம் அதிர்ச்சியாகித் திரும்பிப் பார்த்தார்கள். நல்லவேளையாக அப்போது அங்கே நின்ற அனைவரும் ஆண்களாக இருந்தார்கள். அப்போது சிறுவனான நானும் அப்பாவுடன் வவுனியாவின் பிரபலமான புடைவைக் கடையில்.

பாவம் அந்தக் கனவானின் மனைவி, இளைஞர்களான மகன், மகள் அனைவரும் கூசிப்போய் நின்றிருந்தார்கள். அவர்கள் நிலையுணர்ந்து அந்தப் பக்கம் திரும்புவதைத் தவிர்த்து கடையிலிருந்து வெளியேறிய ஆண்களின் நாகரீகம் இப்போதும் நினைவிருக்கிறது. அப்பா என்னை அழைத்துக் கொண்டு வெளியேறிய போது முதலாளி சமாதனப் புறாவாக மாறிப் பேசிக்கொண்டிருந்தார். அன்று அவர் வாங்கிக் கொடுத்த அந்த பிராவை அணியும்போதோ, பார்க்கும்போதோ அந்தப் பெண்களுக்கு எப்படியிருக்கும்?

ஒரு இயல்பான விஷயத்தைக் கூட நம்மவர்கள் எவ்வளவு சிக்கலாக்குகிறார்கள்?

* * * * * * * * 

அக்டோபர் 13 மார்பகப் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு நாளாக அனுசரிக்கப்படுகிறது. அதனை No Bra Day யாகவும் கொண்டாடுகிறார்கள்(?!) சிலர்.

மார்பகப் புற்று நோய்க்கு ப்ராவும் ஒரு காரணம் என்று சொல்பவர்கள் சிலர், 'ஃப்ரியா விடு' பேர்வழிகள் பலர் என No Bra Day யைக் கொண்டாடுவதாகத் தெரிகிறது. ப்ரா அணியாதவர்களை விட நாள்முழுதும் அணிபவர்களுக்கு மார்பகப் புற்றுநோய்க்கான சாத்தியம் அதிகம் என ஒரு சாரார் சொல்கிறார்கள்.

அப்படியானால் ஒருவேளை சரியாகப் பொருந்தாத ப்ரா அதற்கான காரணமாக இருக்கலாம். ஏனெனில் உலக அளவிலேயே தமக்கு மிகப் பொருத்தமானதைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் பெண்கள் சொதப்பி விடுகிறார்களாம்.

அன்று ப்ரா அணியாதது அடிமைத் தலையிலிருந்து விடுபட்டதாக சுதந்திரமாக உணர்ந்ததாக பலர் உணர்ந்தார்களாம். ப்ரா அணியாததன் சுதந்திரத்தைப் பற்றி ஒரு ஆணாக என்னால் உணர முடியாதாயினும், அதைவிட அதிகம் அவஸ்தையை அளித்திருக்குமா என்ற சந்தேகமும் எழுகிறது. காரணம் நான்கு வருடங்களுக்கு முன்புவரை டி ஷர்ட்டுக்கு கூட ஆர்ம் கட் பனியன் அணியும் வழக்கத்தை தீவிரமாகக் கடைப்பிடித்துக் கொண்டிருந்தேன். பின்னர் அதிலிருந்து கஷ்டப்பட்டு விடுபட்டேன். ஃபோர்மல் ஷர்ட் அணிவதென்பதை நினைக்கவே முடிவதில்லை. ஒருமுறை பனியனை மறந்துவிட்டதால் அலுவலகத்திற்கு வெறும் ஷர்ட் மட்டும் அணிந்து சென்று நாள் முழுவதும் அவஸ்தைப் பட்டுக் கொண்டிருந்தேன்.

பிரா எப்படி அடக்குமுறையைக் குறிக்கிறது? பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ப்ரா கண்டுபிடிக்கப்பட்டு பரவலாக பயன்பாட்டுக்கு வந்ததிலிருந்து, ப்ரா அணியும்போது தன்னம்பிக்கையை அதிகரிப்பதாகத்தான் உணர்ந்ததாகத் தெரிகிறது. அடக்குமுறை, அடிமைத்தனம் பற்றிய சிந்தனை எப்போது தோற்றம் பெற்றது எனத் தெரியவில்லை. இதற்குச் சங்கம் (Top freedom) எல்லாம் இருக்காம்.

ஆனாலும் இந்த அடக்குமுறை என்பது நம்மவரில் பெரும்பாலானோருக்குப் பொருந்தலாம். அடக்கமாகவும், மூடிக்கொள்வதற்கும் மட்டுமே பயன்படுத்துவதாக பலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

* * * * * * * * * 

என் பதின்ம வயதுகளின் ஆரம்பத்தில் இரண்டு டாக்டர் ஆன்டிகள் பேசிக் கொண்டிருந்தார்கள். நானும் தெரிந்துகொள்ள வேண்டிய இயல்பான விஷயம் என்பதால் நானும் உடனிருக்க, அவர்கள் இதுபற்றிப் பேசினாலும், நான் எதையோ வாசிப்பதுபோல் பாவ்லா காட்டிக் கொண்டே அவர்கள் பேசியதைக் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தேன்.

"எப்படி பிரா அணிவது என்பது நம் பெண்கள் பலருக்குத் தெரியவில்லை. முழுவதும் மறைத்துக் கவர் பண்ண வேண்டும் என நினைக்கிறார்கள். உண்மையில் கீழிருந்து தாங்கிப் பிடிப்பதுபோல, மார்பகத்தின் கீழ்ப்பாதியை மூடினாலே போதுமானது"

இது மருத்துவ ரீதியான காரணமாக இருக்கும் என்றே நம்புகிறேன். குழந்தை பெற்றுக் கொண்ட பாலூட்டும் தாய்மார்களுக்கு வழங்கப்படும் அறிவுரையும் அவ்வாறே! மார்பின் கீழ்ப்பாகத்தைத் தாங்கி கையை வைத்துக் கொண்டே பாலூட்ட வேண்டும் என்பது.

மார்பகத்தின் பிரதான செயற்பாடு குழந்தைக்குப் பாலூட்டுவது என்பதை சற்றே நினைவு கூர்வது இங்கே பொருத்தமானதாக இருக்கும். (இதுகுறித்து பெண்ணீயவாதிகளுக்கு மாற்றுக்கருத்து இருக்கலாம் - எதற்குப் பெண்கள் குழந்தை பெறவேண்டும் என்றெல்லாம் கேட்பவர்கள் தவிர்த்துவிடலாம்)

அவர்கள் பேசியதைக் கேட்டபோது யோசித்தேன். திருவள்ளுவர் காலத்திலிருந்தே நம் பெண்களுக்கு இது குறித்து போதிய அறிவில்லையோ என. காரணம் அப்போதுதான் ஒரு திருக்குறள் புத்தகம் என்னிடம் சிக்கியிருந்தது.

'கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்'

காதலி அணிந்திருந்த பிராவின் அந்தக் காலத்தைய வேர்சனான மார்புக் கச்சை யானையின் முகத்தில் போர்த்தப்பட்ட முகபாடம் போல இருக்காம். அப்போதே போர்த்துவது போலத்தான் அணிந்திருக்கிறார்களோ?

முக்கிய குறிப்பு - முதன்முறையாக திருக்குறள் புத்தகம் கையில் கிடைத்ததும், 'நானும் திருக்குறள் படித்தே ஆகவேண்டும்' என்ற ஒரே ஆவலில் காமத்துப்பாலை அவசரமாகப் புரட்டியதில் முதலில் கண்ணில் பட்டது இக்குறள்.

ஆனாலும் அவர்கள் பேசியதில் தவறான விஷயம் - நமது பெண்கள் மட்டுமல்ல. இன்றுவரை உலகம் முழுவதும் நாடு, இன வேறுபாடின்றி எண்பது சதவீதம் பெண்கள் தமக்குப் பொருத்தமில்லாத பிராவைத்தான் அணிகிறார்களாம். இது பற்றி பல கருத்துக்கணிப்புகள், இதனால் ஏற்படும் உபாதைகள் எவ்வாறு சரியானதைத் தேர்ந்தெடுப்பது என்பது பற்றியெல்லாம் இணையத்தில் கொட்டிக் கிடக்கிறது.

* * * * * * * * * 

பிரா அணியாதது எப்படி மார்பகப் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக அமையும் என நம்புகிறார்கள்? ஒருவித அதீத பரபரப்பை ஏற்படுத்தும் 'புள்ளிராஜா' விளம்பரப் பாணியிலானது  இந்தப்  உத்தி.

அதாவது பேரூந்திலோ, வேறு பொது இடங்களிலோ ஒரு பெண் பிரா அணியாமல் இருப்பதைப் பார்த்துவிட்டு "ஏன் இந்தப் பெண்மணி இன்று பிரா அணியவில்லை? என்ன காரணம்? யார் செய்த காரியம்? என்றெல்லாம் கேள்விகள் எழுந்து, அந்தப் பெண்மணியிடமோ அல்லது அருகிலிருக்கும் பெண்மணியிடமோ குறைந்தபட்சம் அவள் காதலனான ஆண்மணியிடமோ தீர விசாரிப்பதன்மூலம் மார்பகப் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வைப்(?!) பெற்றுக் கொள்வார்கள் என்பது அவர்களின் நம்பிக்கை.

இந்த மாதிரியான உத்தி இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் கடைப்பிடிக்கப்ப்படுமானால் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும் என ஒரு கணம் யோசித்துப் பார்ப்பதைத் தவிர்க்க முடியவில்லை. நம்மூர் ஆண்கள் பலர் எல்லா அடைகளையும் ஒழுங்காக, நாகரீகமாக அணிந்த பெண்களையும்கூடப் பார்க்கும் பார்வையே ஒரு வன்புணர்வு குற்றத்தில் உள்ளே தள்ளுவதற்குப் போதுமானதாக இருக்கும். நாசூக்காக பார்ப்பது என்றால் என்னவென்றே அறியாதவர்களாக 'பே' என்று வெறித்துப் பார்ப்பதை இயல்பாகக் கொண்ட சமூகத்தில் இதெல்லாம் வேலைக்காகுமா?

வேண்டுமானால் 'உலக தர்ம அடி தினம்','உலக செருப்பு தினம்' போன்றவற்றுக்கு இந்த மாதிரியான உத்தியைப் பயன்படுத்தலாம்.

8 comments:

 1. ’பிரா’மாதம் போங்க!

  ReplyDelete
 2. ப்ரா ப்ரமாதம் தான் போங்க!!
  எப்படி ஜனரஞ்சகமாய் கிளுகிளுப்பை கையாள்வது என்பதை இதை பார்த்து கண்டுகொள்ளலாம்:D

  ReplyDelete
 3. என்னவொரு ஆய்வு...! அதுவும் கண்ணில் பட்ட குறளோடு... அசத்திட்டீங்க...

  ReplyDelete
 4. நம்மூர் ஆண்கள் பலர் எல்லா அடைகளையும் ஒழுங்காக, நாகரீகமாக அணிந்த பெண்களையும்கூடப் பார்க்கும் பார்வையே ஒரு வன்புணர்வு குற்றத்தில் உள்ளே தள்ளுவதற்குப் போதுமானதாக இருக்கும். நாசூக்காக பார்ப்பது என்றால் என்னவென்றே அறியாதவர்களாக 'பே' என்று வெறித்துப் பார்ப்பதை இயல்பாகக் கொண்ட சமூகத்தில் இதெல்லாம் வேலைக்காகுமா?

  ReplyDelete
 5. போடனுங்குறீங்களா இல்ல போட வேணாம்ங்குறீங்களா!! ஒன்னுமே புரியலையே ஜீ

  ReplyDelete
 6. வணக்கம்,ஜீ!நல்லாயிருக்கீங்களா?ஹி!ஹி!ஹீ!!!/////Real Santhanam Fanz (General) said...
  போடனுங்குறீங்களா இல்ல போட வேணாங்குறீங்களா!! ஒன்னுமே புரியலையே ஜீ?/////இதுல தான் அவரோட'வெற்றி'யே அடங்கியிருக்கு!

  ReplyDelete
 7. ஹா..ஹா..சூப்பர் அலசல்யா.

  //ப்ரா அணியாததன் சுதந்திரத்தைப் பற்றி ஒரு ஆணாக என்னால் உணர முடியாதாயினும், அதைவிட அதிகம் அவஸ்தையை அளித்திருக்குமா என்ற சந்தேகமும் எழுகிறது. //

  ஜீ..எதுக்கும் ஜட்டி இல்லாம ஒருநாள் ஆபீஸ் போய்ப் பாருங்களேன்.

  ReplyDelete

 8. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

  2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்


  அன்புடன்
  மதுரைத்தமிழன்

  ReplyDelete

Followers

Powered by Blogger.

Follow by Email

Copyright © வானம் தாண்டிய சிறகுகள்.. |