Friday, June 8, 2012

இசைராஜா!ளையராஜாவின் ஒரு ஆச்சரியத்தை முழுமையாக சந்திக்க நேர்ந்தது, மூன்று மாதங்களுக்கு முன்னர், தற்செயலாக! இவ்வளவு நாட்கள் எப்படித் தவற விட்டேன்? அதற்கு முன்னர்பாடலின் ஆரம்பம் மட்டுமே ஓரிரு தடவை கேட்டதுண்டு.

வள்ளி 'என்னுள்ளே என்னுள்ளே' - இது இளையராஜா பாடல் என்பது எனக்கு எந்த ஆச்சரியத்தையும் கொடுக்கவில்லை. ஆனால் வள்ளி படத்தில் இந்தப்பாடல் இடம்பெற்றதென்பது நம்பவே முடியாத ஆச்சரியமாக இருந்தது. அப்போது பிரபலமான 'வள்ளி வரப் போறா' என்ற பாட்டு அந்தப் பக்கம் நெருங்க விடாமலே துரத்தியிருந்ததில் ஏனைய பாடல்கள் பற்றி அக்கறை கொள்ளவில்லை.

மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டியது. குறிப்பாக இன்டர்லூட் இசை - இளையராஜா இசையமைத்த பாடல்களில் மிகக் கச்சிதமான, துல்லியமான ஒலியமைப்பு, இசைக் கோர்ப்போடு வெளிவந்த சில பாடல்களில் இதுவும் ஒன்று!


நான் நினைவு தெரிந்து கேட்ட முதல் பாடலாக இதயக் கோவிலின் 'இதயம் ஒரு கோவில்' இருந்தது! வெளியாகி ஆண்டுகள் கடந்திருந்தாலும் ஒவ்வொருநாளும் காலையில் அயல் வீட்டிலிருந்த சோதிலிங்கம் மாமா அம்ப்ளிபயர் செட் உதவியுடன் ஒலிக்கவிடுவார். இப்போதும் பாடலைக் கேட்கும்போது இனம்புரியாத ஒரு மகிழ்ச்சியும் புத்துணர்ச்சியும் தோன்றுவதாக நான் உணர்கிறேன். தொடர்ந்து என் சின்னஞ்சிறு வயதில் கேட்ட பாடல்கள் இளையராஜாவினுடையதாக இருந்தாலும், கொஞ்சம் விவரம் தெரிந்து, கவனித்து, ரசிக்க ஆரம்பித்த காலத்தில், முற்றிலும் வேறுபட்ட தளத்தில், ஒரு டிரென்ட் செட்டராக ஏ.ஆர்.ரஹ்மான் அறிமுகமாக, அப்போதிருந்த மனநிலையை வார்த்தைகளில் வர்ணிக்கமுடியாது. இப்போதும் ரோஜா பாடல்களைக் கேட்கும்போது அதே உணர்வுகளில் சிலிர்க்க முடிகிறது!

அன்னக்கிளி படத்தில் இளையராஜா அறிமுகமானபோதும் இதே போன்ற மனநிலையில் அப்போதிருந்த ரசிகர்கள் இருந்திருக்கக் கூடும். ஆரம்பத்திலிருந்து இளையராஜாவைக் கொண்டாடி வந்த ரசிகர்களால் ஏ.ஆர். ரஹ்மானின் வரவை,இசையை ஜீரணிக்க முடியாமல் ஒருவித மனத்தடையோடு மூர்க்கமாக நிராகரிக்கத் தலைப்பட்டபோது,பதிலுக்கு என்போன்றவர்களுக்கும் இளையராஜாவை நிராகரிக்க காரணங்களைத் தேட வேண்டியிருந்தது - சிறுவர்களாக இருந்தபோது!

ளையராஜாவின் ஆரம்பகாலங்களில், அப்போதிருந்த தொழில்நுட்பத்தில், மிகக் குறைந்த ட்ராக்கில் பதிவு செய்யப்பட பாடல்களை, கேட்கும்போதே மனதிற்குள் மட்டுறுத்திக் கேட்க வேண்டியுள்ளது. பாடகர்கள் பாடத் தொடங்கியதும், இசைக்கருவிகளின் ஒலி அமுங்கிப்போய் விடுவதும், இரைச்சல்களும் தவிர, உன்னிப்பாக்கக் கவனிக்காவிடில் சில நுண்ணிய சப்தங்களைக் கேட்க முடியாமலே போய்விடுகின்றன. 16வயதினிலே - 'செந்தூரப்பூவே' பாடல், அதன் இண்டர்லூட், குறிப்பாக பாடலின் ஆரம்பத்தில் ஒலிக்கும் கிட்டார்! கீபோர்ட் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகும் வரையில் இளையராஜாவின் பெரும்பாலான பாடல்களில் கோர்ட்சில் (Chords) கிட்டாரின் பங்கு அளப்பரியது. அடிப்படையில் ராஜா ஒரு கிட்டாரிஸ்டாகவும் இருந்ததும் காரணமாயிருக்கலாம்!

காலங்காலமாக நாங்கள் தமிழர்கள் இரண்டுபேரை எதிரெதிர் முகாமில் வைத்துக் கொண்டாடுவோம். அதில் ஒருவரைப் பிடிக்கும் என்பதற்காகவே காரணமின்றி (அல்லது காரணங்களைத் தேடிக் கண்டுபிடித்து) மற்றவரை வெறுத்துக் கொள்வோம்! நம்மில் சிலருக்கு ஒருவரை எதற்குக் கொண்டாடுகிறோம் என்று சொல்வதற்கு ஒரு காரணம்கூடத் தெரியாது. அவ்வளவு கூர்ந்து அவதானிப்பதும் கிடையாது! அனால் எதிர்கூட்டத்தின் மேல் சேற்றை வாரியிறைத்துக் கொண்டிருப்பார்கள். ரஹ்மான் ரசிகனாக இருந்தால் இளையராஜாவைப் பிடிக்கக்கூடாது. அல்லது, அப்படித்தான் சொல்லவேண்டும் என்றொரு கூட்டம் நம்மிடையே உண்டு. நான் ரஹ்மானின் ரசிகன் எனக்கு இளையராஜா இசை பிடிக்காது என்பவர்களின் இசை பற்றிய புரிதல், ரசனை கேள்விக்குரியது. உண்மையில் ரஹ்மானின் இசையை அல்லது பொதுவாகவே இசையை உண்மையாக உணர்ந்து கேட்டவர்களுக்கு  ராஜாவின் இசை பிடிக்கும்!

எனக்கு ரஹ்மான் இசைமீது இருக்கின்ற தீராத காதல்தான் ராஜாவின் இசையையும் ரசிக்க வைத்தது! எனக்கு மட்டுமல்ல! பதின்ம வயதுகளில் ஒரு ரஹ்மான் தீவிரவாதியாக, நான் இருந்ததைப் போலவே என் நண்பர்களும் இருந்தார்கள். நாங்கள் யாரும் இளையராஜா பாடல்களை நாமாக விரும்பிக் கேட்பதில்லை. இப்போது எல்லோரும் பிரிந்து வெவ்வேறு நாடுகளில்!சமீபத்தில் அவர்களின் முகப்புத்தகத்தைப் பார்த்தபோது சொல்லி வைத்ததுபோல எல்லோருக்கும் பிடித்த இசையாக இளையராஜா, ரஹ்மான்! கடந்த ஐந்தாறு வருடங்களாக தமிழ் சினிமாவில் ரஹ்மானின் நேரடியான பங்களிப்போ, அதற்கான சரியான தளம் அமையாததோ, அல்லது வேறு தளத்துக்குச் சென்று விட்டதும்கூட ராஜாவை ஊன்றிக் கவனிக்கக் காரணமாக இருக்கலாம்!

ண்பதுகளின் தொடக்கத்தில், புதிதாக அறிமுகமான ஸ்டீரியோ போன்றதொரு (பிரியாவில் அறிமுகமானதாம்) தொழில்நுட்பம் இளையராஜா பாடல்களில் இரைச்சலை அதிகமாக்கி நல்ல பாடல்களை எரிச்சலுடன் கேட்க வைத்ததைத் தவிர வேறெதுவும் செய்ததாகத் தெரியவில்லை. அலைகள் ஓய்வதில்லை - 'புத்தம்புதுக் காலை' பாடலின் இசை கொடுக்கும் உணர்வை அதன்பின்னர் ஆறு வருட இடைவெளிகளில் வந்த நாயகன் படத்தின் அருமையான பாடலான 'நீ ஒரு காதல் சங்கீதம்' கொடுப்பதில்லை. காரணம் அந்த தொழில்நுட்பத்தால் அல்லது சரியாக கையாளாமல் ஏற்பட்ட ஒரு வித தட்டையான இசை! (வேறு எப்படிச் சொல்வதென்று தெரியவில்லை). இரண்டு பாடல்களையும் கேட்கும்போது உணர முடியும்!

'புத்தம்புதுக் காலை' பாடலின் முதலாவது இண்டர்லூட்டின் ஆரம்பத்தில் கீழ்ஸ்தாயியில் இசைக்கும் புல்லாங்குழல் கொடுக்கும் அதிர்வு அருமையானது! வீரா 'மலைக்கோயில் வாசலில்' கூட அப்படித்தான்! அதுபோலவே ஒரு புல்லாங்குழல் ஜானி 'ஆசையைக் காற்றில தூதுவிட்டு' பாடலின் ஆரம்ப இசையாக! 

இளையராஜாவின் பழைய பாடல்களை இப்போதுள்ள தொழில்நுட்பத்தில் மீண்டும் இசைக்கோர்ப்புச் (ரீ மேக் அல்ல) செய்யும் பட்சத்தில் அற்புதமான இசையனுபவங்களைப் பெறலாம்.

ளையராஜா தான் அறிமுகமான அன்னக்கிளி படத்தில் அதுவரை வெளிவந்த பாடல்களிலிருந்து வித்தியாசமாக, புதுமையாக தனது இசைப் பயணத்தைத் தொடங்கி, தனது இயல்பான, நாட்டுப்புற இசையோடு வெஸ்டர்ன், கர்நாடக சங்கீதத்தை கலந்து சாதாரண மக்களின் இசையை எல்லோரிடமும் கொண்டு சேர்த்தார்! அதே வேளை ஒரு குறிப்பிட்ட மேல்வர்க்க குழுவினரிடம் மட்டும் சிக்கியிருந்த கர்நாடக சங்கீதத்தை சாதாரண மக்களும் ரசிக்கும் வகையில் எளிமையாக்கி எல்லாத் தரப்பினரிடமும் கொண்டு சேர்த்தார்!அல்லது ஒரு சிலர் குற்றம் கூறுவதுபோல சாஸ்த்ரீய சங்கீதத்தை எல்லோரிடமும் கொண்டுசேர்த்து சாஸ்த்ரீய சங்கீதத்தை பிரபல்யமாக்கினார்!

ரஹ்மான் தனது ஆரம்பகாலத்தில் இசைவிமர்சகர்கள், பழமைவாதிகளிடம் சந்தித்த விமர்சனங்கள், எதிர்ப்புகள் பற்றி நாமறிவோம்! அவற்றிலிருந்தே ரஹ்மானுக்கு ஏறத்தாள இரு தசாப்தங்களுக்கு முன்னால் இருந்திருக்கக் கூடிய சூழலையும், இளையராஜா சந்தித்திருக்கக் கூடிய விமர்சனங்கள், எதிர்ப்புகள் பற்றியும் ஊகிக்க முடிகிறது!

ன் நண்பன் பேசிக்கொண்டிருக்கும்போது, ராஜாவின் அதிகம் கவனிக்கப்படாத ஒரு முழுமையான நல்ல பாடல் என்று ஆரம்பிக்கும்போதே நான் இடைமறித்து 'இந்தமான் எந்தன் சொந்தமான்? - கேட்க ஆச்சரியமானான்!கரகாட்டக்காரன் படத்தில் சம்பந்தமேயில்லாமல் அப்படியொருபாடல்! பாடலின் ஆரம்ப இசையில் அப்படியொரு நேர்த்தி. இண்டர்லூட்டில் ஒலிக்கும் ஏராளமான வயலின்கள், புல்லாங்குழல் இவற்றோடு ராஜாவின் தனித்துவமான குரலும் இணைந்து, கொடுக்கும் அனுபவம் அலாதியானது! ஒரு கிராமத்துப் பாடலுக்கு வெஸ்டர்ன் முறையில் வயலின்களை இழையவிட்டு! - இவ்வாறு பல பாடல்களில் அமைந்திருக்கும்!

ராஜாவின் எந்த நல்ல இசை எந்தெந்த மோசமான படங்களுக்குள் இருக்குமோ என்ற அயர்ச்சி ஏற்படுவது தவிர்க்க முடியாதது. ஆரம்பத்தில் அவருக்கு கிடைத்த, அல்லது அவர் கொடுத்த வாய்ப்புகள் அப்படி!


ராஜாவுக்கு பெரிய இயக்குனர்களிடம் பணிபுரியும் வாய்ப்போ, வெவ்வேறு தளங்களில் பணிபுரியும் சூழலோ குறைந்த கால அவகாசத்தில் வாய்க்கவில்லை. மெதுவாகவே நிகழ்ந்தது! படிப்படியாக தானும் கற்றுக்கொண்டு, தன்னுடைய தளத்தையும் மாற்றிக் கொண்டு ரசிகனையும் கைபிடித்து அழைத்துச் சென்ற ராஜா ஒரு கட்டத்தில் தேங்கிவிட்டார் என்றே தோன்றுகிறது!

இளையராஜா இசைஞானியாக மாறியதிலிருந்து இந்த நிலை ஏற்பட்டிருக்கலாம். புதுமை குறித்த தேடல்கள், காலத்துக்கேற்ற மாறுதல் குறித்த கவனம் அற்றுப் போயிருக்கலாம். ராஜாவை சுற்றி உருவாக்கப்பட்ட இசைஞானி என்ற மாயவளையத்தினுள் சிக்கிக் கொண்டாரா?

அந்தக்காலத்தில் பல சிறிய படங்கள் ராஜாவின் இசையினால் மட்டுமே வெற்றிபெற்றதாகவும் வாய்ப்புத் தேடி வந்த பல புதிய இயக்குனர்களுக்கு உறுதுணையாக ராஜா இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.  அதில் எத்தனை பேருக்குத் தாம் விரும்பியவாறான இசையை மீண்டும் மீண்டும் கேட்டுப் பெற்றுக் கொள்ளக்கூடிய சுதந்திரம் இருந்தது, இப்போதாவது இருக்கிறதா என்பது பற்றித் தெரியவில்லை!

பாரதிராஜா, பாலசந்தர், மணிரத்னம் போன்ற ஒரு சிலர் தவிர, பெரும்பான்மையான இயக்குனர்கள் இளையராஜாவை கடவுளாகவே பாவித்து, அவர் கொடுக்கும் பாடல்களை பிரசாதமாகவே மறுபேச்சுப் பேசாமல் வாங்கிக் கொண்டு போகும் நிலையும் காரணமாக இருக்கலாம். சிலர் ஒரு படி மேலே போய் திரைக்கதையில் ஆலோசனை கேட்பதும், பாடல்கள் அமையவேண்டிய இடங்களையும் அவரிடமே கேட்பதாகவும் கூறியிருந்தார்கள். சில வருடங்களுக்கு முன்னர் ஏதோவொரு படத்தின் இசைவெளியீட்டு விளம்பரத்தில் இருந்த வாசகம் 'இளையராஜா சுவாமிகளின் இசையில்!'

99 - 2000ஆம் ஆண்டில் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் அதிகாலையில் ஐ.பி.சி. வானொலியில் ஒலிபரப்பாகும் வயலின் இசை மனதைப் பிழியும்! எனக்கு அவ்வளவு பிடிக்கும். ஒலிபரப்பாகும் நிகழ்ச்சியோடு பொருந்திப்போய் வார்த்தைகளில் விவரிக்க முடியாத ஒரு உணர்வினைக் கொடுக்கும்! சில வருடங்களுக்குப் பின்னரே தெரிந்து கொண்டேன் அது இளையராஜாவின் 'How to Name it!'

ளையாராஜாவின் ஹிந்தி பாடல்களைக் கேட்கும்போது தோன்றியது. ராஜாவை அழைத்துக்கொண்டு போகும் இயக்குனர் ஒரு தென்னிந்தியராக இருப்பார் - பாலுமகேந்திரா, ராம்கோபால் வர்மா, பால்கி! பாடல்கள் ஏற்கனவே தமிழில் வந்த பழைய பாடல்கள் அல்லது அது போன்ற சாயலில்! ஆஷா போஷ்லே போன்ற பாடகிகள் தவிர பாடகர் எஸ்.பி.பி. அல்லது மனோ! பாடலின் இன்டலூட் சிறிது மாற்றப்பட்டிருக்கும். தவிர அந்த மண்ணின் இசையான ஹிந்துஸ்தானியோ, பிரபல பாடகர் பற்றியோ ராஜா அக்கறை கொண்டிருக்க மாட்டார்.

ஆக நம்மூர் திருவிழாக்களில் கோஷ்டி கானம் இசைப்பது போல, ஹிந்தி சினிமாவில் இளையராஜா கோஷ்டி பாட்டுக் கச்சேரி செய்ததைப் போல ஒரு உணர்வு தோன்றும்! பின்னணி இசை மட்டும் உலகத்தரமாக - ஏனெனில் அது மேலைத்தேய சாஸ்த்ரீய சங்கீதத்தில் இருக்கும் உதாரணமாக சீனிகம்! இதை ஒரு படைப்பாளியாக ராஜாவின் 'சமரசம்' செய்துகொள்ளாத இடம் என்று கூற முடியுமெனில், அதையே இன்னொரு வகையில் ராஜா 'சறுக்கிய' இடமென்றும் கூறலாம்.

சிறைச்சாலை படத்தின் பின்னணிஇசை, பாடல்கள் பற்றிக்கூற வேண்டியதில்லை! தொண்ணூறுகளில் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதில்வந்த சில பாடல்கள் மட்டும் ஒலிக்கோர்ப்பில் மிகத்தரமானவையாக இருந்தன. ஆரம்பத்தில் குறிப்பிட்ட வள்ளி பாடல், தளபதியின் ராக்கம்மா கையத்தட்டு, சுந்தரி கண்ணால் ஒரு சேதி போன்ற பாடல்கள், அவதாரம் 'தென்றல் வந்து தீண்டும்போது' எல்லாமே ராஜாவின் ஆச்சரியங்கள்!இதுபோன்ற படைப்புகள் தொடர்ந்து வராதது வருத்தமே!

ளையராஜா மீது வைக்கப்படும் விமர்சனங்கள் அவரின் தனிப்பட்ட குணங்கள், பொதுவில் மற்றவர்களிடம் நடந்துகொள்ளும் முறை சார்ந்ததாகவே இருக்கின்றன. நல்லவர்களின் படைப்புகள்தான் நன்றாயிருக்குமாம், இளையராஜா நல்லவர் இல்லையாம் அதனால் அவரின் இசையும் நல்லதல்ல என்றொரு வாதத்தை சிலர் முன்வைக்கிறார்கள்.

பொதுவாக கலைஞனின் மனம் மிக மெல்லியது எனச் சொல்லப்படுகிறது. திடீரெனப் புகழின் உச்சத்தை அடையும்போது எல்லோராலும் அந்த மாற்றத்தை, முற்றிலும் புதிய சூழ்நிலையை எதிர்கொள்ள முடிவதில்லை. அதற்கான பக்குவமும் எல்லோரிடமும் இருப்பதில்லை. அதுபோல காலமாற்றத்தில் தனது இடம் இன்னொருவரால் பிரதியீடு செய்யப்படுகிறது என்பதை எல்லோராலும் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை! இந்த இருநிலைகளிலுமே தான் தனித்துவிடப்பட்டதைபோல, ஒரு வெறுமையை உணரும்போது, அதற்குத் தயார்படுத்த, தளம்பாமல் இருக்க ஒரு மாற்றுவழி அல்லது வேறொரு பிடிமானம் தேவைப்படுகிறது! (அப்படியொன்று மைக்கேல் ஜாக்சனுக்கு கிடைக்காமல் போயிருக்கலாம்) அந்த மாற்றுவழி ஆன்மீகமாக இருக்கலாம்! அநேகமான இசையமைப்பாளர்கள், பாடகர்கள் உள்ளிட்ட கலைஞர்கள் மிகுந்த கடவுள் பக்தி நிறைந்தவர்களாக இருப்பது இதனால்தானோ என்னவோ!

கலைஞர்கள் சிலர் உணர்ச்சிக்குவியலாகவே இருப்பார்கள்! சிலர் உள்சுருங்கியவர்கள்! வேண்டுமென்றே சீண்டும்போது சிலர் உணர்ச்சிகளைப் புதைத்து, வெளியே புன்னகையுடன் பேசலாம்!எளிதில் உணர்ச்சிவசப் படுபவர்களாகவும், மோசமாக எதிர்வினையாற்றக் கூடியவர்களாகவும் சிலர்!

படைப்பாளியின் தனிப்பட்ட குணவியல்புகள் சார்ந்து அவரின் படைப்புகளை அணுகுவது என்வரையில் அவசியமற்றது! மொத்தத்தில் ராஜாவினைக் கேட்கையில் சர்வதேச அளவில் புகழ் பெற்றிருக்கக் கூடிய ஒரு கலைஞன் தமிழ் சினிமாவுக்குள் மட்டும் தன்னைக் குறுக்கிக் கொண்டுவிட்டார் என்றே தோன்றுகிறது. இதற்கு ராஜாவின் தனிப்பட்ட குணங்களும் துணை புரிந்திருக்கலாம்!

மீப காலத்தில் இளையராஜாவின் இசையில் வெளிவந்த என்னை மிகக்கவர்ந்த பாடல்கள் என்று சொல்லப்போனாலே ஏழெட்டு வருடங்களுக்கு முன்னர் வந்ததாகவே இருப்பதுதான் சோகம்! பிதாமகனின் 'இளங்காற்று வீசுதே', 'உன்னைவிட'. மிகச் சமீபத்தில் என்னை மிகக் கவர்ந்த  பின்னணி இசை 'அழகர் சாமியின் குதிரை'   அந்தப்படத்திற்கு கதை நிகழும் சூழலுக்கு அந்த இசை பொருத்தமா என்ற கேள்விகளைப் புறந்தள்ளி கொண்டாட முடிகிறது!

இளையராஜா என்ற படைப்பாளியின்மீது மீது எவ்வாறான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும்,அவரது படைப்புகளில் ரசிப்பதற்கும், கொண்டாடப்படுவதற்கும் ஏராளமான விஷயங்கள் உள்ளன. இனிவரும் தலைமுறையினரும் கூட!

34 comments:

 1. அருமையான , திறமையான இசையமைப்பாளர் இவர்

  ReplyDelete
 2. ஜீ...!

  தமிழ் சினிமாவின் பொக்கிஷமாக ராஜா என்றைக்கும் கொண்டாடப்படக் கூடியவர். எனக்கும் அந்த கருத்தியலில் உடன்பாடு உண்டு.

  ஆனால், ஒருவரைக் கொண்டாடுவதற்காக மற்றவர்கள் மீதான சேறெறிதல்களை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. அது ராஜா- ரஹ்மான், கமல்- ரஜினி என்கிற விடயங்களில் என்றாலும்.

  எம்மிடையே விடயமொன்றை ரசிப்பதற்கான காரணத்தை நாங்கள் தேடுவதைக் காட்டிலும் எதிர்ப்பதற்கான காரணத்தை தேடுவதிலேயே ஆர்வம் காட்டுகின்றோம். அதுதான் ராஜா- ரஹ்மான் விடயத்திலும் நடந்து விடுகிறது. இதனிடையே பலருக்கு காரணமின்றியே பலரை வெறுக்கவும் முடிகிறது. பல ராஜா- ரஹ்மான் வெறியர்கள் இதற்குள் அடங்குவார்கள்.

  இசை என்பது உணர்வதற்காக, ரசிப்பதற்காக, கொண்டாடுவதற்காக என்கிற எண்ணத்தில் அடிப்படையில் அணுகுகிறேன். அப்படியான இசையை யார் வழங்கினாலும் அதற்குள் கட்டுண்டு கொள்கிறேன். அதற்கும் ராஜாவும் முக்கியமானவர்.

  பல பக்கங்களிலும் இருந்து விடயங்களை அணுகி எழுதப்பட்டிருக்கிற பதிவு. வாழ்த்துக்கள் ஜீ!

  ReplyDelete
 3. இளையராஜா என்ற மனிதரை ரசிக்காவிட்டாலும், அவருடைய படப்புகளில் ரசிப்பதற்கு நிறையவே இருக்கிறது!!

  அவருடைய பாடல்களை நிறையவே ரசித்திருக்கிறேன்.. என் பல இரவுகளுக்கு அவர் பாடல்கள்தான் தாலாட்டு.... இரவில் கண்மூடி கேட்க இளையராஜா பாட்ல்களைப்போல் வேறெதுவும் அமைவதில்லை!!

  //குயிலோஷையின் பரிபாசைகள் அதிகாலையின் வரவேற்புகள்//

  அதிகாலைக்கே அழைத்துச்செல்கிறது இப்பாடலின் இசையும் ஜானகியம்மாவின் குரலும்!!

  ReplyDelete
 4. ரசிகர்களின் ரசனை மாற்றம் கலைஞர்களுக்கும் அயர்ச்சியை ஏற்படுத்தும். வயதேற ஏற வரும் அயர்ச்சியும் கிரியேட்டிவிட்டியை குறைக்கும். இளையராஜாவிடம் இன்னும் எதிர்பார்ப்பது தவறு. அவரது பொற்காலம் முடிந்துவிட்டதாகவே உணர்கிறேன். 80-களில் இருந்து 95-கள் வரையிலான எண்ணற்ற இசைக்கோர்ப்புகளே, ராஜாவின் ராஜாங்கத்தை பறைசாற்றுபவை.

  முக்கியமாக நீங்கள் குறிப்பிட்டிருக்கும், ”இளையராஜாவின் பழைய பாடல்களை இப்போதுள்ள தொழில்நுட்பத்தில் மீண்டும் இசைக்கோர்ப்புச் (ரீ மேக் அல்ல) செய்வதை” நானும் பலமுறை நினைத்துப் பார்ப்பது உண்டு. சில தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்களை ராஜாவே மீண்டும் அப்படியே புதிய தொழில்நுட்பத்தில் ரிக்கார்டிங் செய்தால் உண்மையில் அற்புதமாகத்தான் இருக்கும்.
  ராஜாவின் இசையை ஆழ்ந்து ரசிப்பது ரஹ்மான் இசையை ரசிப்பதற்கு ஒருபோதும் தடையாக இருப்பதாக நான் உணர்ந்ததில்லை.

  ReplyDelete
 5. 'இந்தமான் எந்தன் சொந்தமான்...
  'புத்தம்புதுக் காலை'
  அவதாரம் 'தென்றல் வந்து தீண்டும்போது'

  ராஜாவின் உச்சகட்ட இசை.....

  ReplyDelete
 6. இளையராஜாவின் இசை பற்றிய,அவ்விசை போல இனிமையான பதிவு

  ReplyDelete
 7. இளையராஜாவின் இசையில் விரைவில் வெளிவர இருக்கும் நீதானே என் பொன் வசந்தம் படத்தின் யுவன் குரலில் வெளியாகியுள்ள teaser "சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது அடடாஆஆஆஆஆ" கேட்டு விட்டீர்களா நண்பர்களே?

  ReplyDelete
 8. வணக்கம்,ஜீ.!!ஒவ்வொருவருக்கும் பார்வைகள் வேறுபாடும் தான்.ஸ்டீரியோ ஒலி அமைப்பு அவர் பாடல்களின் இனிமையைக் குறைத்தது உண்மைதான்.ஆனாலும்,..................................!

  ReplyDelete
 9. சமீப காலத்தில் இவ்வளவு தெளிவான பதிவினை எங்கும் படிக்கவில்லை..நன்றி ஜீ..அற்புதமான கட்டுரை.

  ReplyDelete
 10. //இளையராஜாவின் பழைய பாடல்களை இப்போதுள்ள தொழில்நுட்பத்தில் மீண்டும் இசைக்கோர்ப்புச் (ரீ மேக் அல்ல) செய்யும் பட்சத்தில் அற்புதமான இசையனுபவங்களைப் பெறலாம்.//

  சீனி கம், பா பாடல்களைக் கேட்டபோது, எனக்கும் இதே தோன்றியது...இளையராஜாவின் அனைத்து முக்கியமான பாடல்களையும் இளையராஜாவே நவீன தொழில்நுட்பத்தில் தந்தால் மகிழ்வோம்.

  ReplyDelete
 11. // 'இந்தமான் எந்தன் சொந்தமான்? - கேட்க ஆச்சரியமானான்!கரகாட்டக்காரன் படத்தில் சம்பந்தமேயில்லாமல் அப்படியொருபாடல்!//

  ஆம்,அருமையான பாடல் அது..என்னைப் பொறுத்தவரை ‘மாங்குயிலே..பூங்குயிலே’வும் நல்ல பாடலே! பதிவருக்கு கிராமியப் பாடல்கள் மேல் என்ன இளக்காரமோ?

  ReplyDelete
 12. என்னைப் பொருத்தவரை ஆஸ்காரினை இளைய ராஜாவிற்கு கொடுத்திருக்கலாம் என்றே சொல்வேன்...பல காரணம்க்கள் என்னுள் இருக்கு பல பாடல்கள் அதற்கு காரணமாய் அமைந்திருக்கு

  காசி படத்தில் திடீரென அவரால் கொடுக்கப்பட்ட ஐடியாக்களுக்கேற்ப மாற்ற்ப்பட்ட இசை முறை

  இதயக் கோயிலில் வனுயர்ந்த சோலையில் பாடலில் ஒரு இடத்தில் வரும் இசையமைப்பு என பல உள்ளன.

  அந்த கால இசைகருவிகளைக் கொண்டு மிகத்திறமையாக இசையை கொடுத்திருந்தவர் இசைஞானி.

  ஆனாலும் ரகுமானின் இசையில் உள்ள விரைவான ஈர்ப்பு இசைஞானிடம் குறைவுதான்.

  ReplyDelete
 13. AnonymousJune 09, 2012

  rahman isai enbadhu tholinutpathin koodal......indru avarai minjum isai thayarippalagal ullana.....aanal raja oru sadharana isai amaipalar ivarukku isai uruvakkum thiramai mattum ullavar ivar isai thayaripplar alla......ivarin isai endha samarasam seyyamal namakku kertka mudigindradu.......

  ReplyDelete
 14. மிக நேர்த்தியான திறனாய்வு...நண்பரே!

  அவரிடமிருந்து ரஹ்மான் கற்றுக்கொண்டது ஏராளம்.
  எப்படி ஒரு இசையமைப்பாளன் தேங்கி நிண்று விடுவான் என்பதற்க்கு உதாரணமாக ராஜா ரஹ்மான் கண் முன்னே வாழ்ந்து காண்பித்தார்.
  அதற்கு நேர் எதிர் பாதையில் நடைபோட்டதால் ரஹ்மான் உயரே போய்க்கொண்டே இருக்கிறார்.

  ReplyDelete
 15. அருமை ஜீ .. ராஜா ஜீவனோடு ஒன்றிய ஒருவர் .. எழுதும்போது தானாகவே அது தெரியும் .. தெரிந்தது.

  மற்றபடி ரகுமான் ராஜா விஷயம் .. சின்னபசங்க சண்டை பாஸ். இசையை ரசிப்பவர்களுக்கு ராஜா, ரகுமான் என்ற பெயர்கள் தாண்டி அந்த இசை தான் முக்கியம் .. ஒரு அடையாளத்து இது ராஜா, இது ரகுமான் என்று பெயரிடவேண்டியிருக்கிறது. எல்லாமே சப்தஸ்வரங்கள் தானே!

  ReplyDelete
 16. king of music.. இளைய ராஜா..

  ReplyDelete
 17. @"என் ராஜபாட்டை"- ராஜா
  வாங்க ராஜா!

  ReplyDelete
 18. //மருதமூரான். said...
  தமிழ் சினிமாவின் பொக்கிஷமாக ராஜா என்றைக்கும் கொண்டாடப்படக் கூடியவர். எனக்கும் அந்த கருத்தியலில் உடன்பாடு உண்டு.//

  //இசை என்பது உணர்வதற்காக, ரசிப்பதற்காக, கொண்டாடுவதற்காக என்கிற எண்ணத்தில் அடிப்படையில் அணுகுகிறேன்//
  அதே அதே! :-)

  ReplyDelete
 19. //Riyas said...
  என் பல இரவுகளுக்கு அவர் பாடல்கள்தான் தாலாட்டு.... இரவில் கண்மூடி கேட்க இளையராஜா பாட்ல்களைப்போல் வேறெதுவும் அமைவதில்லை!!//

  உங்களுக்குமா? இதையே நிறையப்பேர் சொல்லிக் கேட்டிருக்கிறேன். சமயத்தில் நானும் உணர்ந்திருக்கிறேன்.

  ReplyDelete
 20. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  80-களில் இருந்து 95-கள் வரையிலான எண்ணற்ற இசைக்கோர்ப்புகளே, ராஜாவின் ராஜாங்கத்தை பறைசாற்றுபவை//
  உண்மைதான்!

  //நானும் பலமுறை நினைத்துப் பார்ப்பது உண்டு. சில தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்களை ராஜாவே மீண்டும் அப்படியே புதிய தொழில்நுட்பத்தில் ரிக்கார்டிங் செய்தால் உண்மையில் அற்புதமாகத்தான் இருக்கும்//
  நடக்க வேணும் மாம்ஸ்!

  //ராஜாவின் இசையை ஆழ்ந்து ரசிப்பது ரஹ்மான் இசையை ரசிப்பதற்கு ஒருபோதும் தடையாக இருப்பதாக நான் உணர்ந்ததில்லை//
  நிச்சயமாக இசை என்ற வகையில் அணுகும்போது பேதங்கள் இல்லை!

  ReplyDelete
 21. //சென்னை பித்தன் said...
  இளையராஜாவின் இசை பற்றிய,அவ்விசை போல இனிமையான பதிவு//
  வாங்க பாஸ்.. நன்றி!

  ReplyDelete
 22. //சேக்காளி said...
  இளையராஜாவின் இசையில் விரைவில் வெளிவர இருக்கும் நீதானே என் பொன் வசந்தம் படத்தின் யுவன் குரலில் வெளியாகியுள்ள teaser "சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது அடடாஆஆஆஆஆ" கேட்டு விட்டீர்களா நண்பர்களே?//
  வாங்க பாஸ்!
  பேஸ் மாட்டேன்.....நான் அதப்பற்றி பேஸ் மாட்டேன்! :-)

  ReplyDelete
 23. //Yoga.S. said...
  வணக்கம்,ஜீ.!!ஒவ்வொருவருக்கும் பார்வைகள் வேறுபாடும் தான்.ஸ்டீரியோ ஒலி அமைப்பு அவர் பாடல்களின் இனிமையைக் குறைத்தது உண்மைதான்.ஆனாலும்,..................................!//
  ஆனாலும்...தொழில்நுட்ப வளர்ச்சி என்றவகையில் தவிர்க்க முடியாதது அப்படியா? அது சரியாகக் கையாளப்படாமலா..எங்கயோ தப்பு நடந்திருக்கு!

  ReplyDelete
 24. //செங்கோவி said...
  சமீப காலத்தில் இவ்வளவு தெளிவான பதிவினை எங்கும் படிக்கவில்லை..நன்றி ஜீ..அற்புதமான கட்டுரை//
  நன்றி....சமீப காலமா நாம் எல்லாருமே கொஞ்சம் Out of form ல இருந்த மாதிரி இருந்திச்சு!

  //என்னைப் பொறுத்தவரை ‘மாங்குயிலே..பூங்குயிலே’வும் நல்ல பாடலே! பதிவருக்கு கிராமியப் பாடல்கள் மேல் என்ன இளக்காரமோ?//
  அப்படியெல்லாம் ஒன்றுமில்லை...நீங்கள் சொன்னதும்தான் அதுபற்றிக் கூறாதது உணர்கிறேன். கிராமியப் பாடல்கள் பற்றித் தனியாவே எழுதலாமே!
  என்னாது பதிவரா???? :-)

  ReplyDelete
 25. //சிட்டுக்குருவி said...
  என்னைப் பொருத்தவரை ஆஸ்காரினை இளைய ராஜாவிற்கு கொடுத்திருக்கலாம் என்றே சொல்வேன்...பல காரணம்க்கள் என்னுள் இருக்கு பல பாடல்கள் அதற்கு காரணமாய் அமைந்திருக்கு//
  வாங்க பாஸ்!
  அதுக்கு ஆஸ்காருக்கு போகக்கூடிய படங்களுக்கு மியூசிக் போடணுமே! ராஜா தமிழ்நாடே தனக்குப் போதும்னு சொல்றாரே! :-)

  ReplyDelete
 26. //உலக சினிமா ரசிகன் said...
  அவரிடமிருந்து ரஹ்மான் கற்றுக்கொண்டது ஏராளம்.
  எப்படி ஒரு இசையமைப்பாளன் தேங்கி நிண்று விடுவான் என்பதற்க்கு உதாரணமாக ராஜா ரஹ்மான் கண் முன்னே வாழ்ந்து காண்பித்தார்.
  அதற்கு நேர் எதிர் பாதையில் நடைபோட்டதால் ரஹ்மான் உயரே போய்க்கொண்டே இருக்கிறார்//
  அட!!! இது கூட நல்லாத்தான் இருக்கு! உண்மைதான்.. நம் முன்னோர் வாழ்ந்த வாழ்க்கை நமக்கெல்லாம் பாடம்தான் :-)

  ReplyDelete
 27. //ஜேகே said...
  அருமை ஜீ .. ராஜா ஜீவனோடு ஒன்றிய ஒருவர் .. எழுதும்போது தானாகவே அது தெரியும் .. தெரிந்தது.

  மற்றபடி ரகுமான் ராஜா விஷயம் .. சின்னபசங்க சண்டை பாஸ். இசையை ரசிப்பவர்களுக்கு ராஜா, ரகுமான் என்ற பெயர்கள் தாண்டி அந்த இசை தான் முக்கியம் .. ஒரு அடையாளத்து இது ராஜா, இது ரகுமான் என்று பெயரிடவேண்டியிருக்கிறது. எல்லாமே சப்தஸ்வரங்கள் தானே!//

  வாங்க பாஸ்!
  சிம்பிளா சொல்லிட்டீங்க..இசை பற்றி நீங்க சொன்னா ...அது உங்க ஏரியா இல்ல? :-)

  ReplyDelete
 28. //கோவி said...
  king of music.. இளைய ராஜா..//
  :-)

  ReplyDelete
 29. ராஜாவின் கால கட்டம் எது என்பதை புரிந்து கொண்டால் அன் நாட்களின் ஊடகங்களின் நிலையைப்புரிந்து கொண்டால் புரியும் அவரின் சிகரம் இசையின் தரம் அப்படியே மலையில் ஏத்திவிட்டு இப்படி! தள்ளுவது ஏன் !ம்ம்ம் அவரின் கிராமிய காலத்தைப் பற்றி நவீன தலைமுறையின் பார்வையைச் சொல்லுகின்றீங்க ஆனால் அவரைப்போல இன்று தொழில் நுட்ப முன்னேற்றம் கண்டவர்கள் ஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏன் சாதிக்க வில்லை மயிலு பாட்டை கேளுங்க் புரியும் பாஸ்!ம்ம்ம்

  ReplyDelete
 30. ஜீ... said...

  //Yoga.S. said...
  வணக்கம்,ஜீ.!!ஒவ்வொருவருக்கும் பார்வைகள் வேறுபடும் தான்.ஸ்டீரியோ ஒலி அமைப்பு அவர் பாடல்களின் இனிமையைக் குறைத்தது உண்மைதான்.ஆனாலும்,..................................!//
  ஆனாலும்...தொழில்நுட்ப வளர்ச்சி என்றவகையில் தவிர்க்க முடியாதது அப்படியா? அது சரியாகக் கையாளப்படாமலா..எங்கயோ தப்பு நடந்திருக்கு!
  ////அவரிடம் சொன்னால் ஒப்புக் கொள்ள மாட்டார்!அது அந்தக் காலத்துக்கு ஏற்புடையது என்பார்!

  ReplyDelete
 31. எழுபதுகளிலிருந்து தொண்ணூறு மத்தி வரை இசை ராஜாங்கம் நடத்தி இருக்கிறார். ஏதோ மூன்று நான்கு பாடல் களை, அதுவும் அதிகம் பிரபலமாகாத பாடல்களை மட்டும் கூறி அந்த இசை கங்கையை சிறு குடுவைக்குள் அடைக்க நினைக்கிறீர்கள்.
  உங்கள் எழுத்தின் அடிநாதம் ஒரு குறை சொல்லும் பாங்கிலேயே உள்ளது.எந்த காரணிகளை வைத்து அவர் தோற்றுவிட்டார் என்றோ , மற்றவர்கள் அவரை காட்டிலும் சாதித்துவிட்டனர் என்றோ நினைக்கிறீர்கள்?
  இசை என்பது காதுக்கு இனிமையாக மட்டும் இருந்து காதோடு போய்விடாது மனதோடு போய் கலக்கவேண்டும். மின்சாரமில்லாத இன்றைய இரவுகளிலும் அவர்தான் மொபைல் மெமரியிலிருந்து அல்லது எப்.எம் மூலமாக இதமாக தாலாட்டி தூங்க வைக்கிறார்.
  நாகரீகம் கருதி , இயல்பான கிராமத்தானின் நாணத்தால், ஆன்மிகம் தந்த பக்குவத்தால் தனிப்பட்ட எந்த விஷயத்தையும் அவர் தரப்பிலிருந்து மீடியாவில் கூறாததால் அவரை ஒரு வில்லன் போல் சித்தரிக்க முயலுகிறீர்கள் போலும். வாழ்கையில் எந்த ஒரு தர்மத்தையும்,நியாயத்தையும் கொண்டிராத வைரமுத்து போன்றோர் சேற்றை வாரி இறைத்ததை மட்டும் வைத்து அவரை அலசி ஆராய முற்படும் உங்கள் நடுநிலை கேள்விக்குறியாகிறது?
  அவரின் தனிப்பட்ட குணத்தை குறையாகவோ,நிறையாகவோ கூற உங்களுக்கோ,எனக்கோ எந்த உரிமையும் , நியாயமும் இல்லை.

  ReplyDelete
 32. நீங்கள் குறிப்பிட்ட அனைத்து பாடல்களும் மறக்க முடியாத பாடல்கள் ! நன்றி !

  ReplyDelete
 33. இளைய ராஜாவின் அதிகம் பேர் கேட்காத பாடல்.செவ்வந்தி படத்தில் , “வாசமல்லி பூவு, பூவு” யாரிடமாவது இருக்கா?

  ReplyDelete
 34. இசையை ரசிப்பவனுக்கு ஒவ்வொருவர் கொடுப்பதும் தனித்தனி சுவை உணவே... எப்படியிருந்தாலும் இளையராஜாவின் சுவை என்பது எல்லாவற்றிலும் இருந்தும் வேறுப்ட்டதே

  ReplyDelete

Followers

Blog Archive

Powered by Blogger.

Archives

Follow by Email

Copyright © வானம் தாண்டிய சிறகுகள்.. |