Saturday, June 25, 2011

அவன்-இவன்! கிரேட் எஸ்கேப்பான திருட்டுப்பதிவர்!

என்னமோ தோணிச்சு!
வரலாறுகள் என்றுமே வெற்றி பெற்றவர்களின் பார்வையில்தான் எழுதப்படுகின்றனவா?
நியாயமும், தர்மமுமே என்றும் வெற்றியடையும் என்பது முட்டாள்தனமான மூட நம்பிக்கையாகவே எனக்குத் தோன்றுகிறது!
நீங்கள் அதை நம்புகிறீர்களா?
அப்படியானால் தோற்றுப் போனவர்கள் எல்லோரும் கொடியவர்கள், அநியாயவாதிகளா?
வென்றவர்கள் எல்லாம் தர்மத்தின் பிரதிநிதிகள், நீதியின் காவலர்களா? ஒண்ணுமே புரியல!

*************

அவன் -இவன்!

படத்தின் கதையில் திருப்பத்தைக் கொண்டுவரும் காரெக்டர் திடீரென்று என்ட்ரி ஆகக் கூடாது. ஆரம்பத்திலேயே அட்லீஸ்ட் படத்தில் இப்படி ஒருவர் இருக்கிறார் என்று ஒரு சின்ன சீனில் காட்டினாலே போதுமானது என்பது ஹாலிவுட்டின் பொதுவான விதி என்று வாத்தியார் சுஜாதா சொல்லுவார். அதிலும் வில்லனுக்கு அதிக முக்கியத்துவம். அநேகமாக ஹீரோ அறிமுகமாகமுன் அல்லது அடுத்த சீனில் வில்லனின் அறிமுகம் இருக்கும்! தமிழிலும் அவ்வாறே!

ஆனால் இந்தப்படத்தில் திடீரென்று வில்லன்! ஒருவேளை வித்தியாசமாக எல்லா விதிகளையும் மீற முயன்றிருக்கிறாரா பாலா? செம்படைத் தலை, வித்தியாசமான மனிதர்கள், கொடூரமான அதிரவைக்கும் கொலை இவற்றில் தெரிகிறது பாலா படம் என்று! விஷால் அதகளம் பண்ணியிருக்கிறார்! 
Hats off விஷால்! ஆனால் எதுக்காக இவ்வளவு கஷ்டமெல்லாம்? 

*****************

திருட்டுப் பதிவர்!
வீட்டில் உள்ளோருக்குத் தெரியாமல் திருட்டுத்தனமாகப் பதிவெழுதுவது கொஞ்சம் அசௌகரியமாகவே! யாரவது அறைக்குள் வந்தால் உடனே அரக்கப் பரக்க வின்டோவை க்ளோஸ் பண்ணுவது இசகு பிசகான சந்தேகத்தை ஏற்படுத்துமோ?
இருந்தாலும் இதைக் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்ளவா முடியும்?


இன்றுடன் பதிவுலகிற்கு வந்து ஒருவருடம்! ஸ்கூல் படிக்கும்போது உருப்படியா ஒரு கட்டுரைகூட எழுதியதில்லை. எந்த நோக்கமுமில்லாம திடீரென்று பதிவுலகிற்கு! எனக்கு ஊக்கம், ஆதரவு தரும் பதிவுலக நண்பர்கள், சகோதர சகோதரிகளுக்கு நன்றி!

யாருமற்ற, வெறுமையாய் உணரும் பொழுதுகளில் ஏதோ ஒரு ஆறுதலாய்...
எங்கெங்கோ இருக்கும் முகம்தெரியாத, உணர்வுகளால் நெருக்கமான உறவுகளுக்கு நன்றிகளும், வணக்கங்களும்!

******************

ம்ம்ம்...?




ருவாண்டா இனப்படுகொலைக்கு (1994) உடந்தையாக இருந்தவர்களில் ஒருவரான முன்னாள் பெண் அமைச்சருக்கு ஆயுள்தண்டனை வழங்கியுள்ளது ஐ.நா.குற்றவியல் நீதிமன்றம்!
இது பற்றிய திரைப்படம்! Hotel Rwanda
8 -10 லட்சம் பேரைக் கொன்றவர்களுக்கு 10 வருஷம் விசாரணை நடத்தி, 7 குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் இந்தத் தண்டனை! ம்ம்ம்... 

*******************

கிரேட் எஸ்கேப்!
கடல் அலைகளை எவ்வளவு நேரமானாலும் சலிக்காமல் பார்த்துக் கொண்டிருக்கப் பிடிக்கும்! அப்பப்ப வெள்ளவத்தை பீச்சுல நண்பர்களுடன் செல்லும்போது எனக்கு ரெயில்வே டிராக்கில், ஸ்லிப்பர் கட்டையில் அமர்ந்திருப்பதே எப்போதும் பிடிக்கும். என்ன அடிக்கடி ட்ரெயின் வரும். எழுந்து செல்ல வேண்டியிருக்கும்!

அருகருகே அமைந்த இரண்டு ட்ராக்குகளில் நகர் நோக்கி வரும் புகையிரதங்கள் கடற்கரைப்பக்கமாகவும், நகரிலிருந்து செல்பவை மற்றையதிலும்!

சில நாட்களுக்குமுன் இரவு நானும் பார்த்தியும் மியூசிக், கம்போசிங் பற்றி உட்கார்ந்து பேசிட்டு இருந்தோம். பார்த்தியும் ரஹ்மானின் தீவிர விசிறி! கம்போசிங், அது தொடர்பான தொழில்நுட்பங்கள் (அது தொடர்பான ஏராளமான மென்பொருள்கள் வைத்திருக்கிறான்) பற்றி கிட்டத்தட்ட ஆராய்ச்சியே பண்ணிட்டு இருப்பவன்!

பேச்சு சுவாரஷ்யத்தின் இடையே ட்ரெயின் சத்தம் கேட்க திரும்பிப் பார்த்தேன்! அது நாங்கள் இருந்த ட்ராக்குக்கு பக்கத்து ட்ராக்கில் செல்லுமென்பதால் மீண்டும் பேச்சில் கவனமாகி..

ஏதோ உள்ளுணர்வில் எதேச்சையாகத் திரும்ப...வழமைக்கு மாறாக நாங்கள் இருந்த ட்ராக்கில் ட்ரெயின் வர...டேய்ய்ய்ய்!!!! - அவசரமாக எழுந்தோடி...கிரேட் எஸ்கேப்!!!    

Friday, June 24, 2011

சாட்டிங்! சாரு! சர்ச்சை!


சாரு பற்றி, இணைய உலகில் பற்றியெரிகிறது! 

அது உண்மையான சாருதானா? போலியாகவும் இருக்கலாமல்லவா?

ஏனெனில் நான் பார்த்த ஒரு சாருவின் face book profile இல் (அது போலியா தெரியல!) சமபந்தமே இல்லாமால் சிலரின் புத்தகங்கள், தளங்கள் சாருவின் விருப்பத்துக்குரியவையாக குறிப்பிடப்பட்டிருந்தன! 

ஏற்கனவே நான் யாழ்ப்பாணத்தில் பிறந்து லண்டனில் வசிக்கும் நடிகர் அஜீத்குமார் facebook பார்த்திருக்கிறேன்! அவருக்கும்  எக்கச்சக்கமான நண்பர்கள்!

இணைய உலகில் போலி எது நிஜம் எதுன்னு....காலங்காலமா ஏமாறுபவர்களும் ஏமாற்றுபவர்களும்!

அப்படியே சாரு chat பண்ணியிருந்தாருன்னு ஒரு பேச்சுக்கு வச்சுக்கலாம்! (பேச்சுக்குத்தான்!)

அந்தப்பொண்ணு உண்மையிலேயே பெண்தானா? இதில் பலருக்கு ஏற்கனவே சந்தேகம் உண்டு!

ஒருவர் பெண் பெயரில் அழகான பெண் புகைப்படத்தோடு ஏதாவது எழுதினால் அது உடனடியாக தனது தளத்தில் லிங்க் கொடுப்பதோடு அது ஒரிஜினல் புகைப்படமா போலியா என்று ஆராயாமலே பகிரங்கமாகவே தனது தளத்தில் ஜொள்ளும் விடுபவர் நம்மாளு! (உண்மைய சொல்லணுமில்ல?)

சாருவின் இந்த ரசனையை அடிப்படையாக வைத்தே யாரோ திட்டமிட்டு விளையாடியிருக்கிறார்களோ என்னவோ? சாரு ஏமாந்துபோய் chat பண்ணியிருக்கலாமே என்றுகூட யோசிக்கலாம்! 

இது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டது என்ற சந்தேகம் வந்ததே சுய விளம்பரம் என்பது சற்றும் பிடிக்காத, பெண் இனத்தின் விடுதலையை மட்டுமே உயிர்மூச்சாகக் கொண்டு போராடிவரும் பெண்ணீயப் பெருந்தகை தமிழச்சியால்தான்! 

தமிழச்சி சொல்கிறார்,

//அவரது கவிதைகளையும் மற்ற படைப்புகளையும் குடும்பத்தினர் அனுமதி கொடுத்தால் மட்டுமே பிரசுரிக்கபடும் அளவே அவரது சுதந்திரம் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது// - பெண்விடுதலை குறித்த ஆதங்கத்தைப் பாருங்கள்!

நண்பர்களுக்காகவும் விவாதங்களில் கலந்து கொள்ளவும் புதிய நட்புகளை ஏற்படுத்திக் கொள்ளவும் பேஸ்புக் பேஸ்புக் தளத்தையும் உபயோகத்தில் வைத்திருந்தார் அவர். அவையும் அவரது குடும்பத்தினரின் கண்காணிப்பிலேயே இருந்திருக்கிறது''

என்ன கொடுமைடா சாமி! அப்போ குடும்பத்தினருக்கு தெரிந்துதான் சாருவுடன் Chat பண்ணினார் என்று சொல்ல விழைகிறார்? சரி அப்படி இல்லையெனில் அங்கேயே அப்பெண் திருட்டுத்தனம் செய்வதாக அல்லவா அர்த்தப்படுகிறது!


அந்தப்பொண்ணு ஒன்றுமே தெரியாத ஒரு அபலைப்பெண், அப்பாவிப்பெண்! அதாவது ஒருவர் ஆபாசமாகப் பேசினால் chat விண்டோவை க்ளோஸ் பண்ணவோ இப்படிப்பேசுவது பிடிக்கவில்லை என்று கூறவோ தெரியாத அளவுக்கு நல்ல பெண்! 

ஆனால் அந்தப் பெண்ணின் எழுத்தைப் பார்க்கும்போது அப்படியா தோன்றுகிறது? ஒருவேளை பழைய தமிழ்சினிமாவில் பேபி ஷாலினி, ஷாமிலி பெரிய மனுஷர் போல வாழ்க்கைத் தத்துவ முத்துக்களை உதிர்ப்பது போலத்தான் இதுவுமா?

சாரு தன் தளத்திலேயே தன்னைப் பற்றி ஸ்த்ரீலோலன்னு சொல்கிறார்! 
-அதனால் என்ன? அவர் உண்மை சொல்கிறார் அதனால் நேர்மையானவர்னு நாங்கள் நம்பிடுவோமா? நாங்களே அதைக் கண்டு பிடித்து அதே முடிவை எங்கள் கண்டுபிடிப்பாக வெளியிட்டு, சாருவின் முகத்திரையைக் கிழிப்போம்னு கிளம்பியிருக்கிறார்கள் சிலர்!

ஒன்று மட்டும் புரியவே மாட்டேங்குது! ஒரு பெண் தனக்கு ஒருவர் ஆபாசமா பேசுவது பிடிக்கலைன்னா முகத்தில் அறைந்தது உடனேயே அந்த நபரை 'கட்' பண்ணிடுவாளா? இல்லை Chat பண்ணிய வரிகளை எல்லாம் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து தமிழச்சிக்கு அனுப்புவாளா?

அது சரி ஒரு நல்ல பெண் எப்படி தமிழச்சியிடம் சங்காத்தம் வைத்திருக்க முடியும்? அவரது FaceBook பார்த்தால்...சாரு Chat பண்ணியதாகச் சொல்லப்படும் வரிகளை விட படு மோசமான வார்த்தையாடல்கள்! கெட்ட பெண்களே அந்தப்பக்கம் போகமாட்டார்கள்! இதுல நல்ல பொண்ணு எப்படி? 

சாரு ஆபாசமாகப் பேசிவிட்டார் என்று குதிப்பவர்கள் யாரும் இதைக் காணவில்லையா?
ஏகப்பட்ட ஆண்கள் கூட்டம் ஒருவித கிளுகிளுப்புடன் அவரை ஆபாசமாகப் பேசுவதற்குத் தூண்டிவிட்டுக்கொண்டிருக்கிறது அங்கே! இதை யாரும் கண்டுக்க மாட்டார்களா? 

இரண்டுபேர் சேர்ந்து அவர்கள் விருப்பத்தின் பேரில் ஆபாசமாகப் பேசுவது தவறு! அப்படித்தான் எடுத்துக்கொள்ளப்படும் , அந்தப்பெண் தடுத்ததாகத் தெரியவில்லையே? ஆரம்பத்திலேயே கட் பண்ணலையே?  ஒரு கூட்டத்தின் மத்தியில் எப்படியும் பேசலாமாம்!

சுய விளம்பரத்துக்கு, அடுத்தவர் மேல் சேறுபூசுவதற்கு எந்த லெவலுக்கும் இறங்கக் கூடியவர் தமிழச்சி என்பதை ஷோபாசக்தி விஷயத்தில் தெரிந்துபோனதுதான்! ஒரு விதத்தில் அவர் நினைத்ததை சாதித்தும் விட்டார்! - அதாவது ஷோபாசக்தி என்றவுடனேயே அவரது ஞாபகம்தான் பலருக்கு வருகிறதாம்! 

எதையாவது பண்ணவேண்டியது பிறகு பெண் என்ற போர்வைக்குள் பதுங்கிக் கொண்டு குற்றம் சாட்டவேண்டியது...உடனே பெண்ணீயப் போராளிகள் போருக்குக் கிளம்பிவிடுவார்கள்! 

ஆனா ஒண்ணு! பெண்ணீயவாதிகளுக்கெல்லாம் பிரபலமடைவதற்காவது    ஆண்கள் தேவைப்படுகிறார்கள்!   


Saturday, June 11, 2011

விஜயின் அடுத்த அவதாரம்?



அம்மா தேர்தலில் வென்றதற்கு தானும் தனது தந்தையும் அணில் போல ஒரு காரணமாக இருந்து உதவியதை(?!) நினைத்துப் பெருமைப்படுவதாக நம்ம டாக்டர் சொல்லியிருந்தார். அதாவது ராமர் பாலம் கட்டும்போது அணிலும் சிறு கற்களைப் போட்டு உதவியதாம்னு சொல்லுவாங்கள்ல? அப்படியானால் அடுத்த தேர்தலில்?

அடுத்த ஸ்டேஜ்?

ஐயையோ!!

*************

ஏன்?
பருத்திவீரன் படத்தில் யுவன் முற்றிலும் ஒரு கிராமச் சூழலுக்குத் தகுந்த மாதிரியே இசை, இசைக்கருவிகளைப் பயன்படுத்தியிருப்பார். Cannes பட விழாவில் பங்கேற்கும்போது கதைக்களத்தின் சூழலைப் பிரதிபலிக்கும் இசையையும் கவனித்தே விருது கொடுக்கப்பட்டிருக்கும். 

யுவனே தனது பாணியிலிருந்து முற்றாக மாறி அவ்வளவு பொறுப்பா இருக்கும்போது, அதில ஸ்பெஷலிஸ்டா இருந்துகொண்டே ஏன் அழகர் சாமியின்குதிரைக்கு....நல்லா இருக்கு ஆனா ஒட்டலை! சில விஷயங்களை இளையவர்களிடமும்...

*************

என்ன கொடுமைடா சாமி!
இப்பல்லாம் வேலைப்பழு கூடிட்டே போகுது..! அப்பப்ப ஆபீஸ் ஆணிய எல்லாம் வீட்ல இருந்தும் பிடுங்க வேண்டியிருக்கு! ம்ம்ம்..!

*************

டீ.வி. பார்க்கும்போது யோசிச்சது!
அதெப்படி சினிமாவில தங்கச்சி மேல் ரோம்ம்ம்பப் பாசம் வைத்திருக்கும் அண்ணன்மாரெல்லாம் தேடிப்போய் ஒரு கெட்டவனுக்கு அவளைக் கட்டிக் கொடுக்கிறார்கள்? 

ஒரு அண்ணாவும் தங்கச்சியும்னா, தங்கச்சி அண்ணனவிட்டு ஒரு கெட்டவனோட ஓடிப்போயிடணும்?

காலங்காலமா அண்ணன்- தங்கச்சி பாசக்கதைக்கான ஸ்டாண்டர்ட் டெம்ப்ளேட்?

*************

Tora! Tora! Tora!

இரண்டாம் உலகப்போரில் பேர்ல் ஹார்பர் இல் குண்டுவீசி அமெரிக்காவை யுத்தத்திற்கு அழைத்து வந்தது ஜப்பான். 


நானூறுக்கு மேற்பட்ட ஜப்பானின் விமானங்கள் தாக்குதலில் ஈடுபட்டன. 29 மட்டுமே அமெரிக்கப் படைகளால் சுட்டு வீழ்த்தப்பட, ArisonaOklahama என்ற பிரபல சண்டைக்கப்பல்கள் உள்ளிட்ட பலத்த இழப்பு அமெரிக்காவுக்கு. துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 300 க்கு மேற்பட்ட விமானங்கள் அழிக்க, சேதமாக்கப்பட்டன. ஜப்பானின் கப்பல்கள் சிலவும் பதில் தாக்குதலில் அழிக்கப்பட்டன.

அந்தக் குண்டுவீச்சுத் தாக்குதலுக்கான சங்கேத வார்த்தையே டோரா!டோரா!டோரா!இந்தத் தாக்குதலையும், அதற்கான திட்டமிடல்களையும் பற்றிக் கூறும் இத்திரைப்படம் 1970 வெளிவந்தது! 


என்னதான்  ஹாலிவுட்  தயாரிப்பாக இருந்தாலும், (இயக்கம் ஹாலிவுட் + ஜப்பான் இயக்குனர்கள்) படம்  பார்க்கும்போது  அமெரிக்கா  அடிவாங்கும்போது  விசில்  அடிக்கும்படியாகவே எடுக்கப்பட்டிருக்கும்! அதாவது ஜப்பான் ஆர்மியை ஹீரோக்களாக - அவர்களுக்கு சப்போர்ட் பண்ணும் விதமாகவே இருந்தது/ அப்படி எனக்குத் தோன்றியது! 

ஜப்பானின் ஒரு மிகப்பெரிய வெற்றியைக் கூறும் செம விறுவிறுப்பான படம்! அந்தக்காலத்துலயே சும்மா அப்ப்ப்பிடி எடுத்திருக்காங்க!

படம் ஸ்பெஷல் எபெக்ட்ஸ்க்கான Academy Award வென்றது!

Saturday, June 4, 2011

இசைப்புயல் மீது மீண்டும் ஒரு புழுதி வாரியிறைப்பு!


சர்ச்சைகளும், வீண் குற்றச் சாட்டுக்களும் ரஹ்மானுக்கு ஒன்றும் புதிதல்ல! திரையுலகிற்கு வந்த காலம் தொட்டே சர்ச்சைகள் விடாது துரத்தினாலும் அவற்றைச் சற்றும் கலங்காமல் சிறு புன்னகையால் புறந்தள்ளி விட்டுத் தொடர்ந்தும் சிகரங்களைத் தொட்டுக்கொண்டு!.

ரஹ்மானுக்கு ஆஸ்கார் கிடைத்து, இவ்வளவு நாட்கள் கடந்து இப்போது ஒரு இந்திவாலா (இஸ்மாயில் தர்பார்) ரஹ்மான் மீது புழுதியை வாரித் தூற்றிய்ருக்கிறார்! ரஹ்மான் காசு கொடுத்து ஆஸ்கார் வாங்கியிருக்கிறார் என்பது அவரது சந்தேகமாம்! 'உண்மையில் திறமை இருந்தால் ரோஜா, அல்லது பம்பாய்க்கு வாங்கியிருக்க வேண்டியதுதானே?' எனக்கேட்டிருக்கிறார்.

முதன்முறையாக ஹிந்தி சினிமா உலகில் ஒரு தமிழன் நின்று தொடர்ந்து வென்றுகொண்டிருக்கும் ஒரு தமிழன்! அதற்குமுன் சிலர் வென்றிருந்தாலும் நிற்க முடியவில்லை. இங்கு திறமையுள்ள என்ற அடிப்படையில் பார்ப்பதால் நடிகைகள் பற்றிப் பேச வேண்டியதில்லை!

இந்திய சினிமா என்றாலே ஹிந்தி சினிமாதான் என்றே வெளிநாட்டவரால் (இப்போதும் அப்படியா? - இல்லை என்றால் காரணம் ரஜினி!) நோக்கப்படும் சூழலில் இந்தியாவின் மிகப்பெரிய, புகழ்பெற்ற டெக்னீசியன்களெல்லாம் தமிழராகவோ அல்லது தென்னிந்தியராகவோதான் இருக்கிறார்கள்.      

பொதுவாகவே வட இந்தியர்கள் தமிழர்கள் அல்லது தென்னிந்தியர் மீது துவேஷம் கொண்டவர்கள் என்று சொல்வார்கள். இப்போதெல்லாம் வெளிக்காட்டிக் கொள்ளாது நாகரீகமாக நடந்து கொண்டாலும் சமயங்களில் உண்மை பல்லிளித்து விடுகிறது!

தமிழிலேயே ஆரம்பகாலத்தில்   பெரும் சர்ச்சைகளைச் சந்தித்த ரஹ்மான் ஹிந்தியில் எவ்வளவு சிக்கல்களை எதிர்கொண்டிருப்பார் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை!

ஒரு கட்டத்துக்கு மேல் எதுவுமே செய்ய முடியாமல் தோற்றுப்போய் ஒரு மகா கலைஞனின் வளர்ச்சியைப் பிரமிப்போடு அங்கீகரித்தாலும், அல்லது அங்கீகரிக்க வேண்டிவந்தாலும், உள்ளுக்குள் நீறுபூத்த நெருப்பாக ஒருவித எரிச்சல் இருந்து கொண்டே இருக்குமோ?

ரஹ்மானுக்கு ஒஸ்கார் கிடைத்தபோது மீண்டும் நாகரீகமான முறையில் தங்கள் வயிற்றெரிச்சலையும், பொச்சரிப்புகளையும் காட்டிக்கொண்டார்கள். இதில் ஒட்டுமொத்தமாகப் படத்தின்மீதும் குற்றச்சாட்டு கூறப்பட்டது - இந்தியாவின் வறுமையைக் காசாக்கிவிட்டார்கள் என்று!
உண்மையிலேயே ஜெய்ஹோ விருதுக்குத் தகுதியான பாடல் தானா என்று, சில கேள்விகள்!

எனது நண்பனொருவன் கேட்டான் ரஹ்மானின் பாடல்களிலேயே ஜெய்ஹோ தான் சிறந்ததா? உணமையிலேயே உனக்கு அவ்வளவு பிடித்திருக்கா அந்தப்பாடல்?
இல்லை! நிச்சயமாக இதைவிட எத்தனையோ பாடல்கள், ரோஜா, பம்பாய் படங்களின் பின்னணி இசை என்பவை ஸ்லம் டாக் மில்லியனரை விட மேலானவை. ஆனால் படங்களும் பேசப்படவேண்டுமே! 

ரஹ்மானின் திறமைக்கு கிடைத்த ஒரு அங்கீகாரமாக ஆஸ்கார் கருதப்படலாமேயன்றி இதுதான் மாஸ்டர் பீஸ் என்று அர்த்தப் படுத்திக் கொள்ளவேண்டியதில்லை. அதே நேரத்தில் கிடைக்கவில்லை என்றால் திறமை இல்லையென்றோ அர்த்தமில்லையே!    

எத்தனையோ பேருக்கு அவர்களின் தலைசிறந்த படைப்புகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டிருக்கவில்லை. சத்யஜித்ரேக்கு அவரது படைப்புகளுக்கென்று தனியாக இல்லாமல், வாழ்நாள் சாதனையாளருக்கான ஆஸ்கார் கிடைத்தது போல்! விருது கிடைக்கும்போது அது அவர்களுக்கான உண்மையான அங்கீகாரமாக இருக்கவேண்டும்!  கலைமாமணி, பத்மஸ்ரீ போல அல்லாமல்!

வயிற்றுப் புகைச்சல் காரணமாக எவனாவது போகிறபோக்கில் எதையாவது கொளுத்திப்போட்டுவிட, நம்மாளுகளுக்கு அது போதாதா? எங்கடா சந்தர்ப்பம் கிடைக்குமென்று இருப்பவர்கள் இனி மறைமுகமான நக்கல், நையாண்டிகளை ஆரம்பித்து விடமாட்டார்களா?

காலத்துக்குக் காலம் ரஹ்மான் மீது இவ்வாறான சர்ச்சைகள் கிளம்புவதும், அதே வேகத்திலேயே புஸ்வாணமாகி விடுவதும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

ஆழ்ந்த இறைபக்தி, இடைவிடாத தேடல், தன்னடக்கமேயுருவான புயல்,  மிக இயல்பாகத் தன்முன்முடி கோதுவது போலவே எதையும் அமைதியாக, அநாயாசமாகக் கடந்து செல்லும்!    

ரஹ்மான் பற்றிய ஓர் பதிவு! முதல்வன்!