Tuesday, November 23, 2010

City of God


தமிழில் சினிமாவில் புதுப்பேட்டை, பட்டியல் போன்ற நல்ல Gangster படங்கள் வரும்போது தவறாமல் உச்சரிக்கப்படும் படம் City of God அவற்றில் இந்தப் படத்தின் பாதிப்பு நிச்சயம் இருக்கவே செய்கின்றன.

ஓரிருவர் தவிர ஏனையோர் பதின்மூன்று வயதிற்குட்பட்ட சிறுவர்கள் கும்பல். எல்லோர் கைகளிலும் துப்பாக்கிகள். சமைப்பதற்கு வைத்திருந்த கோழி ஒன்று தப்பிச் சென்றுவிட, அதைப்பிடிப்பதற்கு துப்பாகியால் சுட்டபடி துரத்திச் செல்கிறார்கள்.

கையில் கமெராவுடன் உற்சாகமாகப் பேசிக் கொண்டு வரும் ரொக்கட்டும், அவன் நண்பனும் எதிர்பாராமல் இந்தக் கும்பலை எதிரே கண்டதும் அதிர்ச்சியாகி நிற்கிறார்கள். ரொக்கட்டிடம், அந்தக் கோழியைப் பிடிக்குமாறு சொல்கிறார்கள். பிடிக்கத் தயாராகும் நிலையில், தங்களை நோக்கிக் கும்பலின் துப்பாக்கிகள் உயர்வதைக் கண்டு, அதிர்ச்சியாகிறார்கள். இருவரும் குழப்பத்துடன் பின்னால் திரும்பிப் பார்க்க, குறிவைத்தபடி போலீஸ்! - இப்படித்தான் ஆரம்பமாகிறது படம்.

பிரேசிலின் மிகப் பெரும் கேளிக்கை நகரான ரியோ டீ ஜெனிரோ வைச் சுற்றியுள்ள ஏராளமான சேரிப்புறங்களில் ஒன்றில் நடக்கும் நிகழ்வுகளைச் சொல்லும் படம். கொள்ளை, கொலை, சிறு வயதிலேயே போதைப் பொருள் பழக்கம் எல்லாமே அங்கு சாதாரணமானவை. போதைப் பொருள் கடத்துபவர்களாக பத்து வயதிற்குட்பட்ட சிறுவர்கள். வழிப்பறி, வன்முறை, உதைபந்தாட்டம் எல்லாம் அப்பகுதி மக்களின் வாழ்வின் அங்கமாக! சில பிரதான பாத்திரங்களின் ஊடாக சொல்லப்பட்டிருக்கும் ஒரு ஊரின் கதை.

இளைஞர்களான சாகி, கூஸ், கிளிப்பர் மூவரும் மோட்டல் ஒன்றைக் கொள்ளையடிக்கச் செல்கிறார்கள். அவர்களுடன் பத்துவயதிற்குட்பட்ட சிறுவனான லில் டைஸ்ஸும் செல்கிறான். நால்வரிடமும் கைத்துப்பாக்கிகள். சுடுவது மிரட்டுவதற்கு மட்டுமே தவிர, யாரையும் கொள்வதில்லை என்பது அவர்களுக்கிடையிலான தீர்மானம். மூவரும் கொள்ளையடித்து முடிந்ததும், காவலுக்கு வெளியே நின்று கொண்டிருந்த சிறுவன் லில் டைஸ் அவர்களுடன் செல்லாமல், தனியாக மோட்டல் உள்ளே நுழைகிறான். வெறித்தனமான சிரிப்புடன், எதிர்ப்பட்ட  எல்லோரையும் சரமாரியாகச் சுட்டுக் கொல்கிறான்.

போலீசுக்கு தகவல் தெரிந்து தேடி வருகிறது. கிளிப்பர் சேரியை விட்டுச் சென்று விடுகிறான். சாகி தன் காதலியுடன் தப்பிச் செல்ல முயற்சிக்கையில் போலீசால் சுட்டுக் கொல்லப்படுகிறான். கூஸ் தப்பிச் செல்லும் வழியில் சிறுவன் லில் டைஸிடம் பணம் எடுத்துச் செல்ல முயற்சித்து அவன் கையால் சாகிறான்.இப்போது ஏரியாவின் அடுத்த் தலைமுறை ரவுடி ஆகிறான் சிறுவன் லில் டைஸ்.வளர்ந்தபின் தனது பெயரை லில்சீ என மாற்றிக்கொள்கிறான். சிறுவயது முதலே அவனது உயிர் நண்பன் பென்னி.

பென்னியின் காதலி அன்ஜெலிகா. பென்னி இந்த வாழ்க்கையை விட்டு, ஒரு பண்ணையில் தனது காதலி அன்ஜெலிகாவோடு அமைதியாக வாழ ஆசைப்படுகிறான். பிரிந்து செல்ல விரும்புகிறான். லில்சீ தன் கூடவே இருந்த நண்பனைப் பிரியவும் மனமின்றி, அவனது விருப்பத்துக்கு மறுப்பும் சொல்லமுடியாமல் குழம்பிய நிலையில் இருக்கிறான். பென்னிக்கு ஒரு பெரியதோர் பிரிவுபசாரப் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்கிறான். இரவுக் களியாட்ட விடுதியொன்றில் அநேகமாக ஏரியாவிலுள்ள எல்லோரும் கலந்து கொள்கின்றனர்.


லில்சீ - சிறுவயது முதலே நண்பனான பின்னியுடன் சேர்ந்து, ஏரியாவிலுள்ள போதைப்பொருள் டீலர்களை சுட்டுத்தள்ளி, மிகப்பெரிய மார்க்கெட்டைத் தன்வசப்படுத்தியுள்ளவன். கொடூரமானவன். தற்போதைய கவலை - நண்பன் பென்னி பிரிந்து செல்வதாக முடிவெடுத்தது. 



பென்னி - இவனது சொல்லை மட்டுமே லில்சீ கேட்பான். லில்சீக்கு பெரிதும் உறுதுணையாக இருப்பவன்.எல்லோரோடும் சுமுகமாக அனுசரித்துப் போகின்றவன். எல்லோராலுமே விரும்பப்படுகிறவன்.

இப்போது - தன் காதலியுடனான் அழகிய வாழ்க்கை பற்றிய கனவுகளோடு,எல்லோரோடும் மகிழ்ச்சியாக உரையாடிக் கொண்டிருக்கிறான்.

ரொக்கட் -லில்சீயினால் சுட்டுக் கொல்லப்பட்ட கூசின் தம்பி. ஒரு புகைப்படக் கலைஞனாக பத்திரிகையில் சேர்ந்து புகழ் பெறவேண்டுமென்பதே இவன் லட்சியம். கூடவே, ஒரு காமெரா சொந்தமாக வாங்குவது. அதற்காக நண்பனின் துணையோடு, அண்ணனின் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு, கொள்ளையடிக்க திட்டமிட்டு, அவன் நல்ல மனதின் காரணமாக பாதியில் முயற்சியைக் கைவிட்டவன்.உற்சாகமாக பார்ட்டியில் டி ஜே வாக பணியாற்றிக் கொண்டிருக்கிறான்.


நொக்கவுட் நெட் - நல்லவன். கொலை, போதை, கொள்ளை என்பவற்றுடன் எந்த சம்பந்தமும் இல்லாதவன். அமைதியும், அன்பும் மட்டுமே முக்கியம் எனக்கூறுகிறான். பேரூந்து நடத்துனராக வேலை செய்கிறான். ஒருமுறை லில்சீயால் தாக்கப்பட்டிருக்கிறான். காதலியுடன் பார்ட்டியில் கலந்துகொண்டு நடனமாடிக் கொண்டிருக்கிறான்.



காரட் - மிகப்பெரிய போதைப்பொருள் டீலர். இவனுக்கும் லில்சீக்கும் ஒத்து வருவதில்லை. பென்னியின் தலையீட்டினால்,லில்சீயினால் கொல்லப்படாமல் இருக்கிறான். எப்போதும் இவனுக்கு லில்சீ எதிரி.பார்ட்டியில் கலந்துகொள்ளாமல் தனது முகாமில் இருக்கிறான்.



பிளாக்கி - இவனும் ஒரு போதைப் பொருள் டீலர். இவனது மார்க்கெட், தங்குமிடம் எல்லாவற்றையும் லில்சீ பறித்துக் கொள்கிறான். காரட்டுடன் தொடர்பில் இருக்கிறான்.

தற்போது - லில்சீ மீது அடங்காத கோபத்துடன், பார்ட்டியில் லில்சீயைக் கொல்ல ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து, காத்துக் கொண்டிருக்கிறான்.

நண்பன் விட்டுச் செல்கிறான் என்கிற வெறுமை, தன்னை எல்லோரும் உதாசீனப் படுத்துகிறார்களோ என எண்ணிக்குழம்பும்  பெண்கள் பக்கமே போகாத லில்சீ, ஒரு பெண்ணைத் தன்னுடன் ஆட அழைக்கிறான். அவள் மறுக்கிறாள். இதனால் கோபம் கொள்ளும் லில்சீ, அந்தப் பெண் நொக்கவுட் நெட்டின் காதலி என்று தெரிந்ததும் பலர் முன்னிலையில் அவனை அவமானப்படுத்துகிறான்.

பென்னி, தன் நினைவாக ரொக்கட்டுக்கு ஒரு காமெராவைப் பரிசளிக்கிறான். இனந்தெரியாத எரிச்சலில் இருக்கும் லில்சீ ரொக்கட்டிடமிருந்து காமெராவைப்பறிக்க, அவனுடன் வாக்குவாதப்படுகிறான் பென்னி. சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த பிளாக்கி,மின்னிக் கொண்டிருக்கும் டிஸ்கோ லைட்டில், தவறுதலாக பென்னியைச் சுட்டுவிடுகிறான். பென்னி இறந்துவிட, கதறுகிறான் லில்சீ.

காரட் தான் இந்தக் கொலைக்குக் காரணமென்று நம்பும் லில்சீ அவனைக் கொல்ல முடிவு செய்கிறான். தவறுதலாக பென்னியைச் சுட்டுவிட்டதாகவும் தன்னைக் காப்பாற்றும்படியும் காரட்டிடம் ஓடிவந்து சொல்கிறான் பிளாக்கி.

"அநியாயமாக ஒரு Coolest Guy யைக் கொன்று விட்டாய்" எனக்கூறி, பிளாக்கியைச் சுட்டுக் கொல்கிறான் காரட். பழிவாங்கும் வெறியுடன் தன் கும்பலுடன் புறப்பட்டு வரும் லில்சீ வழியில் நொக்கவுட் நெட்டை காதலியுடன் பார்க்கிறான். அவனைத் தாக்கி அவன் முன்னிலையிலேயே காதலியைக் கொல்கிறான்.

திடீரென்று  லில்சீக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. நொக்கவுட் நெட்டை ஏன் கொல்லாமல் விட்டோம்? என்று. உடனேயே அதைச் செயற்படுத்த வீடுதேடி வருகிறான். நொக்கவுட் நெட்டைக் காப்பாற்றும் முயற்சியில் அவன் தம்பி கொல்லப்படுகிறான்.

இதனால் லில்சீயை பழிவாங்க முடிவு செய்கிறான், வன்முறையின் பக்கமே அதுவரை சென்றிராத நொக்கவுட் நெட். 'அப்பாவிகளைக் கொல்லக் கூடாது' என்ற கோரிக்கையுடன் ஏற்கனவே லில்சீயின் எதிரியான காரட்டுடன் இணைந்து கொள்கிறான் நொக்கவுட் நெட்! ஆரம்பமாகிறது ஒரு பெரும் Gang War!

சிறிய மோதல்கள் ஆரம்பிக்க, இருதரப்பிலும் பெரும் மோதலுக்கான ஆயுதக் கொள்வனவு, ஆட்சேர்ப்பு எனத்தயார்படுத்தல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இளைஞர்கள், சிறுவர்கள், குழந்தைப்பருவத்திலிருந்து இன்னும் வெளிவராதவர்கள் என பலரும் தங்கள் எதிரிகளை ஒழிப்பதற்காக, இணைந்துகொள்கிறார்கள். எல்லோருக்கும் அடிப்படியான உணர்வு பழிவாங்கல் மட்டுமே. காரணம், சொல்கிறார்கள் - 'நொக்கவுட் நெட் தலையில் கொட்டி விட்டான்', 'லில்சீ பின்புறத்தில் உதைத்துவிட்டான்'.


இதற்கிடையில் ரொக்கட் ஒரு பத்திரிகையில் புகைப்படப் பிடிப்பாளனாக   வேலைக்குச் செல்கிறான். நொக்கவுட் நெட் மோதலில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெறும்போது அவனது புகைப்படம், பேட்டி பத்திரிகையொன்றில் வெளிவருகிறது. அதைப்பார்க்கும் லில்சீ, ரொக்கட் அழைத்து முன்னர் பின்னி கொடுத்த அதே கமெராவைக் கொடுத்து,  தங்கள் குழுவை படம் பிடிக்கச் சொல்கிறான். 'கமெராவை உன்னிடம் கொடுக்கவே பின்னி விரும்பினான்' என்று கூறி, அவனுக்குப் பரிசளிக்கிறான்.

ரொக்கட் தனது அலுவலகத்தில், அந்தப்   புகைப்படங்களைப் பிரிண்ட் எடுத்துவைக்க, அதைப்பார்த்த ஆசிரியர் பத்திரிகையில் பிரசுரித்துவிடுகிறார். அவ்வளவுதான் லில்சீயிடம் தொலைந்தோம் என்று பயந்துகொண்டிருக்கும் நிலையில்தான் ஆரம்பத்தில் சொன்ன காட்சி!

முடிவில் என்னவாகிறது? இந்தப் பிரச்சினைகளின் முடிவு எப்படித் தீர்மானிக்கப்படும்? சட்டம் எப்படித் தன் கடமையைச் செய்கிறது? துப்பாக்கி கொடுக்கும் போதை, ஒரு போதைக்டத்தல் கும்பல் எப்படித்தனது ஆதிக்கத்தைத் தக்க வைத்துக் கொள்கிறது, ஒரு தலைவன் எப்படி உருவாகிறான், உருவாக்கப்படுகிறான், தமக்குள்ள அடித்துக்கொண்டு எஞ்சிப் பிழைத்து நிற்கும் வலுவான குமபலே நாட்டுக்குத் தேவை என்கிற அரசியல் போன்ற விஷயங்கள் போகிற போக்கில் சொல்லப்படுகின்றன.

ஒரு கதாபாத்திரத்தையும் முதன்மைப் படுத்தாமல் அவர்களின் பார்வையிலும்,  FlashBack இலும் படம் நகர்கிறது. - பெரும்பாலான இறுதிக் காட்சிகள் அவற்றைப் படம்பிடிக்கும் ரொக்கட்டின் பார்வையில் பதிவாகிறது.

சில இடங்களில் Documentary Film போலவுள்ள அதே சமயம் விறுவிறுப்பாகவும் செல்கிறது.

கதை சொல்லும் style, camera நகரும் விதம் எல்லாம் வித்தியாசமான அனுபவம். BAFTA உள்ளிட்ட பல விருதுகளை வென்றது. நான்கு Academy உள்ளிட்ட பல விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.

இயக்கம் - Fernando Meirelles
மொழி - Portuguese
நாடு - Brazil

11 comments:

  1. Looks like a good movie. :-)

    ReplyDelete
  2. அருமை நண்பா...தகவல்களுடன் அழகான தெளிவான விமர்சனம்..

    ReplyDelete
  3. நீட் ஆ இருக்கு review ...

    ReplyDelete
  4. பஜார் போனா dvd வாங்கிட வேண்டியதுதான்

    ReplyDelete
  5. நல்ல படம் பற்றிய நல்ல விமர்சனம். நன்றி.

    ReplyDelete
  6. தெளிவான விமரிசனம் ஜீ! அழகாய் எழுதுகிறீர்கள்.

    ReplyDelete
  7. @Chitra
    @"ஸஸரிரி" கிரி
    @ஹரிஸ்
    @ஆனந்தி
    @THOPPITHOPPI
    @Dr.எம்.கே.முருகானந்தன்

    நன்றி! :-)

    @மோகன்ஜி
    @சாமக்கோடங்கி

    நன்றி உங்கள் வருகைக்கு!:-)

    ReplyDelete
  8. நான் பார்த்த மிகச்சிறந்த திரைபடங்களில் இதுவும் ஒன்று...

    ReplyDelete
  9. AnonymousJune 03, 2011

    நல்ல விமர்சனம் பாஸ் ..

    சந்தர்ப்பம் கிடைக்கும் போது இந்த படம் பார்க்கதான் வேணும்

    ReplyDelete