Tuesday, May 31, 2011

கடலை,கவிதை,காதல்!


'ஐயப்பன் செல்போனில் பேசுவதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?' 

கடலை போட்டுக் கொண்டிருந்த கம்பரைப் பார்த்தபோது அப்பிடித்தான் தோணிச்சு!  - கதிரையில் இரண்டு கால்களையும் தூக்கிவைத்துக் கொண்டு வலது கையை காதுக்குக் கொடுத்து, இடக்கையை இடது முழங்காலில் ரெஸ்டில!

தொடர்ந்து சிலநாட்களாக கம்பர் மொபைலும் கையுமாக யாரோ ஒரு பெண்ணுடன் ஒரே கடலைஅது சரி பொண்ணுன்னு எப்பிடி?.... அதான் நம்மாளுங்க கதைக்கேக்க முகத்தைப் பார்த்தாலே தெரியுமேவாயெல்லாம் பல்லாகமூஞ்சியே பல்ப்பாக!


அதிலும் கம்பர் இருக்கானே, அவனிடம் ஒரு பையன் முதன்முதலாக கதைக்கும்போது, நேராகப் பார்க்காமல் பக்கவாட்டில் தலையைத் திருப்பி, முகத்தை பதினைந்து டிகிரி ஏற்றக்கோணத்தில் வைத்து, விழிகளை அதே பதினைந்து டிகிரி இறக்கி வைத்து சிரிக்காமல், அலட்சியமாக, அமர்த்தலாகநாங்களும் சும்மா இல்ல பெரிய ரௌடி தான் என்ற தோரணையில்தான் நோக்குவார்.

அதுவே பெண்ணாக இருந்தால், நேராக முகம் பார்த்து, முகத்தில் பரவசம் கொப்பளிக்க, இரு முனைகளிலும் உதடுகள் ஒட்டியிருக்க, நடுவில் உதடுகளை விரித்து, நான்கு பற்கள் தெரிய சிரித்தவாறே, ' ச்ச்சொல்லுங்கோ' (ஜொள்ளுங்கோ!
- கற்பனை பண்ண முடிகிறதாமுடியலயா! சரி விடுங்க உங்களுக்கு எதுக்கு அந்தக் கருமமெல்லாம்மொத்தத்தில் பார்க்கக் கண்றாவியா இருக்கும்!

நாங்கள் தங்கியிருந்த அந்தப் பெரிய வீட்டில் நண்பர்கள் எட்டுப் பேரில் யார் எங்கு தூங்குவது என்ற ஒழுங்கு கிடையாதுபிரச்சினை கிடையாதுபெரிய ஹாலில் அவனவன் ஒரு நாளைக்கு ஒரு இடத்தில்!அறைக்குள் கட்டில்களில் யாரும் தூங்குவது குறைவுஆனா கம்பர் மட்டும் தனக்கென ஒரு அறையின் மூலை! அந்த ஏரியாவுக்குள் யாரும் போறதில்ல!

அந்தக் கடலை குறித்து சிலர் கேட்டபோது கம்பர் சொன்னது, 'அது பிரண்ட்ஷிப், தப்பா நினைக்கக் கூடாது!'  அதோட விட்டானா? ஒரு ஆணும் பெண்ணும் நட்பா பழகினா தப்பா யோசிக்கும் தமிழ் சமூகத்தை கிழிகிழியென்று அரைமணி நேரம்...நான் கூட ரொம்ப நொந்து போனேன் ஏன்தான் நாமெல்லாம் இப்பிடி 'விளங்காம' இருக்கோம்னு! - நல்லவேளை நானெதுவும் கேட்கல

**********

ஒரு மாலை நேரத்தில், கதிரையில் 'ஐயப்பன் ஸ்டைலில்' உட்கார்ந்திருந்த கம்பரின் கேள்வி..

'ஜீ, உனக்கு கவிதை எழுதத் தெரியும் தானே?'
'இல்லடா'
'சும்மா சொல்லாதே'
'தெரியாதுடா'

'ச்சே என்னடா உன்னைப்பற்றி என்னமோ நினைச்சேன் நிறைய புக்ஸ் எல்லாம் வாசிக்கிறே
'டேய் வாசிக்கிறவனால எல்லாம் எழுத ஏலாதுடா, அது சரி எதுக்கு கேக்கிறே?'

'சும்மா அவளுக்கு அனுப்பத்தான்!'
' பிரண்ட்டுன்னு சொன்னியேடா?'
பிரண்ட்க்கு கவிதை அனுப்பிறதில்லையா? அனுப்பக் கூடாதா?' ( பிரண்ட்ஷிப்புக்கு கவிதையா? புதுக் கலவரமா இருக்கேடா?)
'அப்பிடியா? இவ்வளவு காலமா நீ எனக்கு ஒரு கவிதையும் அனுப்பலையே? - கம்பரைக் கலவரமாக்கி கிடைத்த gap எஸ்கேப்!

பிறகு இரண்டு நாட்களாக இதே தொல்லை.
'மச்சான் உனக்கு வரும்டா, நீ எவ்வளவு நல்லா கதைக்கிறே, திங்க் பண்றே' நமக்கு சம்பந்தமில்லாதத எல்லாம் சொல்லி நல்லா உசுப்பேத்திறான்னு தெரிஞ்சுது! - ஆனா யாருகிட்ட? எவ்ளோ பார்த்திருக்கோம்?

ஆனா ஒரு கட்டத்தில எனக்கே ஒரு சபலம் வந்திட்டுன்னா பார்த்துக் கொள்ளுங்க! 'ஒருவேளை நமக்கு கவிதை வருமோ?' - அட அத விடுங்க! ஆபீசுக்கு வெள்ளை ஜிப்பா போட்டுக்கிட்டே ஜோல்னாப் பைக்குள்ள 'லாப்டாப்' கொண்டுபோறமாதிரி கனவுகூட வந்திச்சுன்னா பாருங்க!

நல்ல வேளை! உடனேயே தெளிஞ்சுட்டேன்தமிழ் கூறும் நல்லுலகிற்கு நிகழவிருந்த அசம்பாவிதம் தடுக்கப் பட்டது. நான் கவிதை எழுதாததைத் தான் சொல்றேன்!

பிறகு கடலை பிசியில் கவிதையை மறந்து விட்டான்
தப்பிச்சன்டா! ஆனா ஒண்ணு! நல்லவேளையா கம்பர் 'லவ்' பண்ணல!   இல்ல கடலைக்கே இப்பிடிக் கண்ணைக் கட்டுதே, இவன் 'லவ்' பண்ண வேற ஆரம்பிச்சுட்டான்னா ஒருபயல் நிம்மதியா இருக்க முடியாதே! ஒழுங்கா தூங்க முடியுமா காதல் கதை சொல்லியே கொலையா கொன்னுருவானுகளே! - நிம்மதியானேன் - ஆனா விதி?

************

அன்று ஏனோ கம்பரை மறந்து கட்டிலில் தூங்கலாம்ன்னு அறைக்குள் போக, கம்பர் படு உற்சாகமாக 'டேய் ஜீ ஆபீஸ்ல வேலை எல்லாம் எப்பிடி போகுது?' ( என்னடா புதுசா அக்கறை?....அய்யய்யோ! அப்போ ஆரம்பிச்சுட்டானா?) - அலேட் ஆகிட்டேன்!

முன்னப் பின்ன நான் தேன் குடிச்ச நரியைப் பார்த்ததில்லை என்றாலும் கம்பரை பார்க்கும்போது ஊகிக்க முடிந்தது!

'......' (அதே தாண்டா!)

'உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்டா
'......' 

'நான் அவளை லவ் பண்றேன்டா
'....!  நான் வெளில படுக்கிறன்டா மச்சான்! குட்நைட்! 

Saturday, May 28, 2011

தமிழ்ப் பெண்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்? - நம்மவர்!


வார இறுதிகளில் நெடுந்தூரப் பேருந்துப் பயணங்கள் பெரும்பாலும் கொடுமையானதாக மாறிவிடுகிறது. 

பேரூந்தில் ஏறியதுமே முதலில் நோட்டமிடுவது எனது சீட்டுக்குப் பின் சீட்டில் யார் இருக்கிறார்கள் என்பதையே! இளம்பெண்கள் இருந்துவிட்டால் பகீரென்று விடுகிறது! - அவ்வளவுதான்! அன்றைய பயணம் நரகம்தான்!

சொகுசு பஸ்களை ரிசேர்வ் பண்ணி பயணம் செய்வதன் முக்கிய காரணமே ஏசி, சௌகர்யமான அட்ஜஸ்ட்டபிள் சீட் என்பதால் தூங்கிட்டே பயணிக்கத்தான்! அதாவது மற்றவர்களுக்கு இடையூறில்லாமல், பின்னாலிருப்பவர்களின் முழங்காலில் இடிக்காமல் இருக்கையை சாய்த்து, வசதியாக!

ஆனால் இருக்கையை சாய்க்க விடாது தடுத்தால் எப்படியிருக்கும்? இதைத்தான் செய்து வருகிறார்கள்! - பெரும்பாலான பெண்கள்!

முதல்முறை அப்படித்தான் ஒரு பெண்! மிக அழகான பெண்! பெண்ணின் அருகிலிருந்த அங்கிளிடம் பார்க்கச் சொன்னேன் எவ்வளவு தூரம் அட்ஜஸ்ட் செய்யலாமென்று பார்க்க! அவர் சொன்னார் 'நீங்க தாராளமா சரியுங்க தம்பி'ன்னு. ஆனால் அந்தப் பெண் சிறிதும் அனுமதிக்கவில்லை, அவரும் பேசிப்பார்த்து பலனில்லை! 

நான் எதுவும் பேசவில்லை என்ன பேசுவது? எப்படிப் பேசுவது இப்படியான பெண்மணிகளுடன்? கொஞ்சம் கூட மனிதப் பண்புகள் , அடுத்தவனும் மனுஷன் என்று நினைக்கும் குணம் இல்லாதவர்களைச் சகித்துக் கொள்ளவே முடியவில்லை. 

முதலில் எரிச்சலாக இருந்தாலும் அதனாலும் எனக்குத்தானே பாதிப்பு? அப்பத் தோணிச்சு பாருங்க - ஏழு மணித்தியாலம் அந்தப் பெண்ணுக்கு முன்னாலிருந்து பயணம் செய்வதே இவ்வளவு கஷ்டமா இருக்குதுன்னா அதை கல்யாணம் செய்பவன் கதி? - எப்புடியெல்லாம் யோசிச்சு மனசைத் தேத்த வேண்டியிருக்கு?

அப்படியே நிமிர்ந்தவாறே தூக்கமுமின்றி பயணம் செய்து மறுநாள், கழுத்து, உடம்பு வலியால் அலுவலகத்தில் அவஸ்தை! 

இன்னொரு நாள். எனக்கு முன்னிருக்கையில் அமர்ந்திருந்த ஒருபெண்! எனது முழங்காலில் அவருடைய இருக்கை சாய நானும் ஒவ்வொரு முறையும் சீட்டில் தட்டுவேன் உடனே சிறிது உயர்த்துவார். சற்று நேரத்தில் காலின்மீது சரிக்க நான் திரும்பவும்....பயணம் முழுவதும் அவஸ்தை தொடர்ந்தது. தூக்கமுமில்லை! 

இவ்வளவிற்கும் எல்லாரும் படித்த பெண்கள். முக்கியமான விஷயம் தமிழ்ப் பெண்கள்! 

ஏன் தமிழ்ப் பெண்கள் மட்டும் இப்படி நடந்து கொள்கிறார்கள்? அடுத்தவன் அவஸ்தைகள், மனநிலையை மதிக்காமல் தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்தி மனசாட்சியே இல்லாமல் வாழ எப்படி முடிகிறது?

சரி! அதைக்கூட விட்டு விடுங்கள்! இவ்வளவு அநியாயம் பண்ணிட்டு, கடைசியில் இறங்கிப்போகும்போது ஏதோ நாமதான் என்னமோ 'ஈவ் டீசிங்' பண்ணினமாதிரி கண்ணகி கசின் ரேஞ்சில ஒரு 'லுக்கு' விடுவாங்க பாருங்க! அதாங்க பெரிய கொடுமை! 

தாங்கள் ஒழுங்காக சௌகர்யமாக அமரும் இந்தப் பெண்கள், மற்றவர்களும் அதே வசதிக்காகத்தான் அதிக விலை கொடுத்து சொகுசுப் பேரூந்துகளில் வருகிறார்கள் என்பதை ஏன் நினைத்துப் பார்க்க மாட்டேன் என்கிறார்கள்? 

இயல்பாகவே தமிழ்ச் சமூகம் பெண்களுக்குத் தரும் மரியாதையை, ஒரு பரிவை அல்லது சலுகையை தங்களுக்கு ஒரு வேலியாகப் பயன்படுத்திக்கொண்டு வந்து அந்த வேலியே பின்பு தடித் தோலாக மாறிவிட்டதா? 

இந்த மாதிரியான தடித்தோல் பேர்வழிகளிடம் எப்படிப் பேச முடியும்? என்னதான் அநியாயத்தைக் கண்முன்னால்  பார்த்துக் கொண்டிருந்தாலும், ஒரு பெண்ணிற்கெதிராகப்  பேசினா நம்ம நடுத்தர , வயோதிக அன்பர்கள்  சண்டைக்கு வந்துவிட மாட்டார்களா?

அதுவும் அழகான பெண்கள் என்றால் எமது சமுதாயத்துக்கே ஒரு பெரிய வீக்னெஸ் அல்லவா?

இதுக்கென்றே ஒரு கூட்டம் இருக்கே! பெண்கள் துயர்துடைக்க(?!) எங்கடா சான்ஸ் கிடைக்கும்னு அலைஞ்சிட்டு! இது தாய்க்குலத்தைக் காப்பாற்றும் கூட்டமா அல்லது 'கவர்' செய்ய முயலும் கூட்டமா என்பது ஆராயப்பட வேண்டியதொன்று! 

பெரும்பாலான ஆண்கள் வயது வித்தியாசமின்றி இளம்பெண்களைக் கண்டுவிட்டாலே குரலை உயர்த்தி அடிக்கடி அந்தப் பக்கம் ஒரு லுக் விட்டுக் கொண்டே ஹீரோவாக முயற்சி செய்யும் ஒரு சைக்கோ சமூகத்தில், பெண்கள் இப்படித்தான் இருப்பார்களா?

பெண்களையும் , ஆண்களையும் அருகருகே உட்கார இடமளிப்பதில்லை நம்ம தமிழ் ஏரியா பேருந்துகளில்! கலாச்சாரத்தைக் காப்பாற்றும்(?!) முயற்சியாம்! (ஜோடியாக பதிவு செய்தல் ஓக்கே!)  மிக்க நல்லது!அதை அப்பிடியே தனித்தனி வரிசையாகவே மாற்றிவிட்டால், நம்மள மாதிரி அப்பாவி ஜீவனுகள் பிழைச்சுப் போகும்! 

இன்று அதிகாலையும் தூக்கமின்றி வந்தேன்! நாளை திரும்பவும் போகணும்! புதுசா என்ன கொடுமையோ? இப்பவே கண்ணைக் கட்டுது!  

இந்தப் பதிவைப் படிக்கும் பெண்கள் ஒருநிமிஷம் நியாயமாக யோசியுங்கள், உங்கள் தோழிகளிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்!  ஏனெனில் நீங்களோ, உங்கள் தோழியோ கூட இதில் அடங்கலாம்!

இதில் ஒட்டு மொத்தமாக எல்லாப் பெண்களையும் குறை கூறவில்லை! மற்றவர்களையும் மனிதராக மதிக்கும் பெண்களும் பலர் இருந்தாலும், நம்மவரில் பெரும்பான்மை இவர்கள்தான்!   
  
நீங்களும் இப்படியான அவஸ்தைகளைச் சந்தித்திருக்கிறீர்களா?ஆண்களால் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி நிறையப் பேசுகிறார்கள்! பெண்களால் ஆண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை யாரிடம் சொல்வது?

பிராணிகளுக்கு எல்லாம் ப்ளூ கிராஸ் இருக்கு..ஆனா அப்பிராணி ஆண்களுக்கு?

Monday, May 23, 2011

மங்காத்தா, ocean 's Eleven, An Inconvenient Truth!


மங்காத்தா ocean 's Eleven இன் உல்டாவா? முழுவதுமாக இல்லாமல் கொஞ்சமா சுட்டு? - நானா ஒண்ணும் யோசிக்கல! 

இயக்குனர் வெங்கட் பிரபுதான் மங்காத்தா படத்தில் அஜித்தின் கெட்டப், ஹெயார் ஸ்டைல் ஜோர்ஜ் க்லூனி மாதிரி பெப்பர், சால்ட் ஸ்டைலில் இருக்கும்னு சொல்லியிருந்தார்! 

- அதிலும் ஸ்பெஷலா ocean 's Eleven படத்தில் வரும் ஜோர்ஜ் க்லூனி மாதிரி என்றார். அதுதான் உறுத்திச்சு!

                                                                    George Clooney                                                            

ஆமா இந்த 'ஸ்டைல்' விஷயம் ஜோர்ஜ் க்லூனிக்குத் தெரியுமா? தெரிஞ்சா நொந்திட மாட்டாரா? அஜீத்ல ஒரு ஹாலிவுட் லுக் இருக்கு என்பதை மறுக்கமுடியாது! அது பில்லா மாதிரியான  ஸ்லிம் அஜீத் என்றால் ஓக்கே! ஆனா மங்காத்தா அஜீத்ல? 


கதைக்களம் வேறு காமெடி கலந்த குற்றவியல் , காசினோ, கேம்ப்ளிங் அப்பிடி இப்பிடின்னு அதே மாதிரி! அதைமாதிரியே படத்தில ஒரு கூட்டமே நடித்துக் கொண்டிருப்பதாலும் அப்படியிருக்க சான்ஸ் இருக்கு! 
-ஆபீசில மல்லாக்க சாய்ஞ்சிட்டு, சீலிங்கைப் பாத்திட்டே இருந்தேனா, அப்பதான் திடீர்னு தோணிச்சு! 

Ocean 's Eleven

George Clooney  , Brad Pitt , Matt Damon , ஜூலியா ராபர்ட்ஸ் உள்ளிட்ட ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்து, 2001 வெளிவந்த காமெடி கலந்த குற்றவியல் கதை!  பெரும் வரவேற்பினால் பின்னர் அதன் தொடர்ச்சியாக Twelve, Thirteen ம்   
வெளிவந்தது! 

அதெல்லாம் சரி! மங்காத்தா போஸ்டரில எல்லாரும் வழக்கம்போல கோட்-சூட், கூலிங் கிளாஸ மாட்டிட்டு நிக்கிறதுதான்....தப்பா தெரியுதே! - பார்க்கலாம்!   

***********

தெரியாமல் செய்த ஒரு தவறை உணர்ந்து சரி செய்ய முயலும்போது அது... அதைவிட பெரிய தவறாய் முடிந்துவிடுகிறது! 

***********


எவ்வளவு கவனமாக இருந்தாலும் 
முடித்துப் பார்கையில் ஒன்றிரண்டு 
விடுபட்டு - முகச்சவரம்!


***********

An Inconvenient Truth  


புவி வெப்பமடைதல் அதனால் காலநிலையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்த ஒரு Documentary படம் இது! 2006 இல் வெளிவந்தது! ஒரு நண்பர் DVD தந்தபோது முதலில் பார்க்க விரும்பவில்லை. பிறகு என்னதான் இருக்குன்னு சும்மா பார்க்க நம்ம அல்கோர் (Al Gore) வந்தார் பாருங்க! (அவர்தான் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்ல முதன்முறை புஷ்கூட போட்டியிட்டாரே!)

வந்த உடனே இப்பிடித்தான் ஆரம்பிச்சார்,   I am Al Gore; I used to be the next President of the United States. அல்கோர் மக்களுக்கு ஸ்லைட்ஸ் ஷோ மூலம் விளங்கப் படுத்துகிறார்! 

காட்சிகள் (அனிமேஷன்?), இசை எல்லாம் அட்டகாசம்! அதாலதான் பார்த்தேன்!  

டாகுமெண்டரிக்கான  Academy Award வென்றபடம்! பல நாடுகளின் பாடசாலைகளில் பாடத்திட்டங்களில் சேர்க்கப்பட்டுள்ளதாம் இந்தப்படம்!