Thursday, March 13, 2014

தற்கொலை முனைப்பு!


‘தற்கொலைக்கான முடிவுகள் உணர்ச்சிவசப்பட்ட  அந்தக் கண நேரத்தில் சடுதியாக எடுக்கப்படுகின்றன’ என்கிற கருத்து என்னளவில் தகர்ந்து கொண்டே செல்கிறது. மிகச்சரியாகத் திட்டமிட்டு நிறைவேற்றப்படுகின்றன. சமயங்களில் அது பல நாட்களாகவும் இருக்கலாம். சில மரணங்கள் அதைத்தான் சொல்லியிருக்கின்றன. நான் பார்த்த, துயரத்தையுணர்ந்து கொண்ட என் பால்யகால நண்பன் சாரங்கனின் மரணமும்; அதைத்தான் சொன்னது. மிகத் தெளிவாகத் திட்டமிருந்தான்.

தற்கொலை மரணமொன்று கொடுக்கும் துயரத்தை, வலியை விட அதிகம் வலியைக் கொடுப்பது அதற்கான திட்டமிடல்களே. அதுவும், நெருங்கிய நண்பர்களின் வலி சொல்ல முடியாதது. “கடைசியாக என்னுடன் தானே சுற்றிக் கொண்டிருந்தான்? பேசிக்கொண்டிருந்தான்? அப்போதெல்லாம், இது குறித்த திட்டமிடலுடன் தான் இருந்திருக்கிறான்” என்னும் நினைப்பே பலநாள் நிம்மதியைத் தொலையச் செய்துவிடும். காரணமற்ற ஒரு குற்றவுணர்வையும் ஏற்படுத்தும். அநியாயமாக நண்பனைத் தொலைத்துவிட்ட வலி வாழ்நாள் முழுமைக்கும் தொடரும்.

தற்கொலை செய்துகொண்ட ஒருவனின் நண்பனாய் இருந்தவர்களுக்குத் தெரியும். “உன்கூடதானடா இருப்பான்?” “என்னடா பாத்துட்டிருந்தீங்க?” பார்வைகள் வார்த்தைகளின்றிய கேள்விகளாக மாறித் துளைத்தெடுக்கும். மரணித்தவன் உறவுகளின் பார்வையையை எதிர்கொள்ள முடியாமல், கண்களைத் தவிர்க்க வைக்கும். ஆனாலும், பிறிதொரு சந்தர்ப்பத்தில் நாங்களே, அதே கேள்விகளுடன் இன்னொருவனைப் பார்க்கிறோம்.

அகால மரணமடைந்தவனின், தற்கொலை செய்துகொண்டவனின் ஃபேஸ்புக் பக்கத்தை பார்க்க நேரிடுவது கொடுமையானது. அது மட்டும் இன்னமும் உயிர்ப்புடன் இருக்கிறதோ என்கிற எண்ணத்தை கொடுக்கிறது. இடையிடையே அங்கே சென்று பார்த்துக் கொள்ளும் வழக்கம் எங்களில் யாருக்கேனும் இருக்கலாம். என்றோ ஒருநாள் அவர் அதில் நிலைத்தகவலிடுவார் என விபரீதமாக எமக்கே தெரியாமல் ஒரு மறைமுக எதிர்ப்பார்ப்பு ஆழ்மனதில் இருக்கிறதா?

இதனைத் தவிர்த்துக் கொள்ள இறந்து போனவரை எங்களில் யாரேனும் ஒருவர் நட்புப் பட்டியலிலிருந்து நீக்கியிருக்ககூடும். இப்போதுகூட யாரோ ஒருவர் அதனைச் செய்யக் கூடும். அது, இறந்து போனவரோடு விரோதம் பாராட்டுவது போலாகிவிடும் என்ற ஒரே காரணத்துக்காக அந்த யோசனையைக் கைவிட்டுமிருக்கலாம்.

தற்கொலை செய்து கொண்டவரின் ஃபேஸ்புக் பக்கம் சடுதியாக அதீத கவனத்தைப் பெற்றுக் கொள்கிறது. இறுதி நிலைத்தகவலை அறியத் தூண்டுகிறது. தற்கொலைக்கான அறிவிப்பை, திட்டமிடல்களை அந்த நிலைத்தகவல்களூடாக தெரிவித்திருப்பது மிகுந்த மன உளைச்சலைக் கொடுத்துவிடுகிறது. சமீபத்தில் என் நட்புப் பட்டியலிலில்லாத, அறிமுகமல்லாத ஒரு பெண்ணின் மிகக் கச்சிதமாகத் திட்டமிட்ட இறுதி நிலைத்தகவல் ஒருநாள் முழுவதும் மன உளைச்சலைக் கொடுத்தது. அது, ஒரேயொரு 'முற்றுப்புள்ளி' மட்டுமே!

அதுவே பின்னர், தற்கொலை கோழைத்தனமானது, முட்டாள்தனமானது என்கிற நிலைத்தகவல்களையிட்டு எங்களை வீரர்களாகவும், அறிவுஜீவிகளாகவும் காட்டிக் கொள்ள வாய்ப்பளிக்கிறது. என்றோ ஒருநாள் அதே நிலையில் நாமும் இருந்திருக்கிறோம் என்பதை வசதியாக மறந்துவிட்டு!

தற்கொலை முனைப்புக்கு பெரிதாகக் காரணங்கள் தேவையில்லை என்பது என் தனிப்பட்ட எண்ணம். நம் இருப்புக்கு எந்தக் காரணமோ, அவசியமோ இல்லை என்பதே போதுமானது.  நம்மீது திணிக்கப்பட்ட தனிமையுணர்வு, எதிலுமே ஈடுபாடற்ற வெறுமை போதும். சமயங்களில் நாம் விரும்பித் தேர்ந்தெடுத்துக் கொண்ட, எமக்கு வரமாகத் தோன்றிய தனிமை கூட!

தற்கொலை முனைப்பில் சிலர் கட்டுண்டு போகிறார்கள். ஏராளமானோர் கடந்து செல்கிறார்கள். இதைவிட இன்னொரு வழியும் இருக்கிறது, கடத்தி விடுவது! எமக்குத் தோன்றும் தற்கொலை செய்துகொள்ளும் உணர்வை அப்படியே மற்றவர்களிடம் கடத்தி விடுவது. இன்னொருவரைத் தற்கொலை செய்துகொள்ளத் தூண்டுவது குற்றமெனினும், எல்லோருமே அப்படி யோசித்தால் அதுவே சிறந்த வழி.

மூன்று வருடங்களுக்கு முன்னர் தற்கொலை செய்துகொள்ள சகல தகுதிகளும் கொண்டவனாக என்னை உணர்ந்து கொண்டபோது, நான் மற்றவர்களிடம் கடத்தி விடுவதைத்தான் சிந்தித்தேன். சிந்தித்தது மட்டுமன்றி செயற்படுத்தவும் ஆரம்பித்தேன். உடனேயே இந்தத் தளத்தை திறந்து எழுத ஆரம்பித்துவிட்டேன்…!!

8 comments:

  1. //நம் இருப்புக்கு எந்தக் காரணமோ, அவசியமோ இல்லை என்பதே போதுமானது.// உண்மை ஜீ. எனக்குத் தெரிந்த வயதான தம்பதி ஒரு காரணமும் இல்லாமல், ‘போதும்’ என்ற முடிவுடன் ஒரு லாட்ஜில் தற்கொலை செய்துகொண்டார்கள். ஏதோ ஒரு நிறைவு..ஒரு திருப்தி. ‘நன்றி இறைவா’ன்னு ஒரு கும்பிடு. எல்லாம் முடிந்தது.

    ReplyDelete
  2. தற்கொலை என்பது கோழைத்தனமான முடிவு.
    பிரச்சினைகள் இல்லாத மனிதன் இல்லை...
    வாழ்ந்து பார்ப்போம் என்ற நிலைப்பாட்டிற்கு வரவேண்டும்...
    நல்ல பகிர்வு.

    ReplyDelete
  3. வணக்கம் ஜீ!நலமா? தலை விதி வசம்.///எல்லாம் விதிப்படி தான் நடக்கும் என்னும் போது நாம் கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை.-இது நான் சொல்லவில்லை.'வகுப்பறை' வலைப்பூ வாத்தியார் சுப்பையா வீரப்பன் சொன்னது.///என் நிலையும் அது/இது தான்.

    ReplyDelete
  4. சிந்தனையை தூண்டும் பதிவு. உங்கள் கருத்துகள் ஆழம் மிகுந்தவை.

    ReplyDelete
  5. எழுத்தும் ஒருவித வடிகால் தான். சிலவேளைகளில் அதுவே தற்கொலை முயற்சியாகவும் போய்விடுவதுண்டு!

    ReplyDelete
  6. எனக்கு மறுபிறவி, ஆன்மா, கர்மாவிலெல்லாம் நம்பிக்கை இல்லை. எனவே நமக்கு இருப்பது ஒரே ஒரு வாழ்க்கைதான். அதனால் எப்படியாவது அதை maximum வாழ்ந்துவிட வேண்டும்.

    மரணம் எதிர்பாராமல் நேரலாம். அல்லது நமது கொள்கைகளுக்கு சரியென்று பட்டதை செயல்படுத்த, நமக்கு நெருக்கமானவர்களை காப்பாற்ற நாம் மரணிக்கலாம். அது மதிக்கத்தக்கது. We can die for greater good. ஒரு risk அல்லது experimentation இன் போது இறக்கலாம். குணப்படுத்த முடியாத கடும் நோயினால் பாதிக்கப்பட்டு, நமக்கு நெருக்கமானவர்களுக்கு வாழ்நாள் பாரமாக இருக்கப்போகிறோம் எனத்தெரிந்தால் (கருணை) தற்கொலை செய்துகொள்ளலாம்.

    ஆனால், கையும் காலும், முக்கியமாக மூளையும் நன்றாக இருக்கும்போது தோல்விகளுக்கு துவண்டோ, விரக்தியடைந்தோ நம் வாழ்க்கையை நாமே முடிப்பது முட்டாள்த்தனமானது. உலகம் பரந்து விரிந்தது. எந்த நொடியும் ஒரு புது வாழ்க்கையை நமக்காகத் தரக் காத்திருக்கின்றது.

    ReplyDelete
  7. Sometimes i shiver while reading yr blog ex . suicide

    ReplyDelete
  8. //"நம் இருப்புக்கு எந்தக் காரணமோ, அவசியமோ இல்லை என்பதே போதுமானது"// ஆழமான உண்மை ஜீ!!!!

    ReplyDelete