Thursday, December 8, 2011

நிராகரிப்பின் வலி!நிராகரிப்பு, நம்பிக்கைத் துரோகத்தின் வலி மிகக் கொடுமையானது! அது மென்மையானவர்களை, மிகத்திறமைசாலிகளை அதீதமாகவே தாக்கிவிடுகிறது! அவர்கள் தொலைத்ததாகக் கருதும் அங்கீகாரத்தை, வாழ்க்கையை வேறு எதுவுமே ஈடு செய்வதில்லை.

ஒரு சிலர் தாங்களாகவோ அல்லது அன்புக்குரியவர்கள் முயற்சியாலோ மீண்டு வருகிறார்கள். ஆனால் பலர் தம்மையே தொலைத்து விடுகிறார்கள். அவர்களை மீட்க யாரும் முயற்சிப்பதில்லை என்பது பெரும்சோகம்!

மயக்கம் என்ன படத்தில் தனுஷ் - தான் மிக மதிக்கும் நபர் நம்பிக்கைத் துரோகம் செய்தது  தெரிந்ததும், அவரிடம் வந்து குமுறிவிட்டுப் போகும்போது அழுதுகொண்டே திரும்பிப் பார்ப்பாரே ஒரு பார்வை! அதில் தன்னை நிரூபிக்க சரியான சந்தர்ப்பம் கிடைக்காதவனின் துயரம், நம்பிக்கைத் துரோகத்தின் தாக்கம், நிராகரிப்பின் வலி, அங்கீகாரத்துக்கான ஏக்கம் - எல்லாமே!

நிராகரிப்பையும், நம்பிக்கைத் துரோகத்தையும் வாழ்வில் ஒருமுறையாவது சந்திக்காத மனிதர்கள் இருக்கமுடியுமா?  எத்தனை பேருக்கு தம் வாழ்வில் நினைத்ததை சாதித்த திருப்தி வாழ்நாளின் இறுதியில் கிடைக்கிறது?

** ** ** ** ** ** 


அவருக்கு நாற்பத்தைந்து வயதிருக்கலாம். கொஞ்சம் நரை தவிர முகத்தில் இளமை. நாளின் அதிக நேரத்தைக் கோவில் பூசை, பூசைக்கு பூப்பறித்தல் என்றே செலவிடுவதாலோ என்னவோ எப்போதும் வேஷ்டி.எப்போதும் யாருடன் பேசும்போது வெள்ளந்தியாக சிறு புன்னகையுடனேயே பேசுவார்.

எல்லோரிடமும் வேறுபாடின்றி புன்னகையுடன் பேச்சை ஆரம்பிப்பது தமிழர்களின் வழக்கம் அல்லவே! இது இயற்கைக்கு மாறானது இல்லையா? ஆக, அவர் சற்று மனநிலை பிறழ்ந்தவர் என இதிலிருந்து உணர்ந்துகொள்ள முடியும்! தினசரிகள் படிப்பாரென்பது அவரது கிண்டலான அரசியல் பேச்சின் மூலம் தெரியும்.சிலவேளைகளில் நானும்,நண்பர்களும் அந்தக் கோவிலடியில் நின்று அரட்டையடிப்பதுண்டு.அந்தப்பொழுதுகளில் புன்னகையுடன் கடந்து செல்வார். எங்களிடம் பேசியதில்லை.

ஒருநாள் நண்பர்களிடம் பேச்சுக் கொடுத்திருக்கிறார். கணிதப் பிரிவில் படிப்பதாகத் தெரிந்தவுடன், கல்குலஸ் பற்றி ஆர்வமாக நிறையப் பேசியிருக்கிறார். ஒரு சிக்கலான கணக்கு ஒன்றை உடைப்பது பற்றி பேச, நண்பர்களுக்கு ஒரே ஆச்சரியம்! யாரும் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை. பின்னர், அயலிலுள்ள ஒருவர் சொன்னார். அவர் எஞ்சினியரிங் சித்தியடையும்போது அதியுயர் புள்ளிகள் பெற்று 'ஸ்காலர்ஷிப்' கிடைத்து வெளிநாட்டில் கல்வி கற்கச் சென்றவர். அங்கு ஒரு பேராசிரியரிடம் பாடம் தொடர்பாக முரண்பட, பிரச்சினையாகி திருப்பி அனுப்பப்பட்டதால் இப்படியாகிவிட்டாரென்று!

சில வருடங்களுக்குப் பின் அதே கோவிலடியில் அவரைச் சந்திக்க நேர்ந்தது. கூட நாலைந்து பேர் பேசிக்கொண்டிருந்தார்கள். அதில் இருவர் ஊரின் மிகப் பெரும் செல்வந்தர்கள். ஆனால் படித்தவர்களல்ல!  ஏதோ பேச்சினிடையே படிப்பைப் பற்றி பேசியிருக்க வேண்டும்! அவர் கேட்டார் ' படிச்சு என்ன செய்யிறது?'

அவர் வழமை போல சிரித்தவாறே கேட்டார்! எந்த சலனமும் அவரிடம் இல்லை. யாரும் பதில் பேசவில்லை. அந்த வார்த்தைகளின் பின்னாலுள்ள வலியை அந்தக் கணத்தில் அவரைத் தவிர அனைவரும் உணர்ந்தார்கள், நானும்!

** ** ** ** **


உச்சிவெயில், தகிக்கும் தார் வீதி எதுவுமே அவருக்கு ஒரு பொருட்டல்ல! கால்களில் செருப்பில்லை. கலைந்த, அடர்ந்த நீண்ட முடி, தாடி! அழுக்கான ஆடை. கையில் ஒரு பை நிறைய ஏதேதோ செடிகள், புற்கள் சகிதம் அவர் பயணம் தொடரும். ஆழ்ந்த சிந்தனை, நேரான கூர்மையான பார்வை. யாரோடும் பேசி நான் பார்த்ததில்லை.யாரையும் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. உங்களோடு எனக்கென்ன சம்பந்தம் அற்ப மனிதர்களே? என்பதுபோலவே அவர் நடவடிக்கைகள். அவரால் யாருக்கும் தொந்தரவில்லை.

யாரும் அவருடன் பேச முயன்றும் நான் பார்த்ததில்லை. கண்டிப்பாக திட்டிவிடக்கூடும் என அனைவருக்கும் புரிந்திருந்தது! எங்கு தங்குவார்? சாப்பாட்டுக்கு என்ன செய்வார்? அந்தப்பையில் என்ன? எதற்கு? எங்கே போகிறார் எதுவுமே தெரியாது! அவர் மட்டும் தான் செய்யும் செயலில் எந்தக்குழப்பமும் இல்லாதவராக சீரான வேகத்தில் கொஞ்சம் விரைவாக நடந்து செல்வார்.

எங்கள் வீட்டருகிலிருந்த வயதான பெண்மணி சொன்னார். அவர் ஒரு எஞ்சினியர். மிகுந்த கெட்டிக்காரராம். காதல் தோல்வி காரணமாக அப்படி ஆகிவிட்டார் என்று! அவரை ஏமாற்றிய அந்தப் பெண்மணியும் யாரென்பதைக் கூறி, 'அவள் செய்த பாவத்துக்குத்தான் இன்னும் கடவுள் அவளைக் குழந்தையில்லாம தவிக்க விட்டுட்டார்!' - என்று கடவுளின் இருப்பு பற்றிய தனது நம்பிக்கையை நிலை நிறுத்தினார். 

சில வருடங்களில் கடவுளின் இருப்பைக் கேள்விக்கும் கேலிக்கும் உள்ளாக்கிவிட்டு அந்தப் பெண்மணிக்கு ஒரு குழந்தை பிறந்துவிட்டதைத் தெரிந்துகொள்ளாமலே இறந்துவிட்டார் அந்த வயதான பெண்மணி! அந்த முன்னாள் காதலியையும் அவர் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. எல்லாவற்றையும் மறந்துவிட்டிருப்பாரோ?

ஒருநாள் எப்போதோ தனக்குப் படிப்பித்த தமிழாசிரியரை கோவிலில் கண்டதும் ஆப்படியே சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார். அவரிடம் ஆசி பெற்றுக்கொண்டு ஏதுவும் பேசாமலே எந்த சலனமுமின்றி விடுவிடென நடந்து சென்றார். எந்தவித பாசாங்குமற்ற, உண்மையான அன்பையும், மரியாதையையும் அங்கு கண்டேன். முதன்முறையாக அவர் ஒரு மனிதனை மதித்ததை, பொருட்படுத்தியத்தை, தான் மிக நேசித்த மனிதனுக்கு கொடுத்த, மரியாதையை பலரும் ஆச்சரியத்துடன் பார்க்க நேர்ந்தது!

இப்போதும் கூட அவர் தனது நடைப் பயணத்தைத் தொடர்ந்துகொண்டிருப்பார். எந்த சலனமுமின்றி, யாரையும் பொருட்படுத்தாது, ஓய்வின்றி...காலத்தைப் போல! 

காலமும் யாரையும் பொருட்படுத்துவதில்லை, சலனமின்றி, இயல்பாக தன் பாட்டுகுக் கடந்துசெல்கிறது. காலம் யாருக்கும் காத்திருப்பதோ, எந்தக்கேள்விக்கும் பதில் சொல்வதோ கிடையாது. காலவோட்டத்தில் தீராத எங்கள் கேள்விகளுக்கான பதில்களை கண்டறிய முடியுமா எனத் தேடிக் கொண்டிருக்கிறோம்!

காலம் எந்த வலியையும் ஆற்றுவதுமில்லை. காலம் செல்லச் செல்ல வலி பழகிவிடுகிறோம்!மறந்துவிடுகிறோம்..இல்லை சரியாகச் சொன்னால் மறந்துவிட்டதாக நம்பிக் கொள்கிறோம். 

ஆனாலும் ஏதோ ஒரு சினிமாவோ, பாடலோ, உரையாடலோ சமயங்களில் வாசனைகளோ கூட அந்த வலியை அதே வீரியத்துடன் நொடியில் உணரச் செய்து விடுகின்றது!

30 comments:

 1. ஐயையோ இந்த புள்ளைக்கு வீட்ல சொல்லி சுத்தி போடணும்...என்னென்னமோ சொல்லுது...தேசாந்திரி கணக்கா ஹிஹி!

  ReplyDelete
 2. சரியாகச் சொன்னால் மறந்துவிட்டதாக நம்பிக் கொள்கிறோம். // உண்மை சகோ..

  ReplyDelete
 3. ஜீ..!

  ஏமாற்றிய பின்னரும் நிரூபிப்பதற்கு சந்தப்பம் அமைந்து வெற்றியாளர்களாக வலம் வந்தவர்கள் மிகவும் குறைவுதான். ஆனாலும், ஏமாற்றியவன் முன்னாலேயே வாழ்ந்து காட்டுவதுதான் அதியுச்ச பழிவாங்கல்!!


  சிறிய தோல்வியொன்று கிடைத்தாலும், அந்த தோல்விக்கெல்லாம் சேர்த்து மெஹா ஹிட்டொன்று கொடுத்திருக்கிறீர்கள்.

  ஜீ தன்னை மீண்டும் நிரூபித்த பெருமையையும் இந்தப் பதிவின் மூலம் கொள்ளலாம். வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 4. அருமை.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. காலம் எந்த வலியையும் ஆற்றுவதில்லை காலம் செல்ல செல்ல வலி பழகி விடுகிறது. என்ற வரிகளை உணர்ந்து ரசித்தேன்.
  மனதை தாக்கிய பதிவு அருமை

  ReplyDelete
 6. உணர்ந்து கொள்ள முடிகிறது ...

  ReplyDelete
 7. நிராகரிப்பு, நம்பிக்கைத் துரோகத்தின் வலி மிகக் கொடுமையானது! அது மென்மையானவர்களை, மிகத்திறமைசாலிகளை அதீதமாகவே தாக்கிவிடுகிறது! அவர்கள் தொலைத்ததாகக் கருதும் அங்கீகாரத்தை, வாழ்க்கையை வேறு எதுவுமே ஈடு செய்வதில்லை.


  ரொம்ப சரியான வார்த்தைகள்

  ReplyDelete
 8. //காலம் எந்த வலியையும் ஆற்றுவதுமில்லை. காலம் செல்லச் செல்ல வலி பழகிவிடுகிறோம்!மறந்துவிடுகிறோம்..இல்லை சரியாகச் சொன்னால் மறந்துவிட்டதாக நம்பிக் கொள்கிறோம்.//
  உன்மையே ஜி
  நன்று.

  ReplyDelete
 9. நிராகரிப்பின் நிஜவலியைப் பற்றி நன்றாகவே அலசியிருக்கிறீர்கள்..நல்லதொரு பதிவு.

  ReplyDelete
 10. ஜீ...வாழ்வுதான் இன்னும் மெருகுபடுத்தித் திரைக்குள் நுழைகிறது.எங்கள் அருகிலிருக்கும்போது உணரமுடியாதவற்றை திரை சொல்லும்போது முழுமையாக உணர்கிறோம்.நிராகரிப்பின் வலி என்று சும்மா சொல்லிவிடமுடியாது.அது வாழ்வையே தரைமட்டமாக்கும் அடி !

  ReplyDelete
 11. அத்தனை வரிகளும் நெஞ்சுக்குள் ரீங்காரமிடுகிறது..
  நம்பிக்கைத் துரோகம் ஒருமுறையேனும் காணாத
  மனிதர்களே இல்லை எனலாம்...
  கொலைக்குற்றத்தினும் மிக கொடிது இந்த நம்பிக்கைத் துரோகம்.
  அருமையா சொல்லியிருகீங்க நண்பரே.
  உணர்ச்சிமிக்க வரிகள் அனைத்தும்.

  ReplyDelete
 12. ஹி... ஹி... ஹி... ஜி நீங்க இலக்கியத்தோட அடுத்த சதுரத்துக்கு போயிட்டீங்க...

  ReplyDelete
 13. muttrilum unmai

  www.astrologicalscience.blogspot.com

  ReplyDelete
 14. ஹாய் ஜீ,

  நல்ல சுவையான சிந்திக்க வைக்கும் பதிவு. மனதை கவர்ந்தது. நாம் காணும் வித்தியாசமான மனிதர்களின் பின்னால் என்ன என்ன கதை இருக்குமோ என்று யோசிக்க வைக்கிறது.

  ReplyDelete
 15. வித்தியாசமான சிந்தனையைத் தூண்டும் சிந்தனை.

  ReplyDelete
 16. அருமையான சிந்தனை. சிந்திக்க வைக்கும் பதிவு.
  பகிர்விற்கு நன்றி நண்பரே!
  இதையும் படிக்கலாமே :
  "அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?(3) எது சிறந்தது? (நிறைவுப் பகுதி)"

  ReplyDelete
 17. //நிராகரிப்பு, நம்பிக்கைத் துரோகத்தின் வலி மிகக் கொடுமையானது! அது மென்மையானவர்களை, மிகத்திறமைசாலிகளை அதீதமாகவே தாக்கிவிடுகிறது! அவர்கள் தொலைத்ததாகக் கருதும் அங்கீகாரத்தை, வாழ்க்கையை வேறு எதுவுமே ஈடு செய்வதில்லை.//

  முதல் பத்தியிலிருந்து மனம் வெளிவர மறுக்கிறது..

  ReplyDelete
 18. அற்புதம்! மயக்கம்என்னவின் பாதிப்பில் இரு முக்கிய நீங்கள் கண்ட உண்மை சமடபவத்தை சொல்லியிருக்கீங்க!!

  ReplyDelete
 19. வணக்கம் மச்சி,
  நல்லா இருக்கீங்களா?

  நறுக்கென மூன்று விடயங்களை வித்தியாசமான உட்கிடக்கைகள் ஊடாக வெளிப்படுத்தியிருக்கிறீங்க.

  அருமையான சொல்லாடல், மென்மையான + இலாவகமான மொழி நடையில் பதிவினை நகர்த்தியிருப்பது சூப்பர்.

  ReplyDelete
 20. நிராகரிப்பு நம்பிக்கைத் துரோகம்: இதுவும் கடந்து போகும் பாஸ்...

  அவருக்கு நாற்பத்தைந்து வயது: யாரையும் புறத் தோற்றத்தில் எடை போடக் கூடாது என்பதனைச் சொல்லி நிற்கிறது.

  ReplyDelete
 21. காலம் எந்த வலியையும் ஆற்றுவதுமில்லை. காலம் செல்லச் செல்ல வலி பழகிவிடுகிறோம்!மறந்துவிடுகிறோம்..இல்லை சரியாகச் சொன்னால் மறந்துவிட்டதாக நம்பிக் கொள்கிறோம்.

  சரியான வார்த்தைகள்.
  நிராகரிக்கப்படாத ஜீவன் யாருமில்லை. நிராகரிப்பினால் துவண்டு போகாமல் வாழ்வின் அர்த்தம் தேடிப் பயணிக்க பலரால் முடிகிறது என்பதே வாழ்வின் சாதுர்யம்.

  ReplyDelete
 22. ஜீ பாஸ், உண்மையில் நிராகரிப்பையும் நம்பிக்கை துரோகத்தையும் சந்திக்காதவர்கள் அதிஸ்ட சாலிகளே..... அந்த பாக்கியம் எல்லோருக்கும் கிடைப்பது இல்லை. உலகில் மிக கொடுமையானது இவை ரெண்டும்தான்.

  மயக்கம் என்ன... இன்னும் நான் பார்க்கவில்லை உங்களின் இந்த கட்டுரை அந்த படத்தை பார்க்கணும் என்ற ஆவலை கொஞ்சம் அதிக படுத்திவிட்டது :)

  <<< படிச்சு என்ன செய்யிறது<< இதை சொல்லும் போது அவர் முகத்தில் தெரிந்து இருக்கும் விரக்தி இப்போது என் கண்முன் வருகிறது :(

  ReplyDelete
 23. காலம் எந்த வலியையும் ஆற்றுவதுமில்லை. காலம் செல்லச் செல்ல வலி பழகிவிடுகிறோம்!மறந்துவிடுகிறோம்..இல்லை சரியாகச் சொன்னால் மறந்துவிட்டதாக நம்பிக் கொள்கிறோம்.
  >>
  உண்மைதான் சகோ

  ReplyDelete
 24. இப்போதும் கூட அவர் தனது நடைப் பயணத்தைத் தொடர்ந்துகொண்டிருப்பார். எந்த சலனமுமின்றி, யாரையும் பொருட்படுத்தாது, ஓய்வின்றி...காலத்தைப் போல!


  வித்தியாசமான சிந்தனையில் எளிய நடையில் ஒரு பதிவு

  ReplyDelete
 25. காலமும் யாரையும் பொருட்படுத்துவதில்லை, சலனமின்றி, இயல்பாக தன் பாட்டுகுக் கடந்துசெல்கிறது. காலம் யாருக்கும் காத்திருப்பதோ, எந்தக்கேள்விக்கும் பதில் சொல்வதோ கிடையாது. காலவோட்டத்தில் தீராத எங்கள் கேள்விகளுக்கான பதில்களை கண்டறிய முடியுமா எனத் தேடிக் கொண்டிருக்கிறோம்!///
  மிகச் சரியாக சொன்னீர்கள்.

  நிராகரிப்பின் வலியை நான் நிறையவே அனுபவித்திருக்கிறேன் .

  பகிர்வுக்கு நன்றி .

  ReplyDelete
 26. இது போன்ற மனிதர்களை நானும் சந்தித்து உள்ளேன், இப்போது கணித ஆசிரியராக உள்ள ஒருவர்,கோவிலுக்கு வரும் ஒரு அண்ணா. அந்த வலி அவ்வளவு கொடுமையானதுதான். அதில் இருந்து மீள்வது கடினம்தான். ஆனால் அவர்களுக்கு முன்னாலேயே சிறந்த ஒரு வாழ்க்கையை வாழ்ந்து காட்ட வேண்டும்.

  ReplyDelete
 27. ஆழ்ந்து வாசித்தேன். உங்கள் எழுத்துக்கள் அடுத்த கட்டத்திற்குச் செல்வதை உணர முடிகிறது. இலக்கியப் பத்திரிக்கைகளில் வரும் தரமான கட்டுரைகளுக்குக் கொஞ்சமும் குறைந்ததல்ல இது. நிறைய இடங்களில் சபாஷ் சொல்ல வைக்கும் கருத்துக்கள். வாழ்த்துக்கள் ஜீ!

  ReplyDelete
 28. ///காலம் எந்த வலியையும் ஆற்றுவதுமில்லை. காலம் செல்லச் செல்ல வலி பழகிவிடுகிறோம்!மறந்துவிடுகிறோம்..இல்லை சரியாகச் சொன்னால் மறந்துவிட்டதாக நம்பிக் கொள்கிறோம்///

  உண்மைதான், சரியாச் சொன்னீங்க...!

  ReplyDelete
 29. உங்கள் பதிவின் தாக்கம் என்னை பாதித்தது. இந்த வலைப்பதிவை
  வலைச்சரத்தில் இணைத்துள்ளேன். நன்றி. :)

  உங்கள் பதிவினை இணைத்த எனது இடுகை:
  என் இடுகை

  ReplyDelete

Followers

Blog Archive

Powered by Blogger.

Archives

Copyright © வானம் தாண்டிய சிறகுகள்.. |