Tuesday, December 27, 2011

The Postman (1994)



காதலிக்கும்போது பலர் கவிஞர்களாகி விடுவதைப் பார்த்திருக்கிறோம். கூடவே காதலில் உதவும் நண்பர்களையும்! ஆனால் மரியோவுக்கு? உலகம் கொண்டாடும் ஒரு பிரபல கவிஞரே காதலில் உதவும் நண்பராகவும்  வாய்த்துவிடுகிறார்.

மரியோ இத்தாலியிலுள்ள சிறிய தீவில் மீனவரான அவன் தந்தையுடன் வசிக்கும் வேலையில்லாத இளைஞன். ஒருநாள் திரையரங்கில் ஓடும் செய்திப்படம் ஒன்றில் பாப்லோ நெரூதா (Pablo Neruda) என்ற உலகப் புகழ்பெற்ற கவிஞர் இத்தாலிக்கு வந்திருப்பதைத் தெரிந்துகொள்கிறான். அவர் பல காதல் கவிதைகளை எழுதியவர், பெண்களுக்குப் பிடித்தமானவர் எனவும் புரிந்துகொள்கிறான். படம் முடிந்து செல்லும்போது தபால் அலுவலகத்தில் தபால்காரர் வேலைக்குத் தற்காலிகமாக ஆள் தேவை என்ற விளம்பரத்தைப் பார்த்து மறுநாள் காலை அங்கு செல்கிறான்.

அஞ்சலக அதிகாரி மரியோவிடம், அவனது வேலை தினமும் ஒருவருக்கு வரும் கடிதங்களை மட்டும் சேர்ப்பிப்பது என்கிறார். ஆச்சரியப்படும் மரியோவிடம், பாப்லோ  நெரூதாவைத் தெரியுமா எனக் கேட்க, 'தெரியும்! பெண்களுக்குப் பிடித்த கவிஞர்!', 'இல்லை மக்களுக்குப் பிடித்த கவிஞர்!' திருத்துகிறார். அவர் ஒரு கம்யூனிசவாதி எனக்கூறி, அவருக்குத் தினமும் கடிதங்கள் குவிகின்றன. நீ கொடுக்கவேண்டும், அவருடன் பண்பாக, மரியாதையோடு நடந்துகொள்ள வேண்டுமெனக் கூறுகிறார்.


முதல்நாள் புன்னகையுடன் கடிதங்களை வாங்கிவிட்டு டிப்ஸ் கொடுக்கும் பாப்லோவை நன்றிசொல்லிப் பிரமிப்போடு பார்க்கிறான் மரியோ. மறுநாள் அவருக்கு வரும் கடிதங்கள் எல்லாமே பெண்களிடமிருந்து வருவதை ஆச்சரியத்துடன் பார்க்கிறான். அவனது அஞ்சல் அதிகாரி பாப்லோவின் கவிதைப் புத்தகமொன்றை அவனுக்குக் கொடுக்கிறார். இரவு அதைப்படிக்கும் மரியோ மறுநாள் பாப்லோவிடம் அவரின் கவிதையின்ற்றைப் பற்றி பேசி, மெல்ல மெல்ல அவரின் நெருங்கிய நண்பனாகிறான்.

ஒருநாள் நோபல் பரிசுக்கான பரிசீலனையில் பாப்லோவின் பெயர் இருப்பதாக வரும் கடிதத்தைக் கொடுக்கும் மரியோ வாழ்த்துச் சொல்கிறான். அது வெறும் பரிசீலனைதான் என பாப்லோ சொல்ல, நிச்சயமாக உங்களுக்குக் கிடைக்கும் என்கிறான் மரியோ. நன்றி சொல்லும் பாப்லோவிடம் தான் மதுபான விடுதியில் ஒரு பெண்ணைப் பார்த்து மனதைப் பறிகொடுதத்தை சொல்கிறான் மரியோ.

'நான் காதலில் விழுந்துவிட்டேன்' 'அதற்கு வயசான நான் என்ன செய்ய முடியும்?', 'அவளுக்காக ஒரு கவிதை எழுதித்தர முடியுமா?' 'ஒரு கவிஞன் நேரில் பார்க்காமல், அந்தப் பாதிப்பில்லாமல் எப்படிக் கவிதை எழுத முடியும்?' பாப்லோ மறுத்து விட, 'ஒரு கவிதைக்கு இவ்வளவு பந்தாவா? உங்களுக்கு நோபல் கிடைக்காது' என்கிறான் மரியோ!


மரியோவும், பாப்லோவும் அந்த மதுபான விடுதிக்குச் செல்கின்றனர். பலரும் பாப்லோவை அடையாளங்கண்டு கொள்கின்றனர்.பாப்லோவை மரியாதையுடனும் மரியோவை அலட்சியத்துடனும் பார்க்கும் அவளிடம் பேனா வாங்கி அவள் முன்பாகவே மரியோவின் நோட்-புக்கில் எனது நெருங்கிய நண்பனான் மரியோவுக்கு என எழுதிக் கையெழுத்திட்டுக் கொடுக்கிறார்.மிகப்பெருமையாக இருக்கிறது மரியோவிற்கு!முதன்முறையாக மரியோவை சற்றுக் கவனிக்கிறாள் அவள்!

பின்னர் இருவரும் காதலித்து பாப்லோவின் முன்னிலையில் திருமணம் செய்துகொள்கிறார்கள். விருந்தின்போது பாப்லோ தனக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி கிடைத்திருப்பதாக கூறுகிறார். அது, அவருக்கு மீண்டும் தனது சொந்த நாட்டுக்குச் செல்ல அனுமதி கிடைத்திருக்கிறது! எல்லோரிடமும் விடைபெற்றுச் செல்கிறார் பாப்லோ.

பாப்லோ சென்றபின் அவரின் நினைவாகவே இருக்கிறான் மரியோ. இத்தாலி பற்றி அவர் குறிப்பிடும்போதும், அவரின் கடிதங்கள் வரும்போதும் தன்னைப்பற்றி ஏதும் குறிப்பிடுகிறாரா என ஆவலாக கவனிப்பதும், அதையே  மற்றவர்கள் கேட்கும்போது, 'அவர் ஒரு பெரும் கவிஞர் என்னை ஏன் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும்? நான் அப்படி என்ன செய்துவிட்டேன்?' என சமாளிப்பதுமாக இருக்கிறான். பாப்லோவுக்காக ஒரு ஒலிநாடாவை 'பாப்லோவுக்கு ஒரு கவிதை' என்ற பெயரில் உருவாக்குகிறான். பாப்லோ அவனை மறந்துவிட்டாரா? மீண்டும் அவர்கள் சந்தித்தார்களா?


ஒரு உலகப் புகழ்பெற்ற கவிஞனுக்கும், அவனது எளிய ரசிகனுக்கும் இடையிலான, நட்பினை நகைச்சுவையான உரையாடல்கள், அருமையான பின்னணி இசையுடன் சொல்கிறது படம்!

படம் முழுவதும் அருமையான உரையாடல்கள்!
மரியோ பாப்லோவிடம், 'உருவகம் என்றால் என்ன?' என்கிறான்.
பாப்லோ,'அதை எப்படி விளக்குவது...ஒன்றை இன்னொன்றோடு ஒப்பிடுவது..வானம் அழுகிறது - இது எதைக் குறிக்கும்?'
மரியோ, 'மழை!'
'இதுதான் உருவகம்' - பாப்லோ.

மரியோ 'நானும் கவிஞனாகணும்'
'ஏன்?'
'கவிதை எழுதினாப் பெண்களைக் கவரலாம்' - புன்னகைக்கிறார் பாப்லோ.
'நீங்க எப்படிக் கவிஞரானீங்க?'
'கடற்கரையோரம் மெதுவா நடந்துகொண்டே, உன்னைச் சுற்றிலும் கவனித்துப் பார்! இயற்கையைப் பார்!'
'அப்படிப்பார்த்தா உருவகம் கிடைக்குமா?'
'நிச்சயமா!' - கடற்கரையோரம் மரியோ.

மரியோ சொந்தமாக யோசித்து காதலியிடம் 'நீ சிரிக்கும்போது பட்டாம்பூச்சிகள் சிறகடிக்கின்றது!' எனச் சொல்லவதும், பாப்லோவின் கவிதையைத் தனது கவிதைபோல காதலியிடம் கொடுத்துவிட்டு பின்னர் அவரிடம் மாட்டிக்கொள்ளும் காட்சிகளும் அருமையானவை! 

மரியோவின் கதையைக் கேட்கும் பாப்லோ, கடற்கரையில் அவனது குரலின் ஒலிப்பதிவு, நினைவுகளுடன் நிற்கும் இறுதிக்காட்சிகள், அதன் பின்னணி இசை மிக நெகிழ்ச்சியானவை!

இயக்கம் : Michael Radford 
மொழி : Italian   
ஆண்டு : 1994
விருதுகள் :
Academy Award 1995 - சிறந்த இசை  
BAFTA - சிறந்த வெளிநாட்டுப் படம்
BAFTA  - சிறந்த இசை 

Pablo Neruda (1904  -1973)

உலகப் புகழ்பெற்ற Chile நாட்டுக் கவிஞர். கம்யூனிசவாதியான இவர் தனது நாட்டில் இடபெற்ற அரசியல் பிரச்சினைகளால் சொந்தநாட்டில் வாழ முடியாத சூழ்நிலையில் மூன்று வருடங்கள் பல நாடுகள் சென்று, 1950 - 52களில் இத்தாலியின் Capri தீவில் வாழ்ந்தார்.
1971 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசினைப் பெற்றவர்.

22 comments:

  1. ஜீ... நான் டிவிடி வாங்கற அலிபாய் கடையில இந்த பட்த்தை கொடுத்து பாக்கச் சொன்னார். வாங்கிட்டு வந்து ஒரு மாசமாகியும் மூலைல போட்டபடியே கிடக்கு. இப்ப படிச்சதும் உடனே பாக்கணும்ணு உந்துதல் வந்துடுச்சு. பாத்துடறேன். எனக்கு இந்த அளவு வசனங்கள் புரியுமான்னு தெரில. இருந்தாலும் நீங்க எழுதினதை ரசிச்சேன். உங்களுக்கு நன்றி மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. ஜீ...!


    எப்போதுமே சரசாரி ரசிகர்களின் மனநிலையையும்- ஒரு பிரபலத்தின் மனநிலையையும் கிட்டத்தட்ட அற்புதமாகச் சொன்ன படமென்று நினைக்கிறேன்.

    எழுதிய விதத்தில் எப்படியாவது பார்க்க துாண்டிவிட்டீர்.

    அதிக அலட்டில் இன்றி அளவான பதிவு. நச்சுண்ணு இருக்கு.

    ReplyDelete
  3. அருமையானதொரு அயல்நாட்டு படத்தை நினைவு படுத்தியதோடு மட்டுமல்லாமல் அதில் இடம் பிடித்த அழகான உரையாடல்களையும் சுட்டிக்காட்டியுள்ளீர்கள்..சொன்ன விதம் படத்தைப் பார்க்கத்தூண்டுகிறது..நன்றி..

    த.ம-3

    அன்போடு அழைக்கிறேன்..

    நாட்கள் போதவில்லை

    ReplyDelete
  4. பார்த்து முடிக்கையில் மனதுக்குள் ஏதோ ஒன்று நெருடிக்கொண்டே இருந்தது, அது தாபமா?, ஒன்றிப்பா?, அற்புதமா?, கவலையா? என்று பிரித்தறிய தெரியவில்லை. அதனால்த்தான் பல தடவைகள் இதை எழுதச்சொல்லி உங்களை வற்புறுத்திவந்தேன். அருமையான வர்ணனை நன்றி ஐயா.

    ReplyDelete
  5. நான் பார்க்கவில்லை இந்தப்படம்..ஆனாலும் பார்க்க தூண்டுகிறது உங்கள் விமர்சனம்!!

    ReplyDelete
  6. ஹாய் ஜீ,
    நல்ல விமர்சனம்.. இப்போதே பார்க்கவேண்டும் போல இருக்குது.. இந்த மாதிரியான படங்கள் மனித உணர்வுக்கு முக்கியமளிக்கும்..

    ReplyDelete
  7. விமர்சனம் மிகவும் நன்று..
    சில நாட்களுக்கு முன்பு பார்க்க உட்கார்ந்து சில காரணமாக முழுமையாக பார்க்காது விடுப்போன படைப்பு..
    ரசித்த வசனங்களை தமிழில் அழகாக தந்துள்ளீர்கள்..Pablo Neruda பற்றிய சிறு தகவலும் அருமை..
    மொத்ததில் சிறப்பான விமர்சனம்.வார்த்தைகளால் அலங்கரித்துள்ளீர்கள்.
    நன்றி மற்றும் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  8. உங்கள் வர்ணனைகளுடன் இந்தப்படத்தின் கதையைப் படித்ததும் படம் பார்க்கும் ஆவலை மிகவும் தூண்டுகிறது.

    நிஜமாகவே அந்தப்படத்தின் டைரக்டர் மாதிரி ரொம்ப ரசித்து அனுபவித்து பதிவை எழுதியிருக்கிறீர்கள். எங்களையும் நன்கு ரசிக்க வைத்திருக்கிறீர்கள்.

    ReplyDelete
  9. மிக அருமையான படம்.
    இதனைப்பற்றி நிறைய சொல்லலாம்.
    அருமை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. விமர்சனம் படம் பார்க்கும் ஆவலை தந்துட்டுது..... ரெம்ப நல்ல படம் போல இருக்கு.... பார்த்திர வேண்டியதுதான். லிங்க் இருந்து அதை தந்திருந்தால் நன்றாக இருந்து இருக்கும் :)

    ReplyDelete
  11. வணக்கம் பொஸ்,
    கலக்கிட்டீங்க பாருங்க
    கவிதைக்குள் தொலைந்து போன கவிஞரின் உணர்வுகளையும், அவர் பின்னே எதிர்பாராத விதமாக சந்தித்து, அவர் வீட்டிற்கே தபால் கொடுத்து நண்பராகப் பழகும் பாக்கியம் பெற்ற பிரியத்திற்குரிய ரசிகனின் உணர்வுகளையும் வெளிப்படுத்தும் அருமையான பட விமர்சனத்தை கொடுத்திருக்கிறீங்க.
    நன்றி பாஸ்.

    விமர்சனத்தில் ரொம்பவே தேறி வாறீங்க!
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  12. வணக்கம் ஜீ

    படம் பார்க்கணும்....

    ReplyDelete
  13. மாப்ள..அருமயா விவரிச்சி இருக்கீங்க!~

    ReplyDelete
  14. அனுபவப்பகிர்வில் கவிஞருக்கும் ரசிகனுக்குமான உறவே கவிதைதான்... இன்னொரு அருமையான விமர்சனத்தை சிறப்பாகப் பதிவிட்ட உங்கள் ரசனையை வியக்கிறேன்.

    வாழ்த்துக்கள்.... படம் பார்த்துவிட்டு மீண்டும் பதிவிடுகிறேன் நண்பரே!!

    ReplyDelete
  15. உங்களின் விமர்சனத்தைப் பார்த்து படம் பார்க்க ஆவலை ஏற்படுத்துகிறது. நன்றி!

    ReplyDelete
  16. நண்பரே!
    படத்தின் விமர்சனத்தோடு மக்கள் கவிஞன் பாப்லோ நெரூடாவின் குறிப்பை தந்தது அருமை...
    படத்தை மீண்டும் பார்க்க தூண்டிவிட்டது தங்கள் பதிவு.

    ReplyDelete
  17. படத்தை பார்க்க வைத்தீட்டீங்க பாஸ்

    ReplyDelete
  18. ஒரு சாமானியனுக்கும், சாதனையாளருக்கும் மலரும் நட்பு. விமர்சனம் அருமை.

    ReplyDelete
  19. அழகான விமர்சனம் நண்பரே ,பார்க்க தூண்டும் விதத்தில் எழுத்து நடை அருமை


    த.ம 11


    ஓய்வாக இருந்தால் இதனையும் வாசித்து பாருங்களேன்

    ஆட்டிறைச்சி குணங்கள் அறிந்து கொள்ளுங்கள்

    ReplyDelete
  20. விமர்சனம் படத்தை பார்க்க தூண்டுகிறது. அருமையாக உள்ளது விமர்சனம்

    ReplyDelete
  21. அடுத்தவருடம் கட்டாயம் பார்க்கவேண்டிய படங்களின் வரிசையில் இதுவும் இப்போது ஒன்று.

    ReplyDelete
  22. பாட்டைக் கேளுங்க பரிசு வெல்லுங்க

    ReplyDelete