Monday, February 14, 2011

The Notebook


ஒரு வயது முதிர்ந்த தம்பதி. அந்தக் கணவன் தன் மனைவிக்கு ஒரு Notebook இலுள்ள கதையை வாசித்துக் காட்டுகிறார். அது Noah, Allie என்ற இளம் காதலர்கள் பற்றிய கதை! 

1940 ஆம் ஆண்டு. தனது சம்மர் விடுமுறையைக் கழிக்க பெற்றோருடன் தெற்குக் கரோலினாவிலுள்ள Seabrook கிற்கு வருகிறாள் இளம் பெண் அலி. அங்கு ஒரு கார்னிவெல் கொண்டாட்டத்தில் நோவாவைச் சந்திக்க, படிப்படியாக அது காதலாக மாற, இருவருக்கும் இனிமையான விடுமுறையாகக் கழிகிறது. நோவா ஒரு மரம் வெட்டும் ஆலையில் வேலை செய்கிறான். ஒரு கைவிடப்பட்ட பழைய வீட்டிற்கு அவளை அழைத்துச் செல்லும் நோவா, அவளுக்காக அந்த வீட்டை வாங்கித் திரும்பக்கட்டித் தருவேன் என உறுதியளிக்கிறான்.


அலி- நோவாவின் காதல் அலி யின் பெற்றோருக்குத் தெரியவர, நோவா தங்கள் குடும்பத்திற்கு ஏற்றவன் இல்லை எனவும், அவனை விட்டு விலகிவிடுமாறும் கூற, இதைக்தெரிந்து கொண்ட நோவா அவளை வீட்டு விலகிச் செல்கிறான். அவனுக்கும் அலிக்கும் இடையிலான ஒரு வாக்குவாதத்திற்குப் பின் இருவரும் உறவை முறித்துக் கொள்கிறார்கள்.

விடுமுறை முடிந்து அலி குடும்பம் ஊரைவிட்டுச் சென்றதும், அவளுக்கு ஒரு நாளைக்கொரு கடிதம் வீதம் எழுதுகிறான் நோவா. அவளிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை. அவன் கடிதம் எழுதுவதை அவள் அறிந்திருக்கவில்லை. அவளின் தாயாரால் மறைக்கப்படுவதால். சரியாக ஒரு வருடம் கடிதமெழுதி, பதிலில்லாததால், நிரந்தரமாகப் பிரிவதாக அடுத்த கடிதமும் எழுதுகிறான். 366 கடிதங்கள். பதில் இல்லை. நோவா தனது கிராமத்தை விட்டு அட்லாண்டா செல்கிறான்.


ஒருநாள் வேலைத்தளத்தில், பேர்ல்ஹார்பர் செய்தியைக்கேட்கும் நோவா இராணுவத்தில் சேர்ந்து உலகப்போரில் பங்குகொள்கிறான். அதேநேரத்தில் காலேஜில் படிக்கும் அலி, மருத்துவத்தாதியாக வோலண்டியராக சேர்ந்து காயமுற்ற இராணுவவீரர்களை பராமரிக்க, அங்கே Lon ஐச் சந்திக்கிறாள். Lon இன் இராணுவத் தரம், குடும்ப நிலை எல்லாம் தங்களுக்கு ஏற்றதாக இருக்க, அலியின் பெற்றோரால் இருவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்படுகிறது.


இதேவேளை ஊர்திரும்பிய நோவா தன் தந்தையின் உதவியுடன் அந்தப் பழைய வீட்டை வாங்கி திருத்தி புதிதாக்கிவிடுகிறான். அவனுக்கு அலிக்கு திருமணம் நிச்சயிக்கப் பட்டது தெரிந்திருந்தது. இருந்தும் அவள் திரும்பி வருவாள் என நம்புகிறான். வீட்டை விலைக்கு கேட்டுவரும் ஒருவருக்கும் விற்கவில்லை. அவளுக்காகக் காத்திருக்கிறான். தற்செயலாக பத்திரிகையில் அந்த வீட்டைப் பார்க்கும் அலி, நோவாவைத் தேடி வருகிறாள். பின்பு என்னவாகிறது... என்பது மீதிக்கதை.


அந்த வயது முதிர்ந்த பெண் தான் அலி. அவளால் தன்னை, தனது குடும்பத்தாரை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. அவளது நினைவைக் கொண்டுவரவே ஒவ்வொருநாளும் அந்த புத்தகத்தை வாசிக்கிறார் நோவா. நோவா தூங்கியதும் அலி ஒவ்வொரு முறையும் அதில் எழுதி வைக்கிறாள் 'Read this to me, and I'll comeback to you'.  

2004 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த ஹாலிவுட் படம், Nicholas Sparks எழுதிய Notebook நாவலை அடிப்படையாகக் கொண்டது. 
   

Tuesday, February 8, 2011

The Isle


அமைதியான பெரிய ஏரி. அதற்குள் மிதக்கும் சின்னச் சின்ன மிதவை வீடுகள் (Floating cottages). அவற்றில் தங்கி ஓய்வெடுக்கும், மீன்பிடிக்கும் வாடிக்கையாளர்களுக்கு தரையிலிருந்து படகுச் சேவை, உணவு, போன்றவற்றைக் கவனித்துக் கொள்கிறாள் அந்த அழகான ரிசார்டை (Resort) நடத்தும்/வேலை பார்க்கும் வாய்பேசாத பெண் ஹீ ஜின்! தேவையாயின் பெண்களும் வரவழைத்துக் கொடுக்கப்படும். ஹீ ஜின் விருப்பப்பட்டால் அவளையும்!

அங்கு தங்க வருகிறான் போலீசாரால் தேடப்படும் குற்றவாளியான ஹூன் சிக். அவனிடம் அவளுக்கு எந்த விதமான ஈடுபாடும் இல்லை. ஒருமுறை அவன் அழுதுகொண்டிருப்பதைக் காணும் அவள் அவனுக்குள் இருக்கும் ஏதோ பிரச்சினையைப் புரிந்துகொள்கிறாள். அவன் மேல் ஒரு சிறு பரிதாபம் வருகிறது. தற்கொலைக்கு முயலும் அவனைக் காப்பாற்றுகிறாள்.


ஹூன் மீன்பிடிப்பதற்கு போட்டிருந்த தூண்டிலை எடுத்துப்பார்க்க அதில் ஒரு பொம்மை மீன். சிறு சிரிப்புடன் ஒரு புழுவை மாட்டி விடுகிறாள். தூண்டிலில் மீன் சிக்கியவுடன் வந்து பார்க்கும் அவனைச் சிரித்தவாறே, ஊஞ்சலில் ஆடிக்கொண்டு பார்க்கிறாள். தூண்டிலில் இருந்து மீனை விடுவித்து, மீண்டும் கடலில் விடும் அவனை ஆச்சரியமாகப் பார்க்கிறாள். மறுநாள் ஹூன் கம்பியினால் வளைத்துச் செய்யப்பட்ட ஊஞ்சலாடும் பெண் உருவப் பொம்மையை அவளுக்குப் பரிசளிக்கிறான்.

ஒரு மழை நாளில் அவனுக்காக ஒரு பெண் அனுப்பப்பட, அவளை அவனது மிதவையில் கொண்டு சென்று விடும் ஹீ ஜின் அந்தப்பெண் மீது லேசான பொறாமையுணர்வு தலைதூக்க, கரைக்குத் திரும்ப அவளை அழைத்துவரச் செல்லவில்லை. இதனால் அன்றிரவு முழுதும் அங்கேயே அந்தப்பெண் தங்கிவிட நேர்கிறது. அவன் அந்தப்பெண்ணுடன் வெறுமனே போழுதைக்கழிக்கவே விரும்புகிறான். அவனுடைய செயலால் அவன்மேல் ஒரு ஈர்ப்பு ஏற்பட அவன் கொடுக்கும் பணத்தை மறுத்துவிடுகிறாள். அவன் செய்த சைக்கிள் பொம்மையை எடுத்துக் கொள்கிறாள் மறுநாள் அவளைக் காணாததால் தேடிவரும் பெண்தரகன், அவனைத் தாக்கிவிட்டு, அழைத்துச் செல்கிறான். ஹூனைப் பிடித்துப் போனதால் தனது விடுமுறை நாட்களில் அவனைச் சந்திக்க வருகிறாள் அந்தப்பெண்.


ஒருமுறை ஹூனைத்தேடி அந்த ஏரிக்கு வரும் போலீசாரைப் பார்த்தவுடன் தற்கொலை செய்ய முயலும் ஹூனை மீண்டும் காப்பாற்றி, மறைவான இடத்தில் அவனுடைய மிதவையை நிறுத்தி வைக்கிறாள் ஹீ ஜின். இந்நிலையில், மீண்டும் ஹூனைச் சந்திக்க வரும் அந்தப் பெண் உற்சாகத்துடன் படகில் ஏறுகிறாள். படகைச் செலுத்தும் ஹீ ஜின், ஹூனுடைய மஞ்சள் மிதவையைக் கடந்து வேறொரு மிதவைக்கருகில் நிறுத்த, குழப்பத்துடன் இறங்கும் அந்தப் பெண் உள்ளே எட்டிப் பார்க்கிறாள். அதன் பிறகு?

அவர்களிடையே காதல் உருவாகிவிடுகிறது. அது முழுக்க வன்முறையாலேயே வெளிப்படுத்தப்படுகிறது. உணரப்படுகிறது.  ஓரிரு காட்சிகளைக் கண்களை மூடியவாறே என்னால் பார்க்க(?!) முடிந்தது. தைரியசாலிகள் நேரடியாகப் பார்க்க முயற்சி செய்யலாம். குறிப்பாக ஹூன், ஹீ ஜின்  தற்கொலைக்கு முயலும் காட்சிகள்.

ஹூன் சிக் எப்படித் தற்கொலைக்கு முயல்கிறான் என்றால், நான்கைந்து முட்கள்  கொண்ட தூண்டிலை விழுங்கி, பின்னர் அதைப் பலங்கொண்ட மட்டும் இழுத்து பார்க்கிறான் பின்னர் அப்படியே தண்ணீருக்குள் குதித்து விடுகிறான். அவனைக் காப்பாற்ற வேண்டுமெனில் தூண்டிலை இழுக்க வேண்டும். அப்படியே அவனைக் காப்பாற்றி விடுகிறாள்.

ஹீ ஜின் அதற்கும் மேல். ஒருநிலையில் ஹீ ஜின் பற்றித் தெரிந்ததும் அவளிடமிருந்து விடுபட்டுச் செல்ல முயற்சிக்கிறான் ஹூன் சிக். அவள் இதை எதிர்பார்த்தே இருந்திருக்கிறாள். கயிற்றின் ஒரு முனை ஹூன் சிக் தப்பிச் செல்லும் படகில் கட்டப்பட்டிருக்கிறது. மறுமுனையில் இணைக்கப்பட்ட தூண்டில் முள்ளைத் தனது..... அதைச் சொல்ல முடியாது முடிந்தால் பார்த்துக் கொள்ளுங்கள். (முடியல! ஏண்டா பார்த்தோம்னு ஆயிடிச்சு!)

என்னால் சிறுபடகு, கப்பல், படு மோசமான பாதையினூடான பயணங்களில் எல்லாம் வாந்தி எடுக்காமல் செல்ல முடியும்! எடுத்ததற்கெல்லாம் வாந்தி எடுப்பவர்கள் பலர். அவர்கள் இந்தப்படத்தைத் தவிர்க்கலாம். அந்தளவிற்கு பாதிப்பான காட்சிகளா என்று எனக்குத் தெரியவில்லை. அனால் வெனிஸ் படவிழாவில் திரையிட்டபோது பலர் வாந்தி எடுத்ததாச் சொல்கிறார்கள். 
 

அழகான அமைதியான இயற்கைக் காட்சிகள். மிக மெதுவாக நகரும் காமெரா, ஒரு கவிதைபோல பயணிக்கும் கதை, மிகக் குறைந்த வசனங்கள். தமிழ் சினிமாவோடு ஒப்பிடுகையில் கொலையை எல்லாம் படு டீசண்டாகத்தான் காட்டுகிறார் இயக்குனர். சொல்லப் போனால் கொலை செய்வதைக் காட்டவே இல்லை.  ஆனால் தற்கொலை தான் முடியல! சுயவதை என்பது எப்படி இருக்கிறது என்று 'டீப்'பா காட்டியிருக்கிறார் இயக்குனர். இதற்கு 'பியானோ டீச்சர்' எவ்வளவோ பரவாயில்ல! 

2000 ஆண்டில் வெளியான இந்த தென்கொரியப்பட்ம் சொந்த நாட்டில் போதிய வரவேற்பைப் பெறாவிட்டாலும், உலக  அளவில்  பேசப்பட்ட, சர்ச்சைக்குரிய திரைப்படம்.

இயக்கம் - Kim Ki-duk
மொழி - Korean           

Friday, February 4, 2011

அப்பரும் ஐ. சி. நம்பரும்


நண்பன் மிகவும் சந்தோஷப்பட்டான். அவசரமாக ஒரு சிறு பேப்பரில் எழுதினான். அவனுக்குப் பிடித்த ஒரு பெண்ணின் ஐ.சி.(ஐடென்ட்டிட்டி கார்ட்) நம்பர் அது.
சரி அத வச்சு என்ன பண்ணலாம்?

அவளுடைய பிறந்த நாளைக் கண்டுபிடிக்கலாம். அதுக்குத்தான் சந்தோசம்!
முதல் இரண்டு இலக்கம் பிறந்த ஆண்டு அது மட்டும் எங்களுக்குத் தெரிந்திருந்தது.

'எப்பிடிடா பாக்கிறது?'
'அடுத்த மூண்டு நம்பர்ல தாண்டா இருக்கு'

'ஒவ்வொரு மாசமா கழிச்சு பாக்கணும்டா...சின்ன வயசில இங்க்லீஷ் புக்ல இருந்திச்சுடா'
அந்நிய மொழி பிடிக்காதென்ற ஒரே காரணத்துக்காக அதைப் படிக்கவில்லை (வேற ஒண்டுமில்லை)

கண்டு பிடிக்கும் பொறுப்பு எனது தலையில்.

நான் பொதுவாக வீட்டில் யாருடனும் அதிகமாக கதைப்பதில்லை. இது போன்ற முக்கியமான(?) விஷயங்களில் அதைப் பார்க்க முடியுமா?

வீடு வந்ததும் அப்பாவிடம் படு இயல்பாக ஆரம்பிதேன்,

அப்பா இந்த ஐ.சி.நம்பர்ல இருந்து date of birth எப்பிடி பாக்கிறது?
அப்பா சொன்னார்.

இப்போ நம்பர் 84220 ன்னு ஆரம்பிச்சா 84 பிறந்த ஆண்டு.220 ல இருந்து 31,30 என்று மாறி மாறிக் கழிக்க (பெப்ரவரிக்கு மட்டும் 29),  8 முறை கழித்த பின், இறுதியில் 7 எஞ்சும். ஆகவே 8 ம் மாசம் 7 ம்  திகதி. இதுதான் விஷயம்! (இவ்வளவு தானா?)

'ஒக்கே' நான் பெரிதாக சுவாரஸ்யமில்லாமல்.
'ஏண்டா?' அப்பா
'இல்ல சும்மாதான்'

அப்பா மீண்டும் தனது வேலையில் கவனமாக,
யாரோ என்னையே கவனிப்பது போல்......அக்கா!

படித்துக் கொண்டு, இவ்வளவு நேரம் நடந்ததை எல்லாம் பார்த்துக் கொண்டு.
ஆகா இவள் வேற.. டவுட் வந்திட்டுது!
இப்போ உடனே என்னோட ரூமுக்குள்ள போக ஏலாது. பாத்திடலாம் யாருகிட்ட?

நான் ரேடியோவைப் போட்டேன். ஒரு பாட்டு!
டி.வியை 'ஒன்' பண்ணி சானல்களை மாற்றி,
நேரத்தைக் கடத்தி, சும்மா நோட்டம் விட்டேன். யாரும் கவனிக்கல.

இப்ப போகலாம். (எப்பிடிடா உன்னால மட்டும்?!)

மெதுவாக, படு இயல்பாக எனது ரூமை நோக்கி நடக்க,

பின்னாலிருந்து அப்பாவின் குரல்,

'தம்பி! girls எண்டா 500 ஐ டிடக்ட் பண்ண வேணும்'

'-------'


குறிப்பு 1: நாங்கெல்லாம்  அப்பாகிட்டயே 'பல்ப்' வாங்கினவய்ங்க!

குறிப்பு 2: நான் திரும்பி வந்துவிட்டேன்.
இது கூட பரவாயில்லை. அவர் சொல்லியிருக்காவிட்டால் என்ன ஆகியிருக்கும்? திரும்ப அவரிடம் நானே போய் 500 கூட இருக்கே ன்னு கேட்டு, வலிய மாட்டி...ஸ்ஸ்ஸ்ஸப்ப்பா!

குறிப்பு 3: இது சிலவருடங்களுக்கு முன் நடந்த சம்பவம்... அல்ல அல்ல சரித்திரம்!