Saturday, December 4, 2010
எங்க வீட்ல யார் சொல்றது?
'ச்சே! இப்பிடி ஆயிடுச்சே!'
'ஆனாலும் ஏதோ நல்ல காலம் பெரிசா பயப்பிடுற அளவுக்கு அடிபடல. ஒரு கிழமை ஹொஸ்பிடல்ல இருக்கணுமாம். அதெல்லாம் பெரியாஸ்பத்திரில நல்லா கவனிப்பாங்க'.
'ஆனா சுதாவோட அம்மாவைத் தான் சமாளிக்க ஏலாது. சும்மாவே பயந்த மனிசி. மகனுக்கு அச்சிடென்ட் எண்டா அழுது ஊரைக் கூட்டிடும். இப்பவே காணேல்ல எண்டு தேடுவாங்க வீட்ல'.
-சைக்கிளை ஊன்றி மிதித்துக் கொண்டே, யோசித்தவாறு.
'மத்தியானம் சாப்பிடவேற இல்ல. பசிக்கல. ஆனா தலையிடி. கைக்கடிகாரம் ஆறு மணி என்றது. பதினைந்து நிமிஷத்தில கோண்டாவில் போயிடலாம். எட்டரைக்குத் தானே ஊரடங்கு? போயிட்டு வர நேரம் காணும்'.
தட்டாதெருச் சந்தியில, டெலிபோன் கதைக்க ஒரு கியூ. அதில ஒரு ஆமிக்காரனும்.
'இன்னும் டெலிபோன் லைன் அதிகமா குடுக்கத் தொடங்கல. செல்போன் எப்படி இருக்குமெண்டு இங்கிலீஷ் படத்தில பாத்ததுதான். இப்பதான் கொழும்பிலயே கொஞ்சம் கொஞ்சமா பாவிக்கிறாங்களாம். எப்பிடியும் மிலேனியம் பிறந்தாப்பிறகுதான் இங்க வரும்'.
'எதுக்கும் எங்க வீட்ல சொல்லிட்டு போகலாமா..? வேணாம் வந்திடலாம். இரவு ஸ்ரார்ல டேர்மினேட்டர் போடுறாங்கள். வந்து பாக்க வேணும்'.
கொக்குவில் சந்தியில ஒரு சாப்பாட்டுக் கடையில வடை,டீ.
'அப்பாடா! தலையிடி குறைஞ்ச மாதிரி இருக்கு. இப்பவே இருட்டீட்டுது. மழை வரப் போகுதோ? குடையும் இல்ல. ஏதோ டியூட்டரில கிளாஸ் முடிஞ்சிருக்கு..அந்த ரோஸ் சுடிதார் நல்லா இருக்கு..
பாத்திட்டு போன மாதிரி..'
'யாரு...?'
'இப்போ அதுவா முக்கியம்?'.
தாவடி செக்பொய்ன்ட் கியூவில், சைக்கிளை இறங்கி தள்ளிக்கொண்டே...பொக்கட்டில் கையை....
'அய்யய்யோ என்னோட purse ? ஐடென்டிடி கார்டு காட்டணுமே? சாப்பாட்டுக் கடையில விட்டுட்டேனா? கடைக்காரன் எடுத்து வச்சிருப்பான். ஆனா இப்போ திரும்பிப் போகவும் ஏலாதே'.
'ஆமிக்காரனை எப்பிடி சமாளிக்கிறது? சிங்களம் தெரிஞ்சாலும் சமாளிக்கலாம்...அடிப்பாங்களோ....?
அது கூடப் பரவாயில்ல அரெஸ்ட் பண்ணுவாங்களோ....?
இங்கேயே இருத்தி வச்சிடுவாங்களோ?'
சுதா, அவங்கம்மா, செல்போன், டேர்மினேட்டர், ரோஸ் சுடிதார், ஐடென்டிடி கார்டு எல்லாமே சுத்தமாக மறந்து போய் புதிய கவலை ஆக்கிரமித்துக்கொண்டது...
'நான் அரெஸ்ட்டானா, எங்க வீட்ல யார் சொல்றது?'
Thursday, December 2, 2010
The Road Home
ஒவ்வொரு மனிதனுக்கும் வெவ்வேறு காலகட்டங்களில் ஏதோ ஒரு வீதி வாழ்வோடு கலந்திருக்கும். அதில் அன்றாடம் எதிர்கொள்ளும் தெரிந்தவர்கள், பார்வையில் மட்டும் அறிமுகமானவர்கள், மனதிற்குப் பிடித்தவர்கள், பிடித்த வீடுகள், மரங்கள். ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கைப் பயணத்திலும், அனுபவங்களிலும் கூடவே ஒரு மௌன சாட்சியாக இருக்கின்றன வீதிகள்.
தந்தை இறந்த செய்தியறிந்து தனது கிராமத்துக்கு வரும் 'யுசெங்'கிடம் அவரது உடல் நாற்பது கிலோமீட்டர் தொலைவிலுள்ள வைத்தியசாலையில் இருக்கிறது என்கிறார்கள் ஊரிலுள்ள பெரியவர்கள். வயதான அவன் தாய் ஷாவோ கிராமத்திற்கு வரும் வீதி வழியே அவரது உடலைத் தூக்கிகொண்டே நடந்து வரவேண்டும் எனக் கூறுகிறாள். கடுமையான பனிக் காலம் வேறு. வயதான அந்தத் தாயின் வேண்டுகோளை மறுக்க முடியாமல் ஏற்பாடு செய்கிறான்.
தந்தை இறந்த செய்தியறிந்து தனது கிராமத்துக்கு வரும் 'யுசெங்'கிடம் அவரது உடல் நாற்பது கிலோமீட்டர் தொலைவிலுள்ள வைத்தியசாலையில் இருக்கிறது என்கிறார்கள் ஊரிலுள்ள பெரியவர்கள். வயதான அவன் தாய் ஷாவோ கிராமத்திற்கு வரும் வீதி வழியே அவரது உடலைத் தூக்கிகொண்டே நடந்து வரவேண்டும் எனக் கூறுகிறாள். கடுமையான பனிக் காலம் வேறு. வயதான அந்தத் தாயின் வேண்டுகோளை மறுக்க முடியாமல் ஏற்பாடு செய்கிறான்.
அப்படி என்ன அந்த வீதிக்கு முக்கியத்துவம்? ஏன் தூக்கிக் கொண்டு நடந்துவர வேண்டும்?
அந்தப் பாதையில்தான் அவள் முதன்முதலில் பார்த்தது, ஏதேச்சையாக சந்திப்பதுபோல் ஒவ்வொரு நாளும் சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொண்டது, பிரிவுத்துயரின் கொடுமையில் அவளோடு கூடவே சாட்சியாக இருந்து அந்தப்பாதை. அப்படிக் கொண்டு வந்தால்தான் அவருக்கு இறுதிவரை எதுவும் மறக்காமல் இருக்கும் என்கிறாள் தாய்.
அப்பாவின் அறைக்குள் வரும் யுசெங், தான் பெற்றோர் கல்யாணமான புதிதில் எடுத்த போடோவைப் பார்த்ததும், அவர்களின் இளமைக் காலத்தை நினைத்துப் பார்க்கிறான். அப்படியே கடந்தகாலம் காட்சிகளாக விரிகின்றது.
அந்தக் கிராமத்திற்கு பள்ளி ஆசிரியராக பணிபுரிய வருகிறான் ஷாங்யு. அவனைப் பார்த்த உடனேயே காதல் கொள்கிறாள் அழகான இளம்பெண் ஷாவோ. கம்யூனிச சீனாவில் பள்ளிக்கூடம் இல்லாத அந்த ஊரில் ஆசிரியர் உட்பட எல்லோரும் சேர்ந்து பள்ளி கட்டடம் கட்டும் பணியில். எல்லா வீடுகளிலிருந்தும் பணியாளர்களுக்கு உணவு வர, மரியாதை கருதி, ஆசிரியர் எடுத்துக் கொண்ட பின்னரே ஏனையோர். ஒவ்வொரு முறையும் மற்றவர்கள் அறியாமல் தனது பீங்கான் பாத்திரத்தை அவர் பக்கமாக முதலில் நகர்த்தி வைக்கிறாள் ஷாவோ.
கண்களின் வழியே அவர்களின் காதல் வளர்கிறது. கிராமத்தில் ஒவ்வொரு நாளும் ஒருவர் வீட்டில் ஆசிரியருக்கு விருந்து வைக்கிறார்கள். ஷாவோவின் முறை வரும்போது, வீட்டில் ஷாவோ அந்த பீங்கான் கோப்பையைக் காட்டி, ஞாபகம் இருக்கிறதா? எனக் கேட்க, ஷாங்யு அர்த்தமுள்ள ஒரு புன்சிரிப்பால் தனது காதலை வெளிப்படுத்துகிறான்.
ஷாங்யு நகரம் சென்றுவிட, ஷாவோ மிகவும் வருந்துகிறாள். அவன் சொன்ன காலத்தில் திரும்பவில்லை. பனிக்காலத்தில், பள்ளி விடுமுறையும் வருகிறது.இரவுகளில் அவன் வரும் பாதையில் குளிரையும் பொருட்படுத்தாமல் நடந்து செல்கிறாள். ஊரவர்களுக்கு விஷயம் தெரியவர, ஷாங்யு வந்ததும், அவனை அழைத்துப் பேசி, திருமணம் செய்து வைக்கிறார்கள். பின்பு அவர்கள் பிரியவே இல்லை.
பழைய காட்சிகள் முடிய இப்போது, தந்தையின் உடலைத் தூக்கிக்கொண்டே நடந்து வருகிறார்கள்.தூக்கிவந்த ஒருவரும் பணமும் பெற்றுக்கொள்ளவில்லை.எல்லோரும் அவரின் மாணவர்கள். பள்ளிக்கூடத்திக்கு எதிரிலேயே அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது.
இறுதியாகத் தந்தை படிப்பித்த பள்ளியில் பாடம் நடத்தச் சொல்கிறாள் தாய். அவனும் அவ்வாறே செய்ய அந்த சத்தம் கேட்டு தாய் ஷாவோ ஓடி வரும் காட்சி, அவள் மீண்டும் அந்தக் காலப்பகுதிக்கே சென்றுவிட்டதாய்க் காட்டுகிறது.
மிகக் குறைந்த வசனங்களுடன், அழகாக, கவிதைத் தனமாகச் சொல்லப்படும் காதல் காட்சிகள் சினிமா ஒரு காட்சி ஊடகம் என்பதை வலியுறுத்திச் சொல்கிறது.
ஷாங்யு பரிசளித்த ஹேர் கிளிப்பைத் தொலைத்துவிட்டு பாதையில் ஷாவோ தேடிக்கொண்டிருக்கும் காட்சி, காதலர்களால் பரிமாறிக் கொள்ளப்படும் மிகச் சிறிய பரிசுப் பொருட்களுக்கும் உள்ள பெறுமதியைச் சொல்கிறது.
கிணற்றில் நீர் அள்ளிக் கொண்டிருக்கும் ஷாவோ, ஷாங்யு பார்த்துக் கொண்டிருப்பதைக் காண்கிறாள். அவளைப் பார்த்ததும் ஷாங்யு நீர் எடுக்க அங்கே வருகிறான். அவன் வருவதைப் பார்த்ததும் ஷாவோ தான் அள்ளிய நீரை மெதுவாக மீண்டும் கிணற்றுக்குள் ஊற்றும் காட்சி என்னை மிகவும் கவர்ந்த கவிதை.
மொழி - Mandarin
1999 இல் வெளியான இந்தப்படம், Golden Rooster for Best Picture, Berlin International Film Festival விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றது.
Wednesday, December 1, 2010
குவாட்டர் வித் சீனு!
வணக்கம்! இன்றைய குவாட்டர் வித் சீனு நிகழ்ச்சில நம்மை சந்திக்க வந்திருக்கிற பிரபலம்....குடிகர் 'கட்டிங்' குமார்.
நடிப்பவர்களை நடிகர் என்கிறோம் அப்பிடின்னா குடிக்கிறவன் குடிகன்தானே?
வணக்கம் 'கட்டிங்' குமார்!
வணக்கங்க!
இந்த நிகழ்சிக்கு வந்தது..,
ரொம்ப ஹாப்பியா இருக்கு! (ஆ குஜாலா கீதுங்க!)
இந்த 'கட்டிங்'கிற டைட்டில் எப்பிடி?
அது (குடி) மக்களா எனக்குக் குடுத்த பட்டம்...முதன்முதலா அப்பிடி அழைச்சது ப்ரொடியூசர் 'கொக்டெய்ல்' மோகன். அவருக்கு ரொம்ப 'கடன்' பட்டிருக்கேன்.
இந்தத்துறைக்கு நீங்க வந்தது, திட்டமிட்டா இல்லை ஆக்ஸிடென்ட்டா?
(இல்லைங்க வந்தப்புறம்தான் நிறைய ஆக்ஸிடென்ட் ஆகியிருக்கு..வந்தது இன்சிடென்ட் தான்!)
ஆக்சுவலா, சின்ன வயசுல ஸ்கூல் படிக்கும்போதே எதையாவது சாதிக்கணும்னு ஒரே ஆர்வம்
குறிப்பா எப்பிடி இந்தத் துறையைத் தேர்ந்தெடுத்தீங்க?
நாம தேர்ந்தெடுக்கிற விஷயம் நாட்டுக்கு பயன்படணும்னு உறுதியா இருந்தேன். இந்ததுறைலதான் அரசுக்கு நிறைய வருமானம் வருதுன்னு.
(அட நீங்க வேற! பியர் குடிச்சா குண்டாகிடலாம்னு எவனோ ஒரு நாதாரி சொன்னத நம்பி, குடிகாரனானதுதான் கண்டமிச்சம்!)
உங்கள் முதல் அனுபவத்தைப் பற்றி சொல்லுங்க?
முதன்முதலா பார் முன்னாடி நின்னப்போ, ரொம்ப நெர்வர்ஸ்ஸா ...யூ நோ ரொம்ப...என்னமோ எல்லாரும் என்னையே பாக்கிறமாதிரி ஒரு மனப் 'பிராந்தி', ஸோ எச்சைட்டிங்.. அதே நேரத்தில ஒரு த்ரில்லா, சாதிக்கணும்னு ஒரு வேகம்.
உங்க குடும்பத்தில யாராவது இந்த பீல்டுல?
இல்லைங்க நான்தான் முதல் தலைமுறை குடிகன்
வீட்ல எல்லாரும் எப்பிடி பீல் பண்ணாங்க?
எப்பவுமே எங்க வீட்ல என்னோட விருப்பத்துக்கு குறுக்க நிக்க மாட்டாங்க (தலை முழுகிட்டாங்க!)
அப்புறம் ரொம்ப என்கரேஜ் பண்ணினாங்க (வெளில போடா நாயே..!)
உங்களை மிகவும் கவர்ந்த பிரபலம்?
நெப்போலியன்...ஏன்னா அவன் 'களத்தில' இறங்கும் மட்டும்தான் நாம பேசுவோம். அவன் இறங்கிட்டான்னா...அப்புறம் அவன்தான் எல்லாத்தையும் முடிவு பண்ணுவான்!
நீங்க எந்த நெப்போலியனப பற்றி?
நம்ம நெப்போலியன்தான்!
.....??
காதல் பற்றி என்ன நினைக்கிறீங்க?
அது ஒரு தனி போதை ஒவ்வொரு நிலைலயும் ஒவ்வொரு மாதிரி...
காதல சொல்லுமட்டும் அவஸ்தை..அது பாத்திங்கன்னா..
புல்லா சரக்கடிச்சிட்டு அப்புறம் ரெண்டு ஆம்லெட்ட முழுங்கினா வாந்தி, வர்ற மாதிரியும் இருக்கும் ஆனா வராது..ஒரு விதமான குழப்பமா..!
சொல்லிட்டம்னா, புல் மப்பில தலைவலியோட இருந்திட்டு... வாந்தி எடுத்த உடனே இருக்கும் பாருங்க அப்பிடி ஒரு ரிலீப்!
காதல் மட்டும் ஒக்கே ஆயிடுச்சுன்னு வைங்க....
அது ஒரு தனி சுகம்...ஜின் அடிச்சிட்டு பீச்சுல நடந்து போற மாதிரி...!
இனி உங்க நண்பர்கள் உங்களைப் பற்றி என்ன சொல்றாங்கன்னு பார்ப்போம்...!
விநியோகஸ்தர் 'வோட்கா' வேணு - நானும் குமாரும் அந்தக் காலத்தில இருந்தே ஒரே கிளாஸ்ல சரக்கடிக்கிற அளவு நண்பர்கள், படிப்படியா முன்னேறி, இந்த நிலைக்கு வந்தோம். அவர் மேலும் சாதிக்கணும் ..!
ஆமாமா நாங்க ரெண்டுபேரும் எப்பிடின்னா..சுருக்கமா சொன்னா..வோட்காவும் ஒரேஞ் ஜூசும் மாதிரி!
தயாரிப்பாளர் 'கொக்டெய்ல்' மோகன்- குமார் தம்பிக்கு எப்பவுமே ஒரு அடங்காத, தணியாத 'தாகம்' இருக்கு, அதுதான் அவரை இவ்வளவு பிரபலப் படுத்தி இருக்கு. அவரோட தாகத்துக்கு 'தண்ணீர் ' ஊத்திறதில நான் பெருமைப்படறேன்!
'வோட்கா' வேணு -அதில பாருங்க அவர்கிட்ட எப்பவுமே பிடிச்சது முடியாதுங்கிற வார்த்தைய அவர் எப்பவுமே சொன்னதில்ல.
எவ்வளவுதான் சரக்கடிச்சு மட்டையானாலும், இன்னொரு கட்டிங்? ன்னு கேட்டா, குடிச்சிட்டு வாந்தி எடுப்பாரே தவிர, முடியாதுன்னு மறுத்ததில்ல,
அந்த தன்னம்பிக்கை ரொம்ப பெரிய விஷயம்!
'ஹி ஹி...'
'கொக்டெய்ல்' மோகன் - அவர் தனக்குன்னு எதையுமே வச்சுக் கொண்டதில்ல! சமயத்தில தன்னோட மொபைல், வோட்ச் கூட நம்ம பசங்களுக்கு அன்பளிப்பா குடுத்திட்டுப் போயிடுவார்
(அடப்பாவி அதெல்லாம் அங்கேயா தொலைச்சேன்?)
அவர் முதன்முறையா அறிமுகமாகும்போதே 'ஸ்பொட்'ல கவனிச்சேன் ஒரே டேக்லயே முதல் 'ஷாட்' ஒக்கே ஆகிடுச்சு அப்பவே தெரியும் பெரிய அளவில ஒரு 'ரவுண்டு' வருவாருன்னு.
சொல்லுங்க குமார் உங்க நெக்ஸ்ட் ப்ராஜெக்ட்?
தீபாவளி ப்ராஜெக்ட் சிறப்புப் பார்வை இன்னும் வீட்ல போயிட்டிருக்கிறதால இன்னும் முடிவு பண்......
(ஆகா இப்போ நம்ம ரமேஷோட பார்ட்டி இருக்கில்ல?...எப்பிடி மறந்தேன்?)
எனக்கு ஒரு முக்கியமான அப்பாய்ன்ட்மென்ட் இருப்பதால் நிகழ்ச்சியை இத்துடன் நிறை..
இருங்க அதெல்லாம் நான்தான்....
எங்க போறீங்க?
பாட்டில்ல கையெழுத்தாவது போட். ...
கமேராமேன் புடிங்க அந்தாளை...!
Subscribe to:
Posts (Atom)







