அழகாக, சுவாரசியமாகப் பேசுவது ஒரு கலை. அப்படிப்பேசுவதாக நினைத்துக்கொண்டு பேசுவது அதைவிடப் பெரிய கலை. சிலர் பேசும்போதே 'நான் சுவாரசியமாகப் பேசக் கூடியவன்' என்று குறிப்பிடுவார்கள். அங்கே இங்கே பராக்குப் பார்த்தவர்கள் எல்லோரும் உடனே சீரியசாகக் கவனிக்க ஆரம்பித்து விடுவார்கள். நீங்கள் கவனித்திருக்கக்கூடும். ஆனால் அந்தப் பெண் பேசியது உண்மையிலேயே கேட்க நன்றாக இருந்தது.
"ஒரு டிக்கட் எடுத்தால் போதுமானது.. உங்கள் கேர்ள் ஃபிரண்டையும் அழைத்துச் செல்லலாம்"
கடந்த புதுவருடத்திற்கு நான்கைந்து நாட்கள் முன்பாக, நடைபாதையில்.
கடற்கரை உணவுச்சாலை ஒன்றின் புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்கான டிக்கட்களை வைத்திருந்தார்.
அந்தப்பெண்மணி 'பேரழகி'யாக இருந்தார். நீங்கள் சாருநிவேதிதாவை வாசிப்பவர்களாக இருந்தால் இந்த இடத்தில் குபீரென்று சிரித்துவிடலாம். அது உங்கள் தவறல்ல. ஆனால் இது ஒன்றும் அவர் சொல்வது போலல்ல. உண்மையிலேயே அந்தப் பெண் உண்மையிலேயே அழகி.
அதைவிட அழகு, அந்தப்பெண் என்மீது வைத்திருந்த நம்பிக்கை. நான் கேர்ள் ஃபிரண்டை அழைத்துக் கொண்டு வருவேன் என்று நம்புகிறாரே! அந்த நம்பிக்கை எவ்வளவு பெரிய விஷயம்? அவரிடம் நான் ஓரிரு வார்த்தைகள் பேசுவதுதானே மரியாதை? பேசினேன்.
"சரி டிக்கட் நான் எடுக்கிறேன் அந்த கேர்ள் ஃபிரண்ட் எப்பிடி? நீங்கள் அரேஞ்ச் பண்ணுவீங்களா?"
அவ்வளவுதான் நான் ஏதோ கேட்கக் கூடாததைக் கேட்டு விட்டதுபோல முறைத்துக்கொண்டே விலகிச் சென்றுவிட்டார்.
என்னதான் நாம் அமைதியாக இருந்தாலும் சமயங்களில் எங்களையும் மீறி நம் பேச்சுத்திறன் காரணமாக வோன்டட்டாக வடைச்சட்டிக்குள் வாயை வைத்துவிடுவோம்.
எனது ஆரம்பகால அலுவலகம். என் இரு பக்கத்திலும் இரண்டு அழகான பெண்கள் ஒருவர் கருப்பாக மெல்லிய உடல்வாகுடன் இருந்தார். மற்றையவர் மிக வெள்ளையாக முதலாமவருடன் ஒப்பிடுகையில் சற்றுப் பருமனான இருந்தார். தீவிரமாக ஒருவரையொருவர் பாராட்டிக் கொண்டிருந்தார்கள்.
"நீ நல்ல ஸ்லிம்மா இருக்கே"
"உன்னோட பொடி செம்ம ஷேப்பா இருக்கு"
"இல்லடி உன்னோட ஹிப் கேவ்ஸ் எல்லாம் நல்லா இருக்கு ஜிம் போறமாதிரி"
"எனக்கு உன்னோட.."
"டாய்ய்ய்...! என்ன நடக்குதிங்க.. நடுவில ஒருத்தன் இருக்கான்னு பாக்காம கொஞ்சம்கூட மனச்சாட்சியே இல்லாம மாத்தி மாத்தி புளுகிட்டு.." - தீர்ப்பைக் கூறிவிடலாம் என்கிற யோசனையுடன் ஆரம்பித்தேன்.
சரி சரி இப்ப என்ன... ரெண்டு பேரும் கொக்காகோலா போத்திலும், ஹோர்லிக்ஸ் போத்திலும் மாதிரி இருக்கிறீங்க போதுமா?"
கொக்காகோலா சிரிக்க ஆரம்பித்தார். ஹோர்லிக்ஸ் முறைத்துக் கொண்டிருந்தார்.
"இல்ல..வெள்ளையா கோக்காகோலா இருக்காதா..எம்ப்டி கோக் போத்தில்னும் சொல்ல ஏலாது..ஒரு டைமிங்கா, ரைமிங்கா வந்திச்சா அதான்"
செல்பேசி உரையாடல்கள் நம் பேசும் கலையையை வளர்ப்பதில் பெரும்பங்கு ஆற்றுபவை. ஆனால் என்னதான் நாம் சுவாரசியமாகப் பேசினாலும் சமயங்களில் தோழிகள் சடுதியில் கட் செய்துவிடுகிறார்கள்.
செல்பேசியில் தோழி, "விண்ணைத்தாண்டி வருவாயா படம் பிடிக்குமா உனக்கு?"
"ம்ம்ம்...ஆங் ஒரு மாதிரியா... பிடிக்கும்.."
"அதில உனக்கு பிடிச்ச ஸீன் எது?"
"அது...வந்து..பொதுவா கவுதம் மேனன் படம்னா ஸீன் எல்லாமே..."
"உனக்கு ரொம்பப் பிடிச்ச ஸீன் எது?"
"ம்ம்ம்...அந்த கணேஷ், சிம்புகிட்ட சொல்லுவாரே ஒரு பிரச்சினைல இருக்கும்போது ஒரு பஸ் வரும். அது சரியான இடத்துக்கு கொண்டுபோகும்னு... அது ரெண்டுபேரையும் திரும்ப கொண்டுவந்து மாட்டிவிடும்ல அந்த ஸீன் பிடிக்கும்"
"ம்..."
"ஹலோ என்னாச்சு"
"ஒண்ணுமில்ல.. வேற எந்த ஸீன்?
"ஆங்..அந்த போலீஸ் ஸ்டேஷன்ல எவ்ளோ பொண்ணுங்க இருக்க ஏன் நீ இந்தப்பொண்ண லவ் பண்ணினேன்னு சிம்பு டயலாக்கையே கணேஷ் மாத்தி சொல்றது செம்மையா இருக்கும்ல"
"ம்"
"அப்புறம் அந்த..."
"போதும்....அப்ப உனக்கு விண்ணைத்தாண்டி வருவாயால சிம்புவும் கணேஷும் வர ஸீன்ஸ்தான் பிடிச்சிருக்கு?"
"ம்ம்ம் ஆமா நல்லாருக்கும்ல"
"ம்"
"ஏதும் தப்பா சொல்லிட்டனா?
"இல்ல..நான்தான் தப்பா கேட்டுட்டேன்"
"??"
"அப்புறம் நான் 'என்றென்றும் புன்னகை' பாத்தேன் நீ பாத்தியா?
"ஓ! அப்பவே பாத்திட்டேன்"
"அதில எந்த ஸீன் பிடிச்சிருந்துது?"
"அந்த..சந்தானம் தண்ணியடிச்சுட்டு வீட்ட வர்ற ஸீன் செமையா இருக்கும்ல ஹா ஹா ஹா... ஹலோ ஹல்லோ... ஹல்லல்லோ..."