ஒரு பெண்ணால் ஆண்துணையின்றி தனித்து வாழ்வதென்பது எப்போதுமே பெரும் சவாலாகவே இருக்குமா? அதிலும் மிக அழகான ஒரு பெண் விதவையாகவும் இருந்துவிட்டால் என்னென்ன சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும்? இதற்கு நாடு, காலம், மொழி என்ற வேறுபாடுகள் கிடையாதா?
இரண்டாம் உலகப்போர் நடைபெறும் காலப்பகுதி. இத்தாலியின் சிசிலி நகரப்பகுதியின் ஒரு காலைவேளை.மேலே விமானங்கள் பறந்துசெல்கின்றன. போர் பற்றிய செய்திகள் வீதிவழியாகச் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இந்த நேரத்தில் ரெனாட்டோவுக்கு தந்தையிடமிருந்துஒரு புதிய சைக்கிள் கிடைக்கிறது. மிகுந்த மகிழ்ச்சியுடன், வேகமாக ஓட்டிச் செல்கிறான். ஒரு கட்டைச் சுவரில் பள்ளிச்சீருடையில் அவனைவிட வயது கூடிய மாணவர்கள் சிலர் உட்கார்ந்திருக்கிறார்கள். அவர்களிடம் ரெனாட்டோ தனது சைக்கிளைக் காட்டி, தானும் இப்போது பெரியவனாகிவிட்டேன். உங்களுடன் சேர்த்துக் கொள்ளுங்கள் எனக்கூற, அவர்களும் ஏற்றுக் கொள்கின்றனர்.
சற்றுத் தொலைவிலுள்ள வீட்டைக் கண்காணித்துக் கொண்டிருக்கும் ஒருவன் விசிலடித்து சிக்னல் கொடுக்கிறான். எல்லோரும் அவசரமாக ஓடிவந்து உட்கார்ந்து கொள்ள, கூடவே ரெனாட்டோவும் அவர்களுடன்! அமைதியாக, மிகுந்த எதிர்பார்ப்புடன் அப்படி யாருடைய வருகைக்காகக் காத்திருகிறார்கள்?
மெலீனா! - ஊரின் மிக அழகான பெண். அந்தப்பகுதி ஆண்கள் அனைவராலும் வயது வேறுபாடின்றி ரசிக்கப்படும், பெண்களனைவரும் பொறாமைப்படும் பேரழகி. அவள் யாரையும் கவனிப்பதில்லை. அவள் கணவன் ஒரு ராணுவ வீரன். உலகப்போரில் பங்குகொண்டிருப்பவன்.
அவள் கடந்து சென்றதும் சிறுவர்கள் மீண்டும் தமது சைக்கிள்களில் விரைவாக ஓடிச்சென்று இன்னொரு வீதியில் அவளுக்காகக் காத்திருக்கிறார்கள். அவள் போகும் வழியெங்கும் ஒருகணம் ஆண்கள் ஸ்தம்பித்து நிற்க, பெண்களின் பொறாமைப்பார்வைகளும் கிசுகிசுப்புகளும் தொடர சலனமின்றி, எதையும் கவனிக்காமல் செல்கிறாள்.
பருவ வயதுகளின் ஆரம்பத்திலுள்ள ரெனாட்டோவைப் பெரிதும் ஈர்க்கிறாள் மெலீனா. அவளின் நடத்தையைப் பற்றிய ஊரவர்களின் வதந்திகளை ரெனாட்டோவும் கேட்கிறான். தனது கனவுக்கன்னியைப் பற்றிய தவறான பேச்சுக்கள் அவனுக்கு எரிச்சலூட்டுகின்றன. இரவுவேளைகளில் அவளது வீட்டினை மறைந்திருந்து கண்காணிக்கும் அவனுக்கு அவளைப்பற்றிய வதந்திகள் பொய்யானவையென்றும், அவள் தன கணவனைமட்டுமே காதலிக்கிறாள், அவன் நினைவகாவே இருக்கிறாள் என்பதும் புரிகிறது. அதன்பின் யாரும் மேலீனாவைத் தவறாகப் பேசுவது கேட்டால் ஆத்திரம் கொள்கிறான்.
இந்நிலையில் மெலீனாவின் கணவன் இறந்துவிட்டதான செய்தி, அவள் மீதான ஒரு பொய்யான ஜோடிப்பு வழக்கு, அவளது செலவுகளுக்குப் பணம் தந்துகொண்டிருந்த ஆசிரியரான அவளது தந்தையின் இறப்பு எனத்தொடரும் நிகழ்வுகளால் அவளது வாழ்க்கை என்னவாகிறது? என்பதை ரெனாட்டோவின் பார்வையில் சொல்கிறது படம்.
எப்போதுமே என்னால் மெலீனாவை மறக்க முடியாது என ரெனாட்டோ கூறுவதோடு படம் நிறைவடைகிறது.
படம் முழுவது சிறுவன் ரெனாட்டோ தன்னை ஒரு வளர்ந்த மனிதனாக காட்டிக்கொள்ள முயற்சிக்கும் பிரயத்தனங்கள் சுவாரஸ்யமானவை.
இயக்குனர் டொர்னாடோ குசாபேயின் படங்களின் வழக்கமான நகைச் சுவையுணர்வு படம் முழுவதும்!
- ரெனாட்டோவும், அவனது தந்தையும் பேசிக்கொள்ளும் காட்சிகள்.
மெலீனாவாக மோனிகா பெலூசி! (Monica Bellucci) - இதுக்கு மேலே சொல்ல என்ன இருக்கு?
இயக்கம் - Giuseppe Tornatore
மொழி - Italian
டிஸ்கி: ஈரானிய சினிமா தவிர்ந்த ஏனைய உலக சினிமாக்களை அலுவலகங்களில், குடுபத்தினரோடு பார்ப்பதைத் தவிர்த்து, தனியாகவே பார்ப்பது நல்லது! அப்புறம் ஏதாவது கிக்கிலிபெக்கிலி (நன்றி: சூப்பர்ஸ்டார், படிக்காதவன்) ஆயிடும் அவ்வளவுதான்!