Monday, April 16, 2012

A Separation (2011)


உயர் நடுத்தரவர்க்க தம்பதிகளான நடேர் (Nader),சிமின் (Simin) இருவரும் விவாகரத்து வழக்கிற்காக நீதிபதி முன் அமர்ந்திருக்கிறார்கள்.


தன் மகளின் வளமான எதிர்காலத்துக்காக பொருளாதார தடை, கடுமையான சட்டதிட்டங்கள், கட்டுப்பாடுகள் நிறைந்த ஈரானை விட்டு குடும்பமாக வெளியேறி ஐரோப்பிய நாடொன்றுக்குச் செல்ல வேண்டும் என விரும்புகிறாள் சிமின். நடேர் அதற்கு உடன்படாததால் விவாகரத்து கோருகிறாள் சிமின். அவர்களின் பன்னிரண்டு வயது மகள்  தெர்மா. தாய், தந்தை - யாருடன் செல்வது என்று முடிவு செய்ய வேண்டியது அவளே! தீர்ப்பை சில நாட்கள் தள்ளி வைக்கிறார் நீதிபதி.

நடேர் வெளிநாடு செல்ல மறுப்பதற்கு  ஒரு முக்கிய காரணம் அல்சைமரால் பாதிக்கப்பட்டிருக்கும் அவன் தந்தை.

(Alzheimer's Disease - 65 வயதுக்கு மேற்பட்டவர்களைத் தாக்கும். முதலில் ஞாபக மறதி. படிப்படியாக சிந்திக்கும் திறன் இழந்து, முற்றாகத் தான் யார் என்பது, பேச்சு எல்லாமே மறந்து, இறுதியில் மரணம். இவர்களால் தமது சொந்த வேலைகளையும் செய்யமுடியாது. யாராவது அறிவுறுத்த வேண்டும். கண்டறிந்தவர் Alois Alzheimer)


சிமின் தனது தந்தை வீட்டுக்குச் செல்கிறாள். மகள் தெர்மா தனது தந்தையான நடேருடன் இருக்க விரும்புகிறாள். நடேரின் தந்தையைப் பார்த்துக் கொள்வதற்கு சிமின், ரசியா என்னும் ஏழைப் பெண்ணை ஒழுங்கு செய்கிறாள். தான் வரும்வரையில் தந்தையைப் பார்த்துக் கொள்வதுதான் வேலை என்கிறான் நடேர். ரசியா தனது சின்ன மகளுடன் வேலைக்கு வருகிறாள். முதல் நாளிலேயே வேலை கடினமானது எனப் புரிந்துகொள்ளும் ரசியா, நடேரிடம் அதுபற்றிக் கூற, இன்னொருவரை வேலைக்கு அமர்த்தும்வரை தனக்கு உதவுமாறு கேட்கிறான். குடும்பச் சூழ்நிலை ரசியாவைச் சம்மதிக்க வைக்கிறது.

ஒருநாள் வேலை முடிந்து வீடு திரும்பும் நடேர் ரசியாவைக் காணாமல் தேடுகிறான். குழப்பத்துடன் தன் தந்தையின் அறைக்கு ஓடிச் சென்று பார்க்க கைகள் கட்டிலுடன் பிணைத்துக் கட்டப்பட்ட நிலையில் நினைவின்றி, குப்புற வீழ்ந்து கிடக்கக் காண்கிறான். பதறியபடி அவரைத்தூக்கி, முதலுதவி செய்து உயிருடன் இருப்பதை உறுதி செய்து, நிம்மதியடைந்து பின் கடும் கோபம் கொள்கிறான். அப்போது வரும் ரசியாவிடம் கேட்க, வெளியில் செல்ல வேண்டியிருந்ததாகவும், அவர் ஏற்கெனவே திடீரென வீட்டைவிட்டுச் சென்றிருப்பதால் அவ்வாறு செய்ததாகக் கூறுகிறாள்.

கோபம் தலைக்கேறி அவளை வீட்டை விட்டு வெளியில் தள்ளிக் கதவைத் தாளிடுகிறான். மறுநாள் சிமின் நடேரிடம் நடந்தது பற்றி விசாரிக்கிறாள். அப்போதுதான் நடேர் தான் ஒரு பெரிய பிரச்சினையில் மாட்டிக் கொண்டது தெரிகிறது - அது...  

நடேர் தள்ளிவிட்டதில் ரசியாவின் கர்ப்பம் கலைந்து போய்விட்டது என்பது! தொடர்ந்து நடேரின் மீது வழக்குப் பதிவாகி விசாரணை நடைபெறுகிறது. ஒரு ஆண் முதியவரைப் பராமரிக்கும் வேலைக்கு ரசியா தனது கணவனுக்குத் தெரிவிக்காமல் வந்ததும் இப்போதுதான் தெரிய வருகிறது.


ரசியாவை வேலைக்கு ஒழுங்கு செய்ததில் சிமினும் இச்சம்பவத்திற்கு ஒரு வகையில் சம்பந்தப்பட்டிருக்கிறாள். அதுவும் தவிர, சிமின் உண்மையில் விவாகரத்தை விரும்பவில்லை. நடேரை வெறுக்கவில்லை.நடேரை வழக்கிலிருந்து காப்பாற்ற முடிந்தவரை முயற்சிக்கிறாள் சிமின்! எல்லாப் பிரச்சினைகளையும் நடேர் எப்படி எதிர்கொள்கிறான்?

யாருடன் செல்வது என்று தீர்மானிக்க முடியாமல் தன் தாயும், தந்தையும் எப்படியும் சேர்ந்துவிடுவார்கள் என்ற ஏக்கத்துடன், நம்பிக்கையுடன் காத்திருக்கும் தெர்மா -

எதையும் யோசித்துப் பார்க்காமல் கோபப்படும், வேலையில்லாத விரக்தியில் இருக்கும் ரசியாவின் கணவன் - மதநெறி பிறழாமல் வாழும் ரசியா - மகளின் எதிர்காலம் கருதி எந்த சமரசமும் செய்து கொள்ளாத சிமின் -  குறுக்கு வழியில் வழக்கை ஜெயிக்க விரும்பாத நடேர் -

எதுவுமே புரியாவிட்டாலும், வீட்டிலிருந்து வீதியில் இறங்கி பேப்பர் வாங்கச் சென்றுவிடும் நடேரின் தந்தை -

என ஒவ்வொரு பாத்திரமும் கவர்கிறார்கள்.அநேகமான ஈரானியத் திரைப்படங்கள் போலவே இந்தப் படத்திலும் கதைமாந்தர்கள் அனைவருமே நல்லவர்கள்!

ஈரானின் மதம் சார்ந்த கடுமையான சட்டங்கள் படத்தில் சொல்லப்படுகிறது. நடேரின் நோயாளித் தந்தை தன் உடையுடன் சிறுநீர் கழித்துவிட,ரசியா அவசரமாக வந்து தொலைபேசுகிறாள். வயதான ஆண் நோயாளியைத்தான் தொட்டு சுத்தம் செய்யலாமா என மத குருமார்களிடம் ஆலோசனை கேட்டுத் தெளிகிறாள். கூடவே ஒரு சினிமா எடுக்கும் போதுள்ள சட்டத்தின் கெடுபிடியும்! - நடேருடன் சேர்ந்து தேர்மாவும் தன் தாத்தாவை தொட்டு அழைத்துவரும் காட்சியில் தெர்மா காட்டப்படுவதில்லை.


குடும்பத்தில் நடக்கும் குழப்பங்களோ அவை அனைத்தும் தன்னை மையப்படுத்தியே நடைபெறுகின்றன என்பதோ அறியாத எதுவுமே புரியாத வயதான தந்தை ரசியா என்ன பேசினாலும் 'சிமின்' என்று மருமகள் பெயரை மட்டுமே அடிக்கடி சொல்வது -

அநாதரவாக விழுந்து கிடந்த தந்தை நினைவு திரும்பியதும், அடிபட்டிருக்கிறதா என சோதித்து வலிக்கிறதா எனத் திரும்பத் திரும்பக் கேட்க, தனக்கு எந்த சம்பந்தமுமில்லாதது போல இருக்கும் அவரைக் குளிப்பாட்டும்போது அவர் முதுகைத் தடவிக்கொண்டு உடைந்து போய் அழும் நடேர் -

தனது வழக்குக்காக தந்தை நோயாளி என்பதை நிரூபிக்க டெஸ்ட் எடுக்க அழைத்து வரும் நடேர், அவர் தன் சட்டையைக் கழற்றும்போது, மனம் மாறி அவரைக் கஷ்டப்படுத்த விரும்பாமல் திரும்ப அழைத்துச் செல்வது - போன்ற காட்சிகள் நெகிழ்ச்சியானவை!

அதுபோலவே அருமையான வசனங்களும்! நடேரிடம் தந்தையை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டு வருமாறு கூறும் சிமின், நடேரிடம் "அவருக்கு நீ யார் என்பது கூடத் தெரியாது"  - என்கிறாள்.

"அனால் அவர் என் தந்தை என்பது எனக்குத் தெரியுமே!" - நடேர்.

"பிழை என்பது பிழைதான்! அதை யார் சொன்னது? அது எங்கு சொல்லப்பட்டிருக்கிறது? என்பதெல்லாம் முக்கியமல்ல!" தெர்மாவிடம் நடேர்.


நடேரிடம் தெர்மா, "அவள் கர்ப்பிணி என்பது நீங்கள் அறிந்திருந்தால் ஏன் அவளை அடித்தீர்கள்?"

"அது எனக்குத் தெரிந்திருந்தது. ஆனால் அந்தக் கணத்தில் நினைவில் இல்லை"

"இந்த விஷயத்தை அப்படியே கோர்ட்டில் சொல்லுங்கள்!"

"சட்டம் சில விஷயங்களைப் புரிந்துகொள்வதில்லை. சட்டத்தின் கேள்வி உனக்குத் தெரிந்திருந்ததா அல்லது இல்லையா என்பது மட்டுமே. நீ விரும்பினால் இதையே நான் கோர்ட்டில் சொல்லி விடுகிறேன்" -தெர்மா மெளனமாக இருக்கிறாள்.

இறுதிக்காட்சியில் நீதிபதி தேர்மாவிடம் கேட்கிறார். 'யாருடன் செல்வது என முடிவு செய்துவிட்டாயா?' 'ஆம்!' - ஆரம்ப, இறுதிக் காட்சிகளில் ஒருபோதும் நீதிபதி காண்பிக்கப்படுவதில்லை. பார்வையாளரைப் பார்த்தே பாத்திரங்கள் பேசுகின்றன. அவர்களே நீதிபதிகள்! 

வெளியே நடெரும், சிமினும் பரிதவிப்புடன் காத்திருக்கிறார்கள். தெர்மா இறுதியில் என்ன முடிவு எடுத்தாள்? அது சொல்லப்படவில்லை. பார்வையாளர்களின் ஊகத்திற்கே விடப்படுகிறது. இந்தக் எந்த முடிவெடுத்தாலும் ஏற்றுக் கொள்ளும்படியான ரீதியில் கதை சொல்லப்பட்டிருக்கும்!

படம் கடந்த ஆண்டுக்கான (2011) சிறந்த வெளிநாட்டுப் படத்துக்கான Golden Globe , Oscar விருது உட்பட ஏராளமான விருதுகளை வாங்கிக் குவித்துள்ளது!

இயக்கம் : Asghar Farhadi
மொழி : Persian
நாடு : Iran

16 comments:

 1. நண்பரே, இந்த படத்தை இப்பொழுதுதான் டவுன்லோடு போட எண்ணிருந்தேன்..அதற்குள் தங்களது விமர்சனம்..ஓர் சிறந்த அனுபவமாகிவிட்டது.இனி படத்தை ரசித்து பார்க்க முயற்சி செய்கிறேன்.ஓர் அருமையான பதிவை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 2. அருமையான படத்தை அறிமுகம் செய்துள்ளீர்கள். இந்த படத்தை பற்றி இங்கு அதிகமாக பேசினார்கள் தமிழில் இன்றுதான் இதை பற்றி வாசித்தேன். அறிமுகத்துக்கு நன்றி.!!

  ReplyDelete
 3. படத்தை ரொம்ப நாளா ஹார்ட் டிஸ்கில் டவுன்லோட் பண்ணி வச்சிருக்கேன். ஒரு நாள் ஒரு 20நிமிடங்கள் பார்த்துவிட்டு வேலை காரணமாக நிப்பாட்டி வைத்துவிட்டேன். சீக்கிரம் பார்த்து முடிக்கணும்.

  நல்ல விமர்சனம். நன்றி ஜீ.

  ReplyDelete
 4. நண்பா மிக அருமையான விமர்சனம் எனக்கு மிக நீண்ட நாளாக ஈரானி படங்களை பார்க்க ஆசை அதை இந்த படத்தில் இருந்ட்தே ஆரம்பிக்கலாம் என நினைக்கிறேன்

  ReplyDelete
 5. நண்பரே டவுன்லோடு செய்ய லிங்க் கொடுத்தால் நன்றாக இருக்கும்

  ReplyDelete
 6. Good intro .i learn from u how to tell the story .thanx

  ReplyDelete
 7. ஈரான் படங்கள் அநேகமாக நல்ல படங்களாகவே இருக்கின்றன.அந்தவரிசையீல் ஒரு நல்ல அறிமுகம்!

  ReplyDelete
 8. இன்று இரான் படங்களை கொண்டாடுவது போல் நம் தமிழ் படங்கள் கொண்டாடப்படும் காலம் எப்போது?

  உங்கள் பதிவு, என் ஏக்கத்தை... அதிகப்படுத்தி விட்டது.

  ReplyDelete
 9. நல்ல அருமையான விமர்சணம்

  ReplyDelete
 10. நன்றி நண்பர்களே!

  ReplyDelete
 11. //சிட்டுக்குருவி said...
  நண்பரே டவுன்லோடு செய்ய லிங்க் கொடுத்தால் நன்றாக இருக்கும்//

  நான் டவுன்லோட் பண்ணிய (3 மாதத்துக்கு முன்) Torrent இல் அந்த லிங்க் கிடைக்கவில்லை பாஸ்! வேறு லிங்க் கிடைத்தால் அவசியம் சொல்கிறேன்!யாராவது கிடைத்தவர்கள் பகிர்ந்து கொண்டால் நல்லது!

  ReplyDelete
 12. எல்லாரும் இந்தப் படத்தை பற்றி பாராட்டி எழுதியிருந்ததும் இன்னும் பார்க்காமலேயே விட்டிருக்கிறேன்..

  இப்பொழுது உங்கள் திரைப்பார்வையில் அறிமுகப்படுத்திய சில காட்சிகளைப் பற்றி வாசித்ததும் படம் பார்க்கவேண்டுமென்ற ஆவல் வெகுவாக தூண்டப்பட்டு விட்டது!! நாளை முதல்வேலையாக பார்த்துவிடவேண்டும்..

  ReplyDelete
 13. மிகவும் உணர்ச்சிககரமான படமாக இருக்கும் போலிருக்கிறதே. பார்க்க முயற்சி செய்கிறேன்.

  ReplyDelete
 14. பார்த்துடுவோம்....கண்டிப்பா - நன்றி உங்களின் விமர்சனத்துக்கு

  ReplyDelete
 15. வயோதிபத்தையும் பெண்மையையும் ஆழமாக அடையாளப்படுத்தியுள்ள படம் என்று தங்களின் வரிகளில் தெரிகிறது ஜீ..

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  இலங்கைப் பதிவரின் முதல் குறும்பட வெளியீடும் தமிழ் இணைய உலகில் வித்தியாசமான வெளியீடும்

  ReplyDelete

Followers

Powered by Blogger.

Follow by Email

Copyright © வானம் தாண்டிய சிறகுகள்.. |