கமலை எனக்கு எப்போதிலிருந்து பிடிக்கத் தொடங்கியது? நான் முதன்முதல் பார்த்த கமல் படம் எது? அநேகமானோரைப் போல் எனக்கும் சின்னஞ்சிறு வயதில் ரஜினியைத்தான் பிடித்தது. பிறகு விவரம் (!?) தெரிந்ததும்...(அப்போ ரஜினியைப் பிடித்தவர்களுக்கு இன்னும் விவரம் தெரியலையா என்று கேட்கக் கூடாது! நான் என்னைப்பற்றி சொன்னேன் )
எனக்குத் தெரிந்து நான் முதன்முதலாக முழுதாக ரசித்த கமல் படம் 'ஒரு கைதியின் டைரி'. அந்தப் படத்தில் ஒரு வில்லனிடம் கமல் பேசும் 'கேட்கிற நிலைமைல நீ இல்ல. ஆனா சொல்ற நிலைமைல நான் இருக்கேனே!' என்ற வசனம் மிகவும் பிடித்துக் கொண்டது.
ராஜபார்வை படத்தில் கமல் கண் தெரியாதவர் எனத் தெரியவரும் அறிமுகக் காட்சி சின்ன வயதில் என்னைக் கவர்ந்து கொண்டது.
கமலின் படங்களில் நாயகன், மகாநதி, குணா, இந்தியன் என்னை மிகவும் கவர்ந்தவை. நாயகனும், இந்தியனும்தான் என்னால் திரும்பத் திரும்பப் பார்க்க முடிந்தவை. ( அன்பே சிவம்? அதற்குத் தனிப் பதிவே போடலாம் )
டீன் ஏஜில் ஒரு தீவிர கமல் ரசிகனாகிப் போனேன். இந்தியன் வந்ததிலிருந்து அவர்தான் தலைவர்! அப்போது கமல் ரசிகன் என்றாலே நண்பர்கள் ஒரு மாதிரித்தான் பார்ப்பார்கள்.
ஏதாவது வித்தியாசமாக(?!) கருத்துக் கூறப் போனால், நீ கமலோட ஆள்தானே?' என்று ஏடாகூடமாக கேட்பார்கள்.
அதிலே இன்னோர் அர்த்தமும் இருக்கும். இப்பிடித்தான் எதையாவது உளறுவான் கண்டுக்காதிங்க! ஏனெனில் அப்படித்தானே திரையுலகிலும் கமல் பேச்சுக்கு கிடைக்கும் மரியாதை. எவ்வளவோ நல்ல விஷயங்களை கமல் செய்து செயற்படுத்தியும், அறிமுகப்படுத்தியும் எத்தனை பேர் அவற்றைப் பின்பற்றுகிறார்கள்? அவர்களும் 'கமல் இப்படித்தான் எதையாவது சொல்லிட்டிருப்பார். நாம நம்ம வழிலயே போவோம்'
தமிழ் சினிமாவில் மிகை நடிப்பில்லாமல் இயல்பான நல்ல நடிப்பை முதன்முதலாகத் தந்தவர் கமல் என்றே நான் நினைக்கிறேன். அதற்குமுன் (நாகேஷ் இருந்தும்கூட) சிவாஜியைத்தான் நடிப்பில் சிறந்தவரென்று(?!) (ஏன் இப்போதும்கூட) நம்புகிறார்கள் பலர்.
எல்லாரும் பழைய படங்களையே திரும்பத் திரும்ப copy பண்ணிட்டிருக்க, சிலர் ஹாலிவுட்ல இருந்து 'சுடும்'போது அது புதிய விஷயமாகப் பேசப்படும். அதையே கமல் செய்து விட்டால் போதும் ஒரு பெரிய கூட்டமே துப்பறியக் கிளம்பி எங்கேயிருந்து கமல் 'சுட்டார்' என்று புள்ளி விபரமெல்லாம் வெளியிடும்.
அதில முக்கியமான விஷயம், மற்றவர்கள் 'சுடும்'போது அப்படியே அப்பட்டமாகத் தெரியும். ஆனால் கமல் அப்பட்டமாகச் 'சுட்டாலும்' உடனே தெரியாது. அதற்கும் ஒரு திறமை வேண்டும். அதைவிடத் திறமை வேண்டும் கமல் சுட்டதைக் கண்டுபிடிக்க! அது அந்தக் காலத்தில், இப்போது அப்படி அல்ல!
வெறும் மசாலாக் காதல் படங்களிலேயே பல காலமாக நடித்துக் கொண்டிருந்த கமல் நல்ல முயற்சிகளை மேற்கொள்ளத் தொடங்கியதுமே, பெரும்பாலான பெண்களுக்கு கமலைப் பிடிக்காமல் போய்விட்டது!
அநேகமாக இப்போது எங்கள் நண்பர்கள் அனைவருமே கமல் ரசிகர்களே! அதில் அனைவர்க்கும் பிடிக்காத மோசமான படம் என்று நாங்கள் கருதுவது 'வாழ்வே மாயம்'. ஆனால் கமலைப் பிடிக்காத பல பெண்களுக்குப் பிடித்த படமும் அதுவே!
பெண்கள் விஷயத்திலும் 'வித்தியாசமான' முயற்சிகளை அவர் மேற்கொண்டதும் பெண்கள் பலருக்கு கமலைப் பிடிக்காமல் போக ஒரு முக்கிய காரணம்.
நடிப்பு வேறு, சொந்த வாழ்க்கை வேறு என்று எமது தமிழ்ச் சமுதாயத்தில் பிரித்துப் பார்ப்பதில்லை. நடிகன் என்பவன் சமுதாயத்திற்கே வழிகாட்ட வேண்டும் என்று எதிர்பார்க்க, அவர்களும் ( ஒழுங்கா நடிக்கவே....வராது ) உடனே நாற்காலிக் கனவு காண ஆரம்பித்து விடுகிறார்கள் ( இந்த நடிப்பைவிட அது கஷ்டம்னு தெரியாமல் ).
இதுல என்ன கொடுமைன்னா..பெண்கள் விஷயத்தில் தலைவர் வாங்கிக் கட்டிக்கொண்ட கெட்ட பெயர், ரசிகர்களான எங்களையும் விடாது தொடர்ந்தது. அந்த நிலையைக் கமல் ரசிக நண்பர்கள் பலரும் சந்தித்திருப்பார்கள்.
கமல் கெட்டவன், மோசமானவன். அப்போ கமல் ரசிகனும் அப்படித்தானே? அதுவும் கமல் சரிகாவைப் பிரிந்ததும் இன்னும் நிலைமை மோசமாக, கமல் ரசிகனென்று வெளில தெரிந்தாலே கேவலமான 'லுக்' ஒன்று விடுவார்கள். ஆனா யாருகிட்ட?
( விடுறா..விடுறா... சூனா.. பானா.. போ போ போயிட்டேயிரு...! ) இது கூட ஒரு பெருமையாதான் இருந்திச்சு! ( பார்ரா! )
ஆனாலும், யாரென்றே தெரியாத ஒரு பெண், கமல் ரசிகனென்று தெரிந்து என்னைப் பார்த்த பார்வை இருக்கே.....இன்னும் முடியல! மறக்க!!
கிஸ்கி 1 - தீவிர கமல் ரசிகனாக ஆறு வருடங்களுக்கு முன் நான் இருந்த அப்போதைய மன நிலையை பிரதிபலித்து எழுதிய பதிவு இது.
கிஸ்கி 2 - அப்போது எனக்கு உலக சினிமா பரிச்சயமே இல்லை (தமிழ் , ஹாலிவுட் மட்டும்தான்) அப்போது கமல் 'உலகநாயகன்' என்பதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இருக்கவில்லை!
கிஸ்கி 3 - இப்போதும் கமலை எனக்குப் பிடிக்கும்!









