Friday, February 1, 2019

செல்லக்குட்டி

யாழ்ப்பாணம் சென்று சேர்ந்த அந்தக் குளிர்காலைப் பொழுதில் சரியாக ஏழரை மணிக்கு செல்லக்குட்டி என்னைப் பார்க்க வீட்டுக்கு வந்திருந்தது. இல்லை நான்தான் பார்த்தேன். அது தன்பாட்டில் வீட்டுக்குள் சுற்றிக்கொண்டிருந்தது. துரத்த முயன்றால் கண்டுகொள்ளவில்லை. ஒரு தடவை நேருக்கு நேராக இரண்டடி இடைவெளியில் எதிரே நின்று பயப்படாமல் பார்த்தது. அதன் வரலாறு தெரிந்ததால் எனக்குத்தான் சற்றுப் பயமாயிருந்தது.

செல்லக்குட்டி ஒரு மர அணில். மர அணில்கள் சிநேகபூர்வமாக பழகும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இது அயல் வீட்டுப் பெண்மணிக்கு கையில் கீறியதில் தடுப்பூசி போட்டுக்கொண்டார் என்பது தெரியும். எங்கள் வீட்டுக்கு முதன்முறையாக வந்திருக்கிறது. பிறகு தும்புத் தடியை எடுத்துவந்து சற்றே அசைத்துக் காட்டியதும் வெளியே போய்விட்டது. யாரிடமாவது அடிவாங்கியிருக்குமோ என்னவோ.

சற்று நேரத்தில், அதன் அம்மா தேடி வந்தார். அதனை வளர்க்கும் பெண்மணி. "செல்லக்குட்டி.. செல்லக்குட்டி" என்றழைத்தார். வரவில்லை. அவன் வழமையாக பக்கத்து வீட்டுக்கு மட்டும்தான் போவானாம். முதன்முறையாக எங்கள் வீட்டுக்கு வந்திருந்தான். தவிர, அவனுக்கு போக மட்டும்தான் தெரியுமாம். திரும்பி வீட்டுக்கு வர வழி தெரியாதாம். அம்மா வந்து அழைத்துச் செல்ல வேண்டும். எல்லாரையும் தம் வீட்டு ஆக்கள்போலவே நினைத்து தாவிவிடுமாம். யாராவது அடித்து விடுவார்களோ என்று தனக்குப் பயம் என்றார்.

அரைமணி நேரத்தில் மறுபடியும் வந்து ஒருதடவை வீட்டைச் சுற்றிப்பார்த்துவிட்டு வெளியே போனது செல்லக்குட்டி. வேப்பமரத்தில் குதூகலமாகத் தாவி ஓடித்திரிந்தது. வெளியே வந்துநின்ற என்னை ஆர்வமாகப் பார்த்தது. பிறகு கீழே இறங்கி நின்று அன்பாகப் பார்த்தது. நானும் பார்த்தேன். பின்பு கொஞ்சம் நெருங்கி ஐந்தடி தூரத்தில் நின்று அன்பாகப் பார்த்தது. நானும் அன்பாகப் பார்த்தேன். பின்பு இன்னும் நெருங்கி என் காலடியில் நின்றது. 

அதுவரையில் எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. திடிரென்று அன்பாகத் தாவிக் காலில் ஏறியது. டெனிம் ஜீன்ஸ் தாண்டி அதன் கூரான நகம் தொடையில் பதம் பார்த்தது. உதற முயற்சித்தால் பலனில்லை. பாரமாக வேறு இருந்தது. முதுகுப் புறமாக ஏறியது. கைகளால் பிடித்து இழுக்கலாமா என்கிற யோசனையைச் சடுதியாக நிறுத்த வேண்டியதாயிற்று. அப்போது தோளில் ஏறி, பின் கழுத்துக்கு அருகில் உரசிக்கொண்டிருந்தது. நேராக கழுத்திலேயே கடித்துவிடுமோ என்கிற பீதியில் அசையாமல் நிற்க, சாவகாசமாக இறங்கிப்போனது. கையில் நகம் கீறி இரத்தம் கசிந்தது. ஆங்காங்கே பலமாக எரியத் தொடங்கியது.

அம்மாவுக்கு செல்பேசியில் தகவல் சொன்னதும், அழைத்துச் செல்ல சிறிய கூடொன்றுடன் வந்திருந்தார். வீட்டில் பெரிய கூடு இருக்கிறதாம். அவ்வப்போது திறந்து விடச்சொல்லி அடம் பிடிப்பானாம். கூட்டின் கதவைக் கட்டும்போது பார்த்துக்கொண்டிருந்துவிட்டு பின்பு அந்த இடத்தில் கைகளால் அடித்து திறக்க முயற்சிகள் மேற்கொள்வானாம். பிறகு சாப்பிட மறுத்து போராட்டத்தில் ஈடுபடும்போது கூட்டைத் திறந்துவிடுவாராம். தனக்கும் அடிக்கடி நகம் கீறி விடுவதாக அம்மா சொன்னார். ஊசி ஏதும் போட்டுக்கொண்டதில்லை, சன்லைட் சோப் போட்டுக் கொள்வாராம் என்றார். 

யாருக்கும் கடித்ததில்லை. கோபம் வந்தால் கடிப்பது போல பாசாங்கு செய்வதாகச் சொன்னார். குழந்தையின் குழப்படியைச் செல்லும் அம்மா போலப் பேசிக்கொண்டிருந்தார். காயங்களின்  எரிச்சலையும் மீறி கதை கேட்க நன்றாயிருந்தது. ஆனால் செல்லக்குட்டிக்குத் தன் கதை அவ்வளவு சுவாரசியமாக இல்லைப்போல. குறுகிய கூட்டில் பொறுமையிழந்து கைகளால் ஓங்கித்தட்டத் தொடங்கினான். அம்மா அழைத்துச் சென்றுவிட்டார்.

இப்போது குழப்பமாக இருந்தது. தடுப்பூசி போடவேண்டுமா? கடிக்கவில்லையே? எதற்கும் வைத்தியசாலை சென்று கேட்டுவிடலாம் எனப் புறப்பட்டேன். வெளிநோயாளர் பிரிவில் பெண் மருத்துவர். சற்றுத் தயக்கமாக ஆரம்பித்தேன். எனக்குப் அடுத்ததாக வந்து நின்ற பெரியவரும் என்கதையைக் கவனமாகக் கேட்டுக்கொண்டார். 

மருத்துவர் பெண்மணி ஆச்சரியமாகப் பார்த்தார். 'இந்தியன்' படத்தில் ஒட்டகத்திடம் கடிவாங்கிய கவுண்டமணியைப் பார்த்து செந்தில், 'ஒட்டகம் கடிக்குமா, அது வாயில்லா ஜீவனாச்சே' என்பாரே அதுபோல பார்வை.
அணில் கடிக்குமா? மர அணிலா? இங்க இருக்கா? இப்பிடி யாரும் வந்ததில்லையே என ஆச்சரியப்பட்டார். பின்பு அருகிலிருந்த முதிர்ந்த பெண் மருத்துவரிடம் ஊசி போட வேணுமா? என்றார். அவர் யோசித்து, "எதுக்கும் போட்டுடலாம்.. போடத்தான் வேணும்" என்றார் தீர்மானமாக. டொக்சைட், ARS, ARV எல்லாம் போடுவதாக முடிவாயிற்று.

ARS க்காகக் காத்திருந்தேன். என்கதை கேட்ட பெரியவரும் அருகிலிருந்தார். இன்னும் பலர். அவரவர் தம் பிரச்சினையை பகிர்ந்தளாவிக் கொண்டார்கள். பெரிய சம்பவங்களோடு எல்லாம் வந்திருந்தார்கள். ஓரிருவர் அடிதடி தாக்குதல். இந்த இடத்தில் நம் அணில் சம்பவம் கொஞ்சம் கௌரவக் குறைச்சலாக இருக்குமோ? அதனாலென்ன? நாம்தான் யாருடனும் இதுபற்றிப் பேசப் போவதில்லையே. எந்தக் சலனமுமில்லாமல் அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தேன். 

பெரியவர் தன் கதையைச் சொன்னார். பல வருடமாக வளர்த்த அவரது நாய் கையில் கடித்துவிட்டது. இடைவிடாமல் பேசிக்கொண்டிருந்தார். ஒருவேளை அதனால்தான் நாய் டென்ஷனாகி கடித்திருக்குமோ எனத் தோன்றியது. அவரோ, "எல்லாம் கிரகபலன் சரியில்லாமத்தான், விதி! ஒண்டும் செய்யேல்லாது" என்றார். பின்பு, விதியின் வலிமையை மேலும் எடுத்துரைக்கும் விதமாக, "இவரைப் பாருங்கோ.. காலமைதான் கொழும்பிலருந்து வந்து அணிலிட்ட கடி வாங்கிட்டார்".

'அணில் கடிச்ச தம்பி', 'அணில் கடிச்ச அண்ணா' என்று அழைக்கப்படுமளவிற்கு மிகக் குறுகிய காலத்திலேயே அங்கே நான்  பிரபலமடைந்திருந்தேன். ARS போட்டுக்கொள்ளும்போது பெரிதாகத் தெரியவில்லை. வீட்டுக்கு வந்ததும், மறுநாள் முழுவதும் தோன்றியது, பேசாமல் இருந்திருக்கலாமோ?

ARV எழுதிக்கொடுக்கும்போது அந்த மருத்துவரும் ஆர்வமாக கதை கேட்டார். 'கடிக்கேல்லைத்தானே.. இருந்தாலும் அணிலுக்கு ஏதும் கடிச்சிருந்தா? அதுக்கு ஊசி போடினமோ தெரியாதுதானே நாங்கள் எல்லா ஊசிகளையும் போட்டுக்கொள்ளுறது ஒரு பாதுகாப்புத்தானே' எனப் பொருள்படப் பேசினார். 'கடிவாங்கினார்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு' என்பதுபோல நீங்கள் கொழும்பிலும் எந்த அரசாங்க வைத்தியசாலையிலும் போட்டுக்கொள்ளலாம் என்றார். பின்பு இன்னொரு முக்கிய தகவலையும் தெரிவித்தார். இந்த ஊசிகளையெல்லாம் தவற விடாது போட்டுக் கொண்டால் ஐந்து வருடங்களுக்கு கவலைப்படவே வேண்டியதில்லை. நாய், பூனை, நரி, அணில், ஆடு போன்ற பிராணிகளிடம் தைரியமாகக் கடி வாங்கலாம். பெருமையாக இருந்தது.

நான்கு நாட்களில் இரண்டாவது ஊசிக்காகச் செல்லும்போது நினைத்துக்கொண்டேன். வெறிநாய்த் தடுப்பூசிதானே அது. இனி அணில் பற்றி பேச்செடுக்கக் கூடாது. நுழைகையிலேயே சிநேகபூர்வமாகப் பார்த்த பெண்மணி, ஆர்வமாக விசாரித்தார் 'உங்களுக்குத்தானே அணில் கடிச்சது?' அருகில் நின்றவர்களும் திரும்பிப் பார்த்தார்கள். அடுத்த நான்கு நாட்களில் மூன்றாவது ஊசி. 'இங்கே மருந்து இல்லை. யாழ்ப்பாணம்  பெரியாஸ்பத்திரிக்குப் போங்கோ' என்கிறார் முதல்நாள் பார்த்த பெண்மருத்துவர்.

அங்கே ஊசி போடும் அறையில் மருத்துவர், இரண்டு தாதியர்கள் இருந்தார்கள். மருத்துவர் அன்பாகப் பேசினார். ஊசி போட்டுக்கொண்டு எழுந்து வரும்போது, "தம்பி நாய் உயிரோட இருக்குத்தானே?" என்றார். ஏதோ யோசனையில் மூளை எச்சரிக்கை செய்ய முதலே வாய் முந்திக்கொண்டு, "அது நாயில்ல..அணில்". இப்போது தாதியர்களும் ஆர்வமாக என்பக்கம் திரும்ப, அவசரமாக வெளியேறினேன்.

செல்லக்குட்டி பத்திரமாயிருக்குதா? யோசனை வந்தது. வீட்டுக்கு வந்ததும் செல்லக்குட்டி மிகவும் தெம்பாக உற்சாகமாக இருக்கும்  தகவல் தெரிந்தது. காலையில் அது இன்னொரு பக்கத்து வீட்டுக்குப் போயிருக்கிறது. அங்கே ஒரு அண்ணாவின்மீது அன்பாகத் தாவியிருக்கிறது. அவர் கொஞ்சம் முரட்டுத் தனமாகப் பிடித்து இழுத்திருக்கிறார். செல்லக்குட்டி மிகுந்த கோபமாகி பிராண்டியதில் கையெல்லாம் ரத்தமாம்!   

No comments:

Post a Comment