Wednesday, July 23, 2014

மெரூன் கலர் ஜட்டி!

வாழ்வின் துன்பங்களுக்கு உயிரின், உடைமைகளின் இழப்புகள் மட்டுமே காரணமாக அமைவதில்லை. மாறாக ஒரு மெரூன் கலர் ஜட்டியின் வரவு கூட காரணமாக அமைந்துவிடலாம்.

நெடுந்தூரப் பேரூந்துப் பிரயாணங்கள் எனக்குப் புதிதல்ல. கொழும்பு - யாழ் குறைவாகவே இருந்தாலும், கொழும்பு - திருகோணமலை வாரம் இருமுறை தொடர்ந்து ஒன்றரை வருடங்கள் பயணித்திருக்கிறேன். ஆனால் அவையெல்லாம் குளிரூட்டப்பட்ட கொகுசுப் பேரூந்துகளின் பாதுகாப்பான பிரயாணங்கள். உடைமைகள் விஷயத்தில் எந்தக் கவலையுமின்றி, எல்லாவற்றையும் இருக்கைக்கு மேலே வைத்துவிட்டு நிம்மதியாகத் தூங்கிவிடலாம். வசதி வாய்ப்புகள் கவலையீனத்தையும் சேர்த்தே பழக்கப்படுத்திவிடுகின்றன போலும்! பாருங்கள் என் தவறை நியாயப்படுத்த எவ்வளவு பேச வேண்டியிருக்கிறது?

கொழும்பிலிருந்து வவுனியா பகலில் செல்ல வேறுவழியில்லாமல் ஒரு சாதா பேரூந்தில் ஏறி, யன்னலோரம் அமர்ந்து மேலே இடமில்லாததால் மடியில் பயணப்பையை வைத்திருந்தேன். அருகில் அதே போல ஒரு சிங்கள இளைஞனும் அமர்ந்திருந்தார். அர்ஜூனின் மொக்கைப் படம் ஒரு டிவியில் போய்க்கொண்டிருந்தது. படம் முடிந்து பாதித்தூரத்தில் குழந்தையுடன் வந்த முஸ்லிம் பெண்மணிக்கு தன் இருக்கையைக் கொடுத்துவிட்டு எழுந்து நின்றுகொண்டார் அந்த சிங்கள இளைஞன். பின்னர் வேறு இருக்கை கிடைக்க, என்னிடமிருந்த அவரது பையையும் பெற்றுக் கொண்டு அமர்ந்துவிட்டார்.

பிறருக்கு உதவி செய்வது எனக்கு உவப்பானதுதான். ஆனால் அதன் பின் விளைவுகள் அவ்வளவு உவப்பானதாக இருந்ததில்லை என்பது என் அனுபவம். இருந்தாலும் ஒரு சமூக அக்கறையாளனாகவோ, ஃபேஸ்புக் போராளியாகவோ மாறும் முனைப்போ, மமதையோ என்னவோ ஒன்று. என் ராசி தெரிந்தும் ரிஸ்க் எடுத்துவிடுகிறேன். இடையில் இறங்கி விட்டு திரும்ப அமரும்போது அந்தப் பெண்மணி எனக்காக வழிவிட்டு நகர்வது கஷ்டமாக இருக்க, "உங்களுக்கு ஈசின்னா அந்த சைட்ல இருங்க" என்றேன். சிறு புன்முறுவலோடு 'தாங்க்ஸ்'.

அந்தக் குழந்தை சிரித்துக்கொண்டே என்கையைப் பிடித்து விளையாடியது. மறுபக்கத்தில் மூவர் அமரும் இருக்கையின் கரையில் இருந்த தாடிவைத்த அண்ணன் குழந்தையோடு அவ்வப்போது கதைகேட்டு சிரித்தபடியே வந்தார். அந்தப்பெண்மணியின் கணவர். "இதில வரப்போறீங்களா?" மகிழ்ச்சியுடன் நன்றி சொல்லி அமர்ந்துகொண்டார். நான் அவரது இடத்தில் அமர்ந்துகொண்டேன். மேலே பையை வைக்க இடமிருந்தது. வைத்தேன். அவ்வளவுதான். இறங்கும்போது இருக்கவில்லை.

தெரியாமலோ, தெரிந்தோ, மாறியோ, மாறாமலோ யாரோ எடுத்துக் கொண்டு மதவாச்சியில் இறங்கிவிட்டார்கள். எனது பயணப்பை இருந்த இடத்திற்கு அருகில் இன்னொரு சிறிய பை இருந்தது. ஒருவேளை  மாறியிருக்கக் கூடும் என நம்ப விரும்பியபடி இறங்கினேன். கண்டக்டர் கேட்டார். இல்லை என்றேன். "தூங்கிட்டா இருந்தீங்க?" ஒற்றைக் கேள்வியுடன் நேரம் அனுமதிக்காததால் யாழ் விரைந்தது பேரூந்து.

'தூங்கிட்டா இருந்தீங்க?' - அப்போதைக்கு அதுதான் தமிழின் ஆகச்சிறந்த கெட்ட வார்த்தையாக தோன்றியது.

ஒருகணம் எதுவும் தோன்றாமல் வெறுமையாக இருந்தது, ஓர் பயணத்தின்போது பையைத் தொலைத்துவிட்டு  வெறுங்கையுடன் நிற்கும்போது ஏற்படும் உணர்வே வெறுமை எனப் புரிந்தது. அடுத்தகட்ட நடவடிக்கையாக வவுனியாவில் எங்கள் வழமையான சஹானாஸ் துணிக்கடை நோக்கி பஜார் வீதியூடாக நடந்தேன். கடையில் தெரிந்த முகம் ஒன்றையும் காணவில்லை. 'ஒருவேளை ஒரே பெயரில் வேறு கடையோ?' நீளமான உட்பகுதிக்குச் செல்கையில் முதலாளி எதிர்ப்பட்டார்.
"ஹாய் நானா! எப்பிடி இருக்கீங்க?"
"நல்லா இருக்கேன் தம்பி வாங்க.." குத்துமதிப்பாக குழப்பமாக பேசினார்.

எட்டு வருஷத்துக்கு முதல் பார்த்தது. அவர் தம்பிகளுக்கு அடையாளம் தெரியும். யாரையும் காணவில்லை. அவசரமாக என்னென்ன தேவையென்று சொல்லி, அவசரமாக தெரிவு செய்து, எனக்கு உதவிய கடைத்தம்பி சிவப்பு நிறத்தில் அண்டர் வெயார் எடுத்துக் காட்டினான். "சரிய்யா ஆனா லைட் கலர்ல வைங்க பாஸ் ப்ளூ, வைட், ஆஷ் இப்பிடி..." "ஒக்கே பாஸ்" பவ்வியமாக சொன்னான்.

இடையில் ஒருவர் வந்து, "உங்களை நான் பார்த்திருக்கேன். எங்க இருந்தீங்க?" என்றார். சொன்னேன். விலை பார்க்க அவகாசம் இருக்கவில்லை. சஹானாசில் எனக்கு இதற்கு முன்னர் பேரம் பேச எப்போதும் அவசியம் இருந்ததில்லை. அதே ஞாபகத்தில் கவுண்டருக்கு வந்தேன்.
"உங்களுக்கு குறைச்சுப் போட்டிருக்கேன்"அதே தம்பி பவ்வியமாக சொன்னான். ஆறாயிரம் ரூபாய் வந்தது.
வரும்போது முதலாளி "தம்பி எங்கடா இப்ப?" சொன்னேன். "இந்தப்பக்கம் வந்தா வாடாப்பா!" என்றார் வழமைபோல அடையாளம் தெரிந்தவராக.

கொஞ்சம் ஓய்வானதும், மனம் தொலைந்துபோனவை பற்றிய கணக்கு போட்டது. அதிகமில்லை இரண்டு ஷேர்ட், இரண்டு பாண்ட்ஸ், இரண்டு ஜட்டி, ஃபோன் சார்ஜர், பயணப்பை என மொத்தம் இருபதாயிரத்துக்கு கணக்கு வந்தது. ஆயாசமாக இருந்தது. பணம் என்பதை விட தேடி வாங்கியது என்பதும், ஒருமுறை மட்டுமே அணிந்தவை என்பதும் சற்றே உறுத்தியது. எடுத்தவனுக்கு லக் என்று ரணகளத்திலும் யோசிக்கத் தோன்றியது. மற்றபடி அலட்டிக் கொள்ளவில்லை.

உறவுகளைச் சந்தித்ததும் அளவளாவியதும் மகிழ்ச்சியை, மனநிறைவைக் கொடுத்தது. அது ஓரிரு நாட்களோ, ஓரிரு மனித்தியாலங்களோ என்பது பொருட்டல்ல!

ஆனால் இந்தச் சம்பவம் என்னை நினைத்து மிக ஆச்சரியப்பட வைக்கிறது. வழக்கமாக சிறு சம்பவங்களுக்கே மனம் குழம்பி அதிகம் யோசிக்கும் நான், ஓரளவு பெருசம்பவமான இது குறித்து அலட்டிக் கொள்ளாமல் விட்டதுதான். என்னமோ போனது போகட்டும் என்கிற மனநிலையா? எவ்வளவோ பாத்திருக்கோம் இது என்ன என்கிற மனப்பக்குவத்தை காலம் கற்பித்து விட்டதா? அல்லது எது நடந்தாலும் அப்படியே ஏற்றுக் கொள்ளும் ஒருவித ஜென் மனநிலைக்கு வந்துவிட்டேனா? புரியவில்லை!

காலையில் கடைப்பையைத் திறந்து பார்த்ததும் அந்த அதிர்ச்சி காத்திருந்தது. மெரூன் கலரில் இரண்டு ஜட்டிகள் இருந்தன. மேற்கண்ட சம்பவத்தின் ஆகப்பெரிய சோகமாகத் தோன்றுவது, நான் மெரூன் கலர் ஜட்டி அணிந்ததே. வாழ்க்கைல இப்படியொரு சோகத்தை உணர்ந்ததே இல்லை என்பதுபோல, அந்த மெரூன் கலர் ஜட்டி அந்தத் துன்பியல் சம்பவத்தை நினைவூட்டிக் கொண்டே இருப்பது போலப்படுகிறது.

சந்தர்ப்பம் என்பது சமயங்களில் மோசமான எதிரி. அது சந்தர்ப்பம் பார்த்துக் காத்திருந்து மிக மோசமாகப் பழிவாங்கிவிடுகிறது. எந்த அளவு மோசமானது என்றால்... மெரூன் கலர் ஜட்டி அணியவைத்துவிடும் அளவுக்கு!
Share This:   FacebookTwitterGoogle+

Followers

Powered by Blogger.

Follow by Email

Copyright © வானம் தாண்டிய சிறகுகள்.. |