ஏதோ சில வாசனைகள், சில பழைய பாடல்கள் எங்களுடைய கடந்த காலத்தை, சிறுவயதினை எமக்கு நினைவூட்டுகின்றனவல்லவா? எனக்கும் அப்படித்தான் சில பாடல்கள் எனது சின்னஞ்சிறு பிராயத்தையும் அவை வெளியானபோது நிகழ்ந்த சம்பவங்களையும், சில சோப், பெயின்ட் வாசனைகள் நான் வசித்த சில இடங்களையும் ஞாபகப்படுத்தும். சிறு வயதில் எங்களிடம் அன்பு காட்டிய அக்கறை செலுத்திய பெரியவர்கள் நம் எல்லோருக்கும் உண்டு. அதில் நாம் இனிமேல் சந்திக்க முடியுமா என்றே தெரியாதவர்களும், சந்திக்க முடியாதென்றே தெரிந்தவர்களும்!
ரோமில் பிரபல திரைப்பட இயக்குனராக இருக்கும் சல்வதோர், தாயின் தோலைபேசி அழைப்பின் ஊடாக அல்ஃபிராடோ என்பவர் இறந்த செய்தியறிந்து, சோகம் படிந்த முகத்துடன் முப்பது வருடங்களாக சென்றிராத தனது சொந்த ஊரான சிசிலிக்கு போகிறார். அவரது நினைவுகள் பின்னோக்கிச் செல்ல..
டோட்டோ என அழைக்கப்படும் சிறுவன் சல்வதோர் பள்ளி நேரம் போக அவ்வூரின் தேவாலயத்து பாதிரியாருக்கு பூசைகளில் உதவுகிறான். இரண்டாம் உலகப்போர்! ஒரு தகவலும் தெரியாத ராணுவதிலிருக்கும் தந்தை, எப்போதும் தனிமையில் எதையாவது தைத்துக் கொண்டிருக்கும் தாய், ஒரு தங்கையுடன் வளர்கிறான் டோட்டோ. அவ்வூரிலுள்ள திரையரங்கில் ஒப்பரேட்டராக பணிபுரியும் அல்ஃபிராடோவுக்கு குழந்தைகளில்லை. அவர் டோட்டோ மீது பாசமாக இருக்க, அவனும் பள்ளி முடிந்ததும் தியேட்டரில் நேரத்தைக்கழிக்கிறான். ஒருமுறை பால் வாங்க கொடுத்த காசில் படம் பார்த்து அம்மாவிடம் அடி வாங்க, அல்ஃபிராடோ ஓடி வந்து, தனது பணத்தைக் கொடுத்து கீழே கிடந்து தான் எடுத்ததாகவும் அது அவனுடையதென்றும் பொய் சொல்லிக்காப்பாற்றுகிறார். அம்மா அல்ஃபிராடோ தான் அவனைக் கெடுப்பதாகக் குற்றம் சாட்டுகிறாள்.
அவ்வூரில் எந்தப் படம் வந்தாலும் முதலில் பாதிரியார் தனியாக திரையில் பார்த்து, முத்தக் காட்சிகளையெல்லாம் நீக்கிய பின்னரே பொதுமக்களுக்குத் திரையிடப்படும். சென்சார் செய்வதை திருட்டுத்தனமாக ஒளித்திருந்து பார்க்கும் டோட்டோ, அவ்வாறு வெட்டப்பட்ட படசுருள்களை தனக்கு தருமாறு கேட்க,அவன் வளர்ந்து பெரியவனானதும் தருவதாகக் கூறுகிறார் அல்ஃபிராடோ. டோட்டோவுக்கு பரீட்சை நடைபெறும் அதே நேரத்தில் அல்ஃபிராடோவுக்கும் முதியோர் கல்விப் பரீட்சை. 'பிட்' அடிக்க டோட்டோவிடம் அல்ஃபிராடோ உதவி கேட்க அவன் தனக்கு ப்ரொஜக்டரை இயக்க சொல்லித்தர வேண்டுமென்கிறான். 'டீல்' ஓக்கேயாகி திரையரங்கின் ஒப்பரேட்டர் அறையில் டோட்டோ.
ஒரு நாள் இரவு திரைப்படமொன்றின் இறுதிநாளின் இரவு க்காட்சியின்போது டிக்கெட் கிடைக்காத ஏராளமானோர் அரங்கிற்கு வெளியே காத்திருக்க அவர்களுக்காக வெளியே எதிரிலுள்ள கட்டடத்தின் சுவரில் புத்திசாலித்தனமாக ஒரேநேரத்தில் திரையிட ஒரே மகிழ்ச்சி ஆரவாரம்.
திரையரங்கில் ஏற்படும் தீ விபத்திலிருந்து அல்ஃபிராடோ, டோட்டோவினால் காப்பாற்றப்பட்டாலும் பார்வையை இழக்க, பள்ளிக்கு சென்றவாறே இரவில் திரையரங்கிலும் பணிபுரிகிறான். அவன் தொடர்ந்து இங்கிருக்க கூடாது படித்து நன்றாக வரவேண்டுமென்று எப்போதும் அறிவுரை சொல்கிறார் அல்ஃபிராடோ.
இப்போது டோட்டோ இளைஞனாகி விட்டான். கையில் ஒரு கமெராவுடன் பார்ப்பவற்றையெல்லாம் வீடியோ எடுக்கும் அவன் எலினா என்ற அழகிய பெண்ணைப்பார்த்ததும் காதல் கோள்கிறான். அவளும்! இது எலினாவின் அப்பாவுக்கு தெரியவருகிறது. இந்த நேரத்தில் டோட்டோவுக்கு இராணுவதில் பணியாற்ற அழைப்பு வருகிறது. எலினா வந்து தனது தந்தைக்கு வேறிடத்துக்கு மாற்றலாகுவதாகவும் தனக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெறுவதாகவும் சொல்ல, இதுபற்றி பேச இருவரும் முடிவு செய்து ஒப்பரேட்டர் ரூமில் எலினாவுக்காக காத்திருக்கிறான் டோட்டோ. அவள் வரவில்லை, அங்கு வரும் அல்ஃபிராடோவிடம் சொல்லிவிட்டு அவசரமாக வெளியே செல்லும் டோட்டோ திரும்பி வந்தபின், எலினா வந்தாளா? எனக் கேட்க, அல்ஃபிராடோ இல்லையென்கிறார்.சோகத்துடன் இராணுவ சேவைக்கு செல்கிறான் டோட்டோ.
ஒரு வருடத்திற்கு பின் திரும்பி வரும்போது, ஊரே அன்னியமாக, திரையரங்கிலும் வேறு யாரோ, எலினா பற்றியும் தகவல் இல்லை, அவன் எழுதிய கடிதங்களும் திரும்பி வந்த நிலையில், அல்ஃபிராடோவை அவர் வீட்டில் சந்திக்கிறான். மனதை அலை பாய விடாமல் நகரத்திற்கு போய் பெரிய ஆளாக வரவேண்டுமென்று அறிவுரை கூறுகிறார். ரயில் நிலையத்தில் "நீ இங்கு திரும்பி வருவதைப்பற்றி யோசிக்கவே கூடாது, வந்தால் உன்னுடன் பேச மாட்டேன், பழசை எல்லாம் மறந்திடு, எந்த வேலையாக இருந்தாலும் தியேட்டரில் காட்டிய அதே ஈடுபாடோடு செய்" எனக் கண் கலங்கியவாறு கூறுகிறார்.
இப்போது...,
முப்பது வருடம் கழித்து வெற்றி பெற்ற சினிமா இயக்குனராக வரும் சல்வதோர், அல்ஃபிராடோவின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்கிறார். அங்கு சந்திக்கும் திரையரங்க உரிமையாளர் அதனை தான் விற்று விட்டதாகவும் நாளை அதனை இடிக்கப்போகிறார்கள் என்றும் கூறுகிறார். சல்வதோர் தனியாக ஒருமுறை சென்று அந்த தூசி படிந்த திரை அரங்கை சுற்றிப்பாக்கிறார்.
பழைய காதலி எலினாவையும் சந்திக்கிறார். அப்போது, அவள் தான் அன்று திட்டமிட்டபடி ஆனால் சற்றுத் தாமதமாக சந்திக்க வரும்போது, அல்ஃபிராடோ அவளிடம் அவனை பார்க்க வேண்டாமென்றும், அவன் பெரும்புகழடைய வேண்டியவனென்றும் கூறியதாகவும், அப்படி தான் அன்று சந்தித்திருந்தால் அவன் இன்று இவளவு புகழ்பெற்றவனாக ஆகியிருக்க மாட்டான் என்றும் சொல்கிறாள்.
அல்ஃபிராடோவின் வீட்டில் அவர் மனைவி சல்வதோரிடம், அல்ஃபிராடோ எப்பொழுதும் அவனைபற்றியே பேசிக்கொண்டிருப்பார் என்றும், அவனை பற்றி ஏதும் பத்திரிகைகளில் வந்தால் அதை திரும்ப திரும்ப வாசிக்க சொல்லி கேட்பார் என்றும் சொல்கிறாள். அல்ஃபிராடோ அவனிடம் கொடுக்க சொன்னதாக படச்சுருள்களடங்கிய பெட்டியை சல்வதோரிடம் கொடுக்கிறாள்.
மறுநாள் ஊர்மக்கள் எல்லோரும் கூடி நின்று கண்கலங்க, அவர்களின் வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே இருந்துவிட்ட அந்த திரையரங்கு 'சினிமாபரடைசோ' வெடி வைத்து தகர்க்கப்படுகிறது. கனத்த மனத்துடன் ரோம் திரும்புகிறார் சல்வதோர்.
திரையரங்கு ஒன்றில் தனியாக சல்வதோர் அமர்ந்திருக்க அவருக்கு மட்டும் பிரத்தியேகமாக திரையிடப்படுகிறது!அல்ஃபிராடோ அவரிடம் கொடுக்கசொன்ன, சல்வதோர் சிறுவயதில் அவர் அல்ஃபிராடோவிடம் கேட்ட அந்த பழைய படங்களின் சென்சார் செய்யப்பட்ட முத்தக்காட்சிகள் திரையில் ஓடத்தொடங்குகின்றன . நெகிழ்ச்சியுடன் சல்வதோர் பார்த்துக்கொண்டிருக்க, மனதை வருடும் பின்னணி இசையுடன் படம் நிறைவடைகிறது.
படத்தின் இயக்குனர்- Guiseppe Tornatore.
மொழி- Italia
விருதுகள் - Oscar, Cannes, BAFTA, Golden Globe
இயக்குனர் சல்வதோர் வீட்டிற்கு வந்து அழைப்புமணியை அழுத்தியதும், தாய் தான் தைத்துக் கொண்டிருக்கும் துணியுடன் எழுந்து செல்ல கீழே விழுந்து உருண்டு கொண்டிருக்கும். திடீரென்று அது ஓய்வடைவதன் மூலம் அவர்களிருவரும் சந்தித்து விட்டதை உணர்த்தும் காட்சி ஒரு கவிதை!
அல்ஃபிராடோவின் இறுதி ஊர்வலத்தில் தான் சிறுவயதில் திரையரங்கில் சந்தித்த ஒவ்வொரு 'சென்சார்'பாதிரியார் உட்பட மனிதர்களையும் இனங்கண்டு லேசான தலையசைக்கும் சல்வதோர்!
சினிமா பரடைசோ தகர்க்கப்படும்போது சோகம் கவிந்த முகங்களுடன் எல்லோரும் குழுமியிருக்கும் காட்சி மனதைக்கனக்கச் செய்யும்!
அல்ஃபிராடோ-டோட்டோ இடையிலான இனிமையான உரையாடல்கள், நகைச்சுவைக் காட்சிகள், பின்னணி இசை என்பன படத்தில் என்னை மிகவும் கவர்ந்தவை.
படம் பார்த்த சிலநாட்களுக்கு சிறுவயது சம்பவங்கள், சொந்த ஊர் ஞாபகங்கள், மனிதர்கள் நினைவுக்கு வருவது தவிர்க்கமுடியாதது!
டிஸ்கி: எனக்கு மிக மிகப் படித்த படம். நான் பதிவுலகிற்கு வந்து முதலில் எழுதிய பதிவு சினிமாபரடைசோ தான்! கவனிக்கப்படாததால் மீள..!
































