‘வாழ்க்கையில் சில விஷயங்களை எப்படி அணுகுவது என்பதில் மிகவும் தெளிவாக இருக்கவேண்டும்.’
-
இப்படி தேவையில்லாத நேரத்தில் எல்லாம் தெளிவாக யோசிக்கலாம். ஆனால் தேவையான நேரத்தில் மிகத் தெளிவாகச் சொதப்பிவைப்பது என் வழமை.
எவ்வளவு யோசித்து, திட்டமிட்டு - அநேகமாக அப்படி நாங்களே நினைத்துக்கொண்டு ராஜதந்திரத்துடன் செயற்பட்டாலும் அதற்கும் மேலாக எதிர்பார்க்காத கோணத்தில் வரும் பாருங்கள் ஆப்பு. சந்தர்ப்பம் எப்படி, எங்கே ஆப்படிக்கும் என்பது யாருக்குமே தெரியாது.
கடந்த சிலநாட்களாக அப்படி ஒரு சம்பவத்தைப் பற்றி யோசித்தபோது பயங்கரமாக இருந்தது. அதன் விளைவாகவோ என்னவோ நேற்று நண்பனுடன் பேசும்போது ஒரு ஃப்ளோவில் இப்படி வந்தது,
"மச்சான் வாழ்க்கைல எல்லாத்தையும் கவனமா யோசிச்சு இறங்கவேணும் சும்மா விளையாட்டில்ல.. பிறகு தமிழ்மாறன் புங்குடுதீவுக்கு போன கதையா ஆகிடக்
கூடாது!"
எனக்குத்
தெரிந்து, நான்
பார்த்த எப்போதும் நினைவு வைத்திருக்கக் கூடிய ஆகச் சிறந்த உதாரணம் தற்போதைக்கு இதுதான்!
வி.ரி.தமிழ்மாறனை கொழும்பு பல்கலைக்கழக சட்டத்துறை பீடாதிபதி என்று கேள்விப்பட்டதைத் தவிர வேறு எதுவும் முதலில் தெரியாது. பின்னர் ஆராய்ந்ததில் தமிழீழ
விடுதலைப் புலிகளின் விருப்பத்துக்கு அமைய ஏற்படுத்தப்பட்ட தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்தில் மிக முக்கிய பங்கு வகித்தவர் என்பது தெரிந்தது. மற்றொருவர்
மறைந்த ஊடகவியலாளர் சிவராம்.
இலங்கையின்
பிரபல சட்டத்துறை வல்லுனர்கள் பலரும் அவரது மாணவர்கள் என்பது தெரியும். விடுதலைப்
புலிகளின் நீதிமன்றங்கள் விஸ்தரிப்புகளின்
போதும் சட்ட ஆலோசகராக இருந்திருக்கிறார். ஒரு தமிழ்த்
தேசிய அரசியல் பார்வை கொண்டவராக புலிகளால் விரும்பப் படுபவராகவே எப்போதும் இருந்திருக்கிறார்.
பணியிலிருந்து ஒய்வு பெறும் நிலையில் தமிழ்மாறனுக்கு அரசியலில் இறங்கும் ஆர்வம் வந்ததில் எந்தத் தவறுமில்லை. அரசியலில் யார் வேண்டுமானலும் இறங்குவதில் தவறில்லையே!
தமிழ்மாறன்
அரசாங்கம், புலிகள் தரப்பு என்பவற்றின் மேல் மட்டங்களில் நன்கு அறியப்பட்டவராக இருந்தாலும், சாதாரண மக்கள் மத்தியில் அவரைப்பற்றியோ, அல்லது அவருக்கு மக்களைப் பற்றியோ எந்தளவுக்கு பரிச்சயம் இருந்தது என்பது தெரியாது. அனேகமாக இல்லை எனத் தெரிகிறது. ஆக, பரஸ்பரம் அறிமுகம் செய்துகொள்ள ஒரு சந்தர்ப்பம் வாய்த்திருந்தது.
கடந்தவாரம்
புங்குடுதீவில் மாணவி வித்தியா பாலியல் வல்லுறவுப் படுகொலைச் சம்பவம் நிகழ்ந்த பரபரப்பான சமயத்தில் தமிழ்மாறன் கொழும்பில் இருந்திருக்கிறார். புங்குடுதீவு அவரது ஊர். அவர் அரசியலில் இறங்கினால் அந்ததொகுதியில்தான்
(தீவகத்தை உள்ளடக்கிய ஊர்காவற்துறை) போட்டியிடுவார். ஆக, நீதி கிடைக்கவேண்டும் என்கிற நல்லெண்ணமும், தன்னையும் அங்கே நிற்க வைக்கவேண்டும் என்கிற அரசியல் நோக்குடனும் தமிழ்மாறன் பிரத்தியேக கவனம் செலுத்தியிருக்கிறார். அதனால்,
யாழ்ப்பாணம் விரைந்திருக்கின்றார்.
அவரது மாணவனான யாழ்ப்பாணத்தின் போலீஸ் டி.ஐ.ஜி.யிடம் உடனடியாகக் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கக் கோரியிருக்கிறார். பிரதான சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டனர்.
தீவகப் பகுதியின் அரசியல் குறித்து யாழ்ப்பாணத்தில் இருப்பவர்களுக்கு நன்கு தெரியும். 2001இல் புலிகள் இருந்த காலத்தில் தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பினர் தீவகப் பகுதியில் பிரச்சாரம் செய்யப்போய் வாள்வெட்டுத் தாக்குதல்களுக்கு இலக்காகியிருந்தனர். போன
வருடம் தான் நீண்ட காலத்துக்குப் பிறகு நெடுந்தீவுக்குள் தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பினர் நுழைந்தது ஒரு சாதனையாக புகைப்படங்களுடன் வெளியாகியிருந்தது.
அந்தப் பகுதிகளின் சட்டங்களும், அரசியலும் குறித்து யாழ்ப்பாணத்தில் வாழ்பவர்களுக்கே எப்போதும் குழப்பம்தான். முக்கியமாக அங்கே அந்நியர்களின் தலையீடு விரும்பப்படுவதில்லை.
தமிழ்மாறனின் அரசியல் ஆர்வம் அரசியல்வாதிகள் மட்டத்தில் எல்லோருக்குமே தெரிந்ததுதான். இந்த வல்லுறவுச் சம்பவத்தின் மூலமாக தமிழ்மாறன் மக்களுடன் ஒரு நல்லுறவை ஏற்படுத்தி விடுவார் என்பதை பலரும் கவனித்துக் கொண்டிருந்திருப்பார்கள். தவிர, தமிழ்மாறன் அரசியலில் இறங்கினால் எப்படி எதிர்கொள்வது என்பது பற்றிய யோசனையுடன் சில தரப்புகள் அவதானித்துக் கொண்டிருந்திருக்கலாம்.
தமிழ்மாறனும் புங்குடுதீவுக்கும், யாழ்ப்பாணத்துக்குமிடையில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்திருக்கிறார். பல குற்றங்களுடன் தொடர்புடையவர் என சுவிஸ்
குமார் என்பவர் பற்றி மக்கள் சொல்கிறார்கள். தமிழ்மாறன் வேண்டுகோளின்படி அவருடன் கூடவே வந்திருந்த வந்த சீருடை அணியாத போலீஸ்காரர்களால் ஏனைய ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்படுகின்றனர்.
சுவிஸ் குமாரின் மனைவி அவர் சரணடைகிறார் என்று சொல்கிறார். யாழ்ப்பாணத்திலிருந்து போலீஸ் வாகனம் வர தாமதமாக, காத்திருக்கிறார்கள். அதற்குள் சுவிஸ் குமாரை மக்கள் புரட்டி
எடுக்கிறார்கள். தன்னுடன் வந்த சட்டம்
படிக்கும் தன்
மகளை அங்கேயே விட்டுவிட்டு வாகனத்தில்
சுவிஸ் குமாரையும், அவரது குடும்பத்தினரையும் அழைத்துச் சென்று யாழ் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கிறார். திரும்ப
புங்குடுதீவு வந்து மகளை அழைத்துச் செல்கிறார்.
மறுநாள் தன் மகளையும் அழைத்துக்கொண்டு, போலீஸ், சட்டத்தரணிகள் சகிதம் புங்குடுதீவில்
மக்கள் மத்தியில்
கூட்டமொன்றில் பேசுகிறார். திடீரென்று ஒருவர் கேட்கிறார், "நீங்கள் அழைத்துச் சென்ற சுவிஸ்
குமார் வெள்ளவத்தையில் நிற்கிறாராம்?". தமிழ்மாறன்
அதிர்ச்சியில் வெலவெலத்துப் போகிறார். பக்கத்தில் நின்ற போலீஸ் அதிகாரியிடம் கேட்க, அவர் யாருக்கோ தொலைபேசி உறுதிசெய்கிறார். அவ்வளவுதான். எல்லாம் முடிந்துபோய்விட்டது.
தமிழ்மாறன்
நாற்பது இலட்சம் வாங்கிவிட்டார் என்ற செய்தி இணையத்தளங்களில் பரவியது. தொடர்ந்து பல செய்திகள். இணையத்தில் ஒரு செய்தியைப் பார்த்ததும் நாம் ஃபேஸ்புக்கில் காட்டும் எதிர்வினைகள் எங்களுக்கு நன்றாகவே தெரியும். அதுவும் இப்படியொரு கொடூரச் சம்பவம் நிகழ்ந்து, கொதிப்புடன் இருக்கும் மக்களின் நேரடியான எதிர்வினை எப்படியிருக்கும்? காது
கொண்டு கேட்க முடியாத வசைச் சொற்களுடன் மக்களால் முற்றுகைக்குள் சிக்கிக் கொண்டிருந்த தமிழ்மாறனுக்கு அரசியல் அவ்வளவு இலகுவானதல்ல என்பது அப்போது புரிந்திருக்கும்.
நம்மிடம்
ஒரு மோசமான பழக்கமிருக்கிறது. முன்முடிவுகள். அரசியல் மோசமானது. அதில் இறங்க நினைப்பவர்கள் எப்படியும் மோசமானவர்களாகத்தான் இருக்கவேண்டும். நடைமுறை அப்படித்தான் என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். துரதிருஷ்டவசமாக இந்தகட்டுரையே அப்படித்தான் சொல்லாமல் சொல்கிறது. அரசியலில் இறங்க ஆர்வமுள்ளோர் மீதான எந்த அவதூறுகளையும் நாம் கேள்வி கேட்காமல் அப்படியே ஏற்றுக் கொள்கிறோம். ஒரு வகையில் யார் மீதான அவதூறுகளையும் அது உண்மையானது என்று நம்பவே விரும்புகிறோம். அதற்கு ஆதாரம் ஏதும் தேவையில்லை. நம்பிவிடுவோம். பின்பு அந்த முடிவை அவ்வளவு இலகுவில் நாம் மாற்றிக் கொள்ளமாட்டோம்.
தமிழ் செய்தி இணையத்தளங்களுக்கு எந்தவிதமான நியாயமோ ஊடகதர்மமோ இருப்பதாகத் தெரியவில்லை. பொறுப்புணர்வு கிடையாது. தவறான செய்திகளுக்கு வருத்தம் தெரிவிப்பதும் இல்லை. அதைவிட பதிவு செய்யப்படாத ஏராளமான தளங்கள். ஒரு இணைய இணைப்பும், தளமும் இருந்தால் போதும் எங்கோ இருந்துகொண்டு உட்கார்ந்து யோசித்து என்ன வேண்டுமானலும் எழுதிவிடலாம். அவை இலகுவாக ஃபேஸ்புக்கில் பகிரப்படுகின்றன. ஒருவர் மீது சேற்றை வாரியிறைப்பது மிக இலகுவானது.
கொஞ்சம் எங்கள் மனநிலையை ஆராய்ந்தால், கொல்லப்பட்ட மாணவியின் புகைப்படங்களைப் பகிர வேண்டாம் என்று இணையத்தளங்களின் பொறுப்பின்மையை ஒருபுறம் சாடுவோம். மறுபுறம், அப்படியான ஊடகங்கள் பகிரும் செய்திகள் பற்றிய நம்பகத்
தன்மையைப் பற்றிக் கவலை கொள்ளமாட்டோம்.
கனடாவில்
இருந்துகொண்டு ஒருவர், உண்மையான ஆதாரங்களை நான் தருகிறேன் என்று செய்திகள் பகிர்ந்து கொண்டிருந்தார். சுவிஸ் குமாரின் படங்கள் அவை. இன்னொருபுறம் சுவிஸ் ரஞ்சன் என்பவர், "நான் அவனில்லை. நம்புங்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தார். கைதுசெய்யப்பட்டடும் சுவிஸ் குமாரின் படங்களை தனது ஃ பேஸ்புக்கில் பகிர்ந்து இபோதாவது நம்புகிறீர்களா?" என்கிறார்.
இணையச் செய்தித்தளங்கள் சில சுவிஸ் ரஞ்சனின் படத்தை, சுவிஸ் குமார் எனப் பகிர, அது பரவி எல்லோரும் குழம்பி கேள்வி கேட்டிருக்கிறார்கள். இரண்டு பேருக்கும் மண்டை ஒரேமாதிரி என்பதுதான் காரணம். ஒரே மாதிரி மண்டையை வைத்திருந்தது அவரது தவறுதானே? இணையத்தளங்கள் என்ன செய்ய முடியும்?
இப்போது தமிழ்மாறனை அவதூறு செய்து இணையத்தளங்களில் வந்த செய்திகளை ஒரு குழு அவசரமாக சிங்களத்தில் மொழி பெயர்த்துக் கொண்டிருப்பதாகத் தகவல். கொழும்புப் பல்கலைக் கழகத்தில் அவரைப்
பிடிக்காத பெரும்பான்மையினத்தவரின் அரசியல் நடவடிக்கைக்காகவாம்!
நாற்பது இலட்சம் வாங்கிக் குற்றவாளியைத் தப்பிக்க விட்டுவிட்டு, எதையும் செய்யத் தயாரான கொதிப்புடன் இருக்கும் ஒரு கலவர பூமியில் மகளையும் அழைத்துக்கொண்டு யாராவது செல்வார்களா? என்றெல்லாம் யோசிக்கும் நிலையில் நாமில்லை.
இதுபோன்ற
மிகத்துயரமான
சம்பவங்களின் போது யாருமே அப்படியெல்லாம் யோசிக்கவும் போவதில்லை. செய்தி படித்தவுடனேயே மனம் கொந்தளிப்பாகிவிடுகிறது. இது போன்ற மிகவும் உணர்ச்சிபூர்வமான விடயங்களில் எவ்வளவு அவதானத்துடன் நடந்துகொள்ளவேண்டும்?
அரசியல் எப்படியிருக்கும் என்பதை தமிழ்மாறன் இப்போது சரியாகப் புரிந்துகொண்டிருப்பார். போலீசில் ஒப்படைக்கப்பட்ட சுவிஸ் குமார் எப்படித் தப்பினார்? யார் காரணம்? தெரியவில்லை! தமிழ்மாறனைப் புங்குடுதீவில் சுற்றி வளைத்திருந்த மக்கள் அந்த ஊர் மக்கள் மட்டுமல்ல. வேறு இடங்களிலிருந்து கொண்டுவந்து இறக்கப்பட்ட மக்கள் என்றும் ஒரு கதை. யார் அவர்களைக் கொண்டுவந்தது? அதுவும் தெரியவில்லை!
தமிழ்மாறன்
சட்டத்துறை விரிவுரையாளர். நாட்டில் சட்டம் ஒழுங்கு எல்லாம் சீராக நிகழ்வதாக நம்பியிருக்கலாம். அதையெல்லாம்விட மிக முக்கியமாக சட்டம், ஒழுங்கு, நேர்மை என்பவற்றிற்கும் அரசியலுக்கும் ஏதோ பயங்கரமான சம்பந்தம் இருப்பதாக நம்பிக் கொண்டிருந்திருக்கலாம். அதெல்லாம் ஒன்றுமில்லை அரசியலில் நிறையப் படிக்க வேண்டும் என்று அவருக்கு
சந்தர்ப்பம் கற்பித்திருக்கிறது.
ஒரு உணர்ச்சிபூர்வமான, கொந்தளிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் பிரச்சினையில் எடுக்கும் நடவடிக்கைகள் எவ்வளவு எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்? அனாயாசமாக செயற்படுவது எப்படியான விளைவைக் கொண்டுவரும்? அது தமிழ்மாறனின் ஒட்டுமொத்த இமேஜையும் ஒரே நாளில் காலி செய்துவிட்டது. யாரையும் ஓரளவுக்குமேல் நம்பக்கூடாது என்பதுதானே நம் அரசியலின் பாலபாடம்!
இது ஒருபக்க கதைதான். கொஞ்சம் ஆராய்ந்தபோது தெரிந்துகொள்ள முடிந்தது. நேரடியாகத் தெரிந்தவர்கள், பார்த்துக் கொண்டிருந்தவர்கள் இருப்பார்கள். இன்னும் சில கதைகள் இருக்கலாம். அவை யார் யாராலோ எழுதப்பட்டிருக்கலாம். வெளிவராமலே
கூடப் போகலாம்.
ஒரு படத்தில் விவேக் சொல்வார், ”நான் எழுதின கதையில எனக்கே தெரியாம இவ்வளவு ட்விஸ்டா?” இங்கே தமிழ்மாறன் திரைக்கதை எதுவும் எழுதவில்லை. யார் எழுதியது என்றும் தெரியவில்லை. தமிழ்மாறன் ‘ரெடி, ஆக்ஷன்’ மட்டும்தான் சொன்னார். பரபரவென்று காட்சிகளை நகர்த்தி வெற்றிகரமாக ‘சுபம்’ போட்டுவிட்டார்கள்.
இந்தச் சம்பவத்திலிருந்து நாங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது இதுதான், வாழ்க்கைல எல்லாத்தையும் கவனமா யோசிச்சு இறங்கவேணும். சும்மா விளையாட்டில்ல…!