Thursday, December 15, 2016

அசுரன் - வீழ்த்தப்பட்டவர்களின் வீரகாவியம்!


"
இந்தியாவின் தலைவிதியும், அசுரர் சாம்ராஜ்யத்தின் தலைவிதியும், கோடிக்கணக்கான கறுப்பர்களின் தலைவிதியும் என்றென்றைக்குமாகத் தீர்மானிக்கப்பட்டது. என் அறிவு கூறியதை நான் கேட்டிருந்தால், என் தலைவிதி வேறுவிதமாக அமைந்திருக்கும். ஆனால், நான் எப்போதுமே உணர்ச்சிவசப்பட்ட ஒரு ஜீவனாக இருந்தேன். நான் ராவணனைப் போல வாழ்ந்திருந்தேன், ராவணனைப் போலவே இறப்பேன். கச்சிதமான மனிதனும் கடவுளுமான ராமனாக ஆவது எனது நோக்கமாக இருக்கவில்லை. என் நாட்டில் கடவுள்களுக்கு ஒருபோதும் பஞ்சம் இருக்கவில்லை. மனிதர்களின் எண்ணிக்கைதான் குறைவாக இருந்தது" ராவணன்

'இராமாயணம்' சின்னவயதில் கேட்டபோதும், பிறகு கொஞ்சம் வளர்ந்து வாசித்தபோதும் பெரிதாக என்னை ஈர்த்ததில்லை. 'மகாபாரதம்' மிகப்பிடித்திருந்தது. பிறகு யோசித்துப்பார்த்தால் ராமாயணம் பெரிதாகக் கவராமல் போனதற்கு காரணம், அது தனி ஒருவனைத் துதிபாடும், ஒருவனைக் கடவுளாக்கும். கதாநாயகன் என்பவன் எந்தவித எதிர்மறையான குணங்களும் எல்லாவிதத்திலும் கச்சிதமான ஒருவனாக இருப்பான். அவன் செய்யும் எல்லா செயல்களும் ஏதோ ஒருவிதத்தில் நியாயப்படுத்தப்படும்.

மாறாக, மகாபாரதத்தில் எல்லோரும் சராசரி மனிதர்கள் போன்றவர்கள். கோபம், குரோதம், நயவஞ்சகம், சூழ்ச்சி, பொறாமை கொண்டவர்கள். யாரிடத்திலும் கடவுள்தன்மை இல்லை. அதைவிட முக்கியமானது ஒன்று. சிஸ்டம்! நேரடியாகச் சொல்லாது நாங்களாக யோசித்துப் பார்த்தால், ஒரு சிஸ்டம் எப்படிச் செயல்படும். அது தனக்குத் தேவையானவர்கள் தவிர, மற்றவர்களை எப்படியெல்லாம் பந்தாடும்? சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளை அதன் தாக்கங்களை விரிவாகச் சொல்லும். அப்படியே இன்றைய நிலைக்கும் பொருத்திப் பார்க்கமுடியும். அதேபோல   ராமாயணத்தை யோசித்தால், ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை.

ஆனால், ஆனந்த் நீலகண்டன் எழுதிய 'அசுரன்' சிஸ்டம் பற்றி மிக விரிவாகப் பேசுகிறது. ராவணன் பார்வையிலும், ஓர் அடிநிலை மனிதன் பத்ரனின் பார்வையிலும் பேசப்படும் கதை என்றென்றைக்குமானது. நாம் கண்ட அனுபவங்களில் பொருந்திப் போகக்கூடியது.

கேரளத்தைச் சேர்ந்த மகாபலி என்கிற அசுரகுல மாவீரன் வாமனனால் நயவஞ்சகமாகத் தோற்கடிக்கப்பட்ட பின்னர் அவரது சாம்ராஜ்யம் சிதைகிறது. சமத்துவமான வாழ்க்கைமுறையினைக் கொண்ட அசுரர் குலத்தவர்களின் வாழ்க்கையிலும், ஏற்றத்தாழ்வுகளைக் கொண்ட தேவர்களின் வர்ணாசிரம வேறுபாடுகள் திணிக்கப்பட்டு, கலந்துவிடுகிறது. அதிகாரம், அடக்குமுறை, தீண்டாமை எல்லாமே உருவாகிவிடுகிறது. இலங்கையைச் சேர்ந்த அசுரர்குலத்தமிழன் ராவணன். மீண்டும் மகாபலியின் பொற்காலத்தைக் கொண்டுவரவேண்டும் என்கிற கனவோடு வாழும் சாதாரண ஏழை இளைஞன். அதிகாரமையங்களை எதிர்க்கும் மனநிலையோடு வாழும் ராவணனுக்கு சந்தர்ப்பம் அமைகிறது. வழமை போலவே அதிகார மையங்களை எதிர்த்துப் போராடுபவனே விரும்பியோ, விரும்பாமலோ ஒரு அதிகார மையமாக மாறுகிறான்.

ஏற்றத்தாழ்வுகளற்ற சமுதாயத்தை உருவாக்கவேண்டும் என்கிற லட்சியத்தோடு இருந்தவன் ராவணன். அரசு அதிகாரம் அவனிடம் வரும்போது, அவனே அறியாமல், சமயங்களில் அறிந்தும் வேறு வழியில்லாமல் சிஸ்டத்தில் சிக்கிக் கொள்கிறான். அவனது அடிமனதில் அன்பாலமைந்த சாம்ராஜ்யம் பற்றிய அவன் கனவு அப்படியே இருக்கிறது. நடைமுறையோ அவனின் லட்சிய பாதையிலிருந்து வெகு தொலைவில்! அவ்வப்போது கனவும், நிஜமும் அவனை அலைக்கழிக்கின்றது. அவனால் எதையும் மாற்றவோ, அமைப்பின் பிடியிலிருந்து விடுபடவோ முடிவதில்லை.

எப்போதும் தன்னைக் கேள்வி கேட்டுக் கொள்கிறான். இறுதியில் அவனிடம் கேள்விகளே எஞ்சியிருக்கின்றன. அமைப்பிலிருந்து விலகி, அவன் தன்னிச்சையாக எடுத்த சில முடிவுகளே அவனது வாழ்வில் வரலாற்றுத் தவறுகளாக அவனுக்கு எதிராகத் திரும்பியிருப்பதை உணர்கிறான். எல்லாத்தவறுகளையும் நேர்செய்து கொள்ளும் இனியொரு சந்தர்ப்பம் என்கிற நடக்கமுடியாத ஒன்றை யோசித்துப் பார்க்கிறான். அவன் ஒருபோதும் தான் கடவுளாக மாற நினைத்ததில்லை. ஆனாலும் அவனையறியாமல் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்தானா?

எந்த யுத்ததர்மத்தையும் கடைப்பிடிக்காத காட்டுமிராண்டித்தனமான ராமனின் படை. சூழ்ச்சியாலும், உடனிருந்தவர்களின் துரோகங்களாலும் ராவணனின் படைபலம் சிதைக்கப்படுகிறது. ஒருதொகுதி படை அவனுக்கெதிராகவே திரும்புகிறது. தனது ஒருபடைவீரன் ஆறு எதிரிப்படை வீரர்களை எதிர்கொள்ள வேண்டிய நிலையில், தோல்வி நிச்சயம் எனத்தெரிந்தும், தப்பிச்செல்ல விரும்பாமல் இறுதிவரை தன்னை நம்பிய மக்களுக்காகப் போராடக் களம் புகுகிறான்.

யுத்தம் எப்போதும் அடித்தட்டு ஏழை மக்களையே பாதிக்கிறது. அரசனுக்கு நெருக்கடி என்று வரும்போது ஏழைகள் மட்டுமே கூடவே துணையாக வருகிறார்கள். போரிட்டு மடிகிறார்கள். அரசுக்கு நெருக்கமான உயர்வர்க்கத்தினர், பெரு வியாபாரிகளும் மாயமாகி விடுகிறார்கள். மீண்டும் இன்னொருவன் ஆட்சிக்கு வரும்போது மீண்டும் புதிய அரசுக்கு நெருக்கமாகிவிடுகிறார்கள். மாறாக யுத்தத்தின் வெற்றியையும், தோல்வியையும் என்றும் சுமப்பவர்களாக ஏழைகளும் அடித்தட்டு மக்களுமே இருக்கிறார்கள். வெற்றியை அதிகாரத்தரப்பும், உயர்வர்க்கமும் பகிர்ந்துகொள்ள அதன் இன்னொரு விளைவான உயிர், அவய இழப்புகளையும், அதனால் ஏற்பட்ட ஏழ்மையையும் அவர்களே சுமக்கிறார்கள். வென்றபின் அவர்கள் அதிகாரத் தரப்புக்குத் தேவையில்லாதவர்கள்தான், இன்னோர் யுத்தம்வரை!

வெற்றிபெற்ற யுத்தத்திற்கே அந்தநிலை எனில், தோற்றுப்போனால்? தோற்றுப்போனவர்கள் எல்லோராலும் புறக்கணிக்கப்படுவார்கள். யாருக்காகப் போரிட்ட்டார்களோ அவர்களாலும் கண்டுகொள்ளப்படாமல் வாழ்நாள் முழுதும் வலியோடு வாழ விதிக்கப்பட்டவர்களாகிறார்கள். பத்ரனின் பார்வையினூடு சொல்லப்படும் கதைகள் இன்னும் மனதுக்கு நெருக்கமானவை. தொடர்ந்துகொண்டிருப்பவை!

ராவணன் முதன்முறையாக மண்டோதரியைக் காண்கிறான். மிக அறிவார்ந்தவளாக, சகல துறைகளிலும் தேர்ந்த, நேர்கொண்ட பார்வையும், கம்பீரமாக தோன்றும் மண்டோதரியை எதிர்கொள்ள ராவணன் தயங்குகிறான். தனியாக முதன்முறை சந்திக்கும்போது எப்படியாவது தப்பி ஓடிவிடவேண்டும் என ராவணன் சிந்திப்பதும், அவள்பற்றி ராவணன் யோசிக்கும்போதும் ரகளை! ஏனோ நம் சாருவின் ஞாபகம். ஒருவேளை எழுத்தாளரும் சாருவின் வாசகராக இருப்பாரோ?

ராவணனின் வாழ்க்கையில், சூர்ப்பனகை, விபீஷணன், வருணன், ஜம்புமாலி மட்டுமல்ல. நம் தமிழ் மொழிபெயர்ப்பாளரும் சேர்ந்து விளையாடிவிட்டார் என்பது தெரிகிறது. ரௌடி, வைன், அக்கவுண்ட் பில், ஆரஞ்சு நிறம் என்கிற வார்த்தைகள் அப்போதே புழங்கியிருப்பதாகச் சொல்கிறார். அடுத்தபதிப்பில் திருத்தினால் நலம்.
ஆரம்பத்தில் அப்படி என்னதான் இருக்கப்போகிறது என்கிற மனநிலை. புத்தகத்தைக் கையில் எடுத்ததும் வைக்க மனமில்லை. சிலநாட்கள் மனதை அலைக்கழிப்பதுமாக இருந்தது.. 

சில சமயங்களில் யோசித்துப் பார்த்தால், வரலாறு என்பது திரும்பத் திரும்ப ஒரே மாதிரிதான் நிகழ்கின்றதா எனத் தோன்றுகிறது! 

Sunday, April 10, 2016

காமிக்ஸ்



மாலை மணி 4.30, நியூயோர்க் நகர வீதி.
"ஐயோ! அது என்ன?" - எல்லோரும் சிதறி ஓடினார்கள்.

திவாகரனின் கதை இப்படித்தான் ஆரம்பிக்கும். நான்காம் வகுப்பு படிக்கும்போது, பள்ளியில் எனக்குப் பக்கத்திலிருப்பான். வரிகளற்ற குறிப்புப் புத்தகத்தில் பெட்டி போட்டு, நான்கைந்து பேர் ஓடிக் கொண்டிருப்பதைப் போல அழகாகப் படங்கள் வரைந்து, அவன் எழுத ஆரம்பித்த காமிக்ஸ் கதை அது. அவன் மனதில் இருந்த கதையைச் சரியாக வெளிப்படுத்த முடியவில்லையோ என்னவோ, நான்கைந்து முறை மீண்டும் மீண்டும் அதே இடத்திலிருந்து ஆரம்பித்துக் கொண்டிருந்தான்.

சின்ன வயதில் நாங்கள் விரும்பிய, ரசித்த விஷயங்கள் வளர்ந்தபின் மறந்து போய்விடுமா? அல்லது மறந்து விட வேண்டுமா? அவை எங்களை மீண்டும் அந்த வயதிற்கே அழைத்துச் செல்வதை உணர்ந்திருக்கிறோம், இல்லையா? அப்படி சிறுவயதில் ஆக்கிரமித்துக் கொண்ட ஒரு விஷயம்தான் காமிக்ஸ்! எத்தனை வயதானாலும், வெளியில் காட்டிக் கொள்ளாவிட்டாலும், காமிக்ஸ் வாசித்தவர்கள் உள்ளூர அதனை ரசிக்கத்தான் செய்வார்கள், செய்கிறார்கள்.

ஆறு வயதில் பெரியமாமா வீட்டில் ஒரு புத்தகம் இருந்தது. 'இயந்திரமனிதன்'- ராணி காமிக்ஸ். அதுவரை அம்புலிமாமா, கோகுலம் தவிர, அப்படியொரு புத்தகத்தை நான் பார்த்ததில்லை. ஒரு படம் பார்ப்பதைப் போலவே புத்தகமா? மிகப்புதுமையான அனுபவமாக இருந்தது. அதன் பிறகு அங்கு செல்லும்போதெல்லாம் அந்தப்புத்தகத்தை எடுத்து வாசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். வேறு புத்தகங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

1992 இல் பள்ளிவிடுமுறை நாட்களில், நாச்சிமார் கோவிலடி நூலகமே கதியாக இருந்தபோது அங்கு சில ராணி காமிக்ஸ் புத்தகங்கள் வாசிக்கக் கிடைத்தன. ஆனாலும் முதன்முதல் வாசித்த 'இயந்திரமனிதன்' போல படங்களோ, கதையோ கவரவில்லை. மாயாவி கதைகளில் ஆர்வமேயில்லாததால் பெரிய ஈடுபாடில்லாமல் அவ்வப்போது புரட்டிக் கொள்வதோடு சரி. தற்செயலாக ஓர் உறவினர் வீட்டுக்குப் போயிருந்தபோது முத்து காமிக்ஸ் புத்தகமொன்றைப் பார்த்தேன். அது ஒரு 'டெக்ஸ்வில்லர்' கதை. உயிரோட்டமான அந்தப் படங்கள், முற்றிலும் பார்த்திராத கதை நிகழும் சூழல், விறுவிறுப்பு என்னை மிகவும் கவர்ந்தது.

அந்த நேரத்தில் அறிமுகமான நண்பன் கௌரி சில முத்துகாமிக்ஸ் புத்தகங்கள் வைத்திருந்தான். தவிர ஏனைய, அப்போது வாசிப்புப் பழக்கமிருந்து, ஆரம்பித்த எங்கள் நண்பர்கள் அனைவருக்குமே அதுதான் பிடித்திருந்தது. முத்துகாமிக்ஸ் நிறுவனத்தினரின் பிற வெளியீடுகளான லயன், திகில், மினி எல்லாமே எங்களை ஒரு தீவிர காமிக்ஸ் ரசிகர்களாக்கியது. அப்போது தமிழர்கள் வழக்கப்படி ரஜினி-கமல் ரசிகர்கள் மாதிரி, இதிலும் இரண்டு வகையான கட்சி இருந்தது. முத்துகாமிக்ஸ் - ராணிகாமிக்ஸ் என்று இரண்டு பிரிவு. நானும் நண்பர்களான கௌரி, சஜீவன், ரதீபன், சிறி, தீனு, ஜனா எல்லோருமே  முத்துகாமிக்ஸ் வாசகர்கள். அதில் எங்களுக்கு சற்றுப் பெருமையும் இருந்தது, எங்களது ரசனை தரமானது என.



வழக்கம்போல, எங்கள் முத்துகாமிக்ஸ் பிரிவில் மிகக் குறைந்த அளவு ஆட்கள்தான். ராணிகாமிக்ஸ் நிறையப் பேர் வாசிப்பதால் எங்கும் கடைகளில் கிடைக்கும். லயன், முத்து எல்லாம் இலகுவாகக் கிடைக்காது. நிறையத் தேட வேண்டும். எங்கே கிடைக்கும் என்பதெல்லாம் தெரியாமல் அலைந்து திரிந்திருக்கிறோம். எங்களில் கௌரிதான் ஒரு வெறித்தனமாக கடை கடையாகத் தேடுவான். பழைய புத்தகக் கடைகளெல்லாம் விடாது தேடிக் கொண்டிருப்பான். அவனது தீராத தேடலின் பலனாக அம்மா புத்தகசாலையைக் கண்டறிந்திருந்தான். யாழ்ப்பாணம் தட்டாதெருச் சந்தியிலிருந்து அரசடி வீதியூடாக வரும்போது, சீனியர் ஒழுங்கை வந்து சந்திக்கும் இடத்தினருகில் இருந்தது.

யாழ்ப்பாணத்தில் அப்போது மின்சாரம் கிடையாது. சினிமாப்படங்கள் பார்க்கும் சாத்தியங்கள் மிகக்குறைவு. எப்போதாவது உறவினர் வீட்டுகளில் திருமணம் நடந்தால் அந்த வீடியோ காசெட் பார்க்கும்போது சின்னத்தம்பி, எஜமான் போன்ற படங்கள் மட்டுமே வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தன. அப்போதெல்லாம் எங்கள் ஹீரோக்களாக  இரும்புக்கை மாயாவி, டெக்ஸ்வில்லர், ஸ்பைடர், லக்கிலுக், ஆர்ச்சி, மாண்ட்ரேக், ரிப்போர்ட்டர் ஜானி, பிரின்ஸ் போன்றவர்களே இருந்தார்கள். சினிமாவின் தாக்கம் இல்லாததால் காமிக்ஸ் உலகமே எங்களை முழுவதும் ஆக்கிரமித்திருந்தது. எங்கள் கற்பனைகளும் அதைச்சுற்றியே இருந்தன. அவ்வப்போது டெக்சாஸ் மாநிலத்தின் மணற்பாங்கான பிரதேசத்தில், ஒரு மாலைநேர வெயிலில் பக்கத்தில் குதிரையில் பயணிக்க முடிந்தது. பக்கத்தில் ஷெரீப்பும் வந்துகொண்டிருப்பார் என்பது இங்கே முக்கியமானது. 

ஹாலிவுட் படங்களுக்கு முன்னரே எங்களுக்கு எப்.பி. ஐ பற்றி அறிமுகப்படுத்தியது முத்து காமிக்ஸ்தான். சமயத்தில் எப்.பி. ஐ ஏஜன்டுகளாக மாறிவிடுவோம். அவ்வப்போது நண்பர்கள் அனைவரும் சேர்ந்து செய்யும் அப்போதைய எங்கள் 'சாகச முயற்சிகளின்' போது பெருச்சளிப் பட்டாளமாக மாறிவிடுவோம். சற்றே 'சைசாக' இருந்த சிறியை 'ஜான்' என்று அழைப்பதுண்டு.

அப்போது பள்ளியில் ஒவ்வொரு வகுப்பிலும் அந்தந்த வகுப்பு மாணவர்களின் பங்களிப்பில் புத்தகங்களைச் சேர்த்து வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தும் நூலகம் திட்டம் சில ஆசிரியர்களின் வழிகாட்டலில் ஆரம்பிக்கப்பட்டது. உடனடியாகவே, பக்கத்து வகுப்பில் காமிக்ஸ் கண்டால் அதை கடத்திக் கொண்டுவரும் ரகசியத்திட்டம் நண்பர்களால்  நடைமுறைப்படுத்தப்பட்டது.



நாங்கள் எல்லோரும் 1995 ம் ஆண்டு  தீபாவளியை ஆவலோடு எதிர்பார்த்திருந்தோம். புதிய உடைகள், கொண்டாட்டம் என்பதெல்லாம் எங்களில் யாருக்குமே, எப்போதும் ஒரு பொருட்டாக இருந்ததில்லை. அன்றுதான் லயன்காமிக்ஸ் இன் 'லயன் TOP 10' வெளிவருகிறது என்பதால் மட்டுமே. தீபாவளி வந்து போனது. லயன் வரவில்லை. அந்தக் காலப்பகுதியில் யாழ்ப்பாணத்திற்கு,  அநேகமான பொருட்களுக்கு கடல் வழியாகவே விநியோகம். இந்தியாவில் வெளியாகும் புத்தகங்கள் தாமதமாகவே கிடைக்கும். அதுவும் ஒழுங்காக வராது. ஒருமுறை அப்பா தன நண்பர் ஒருவர் கொழும்பு சென்று திரும்பும்போது, சுஜாதாவின் ' ஏன்? எதற்கு? எப்படி?' சொல்லி வாங்கியிருந்தார். லயன் டாப் டென்னுக்காக நாங்கள் காத்துக் கொண்டிருந்தோம். வந்தது, பாரிய இடம்பெயர்வு!

சில மாதங்களின் பின், வவுனியாவுக்கு வந்து சேர்ந்த அன்று. நண்பர்கள் எல்லாரும் பிரிந்து, யார் எங்கெல்லாம் இருக்கிறார்களோ என எதுவுமே தெரியாத நிலை. காமிக்சையெல்லாம் மறந்து விட்டிருந்த ஒரு பொழுதில், அண்ணாவின் புத்தக அலுமாரியில் 'லயன் TOP 10!' தொடர்ந்து பயணித்த சலிப்போ என்னவோ முதலில் அவ்வளவு ஆர்வம் இருக்கவில்லை. மறுநாள் முழுவதும் மகிழ்ச்சியோடு, கூடவே நண்பர்களின் கனத்த நினைவுகளோடும் வாசித்துக் கொண்டிருந்தேன்.

அதன் பிறகு நான்கு வருடங்கள் கடந்தபின், மீண்டும் யாழ்ப்பாணத்தில் நான், கௌரி, சிறி, ரதீபன் மட்டுமே இருந்தோம். தெரிந்தோ, தெரியாமலோ காமிக்ஸ் பற்றிப் பேசுவதையே நாங்கள் ஐந்து வருடங்களாக நிறுத்தியிருந்தோம். அதுபற்றியே நினைவுகளே இல்லாததுபோல. எல்லோரும் ஒருநாள் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தபோது, விஜயன் என்றொரு பெயர் வந்தது.

சிறி சிரித்துக்கொண்டேகேட்டான் எஸ்.விஜயனா?”
கௌரி சிரித்தவாறே நீயும் இன்னும் மறக்கலையா?”
மறக்கிற பேராடா அது?”

விஜயன் என்ற பெயர் கேட்டதுமே ஆசிரியர் பெயரை நினைவுக்கு கொண்டுவருமளவிற்கு லயன் காமிக்ஸ் எங்களை ஆக்கிரமித்திருந்தது யாருக்கும் ஆச்சரியமளிக்கவில்லை. நீண்ட இடைவேளைக்குப் பிறகு அன்று முழுவதும் எங்கள் பழைய காமிக்ஸ் அனுபவங்களைப் பற்றியே மகிழ்ச்சியுடன் பேசித் தீர்த்தோம்.

ஒருமுறை வவுனியாவில் சித்தப்பா வீட்டில் அண்ணனுடன் 'இரத்தப்படலம்பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். குழந்தைக்குச் சாப்பாடு கொடுத்துக் கொண்டிருந்த அண்ணி இருவரையும் சற்று வித்தியாசமாகப் பார்த்ததைப் போலிருந்தது, என் பிரமை என்றே இப்போதும் நம்புகிறேன்.



இரத்தப்படலம். XIII என்ற பெயரில் வந்த மிகப்பிரபலமான பிரெஞ்சு - பெல்ஜியம் காமிக்ஸ் தொடர்! தான் யார் என்பது தெரியாமல், உண்மையான பெயர் தெரியாமல் XIII என்று பச்சை குத்தப்பட்ட இலக்கத்தை மட்டுமே வைத்துக்கொண்டு இருக்கும் நாயகன். அவனைச் சுற்றியுள்ள மர்மங்கள், இடைவிடாது துரத்தும் எதிரிகளிடையே, தன்னைத் தேடிக்கொண்டிருப்பவனின் கதை! 1984 இல் முதலாம் அத்தியாயம் வெளியானது. பிரபல காமிக்ஸ் கதாசிரியர் Jean Van Hamme, ஓவியர் William Vance இருவரின் கடுமையான உழைப்பு கதையை வாசிக்கும்போது புரியும். தமிழில் முதல் பத்து புத்தகங்கள் 24 ஆண்டுகளில் வந்து இறுதியில் இரண்டு ஆண்டுக்கு முன்னர் முழுப்புத்தகமாக வெளிவந்தது.

அன்று சித்தப்பா வந்திருந்தார். அண்ணனைப் பார்க்க அவுஸ்திரேலியா செல்ல வேண்டியிருந்தது. காலையில் எங்கோ கிளம்பிச் செல்லும்போது அண்ணனின் நண்பர் ஒருவரைச் சந்திக்க வேண்டுமென்றும் அண்ணனுக்காக ஏதோ புத்தகம் தருவார் என்றும் கூறிக்கொண்டிருந்தார். "ஏதோ எஞ்சினியரிங் புக் எண்டு நினைக்கிறேன்" என்றார். 

திரும்பி வரும்போது குழம்பிப் போயிருந்தார். கையில் இரத்தப்படலத்தை வைத்துக் கொண்டு பரிதாபமாக "மாறித் தந்திருப்பாங்களோ? நான் கேக்கேல்ல. இது எதுக்கு? குழந்தைகளுக்கு தமிழ் படிப்பிக்கவா?" பாவமா இருந்தார். "இல்லை இதேதான்! அவனுக்குத்தான்! எனக்கு அப்பவே டவுட்டா இருந்திச்சு" - என்னிடம் இருந்த புத்தகத்தையும் காட்டி, அதனுடனான எங்கள் வரலாறு சொன்னேன். ஆச்சரியம் விலகாமல் கேட்டுக் கொண்டிருந்தார்.

இரத்தப்படலம், ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு காலப்பகுதியில், வெவ்வேறு ஊர்களில், சூழ்நிலைகளில் வெளியானதால் மனதை அந்தந்த நாட்களுக்குச் சென்று சேர்த்துவிடுகிறது. முழுமையாக ஒன்றவிடாது நினைவுகள் குறுக்கிடுகின்றன. இன்னும் முழுமையாக வாசிக்கவில்லை. வாசிக்க முடியவில்லை. ஒவ்வொரு முறை பக்கங்களைப் புரட்டும்போதும் ஏதேதோ தோன்றுகிறது.

காமிக்ஸ் பற்றி பேசும்போதெல்லாம், நண்பர்களின் நினைவுகளுடன் கூடவே முதன்முதல் காமிக்ஸ் கதை எழுதிய திவாகரனும்! நான்காம் வகுப்புக்குப் பின்னர் அவனைச் சந்திக்கவில்லை. எட்டு வருடங்களுக்குமுன் கெளரி சொன்னான், அவன் வன்னியில் இருப்பதாகவும், ஒருமுறை யாழ் வந்தபோது தன்னைச் சந்தித்ததாகவும்.  இப்போ எங்கே என்று தெரியவில்லை. 
அவனிடம் கேட்கவேண்டுமெனத் தோன்றுகிறது. அந்தக் கதையை எழுதி முடித்தானா?

 - 4tamilmedia வில் வெளியான பதிவு இது -